கதிர்காமம் - 0426. சரத்தே உதித்தாய்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சரத்தே உதித்தாய் (கதிர்காமம்)

முருகா!
உனது திருவடித் தாமரையைத் தந்து அருள்


தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
     தனத்தா தனத்தா ...... தனதான

சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
     சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச்

சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
     தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச்

சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
     செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச்

சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
     திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே

புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
     பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது

பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
     பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின்

கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
     கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக்

கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
     கதிர்க்காம முற்றார் ...... முருகோனே.

பதம் பிரித்தல்

சரத்தே உதித்தாய், உரத்தே குதித்தே
     சமர்த்தாய் எதிர்த்தே ...... வருசூரைச்

சரிப் போன மட்டே விடுத்தாய், அடுத்தாய்
     தகர்த்தாய் உடல்தான் ...... இருகூறா,

சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய்,
     செகுத்தாய், பல தார் ...... விருதுஆக,

சிறைச் சேவல் பெற்றாய், வலக்காரம் உற்றாய்,
     திருத் தாமரைத் தாள் ...... அருள்வாயே.

புரத்து ஆர் வரத்தார், சரச் சேகரத்தார்,
     பொரத்தான் எதிர்த்தே ...... வருபோது,

பொறுத்தார், பரித்தார், சிரித்தார், எரித்தார்,
     பொரித்தார் நுதல் பார் ...... வையிலே,பின்

கரித்தோல் உரித்தார், விரித்தார், தரித்தார்,
     கருத்து ஆர் மருத்து ஊர் ...... மதனாரைக்

கரிக்கோலம் இட்டார், கணுக்கு ஆன முத்தே!
     கதிர்க்காமம் உற்றுஆர் ...... முருகோனே.


பதவுரை

      புரத்து ஆர் வரத்தார் --- திரிபுரத்தில் வாழ்ந்த வரம் பெற்றவர்கள்,

     சர சேகரத்தார் ---- அம்புகளின் கூட்டத்தைக் கொண்டவர்கள்,

     பொரத்தான் எதிர்த்தே வருபோது --- போர் செய்வதற்கு எதிர்த்து வந்தபோது,

     பொறுத்தார் --- பொறுமையுடன் இருந்தார்;

     பரித்தார் --- போர்க் கோலத்தைக் தாங்கினார்;

     சிரித்தார் --- சிரித்தார்;

     எரித்தார் --- திரிபுரத்தை எரித்தார்;

     நுதல் பார்வையிலே பொரித்தார் --- நெற்றிக் கண்ணால் பொரிபடச் செய்தார்;

     பின் கரி தோல் உரித்தார் --- பின்பு யானையின் தோலை உரித்தார்;

     விரித்தார் --- அதை விரித்தார்;

     தரித்தார் --- தரித்துக் கொண்டார்;

     கரத்து ஆர் மருத்து ஊர் மதனாரை --- தமது திருவடியிலே கருத்துடையராய் தென்றல் தேரில் ஊர்ந்து வந்த மன்மதனாரை,

     கரிகோலம் இட்டார் --- கரி அலங்காரமாக்கினார்; (ஆகிய சிவபெருமானுடைய)

     கணுக்கே ஆன முத்தே --- கண்களுக்கு பிரியமான முத்தே;

      கதிர்காமம் உற்று ஆர் முருகோனே --- கதிர் காமத்தில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே!

     சரத்தே உதித்தாய் --- நாணல் காட்டில் உதித்தீர்,

      சரத்தே --- வலிமையுடன்,

     குதித்தே --- குதித்துக் கொண்டு,

      சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை --- சாமர்த்தியமாய் எதிர்த்து வந்த சூரபன்மனை,

     சரிப்போன மட்டே விடுத்தாய் --- சரியாக நடந்த வரையில் சும்மா விட்டிருந்தீர்;

     அடுத்தாய் --- நெருங்கினீர்;

     உடல் தான் இருகூறா தகர்த்தாய் --- உடல் இருபாதி ஆகும்படி பிளந்தீர்;

     சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் --- தலையுடன் மார்பையும் அறுத்துக் குவித்தீர்;

     செருத்தாய் --- கொன்றீர்;

     விருது ஆக --- வெற்றிக்கு அடையாளமாக,

     பல தார்  --- பலவகை மாலைகளையும்,

     சிறை சேவல் பெற்றாய் --- சிறகையுடைய சேவலையும் பெற்றீர்;

     வலக்காரம் உற்றாய் --- வெற்றியை அடைந்தீர்.

     (அத்தன்மையைராகிய நீர்,)

     திருத் தாமரைத் தாள் அருள்வாயே --- அழகிய தாமரை அன்ன திருவடிகளைத் தந்தருளுவீராக.

பொழிப்புரை

     திரிபுரத்திலிருந்த வரம் பெற்றவர்கள், அம்புகளின் கூட்டத்துடன் எதிர்த்துப் போருக்கு வந்தபோது, பொறுமையுடன் இருந்தார்; போர்க்கோலத்தைத் தாங்கினார்; சிரித்தார்; எரித்தார்; நெற்றிக்கண் பார்வையால் பொரிபடச் செய்தார். பின்பு யானையை உரித்து அதன் தோலை விரித்துத் தரித்துக் கொண்டார்; தமது திருவடியில் கருத்துடையவனாய் தென்றல் தேரில் ஏறி வந்த மன்மதனை கரியலங்கார மாக்கினார் ஆகிய சிவபெருமானுடைய கண்களுக்குப் பிரியமான முத்தே!

