அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சரியையாளர்க்கும்
(கதிர்காமம்)
முருகா!
சச்சிதானந்த வடிவத்தை
அடியேன் பெற அருள்
தனதனா
தத்தனத் தனதனா தத்தனத்
தனதனா தத்தனத் ...... தனதான
சரியையா
ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய
சமயபே
தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற் ...... பரமான
துரியமே
லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு
துகளில்சா
யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசொரூ பத்தையுற் ...... றடைவேனோ
புரிசைசூழ்
செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே
கரியயூ
கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக்
கதலிசூ
தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சரியை
ஆளர்க்கும், அக் கிரியை ஆளர்க்கும்,நல்
சகல யோகர்க்கும் எட்ட ...... அரிது ஆய
சமய
பேதத்தினுக்கு அணுக ஒணா மெய்ப்பொருள்
தரு பராசத்தியிதல் ...... பரம்ஆன
துரிய
மேல் அற்புத, பரம ஞானத் தனிச்
சுடர் வியாபித்த நல் ...... பதி, நீடு,
துகள்இல்
சாயுச்சியக் கதியை ஈறு அற்றசொல்
சுக சொரூபத்தை உற்று ...... அடைவேனோ?
புரிசை
சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய, சற்
புருஷ! வீரத்து விக் ...... ரமசூரன்
புரள,
வேல் தொட்ட கைக் குமர! மேன்மைத் திருப்
புகழை ஓதற்கு எனக்கு ...... அருள்வோனே!
கரிய
யூகத் திரள் பலவின் மீதிற் சுளைக்
கனிகள் பீறிப் புசித்து ...... அமராடிக்
கதலி
சூதத்தினிற் பயிலும் ஈழத்தினில்
கதிரகாமக் கிரிப் ...... பெருமாளே.
பதவுரை
புரிசை சூழ் செய்ப் பதிக்கு உரிய சாமர்த்ய ---
திருமதில்களால் சூழ்பெற்ற வயலூர் என்னும் திருத்தலத்துக்கு உரியவராகிய சமர்த்தரே!
சத் புருஷ --- சிறந்த ஆண்தகையே!
வீரத்து விக்ரம சூரன் புரள வேல் தொட்ட
கை குமர --- மிகுந்த வீர முடைய சூரபன்மன் பதைத்து வீழ்ந்து புரளுமாறு வேற்படையை விடுத்தருளிய
குமாரக் கடவுளே!
மேன்மை திருப்புகழை ஓதற்கு எனக்கு
அருள்வோனே --- மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுதற்கு அருள்புரிபவரே!
கரிய யூக திரள் --- கரிய குரங்குக்
கூட்டம்,
பலவின் மீதில் --- பலாமரத்தின் மீது தாவி,
சுளை கனிகள் பீறி புசித்து --- சுளைகளோடு
கூடிய பழங்களைக் கிழித்து உண்டு,
அமர் ஆடி --- ஒன்றுடன் ஒன்று போர் புரிந்து,
கதலி சூதத்தினில் பயிலும் --- வாழை மா ஆகிய சோலைகளில் நடமாடுகின்ற,
ஈழத்தினில் --- ஈழநாட்டில் சிறப்புற்று
விளங்கும்,
கதிரகாம கிரி பெருமாளே --- கதிர்காம மலையில் எழுந்தருளியுள்ள
பெருமையின் மிக்கவரே!
