கதிர்காமம் - 0429. பாரவித முத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாரவித முத்த (கதிர்காமம்)

முருகா!
பொதுமாதர் மீது அடியேன் வைத்த ஆசையை மாற்றிய
உனது கருணையை ஒருபோதும் மறவேன்


தானதன தத்தத்த தானதன தத்தத்த
     தானதன தத்தத்த ...... தனதான

பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
     யோதர நெருக்குற்ற ...... இடையாலே

பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
     பாணவிழி யிற்பொத்தி ...... விடுமாதர்

காரணிகு ழற்கற்றை மேல்மகர மொப்பித்த
     காதில்முக வட்டத்தி ...... லதிமோக

காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த
     கால்களைம றக்கைக்கும் ...... வருமோதான்

தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
     சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன்

சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
     கோணசயி லத்துக்ர ...... கதிர்காம

வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
     மேகலையி டைக்கொத்தி ...... னிருதாளின்

வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
     வேல்களில கப்பட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பார வித முத்தப் படீர புளகப் பொன், பய
     உதரம் நெருக்கு உற்ற ...... இடையாலே,

பாகு அளவு தித்தித்த கீதமொழியில், புட்ப
     பாணவிழியில் பொத்தி ...... விடுமாதர்,

கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த
     காதில், முகவட்டத்தில், ...... அதிமோக

காமுகன், அகப்பட்ட ஆசையை மறப்பித்த
     கால்களை மறக்கைக்கும் ...... வருமோதான்?

தேர் இரவி உட்கிப் புகா முது புரத்தில்,
     தெசா சிரனை மர்த்தித்த ...... அரிமாயன்

சீர்மருக! அத்யுக்ர யானைபடும் ரத்ந த்ரி-
     கோண சயிலத்து உக்ர ...... கதிர்காம

வீர! புனவெற்பில் கலாபி எயினச்சிக்கு
     மேகலை இடை, கொத்து ...... இன்இருதாளின்

வேரி மழையில், பச்சை வேயில், அருணக் கற்றை
     வேல்களில் அகப்பட்ட ...... பெருமாளே.


 பதவுரை

      தேர் இரவி உட்கி புகா முது புரத்தில் --- தேரிலே வருகின்ற சூரியன் அஞ்சி உள்ளே புகாத பழைய ஊராகிய இலங்கையில்,

     தெசா சிரனை மர்த்தித்த அரிமாயன் சீர் மருக --- பத்துத் தலைகளையுடைய இராவணனைப் பிசைந்து கடைந்த திருமாலின் சிறந்த திருமருகரே!

      அதி உக்ர யானைபடும் ரத்ன அத்ரி கோண சயிலத்து உக்ர கதிர்காம ---  அதிக உக்கிரமான யானைகள் எதிர்ப்படும் இரத்தினங்கள் கிடைக்கும் மலையாகிய திருக்கோண மலையில் வீற்றிருக்கும் உக்கிரமான கதிர்காமக் கடவுளே!

      வீர --- வீரமூத்தியே!

      புன வெற்பில் கலாபி எயினச்சிக்கு --- தினைப்புனம் நிறைந்த வள்ளிமலையில் மயில்போன்ற வேடப் பெண்ணின்,

     மேகலை இடை --- மேகலை அணிந்த இடையிலும்,

     கொத்து இன் இருதாளின் --- பூங்கொத்துக்கள் உடைய இனிய இருதாள்களிலும்,

     வேரி மழையில் --- வாசனை தங்கிய மேகம் போன்ற கூந்தலிலும்,

     பச்சை வேயில் --- பசிய மூங்கில் போன்ற தோள்களிலும்,

     அருண கற்றை வேல்களில் --- சிவந்த ஒளித்திரளைக் கொண்ட வேல் போன்ற கண்களிலும்,

     அகப்பட்ட  --- சிக்கிக் கொண்ட,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      பாரவித --- பாரங்கொண்டதும்,

