கதிர்காமம் - 0428. திருமகள் உலாவும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

திருமகள் உலாவும் (கதிர்காமம்)

மனமே! முருகனைச் சிந்தனை செய்


தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
     திருமருக நாமப் ...... பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ...... பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


திருமகள் உலாவும் இருபுய முராரி
     திருமருக நாமப் ...... பெருமாள்காண்!

செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
     தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண்!

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
     மரகத மயூரப் ...... பெருமாள்காண்!

மணி தரளம் வீசி அணி அருவி சூழ
     மருவு கதிர்காமப் ...... பெருமாள்காண்!

அருவரைகள் நீறு பட, அசுரர் மாள,
     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்!

அரவு பிறை வாரி விரவு சடை வேணி
     அமலர் குருநாதப் ...... பெருமாள்காண்!

இருவினை இலாத தரு வினை விடாத
     இமையவர் குல ஈசப் ...... பெருமாள்காண்!

இலகு சிலை வேடர் கொடியின் அதி பார
     இருதன விநோதப் ...... பெருமாளே.

பதவுரை

      இலகு சிலை வேடர் கொடியின் --- விளங்குகின்ற வில்லைத் தாங்கியுள்ள வேடர் குடியிற் தோன்றிய கொடிபோன்ற மென்மையுடையராகிய வள்ளியம்மையாரின்,

     அதிபார இருதன விநோத --- மிகவும் பருத்துள்ள இரண்டு தனங்களிலும் பொழுது போக்கும்,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவராகிய முருகக்கடவுளே,

     திருமகள் உலாவும் --- இலக்குமிதேவி வாழ்கின்ற,

     இருபுய --- இரண்டு புயமலைகளை உடையவரும்,

     முர அரி --- முரன் என்ற அசுரனை அழித்தவரும், ஆகிய திருமாலினது,

     திருமருக நாமப் பொருமாள் காண் --- சிறந்த மருகர் என்ற திருப்பேரை உடைய பெருமான் என்று அறிவாயாக,

      செக தலமும் --- மண்ணுலகமும்,

     வானும் --- விண்ணுலகமும்,

     மிகுதி பெறு பாடல் --- மிகுதியான அருட்பாடல்களால் ஆராய்ந்து,

     தெரி தரு குமார பெருமாள் காண் --- அறிந்து கொள்ளத்தக்க குமாரக்கடவுள் என்று அறிவாயாக;

      மருவும் அடியார்கள் --- திருவருள் நெறியில் கலந்துள்ள அடியவர்களின்,

     மனதில் விளையாடும் --- உள்ளக் கமலத்தில் திருவிளையாடல் புரிகின்ற,

     மரகத மயூர பெருமாள் காண் --- மரகத நிறம் போன்ற பச்சை மயில் வாகனக் கடவுள் என்று அறிவாயாக;

      மணி தரளம் வீசி அணி --- இரத்தின மணிகளையும் முத்துக்களையுங் கொழித்து எறிந்து திருவடியில் அணிகின்ற,

     அருவி சூழ மருவு --- மாணிக்க நதியென்னும் அருவி சூழப் பொருந்தியுள்ள,

     கதிர்காம பெருமாள் காண் --- கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் என்று அறிவாயாக;

      அருவரைகள் --- சிறந்த மலைகள்,

     நீறுபட --- துகள்பட்டு ஒழியவும்,

     அசுரர் மாள --- சூராதி அவுணர்கள் மாண்டு அழியவும்,

     அமர் பொருத --- போர் புரிந்த

     வீர பெருமாள் காண் --- வீரமூர்த்தி என்று அறிவாயாக;

      அரவு --- பாம்பும்,

     பிறை --- பிறைச்சந்திரனும்,

      வாரி --- கங்கையும்,

     விரவு சடை வேணி --- கலந்து வாழ்கின்ற சடைமுடியை உடையவரும்,

     அமலர் --- அனாதி மலமுத்தருமாகிய சிவபெருமானுக்கு,

     குருநாதப் பெருமாள் காண் --- குருமூர்த்தியாக இருந்து உபதேசித்த பெருமான் என்று அறிவாயாக;

      இருவினை இலாத --- நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளிலும் நடுநிலை பெற்றவர்களும்,

     தரு வினை விடாத --- கொடுக்கின்ற தொழிலை விடாதவர்களுமாகிய,

     இமையவர் --- தேவர்களுடைய,

     குல ஈச பெருமாள் காண் --- கூட்டத்திற்குத் தலைவர் என்று அறிவாயாக.