சரியை ஆளர்க்கும் --- சரியை
மார்க்கத்தினருக்கும்,
அ கிரியை ஆளர்க்கும் --- அந்த கிரியை
மார்க்கத்தினருக்கும்,
நல் சகல யோகர்க்கும் --- நலம் பொருந்திய
எல்லா வகைப்பட்ட யோகமார்த்தில் நின்றவர்க்கும்
எட்ட அரிதாய --- எட்டுதற்கு அரியதானதும்,
சமய பேதத்தினுக்கு --- ஒன்றோடொன்று பேதித்துத் தர்க்கம் இடுகின்ற
சமயங்களாலே,
அணுக ஓணா --- நெருங்க முடியாததும்,
சிவத்தையடையச் செய்கின்ற,
பராசத்தியில் --- பெரிய அருளில் அடங்கி,
பரம் ஆன --- பெரியதான,
துரிய மேல் --- துரியாதீதத்தில்,
அற்புத பரம ஞானத்தினில் சுடர் வியாபித்த
நல்பதி --- அற்புதமான மேலான சுத்தஞானமயமாகிய ஒப்பற்ற ஜோதி நிறைந்த நல்ல பதியாக
விளங்குவதும்,
நீடு --- நித்தியமானதும்,
துகள் இல் --- குற்றமில்லாததும் ஆகிய,
சாயுச்சிய கதியை ---- சாயுச்சிய முத்தியை,
ஈறு அற்ற --- முடிவில்லாத,
சொல் சுகசொரூபத்தை உற்று --- புகழப்படுகின்ற
இன்ப நிலையை பொருந்தி,
அடைவேனோ --- அடைய மாட்டேனோ?
பொழிப்புரை
திருமதில் சூழ்ந்த வயலூர் என்னும் திவ்விய
திருத்தலத்திற்கு உரியவராகிய சாமர்த்தியம் உடையவரே!
சிறந்த ஆண்டவரே!
மிக்க வீரமுடைய சூரபன்மன் வீழ்ந்து
புரளுமாறு வேலாயுதத்தை விடுத்தருளிய திருக்கரத்தையுடைய குமாரக் கடவுளே!
மேன்மையுடைய திருப்புகழைப் பாடுதற்கு
அடியேனுக்கு அருள் புரிந்தவரே!
கருங்குரங்குக் கூட்டம் பலா மரத்தின்மீது
ஏறி பலாப்பழங்களைப் பீறிப்புசித்து ஒன்றுடன் ஒன்று போராடி, வாழை மா முதலிய
மரங்களில் உலாவுகின்ற ஈழ நாட்டில் விளங்குங் கதிர்காமம் என்னுந் திருமலையில்
வாழுகின்ற பெருமிதமுடையவரே!
சரியாமார்க்கத்தில் நின்றவர்க்கும், கிரியாமார்க்கத்தில் நின்றவர்க்கும், நலம் பொருந்திய எல்லா வகைப்பட்ட
யோகமார்த்தில் நின்றவர்க்கும் எட்ட அரிதானதும், ஒன்றோடொன்று பிணங்கும் சமயங்களுக்கு
நெருங்க முடியாதததும், உண்மைப் பொருளாகிய
சத்தியில் அடங்கி, மேலான துரித
நிலைகடந்த மேல் நிலையில், அற்புதமான பெரிய
ஞானமயமாகிய ஒப்பற்ற ஒளி நிறைந்த நன்மை மிக்க இடமும், நித்தியமானதும், குற்றமில்லாததுமாகிய சாயுச்சிய முத்தியை, முடிவில்லாத புகழுடைய இன்பவடிவத்தைப்
பொருந்தி அடியேன் அடையமாட்டேனோ?
விரிவுரை
சரியை ---
ஆலயத்தை
அலகிடுதல், மெழுகல், பூமாலை தொடுத்துக் கொடுத்தல், விளக்கிடுதல் முதலிய திருத்தொண்டுகள்
செய்தல்,
இதனை, “புறத்தொழிலால் உருவத் திருமேனியை
வழிபடுதல்” என்று சுருங்கச் சொல்லலாம்.
கிரியை
---
இறைவனை
உள்ளம் உருகிப் பாடுதல். மந்திரத்தைச் செபித்தல்., திருவுருவத்தைப் பூசித்தல் முதலியன.
வாழ்த்த
வாயும் நினைக்க மடநெஞ்சம்
தாழ்த்த சென்னியும்
தந்த தலைவனைச்
சூழ்த்த
மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே. ---
அப்பர்
இதனை, “அகத்தொழில் புறத்தொழில் இரண்டாலும்
உருவாருவத் திருமேனியை வழிபடுதல்” என்று சுருங்கச் சொல்லலாம்.
