அரசர் இலக்கணம்





3.  அரசர் இலக்கணம்

குடிபடையில் அபிமானம், மந்திரா லோசனை,
     குறிப்பறிதல், சத்யவசனம்,
கொடைநித்தம் அவரவர்க் கேற்றமரி யாதை பொறை,
     கோடாத சதுருபாயம்

படிவிசா ரணையொடுப்ர தானிதள கர்த்தரைப்
     பண்பறிந் தேயமைத்தல்,
பல்லுயி ரெலாந்தன் உயிர்க்குநிக ரென்றே
     பரித்தல், குற்றங்கள் களைதல்,

துடிபெறு தனக்குறுதி யானநட்பகமின்மை,
     சுகுணமொடு, கல்வியறிவு,
தோலாத காலம்இடம் அறிதல், வினை வலிகண்டு
     துட்டநிக் ரகசௌரியம்,

வடிவுபெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு
     வழுவாத முறைமையிதுகாண்,
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

          இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     குடி படையில் அபிமானம் --- தனது குடிகளிடத்தும் தனது படை வீரரிடத்தும் பற்றுள்ளம் கொண்டிருத்தல்,

     மந்திர ஆலோசனை --- நுண் கருத்துக்களைத் தானே ஆழ்ந்து ஆராயும் திறமை பெற்றிருத்தல்,

     குறிப்பு அறிதல் --- மற்றவர் மனத்தில் எண்ணுவதை, முகக் குறிப்பால் அறிந்து கொள்ளுதல்,


     சத்திய வசனம் --- உண்மையையே பேசுதல்,

     கொடை --- மனம் உவந்து தன்னிடம் வந்து இரந்தோருக்கு அளித்தல்,

     நித்தம் அவரவர்க்கு ஏற்ற மரியாதை --- எந்நாளும்
அவரவர்கட்குத் தக்கவாறு மரியாதை செய்தல்,

     பொறை --- பொறுமையைக் காத்தல்,

     கோடாத சதுர் உபாயம் --- தவறாமல் இனியவை கூறல், வேறுபடுத்துதல், ஈதல்,ஒறுத்தல் என்னும் நால்வகை உபாயங்களைக் கைக்கொள்ளுதல்,

     படி விசாரணையொடு --- நாட்டின் நிலையை விசாரித்து அறிதல்,

     பிரதானி தளகர்த்தரைப் பண்பு அறிந்தே அமைத்தல் --- தனக்குக் கீழ்ப் பணி புரிய வேண்டிய அலுவலர்களையும், படைத்தலைவரையும் அவர்களுடைய தகுதி அறிந்து தேர்ந்து கொள்ளுதலும்,

     பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகரென்றே பரித்தல் --- பலவகை உயிர்களையும் தன்னுடைய உயிர்க்கு ஒப்பாகக் காப்பாற்றுதலும்,

     குற்றங்கள் களைதல் --- தனது அரசாட்சியில் நேரும் பிழைகளை உடன் அறிந்து நீக்குதல்,

     தனக்கு உறுதியான துடி பெறு நட்பு --- தனக்கு நன்மையையே நாடும் சுறுசுறுப்பான நட்பைத் தேடிக்கொள்ளுதல்,

     அகம் இன்மை --- தான் என்னும் செருக்கு இல்லாமை,

     சுகுணமொடு கல்வி அறிவு --- நல்ல குணங்களுடன், அறிவு நூல்களைக் கற்றுத் தேர்ந்த அறிவும்,

     தோலாத காலம் இடம் அறிதல் --- தோல்வி அடையாதவாறு காலத்தையும் இடத்தையும் அறிதல்,

     வினை வலி கண்டு துட்ட நிக்கிரகம் --- இருவருடைய போர்த்தொழிலின் வலிமையையும் அறிந்து தீயவர்களை அடக்குதல்,

     சௌரியம் ---- வீரம்,

     இது --- ஆகிய இவைகளே,

     வடிவு பெறு செங்கோல் நடத்தி வரும் அரசர்க்கு ---- செம்மையான சிறந்த ஆட்சியை நடத்தி வரும் அரசர்க்கு உரிய

     வழுவாத முறைமை ---- தவறாத நெறிகள் ஆகும்.

     கருத்து --- அரசாள்பவரின் இலக்கணம் கூறப்பட்டது.  இது அற்றார் அரசாளத் தகுதி அற்றவர் என்று கொள்ளப்படும். சதுர் உபாயம் என்பது வடமொழியில் சாம, பேத, தான, தண்டம் எனப்படும்.

எந்நாளும் இன்பமே

இன்பமே எந்நாளும் -----      இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தைப் ...