4. வணிகர் இலக்கணம்
கொண்டபடி போலும்விலை பேசிலா பம்சிறிது
கூடிவர
நயமுரைப்பார்;
கொள்ளுமொரு முதலுக்கு மோசம்வ ராதபடி
குறுகவே
செலவுசெய்வார்;
வண்டப் புரட்டர் தாம் முறிதந்து, பொன் அடகு
வைக்கினும்
கடன்ஈந்திடார்;
மருவுநா ணயமுளோர் கேட்டனுப் புகினுமவர்
வார்த்தையில்
எலாம்கொடுப்பார்;
கண்டெழுது பற்றுவர வினின்மயிர் பிளந்தே
கணக்கில் அணு
வாகிலும்விடார்;
காசுவீ ணிற்செல விடார் உசித மானதிற்
கனதிரவி
யங்கள்விடுவார்;
மண்டலத் தூடுகன வர்த்தகம் செய்கின்ற
வணிகர்க்கு முறைமையிதுகாண்
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு
குமரேசனே!
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள்
புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு
மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள
குமாரக் கடவுளே!
கொண்ட படி போலும்
விலை பேசி லாபம் சிறிது
கூடிவர நயம் உரைப்பார் --- வாங்கிய விலைக்குத் தக்க விலை கூறிச் சிறிது இலாபம் வரும்படி இனிமையாகப்
பேசுவார்;
கொள்ளும் ஒரு
முதலுக்கு மோசம் வராதபடி குறுகவே செலவு செய்வார் --- தாங்கள் வைத்துக்கொண்ட முதலுக்குக் குறைவு வராதபடி செலவு செய்வார்கள்;
வண்டப் புரட்டர் தாம்
முறி தந்து பொன் அடகு வைக்கினும் கடன் ஈந்திடார் --- பொய் வஞ்சகம் முதலான இழிந்த குணம் உள்ளவர்கள் ஒப்புகைச் சீட்டு எழுதிக்
கொடுத்துப் பொன்னை ஈடாக வைத்தாலும் கடன் கொடுக்கமாட்டார்கள்;
மருவு நாணயம்
உளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார் --- பொருந்திய ஒழுங்குள்ளவர்கள் சொல்லி விட்டாலும் அவர்கள்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள்
கேட்டவற்றை எல்லாம் கொடுப்பார்கள்;
கண்டு எழுது
பற்று வரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார் --- பார்த்து எழுதுகின்ற பற்றிலும் வரவிலும் மயிர் அளவிலும் பிரித்து அறிந்து
பார்த்து அணுவளவும் கணக்கிலே பிழை உண்டாகுமாறு விடமாட்டார்கள்;
காசு வீணில் செலவிடார் --- வீண் வழிகளிலே பணத்தைச்
செலவழிக்க மாட்டார்கள்;
உசிதம் ஆனதில் கன
திரவியங்கள் விடுவார் --- நற்செயல்களுக்கு மிகுந்த பொருளைச் செலவிடுவார்;
மண்டலத்து ஊடு கன வர்த்தகம்
செய்கின்ற வணிகர்க்கு இது முறைமை --- நாட்டிலே பெருவணிகம் செய்கின்ற வணிகருக்கு இவையே இயல்பாகும்.
கருத்து --- வணிகர் இலக்கணம் கூறப்பட்டது.
அநியாய இலாபத்தை விரும்பக் கூடாது. வரவுக்கு ஏற்ற செலவைச் செய்தல் வேண்டும். தீயவர்கள்
பொன்னை அடகு வைத்தாலும் பணம் தரக் கூடாது. நாணயம் உள்ளவர்கள் சொன்ன சொல்லை மதித்தல் வேண்டும்.
கணக்கிலே பிழை வரக் கூடாது. அறச் செயல்களுக்கு மிகுதியாக வழங்குதல் வேண்டும்.
No comments:
Post a Comment