சகல
யோகர்
---
மந்திரயோகம், ஆதாரயோகம், நிராதாரயோகம், கர்மயோகம், பக்தியோகம், ஹடயோகம், ராஜயோகம், சிவயோகம் முதலிய
அருவத்
திருமேனியை அகத்தொழிலால் மட்டும் வழிபடுதல்.
மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள் இருத்தி,
உற ஆதி
தனை உணரும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி,
இறவாத
ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி,
அறவாணர்க்கு
அன்பு என்னும் அமுது அமைத்து, அர்ச்சனை செய்வார்.
--- பெரியபுராணம்
ஆக
இந்தச் சரியை கிரியை யோகங்களாலேயே ஆனந்தாநூபவ முத்தியுண்டாக மாட்டாது. ஞானத்தாலேயே
உண்டாகும். சரியை முதலியன, ஞானத்தைப்
பெறுவதற்குச் சாதனங்கள்.
ஞானம்
அறிவு மாத்திரத்தால் உரு, அருவுரு, அரு ஆகிய மூன்றையுங் கடந்த அகண்டகார
ஜோதிமயமான திருமேனியை வழிபடுதல்.
ஞானத்தின்
மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின்ல
மிக்க சமயமும் நன்றல்ல
ஞானத்தின்
மிக்கவை நன்முத்தில் நல்காவா
ஞானத்தின்
மிக்கார் நாரின்மிக் காரே ---
திருமந்திரம்
அரியஇம்
மானிட யாக்கை பெற்றவர்
கருமயோ
கங்களால் காலமு தள்ளுவர்,
உரிய
மெய்ஞ் ஞானயோ கத்தி னால்அரன்
துரிய
ஞானத்தினைச் சோதியார்களே. --- பதிபசுபாசவிளக்கம்
ஞானநூல்
தனைஓதல் ஓதுவித்தல்
நல்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல்
நன்றா
ஈனம்இலாப்
பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
ஊனம்இலாக்
கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்
ஒன்றுக்கு ஒன்று உயரும்; இவை ஊட்டுவது போகம்
ஆனவையான்
மேலான ஞானத்தால் அரனை
அருச்சிப்பர் வீடுஎய்த அறிந்தோர்
எல்லாம். --- சிவஞானசித்தியார்
கேட்டலுடன்
சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் எனஈர் இரண்டாம் கிளக்கில்
ஞானம்
வீட்டை
அடைந் திடுவர் நிட்டை மேவி னோர்கள்
மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு
ஈட்டியபுண்
ணியநாத ராகி இன்பம்
இனிது நுகர்ந்து அரன் அருளால் இந்தப்
பார்மேல்
நாட்டியநல்
குலத்தினில் வந்து அவதரித்துக் குருவான்
ஞானநிட்டை அடைந்து அடைவர் நாதன் தாளே. --- சிவஞானசித்தியார்
சமயபேதம் ---
சமயங்கள்
பல. அவை ஒன்றுடன் ஒன்று பிணங்குவனவே.
“விபரித சமய கலைகளும் அலம் அலம்” --- (அவருமிடை) திருப்புகழ்
“கலகல கலெனக்கண்ட
பேரொடு
சிலுகிடு சமயப்பங்க வாதிகள்” --- (அலகிலவுணரை)
திருப்புகழ்
“பேதித்த சமயமேர்
ஒன்று சொன படியொன்று
பேசாது” --- தாயுமானார்.
துரிய
மேலற்புத பரமஞானத்தனி சுடர் வியாபித்த நற்பதி:-
கற்சுவர்
போன்ற தூலதேக உறையும், பளிங்குச்சுவர் போன்ற
சூக்குமதேக உறையும், மெல்லாடை போன்ற குண
சரீர உறையும், பாம்புரி போன்ற
கஞ்சுக சரீர உறையும், பால்நுரை போன்ற காரண
சரீர உறையும் ஆகிய ஐவகை உறையினயைுங் கவித்துக் கொண்டு ஜீவான்மா வசிக்கின்றது. இங்ஙனம்
வகுக்கப்பட்ட அன்ன மயகோசம் என்ற தூல சரீரத்தின்கண் நின்று ஆன்மாவின் அறிவு விளங்கப்
பெறுகின்ற அவசரம் ஜாக்கிரம் எனப்படும். அப்போது கருவி 35.