பொழிப்புரை

      விளங்குகின்ற வில்லைத் தரித்த வேட்டுவர் குடியில் அவதரித்த கொடிபோன்ற மெல்லியலையுடைய வள்ளியம்மையாருடைய மிகவும் பருத்துள்ள இரு தனங்களிலும் பொழுது போக்குபவராகிய பெருமிதமுடைய முருகக் கடவுளே,

      இலக்குமி தேவி வாழ்கின்ற இரண்டு புயாசலங்களை யுடையவரும், முரன் என்ற தானவனை வதைத்தவருமாகிய நாராயணமூாத்தியின் திருமருகர் என்ற திருநாமத்தையுடைய பெருமான் என்றும்,

     மண்ணுலகமும், விண்ணுலகமும், துதிசேய்கின்ற மிகுதியான அருட்பாடல்களால் ஆராய்ந்து அறிதற்குரிய குமார பரமேசுவரர்! என்றும்,

      திருவருள் நெறியில் கலந்துள்ள மெய்யடியார்கள் உள்ளக் கோயிலில் ஒழியாது திருவிளையாடல் புரியும் பச்சைமயில் வாகனக் கடவுள் என்றும்,

     இரத்தின மணிகளையும் முத்து மணிகளையும் அலைகள் என்ற கரத்தால் கொழித்து பெருமான் திருவடியில் வீசியணிகின்ற, மாணிக்க நதி சூழ்ந்துள்ள கதிர்காமம் என்ற திவ்ய க்ஷேத்ரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் என்றும்,

      சிறந்த மலைகள் துகள்பட்டொழியவும் சூராதி யவுணர்கள் மாய்ந்தொழியவும் போர் புரிந்த வீரப்பெருமான் என்றும், பாம்பு பிறைமதி நதி ஆகியவற்றை முடியில் தரித்துள்ள, அமலராகிய, சிவபெருமானுக்குப் பிரணவோபதேசம் புரிந்த பரமகுருநாதர் என்றும், இருவினை யொப்பு கைவரப் பெற்று, கொடைத் தொழிலை விடாத தேவர்கள் குழுவுக்குத் தலைவர் என்றும்

         அறிந்து மனமே நீ உய்வாயாக.

விரிவுரை

திருமகளுலாவு................திருமருக ---

இலக்குமியைத் திருப்புயத்தில் திருமால் தரித்தனர் என்பதன் கருத்து, காக்குங் கடவுளாதலின், காத்தற்றொழிலுக்கு இடையூறு செய்வோரை அழிப்ராதலால் திருமாலின் புயத்தில் வீரலட்சுமி உலவுகின்றனள். முராரி-முர அரி; முரன் என்ற அசுரனைக் கொன்றதனால் முராரி என்ப. திருமாலாதி தேவரும் மதிக்கும் “மானமூர்த்தி”யாக விளங்குகின்றார்.

ஜெகதலமும்..........................தெரிதரு குமார ---

விண்ணுலகில் உள்ளவரும், மண்ணுலகில் உள்ளவரும் முருகவேளை உள்ளம் உருகிபாடி மகிழ்வர். அப்பாடல்களின் இனிமையையும் தாராதம்யங்களையும் ஆறுமுகக் டவுள் அறிகின்றனர். அவர் பெருந்தமிழ்ப் புலவர் அன்றோ?

கல்வி கரைகண்ட புலவோனே”       --- (அல்லசல) திருப்புகழ்.

திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர்
  குமர! கந்த! பராக்ரம செந்தமிழ்
    தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே”--- (முனையழிந்தது) திருப்புகழ்.

எங்குந் தங்குக முருகன் புகழ். புகழ்ப்பாடல் பொலிக; அதுவே கலியின் மிகப்பெரிய பாவங்களைக் கெடுக்கவல்லது. அதனால் “கானமூர்த்தி”யாக விளங்குகின்றார்.

மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் ---

திருவருள் நெறியை மருவுபவர் என்று கூட்டுக. முருகன் சின்னஞ் சிறுபிள்ளை; பிள்ளைகட்கு விளையாடுவதில் அளவு கடந்த ஆர்வம் உண்டு. அங்ஙனம் ஆடுவதற்கு ஓர் அழகிய-குளிர்ந்த இடம் வேண்டும். குழந்தை குமரப்பனுக்கு விளையாடுகின்ற இடம் எது? அடியார் உள்ளமாகிய பூங்காவனமே.

மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர்சென்று
   தேடி விளையாடியே, அங்ஙனே நின்று
   வாழும் மயில்வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே”   --- (மூளும்வினை) திருப்புகழ்,

அடியார்கள் உள்ளத்தில் “த்யானமூர்த்தி”யாக விளங்குகின்றார்.

மணிதரளம்..................கதிர்காம பெருமாள் ---

கதிர்காம மிகச்சிறந்த திருத்தலம். முருகன் தலங்களுள் மகிமை நிரம்பியது. அது ஈழ நாட்டில் விளங்குவது. பிரமரந்திரஸ்தலம். இன்னும் பற்பல அற்புதங்கள் நிகழ இகபர சித்தி தருவது. எம்பெருமான் சூராதி அவுணர்களைக் கொல்லும் பொருட்டுத் தங்கியிருந்த பாடி வீடு. யுத்தகோலமாக நின்ற நிலை. அதனால்தான் கதிர்காமத்தில் சுவாமி தரிசனம் கிடையாது. திரையை வணங்குகின்றனர். உருவ வழியாடு இல்லை. சிதம்பர ரகசியம் போல் பாவனையாகத் தான் வழிபாடு. அதனால் “வானமூர்த்தி”யாக விளங்குகின்றனர்.