     கதிர் காமத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே!

     நாணல் காட்டில் இடையே உதித்தீர். வலிமையுடன் குதித்துக் கொண்டு ஆற்றலோடு எதிர்த்து வந்த சூரபன்மனை, சரியாக நடந்த வரை விட்டு வைத்தீர், சரி தப்பியபின் அடுத்து நெருங்கி வந்தீர், உடல் இரு கூறாமாறு பிளந்தீர், சிரத்தையும் மார்பையும் அறுத்துக் குவித்தீர், அவனைக் கொன்றீர், வெற்றிக் அடையாளமாகப் பல மாலைகளையும் சிறகையுடைய சேவலையும் பெற்றீர், வெற்றி பெற்றீர்.

     இத்தகைய தேவரீர் அடியேனுக்கு உமது தாமரையன்ன அழகிய பாதமலரைத் தந்தருளுவீர்.


விரிவுரை

சரத்தே உதித்தாய் ---

சரம்-தர்ப்பை. கங்கையின் அருகில் இருந்த தருப்பை வனஞ்சூழ்ந்த பொய்கையில் முருகவேள் தோன்றியருளினார். அதனால் சரவணபவன் என்ற திருநாமம் ஏற்பட்டது.

சரிப்போன மட்டே விடுத்தாய் அடுத்தாய் ---

சூரபன்மன் அடக்கமாக வாழ்கின்றவரை அவனை விட்டு வைத்தார். இறைவர்; தவறுகள் மிகுதியாகச் செய்யத் தொடங்கியப்பின் அவனை நெருங்கிப் போர் புரிந்தார்.

உடல் தான் இருகூறாய் ---

அவனிடம் இருந்த அகங்காரம் மமகாரம் என்ற இரண்டையும் வேறு வேறாக்கி தழியுமாறு செய்தார்.

புரத்தார் வரத்தார் சரச்சேகரத்தார் ---

பொன், வெள்ளி, இரும்பு என்ற மூன்று லோகத்தால் ஆகிய கோட்டைகளை உடையவர்கள், திரிபுராதிகள். கமலாட்சன், தாரகட்சன், வித்யுன்மாலி என்போர். அவர்கள் வரப்பிரசாதம் பெற்றவர்கள்; பல சிறந்த பாணங்களைச் சேகரித்திருந்தார்கள்.

பொறுத்தார் ---

சிவபெருமான் திரிபுராதிகளைக் கண்டு பொறுமையுடன் இருந்தார்.

பரித்தார் ---

தேரும் வில்லும் அம்பும் கொண்டு போர்க்கோலந் தாங்கினார்.

சிரித்தார் எரித்தார் ---

ஒவ்வொரு தேவனும் தான் துணை செய்வதனால் தான்
திரிபுர வதம் நிகழ்கின்றது என்று எண்ணித் தருக்குற்றார்கள். "நமக்குத் தேரும் வில்லும் வேண்டுமோ” என்று திருவுளம் பற்றிச் சிவபிரான் சிறுநகை செய்தார். அந்நகையில் இருந்து தோன்றிய அனற் பொறியால் அப்புரங்கள் எரிந்து சாம்பலாயின.

கரித்தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் ---

கஜமுகன் என்ற அவுணன் சிவபெருமான் மீது போருக்கு வந்தான். அந்த யானையை உரித்துத் தோலைச் சிவபெருமான் போர்த்துக் கொண்டார்.

கருத்தார் மருத்தார் மதனார் ---

பிரமாதி தேவர்கள், சிவபெருமான் சனகாதியருக்கு மௌன நிலையையுணர்த்தி யோகியாயிருந்த தவநிலையை பழிக்குமாறு மன்மதனுக்குக் கட்டளையிட்டார்கள்.

மன்மதன் அதைக் கேட்டு நடுங்கினான். “நான் தேவரையும் மூவரையும் சித்தரையும் முத்தரையும் மயக்குவேன். அனல் வடிவான சிவபெருமானை மயக்க முடியுமோ? அவர் கையுந்தழல்; கண்ணுந்தழல்; மெய்யுந்தழல்; தழலைப் புழு அணுகுமோ?” என்றெல்லாம் கூறினான் மன்மதன்.

அயன் முதலிய அமரர் வற்புறுத்தி யனுப்பினார்கள். அதனால் சிவன் பாதத்தில் “கருத்தார்” என்றார்.

மருத்து ஊர். மருத்து-காற்று. மன்மதனுக்குத் தென்றல் காற்று. தேர் தென்றற் காற்றாகிய தேரில் ஊர்பவன்.

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னம் அணிவாற்கு-வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லையதன் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு             --- சிவப்பிரகாசர்.

கணுக்கான முத்தே:-

சிவபெருமானுடைய கண்ணுக்குப் பிரியமான முத்தையரே! என்று அருமையாக அருணகிரிநாதர் அழைக்கின்றார்.

கருத்துரை

கதிர்காமக் கடவுளே! உன் கழல் தாமரையைத் தந்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...