மெய்
வாய் கண் நாசி செவி (ஞானேந்திரியம்) - 5
வாக்கு
பாணி பாதம் பாயுறு உபஸ்தம் (கன்மேந்திரியம்)- 5
மனம்
புத்தி சித்தம் அகங்காரம் (கரணம்) - 4
சப்த
பரிச ரூப ரச கந்தம் (தன்மாத்திரை) - 5
வசனம்
கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் (கன்மமம்) 5
பிராணன்
அபானன் உதானன் வியானன்
சமானன்
நாயகன் கூர்மன் கிரிதரன்
தேவதத்தன்
தனஞ்சயன் - (வாயு) 10
புருடன் -
1
ஆக, தத்துவங்கள் 35
பிராணமயகோசம்
என்ற சூட்சும சரீரத்தின்கண் நின்று ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம்
சொப்பனம் எனப்படும். அப்போது கருவி 25.
கன்மேந்திரியம்
5 உம், ஞானேந்திரியம் 5 உம் நீங்க ஏனைய தத்துவங்களாம்.
மனோமயகோசம்
என்ற குணசரீரத்தில் ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சுழுத்தி எனப்படும்.
அப்போது கரவி பிராணன் புருடன் என்ற 3. வாயு
9 வசனாதி 5 தன்மாத்திரை கரணம் 3, ஆக 22 நீங்கியது.
விஞ்ஞானமயகோசம்
என்ற கஞ்சுக சரீரத்தில் ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் துரியம்
எனப்படும்.
மேற்கூறிய
மூன்றில் சித்தமும் நீங்க, பிராணனும்
புருடனும்மாகிய கருவி2.
ஆனந்தமயகோசம்
என்கின்ற காரண சரீரத்தில் ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் துரியாதீதம்
எனப்படும். அப்போது பிராணனும் நீங்க புருடன் மட்டும் கருவி 1
இங்ஙனம்
கருவின் ஒடுங்கி துரியாதீதத்தில் ஆன்மா சுத்த அஞ்ஞான மயமாய் நிற்கும் அவசரத்தினையே
கீழாலவத்தை என்பர்.
இனி
இறைவனுடைய அருட்சத்தியானது சுத்த சுயம்பிரகாசமாய் ஆன்மாவினையும், அவ்வான்மாயினைப் பொதிந்த ஆணவத்தினையும்
வியாபித்துக் கொண்டு பேரொளிப் பிழம்பாய் நிற்கும். இந்த நிலையே மெய்ஞ்ஞான நிலை.
இதன்
விரிவைத் திருமந்திரம் என்னும் பத்தாம் திருமுறையில் அறியலாம்.
சாயுச்சிய
கதியை.......................அடைவேனோ? ---
துரியாதீத
நிலையை யடைந்து “எல்லாமற என்னையிழந்த நலம்” என்ற தன்மையையுற்று இன்பவடிவாகி
பரகதியையடைய வேண்டும்.
மேன்மைத்
திருப்புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே ---
திருப்புகழ்
முருகவேள் திருவருள் மயமாக விளங்குவதால் மேன்மை என்ற அடை தரப்பட்டது. அதனைப்
பாடுதற்கு அருணகிரியார்க்கு வயலூரில் முருகவேள் அருள் புரிந்தனர்.
“பாத பங்கயம் உற்றிட
உட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே” --- (கோலகுங்கும) திருப்புகழ்
கருத்துரை
வயலூரா!
சூரனை அடக்கிய வீரரே! கதிர்காமரே! துரியாதீத நிலையுற்று இன்புருவாகிய முத்திபெற
அருள்புரிவீர்.
No comments:
Post a Comment