அருவரைகள்..................அமர் பொருத வீர ---

இலக்கத்து ஒன்பான் வீரர்களையும் தாரகற்குத் துணை செய்வான் மயக்கிய கிரௌஞ்ச வரையையும், நக்கீரர் கற்கிமுகி என்ற பூதத்தால் அடைபட்ட வரையையும் பெருமான் திருவேலால் துகள்படச் செய்தனர்.

தேவர்கட்குப் பல யுகங்களாக இடுக்கண் புரிந்த வந்த சூராதி யவுணர்களையும் அழித்தனர். அடியார்க்குச் சத்துரு பயம் வராது. அதனால் ”வீரமூர்த்தி”யாக விளங்குகின்றனர்.

அரவு பிறை வாரி........அமலர் குருநாத ---

தவமே பயனைத்தரும்; பயனைத்தருவதற்கு பதி வேண்டுவதில்லை” என்ற கொள்கையை உடைய தாருக வனத்து இருடிகள், சிவபெருமானை எதிர்த்து அபிசார வேள்வி செய்து, கொடும்பாம்புகளை உண்டாக்கி இறைவனைக் கொல்ல ஏவினர். கருணைக் கடலாகிய கண்ணுதற் கடவுள் அவ் விடப்பாம்புகளிடத்தும் இன்னருள் புரிந்து அவற்றைக் கொல்லாது ஆபரணமாகத் தரித்துக் கொண்டனர்.

வீம்பு உடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்ட, கொடும்
பாம்பு அனைத்தும் தோளில் பரித்தனையே”               --- இராமலிங்க அடிகள்.

சந்திரன் தக்கன் சாபத்தால் கலைகள் தேய்ப்பெற்று அஞ்சி எங்கும் புகலிடம் காணாது அரனாரிடம் அபயம் புக, அவனை அஞ்சேலென்று சிரமேற் சூடி அருள் புரிந்தனர். உலகங்களை எல்லாம் அழிப்பேன என்று வந்த கங்கையைச் சடையில் அடக்கி உயிர்கட்குத் தண்ணருள் புரிந்தனர். இங்ஙனம் அரவு, பிறை, கங்கை இவற்றை முடித்துக்கொண்ட முழுமுதலாம் சிவபெருமான் சித்தங்குளிர மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்தனர். அதனால் “ஞானமூர்த்தி”யாக விளங்குகின்றனர்.

இருவினையிலாத.....................இமையவர் குலேச ---

இருவினை; நல்வினை, தீவினை, இரண்டுங் கெட்டாலன்றி இன்பந் தோன்றாது. நல்வினை புரியினும் உயர்ந்த பிறவியெடுத்து பயனை அநுபவித்தே தீரவேண்டும். அது பொன் விலங்கு போன்றது. தீவினை இரும்பு விலங்கு போன்றது. தீவினையைச் செய்யாது விடுத்தும் நல்வினையை சிவார்ப்பணமாக பல அபேக்ஷையின்றி செய்தும் இருவினை ஒப்பு என்ற நிலையை அடைதல் வேண்டும்.

"தரு வினை விடாத" என்பதற்கு கற்பக விருட்சத்தை விட்டுநீங்காதவர்கள் எனினும் பொருந்தும். தேவர்கள் பயங்கெடுத்து அவர்கட்கு வாழ்க்கையைத் தந்தாராதலின் “தியாகமூர்த்தி”யாக விளங்குகின்றனர்.

இருதன விநோத ---

பரஞானம், அபரஞானம், என்ற இரு ஞானங்களையும் வள்ளியம்மையாருக்கு விளஞ்குவதே பொழுது போக்காகக் கொண்டு உயிர்கள் இன்புறும் பொருட்டு இன்ப சக்தியுடன் மருவுகின்றனர். ஆதலின், “போகமூர்த்தி”யாக விளங்குகின்றனர்.

முருகப் பெருமானுடைய எட்டு பண்புகளை இப்பாடல் விளக்குகின்றது. வெறும் துதியாகவும் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இலக்குமியையும் இறுதியில் வள்ளிபிராட்டியாரையும் கூறுவதுடன் இடையில், பாடல், ஆடல், அருவி, வீரம், உபதேசம், கற்பம் ஆகிய பல மங்கல மொழிகள் வருவதால் இப்பாடல் மிகவும் மேன்மை தங்கியது. பாராயணத்திற்குரியது, மங்கல காலங்களில் பாடற் கேற்றது.

கருத்துரை

வள்ளியம்மையாருடைய கணவராகிய வடிவேற் பெருமாளை, திருமால் மருகராகவும், திருமால் மருகராகவும், உறிவினாலறியத் தக்கவராகவும், அடியார் உளத்தில் உறைபவராகவும் கதிர்காமக் கடவுளாகவும், அவுண குலகாலராகவும், சிவகுருநாதராகவும், தேவ தேவராகவும் அறிந்து உய்க.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...