     முத்த படீர - முத்துமாலை அணிந்து சந்தனம் பூசப் பெற்றதும்,

     புளக --- புளகாங்கிதங் கொண்டதும்,

     பொன் பயோதர --- அழகியதும் ஆகிய தனங்களால்,

     நெருக்கு உற்ற இடையாலே --- நெருக்குண்ணும் இடையாலும்,

     பாகு அளவு தித்தித்த --- சர்க்கரைப்பாகு போல் தித்தித்த,

     கீத மொழியில் --- கீதம் போன்ற இனிய மொழிகளாலும்

     புட்ப பாண விழியில் --- மன்மதனுடைய மலர்க் கணைகள் போல் தைக்கும் கண்களாலும்,

     பொத்தி விடும் மாதர் --- ஆண்களை ஆசை மயக்கத்தால் மூடிவிடுகின்ற பொதுமாதர்களின்,

     கார் அணிகுழல் கற்றை மேல் --- மேகம் போன்ற கூந்தல் கட்டினாலும்,

     மகரம் ஒப்பித்த காதில் --- மகர மீன்போன்ற குழை அணிந்த காதினாலும்,

     முக வட்டத்தில் --- முக மண்டலத்தினாலும்,

     அதி மோக --- அதிக மோகம் கொண்ட,

     காமுகன் --- காமியாகிய அடியேன்,

     அகப்பட்ட ஆசையை மறப்பித்த --- சிக்கிக் கிடந்த ஆசையை அடியோடு மறக்கச் செய்த,

     கால்களை மறக்கைக்கும் வருமோ தான் --- உமது திருவடிகளை மறக்கவும் கூடுமோ? (மறவேன்).

பொழிப்புரை

         தேரில் வருகின்ற சூரியபகவான் அஞ்சி உள்ளே புகமாட்டாத பழைய ஊராகிய இலங்கையில் பத்துத் தலைகளையுடைய இராவணனைக் கலக்கிக் கடைந்த திருமாலின் சிறந்த மருகரே!

     மிகுந்த வேகமுடைய யானைகள் எதிர்ப்படும், இரத்தின மணிகள் கிடக்கும் திருக்கோண மலையில் வீற்றிருக்கும், உக்கிரமான கதிர்காமக் கடவுளே!

     வீரமூர்த்தியே!

     தினைப்புனத்துடன் கூடிய வள்ளிமலையில், மயில் போன்ற வேடப் பெண்ணாகிய வள்ளி நாயகியின் மேகலை யணிந்த இடையிலும், பூங்கொத்துக்களுடைய இனிய இருதாள்களிலும், வாசனை தங்கிய மேகம் போன்ற கூந்தலினாலும், பசிய மூங்கிலை யொத்த தோள்களிலும், சிவந்த ஒளிவிடும் கூரிய வேல் போன்ற கண்களிலும் சிக்கிக் கொண்ட பெருமிதமுடையவரே!

         பாரங் கொண்டதும், முத்துமாலை அணிந்ததும், சந்தனம் பூசப்பட்டதும், புளகாங்கிதங் கொண்டதும், அழகியதுமான தனங்களால் நெருக்குண்ணும் இடையினாலும், மன்மதனுடைய மலர்க்கணைகள் போன்ற கண்களாலும், ஆடவர்களைக் காம மயக்கத்தில் மூடிவிடுகின்ற பொது மாதர்களின் மேகம் போன்ற கூந்தல் கட்டினாலும், மகர மீன் போன்ற குழைகளையுடைய காதுகளினாலும், முகமண்டலத்தாலும், அதிமோகங் கொண்ட, காமியாகிய அடியேன், சிக்கிக் கிடந்த ஆசையை அடியுடன் மறக்கும்படிச் செய்த உமது திருவடிகளை மறக்கவும் வருமோ? (ஒருபோதும் மறவேன்)

விரிவுரை

இத்திருப்புகழ் அருணகிரிநாதருடைய வரலாற்றுத் தொடர்பு உடையது. மூன்று அடிகளில் தன்னை மயக்கிய கணிகையரது அங்க நலன்களைக் கூறுகின்றார்.

காமுகனகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கு வருமோதான் ---

பொது மாதரது வசமாகிய ஆசைக்கடலில் முழுகியிருந்த அடியேன், அந்த ஆசையை அடியோடு மறக்குமாறு அருள்புரிந்த உமது பாதமலரை மறக்க வொண்ணுமோ! ஒருபோதும் மறவேன், மறவேன்” என்று சுவாமிகள் கூறுகின்றார்.


தேர் இரவி உட்கிப் புகா முதுபுரம் ---

இராவணனுடைய ஆணைக்கு அஞ்சி இலங்கையில் சூரியன் தேர் செல்ல மாட்டாது.

பகலவன் மீதியங்காமை காத்த பதியோன்” --- திருஞானசம்பந்தர்

பகலவன் மீதியங்காத இலங்கை”           --- பெரியதிருமொழி

"புணரியில் விரவி எழுந்த ஞாயிறு
   விலகிய புரிசை இலங்கை வாழ்பதி”      --- (நிணமொடு) திருப்புகழ்

அத்யுக்ர யானைபடும் ரத்னத்ரி கோண சயிலம் ---

அதி உக்ர-அத்யுக்ர. கோண சயிலம்-திருகோணமலை.

இது இலங்கையில் உள்ள அருமையான தலம். தேவாரப் பாடல் பெற்றது.

கனமணிவரன்றிக் குரைகடல் ஓதம்
   நித்திலம் கொழிக்கும் கோணமா மலை” --- திருஞானசம்பந்தர்

வேரி மழையில் ---

வேரி-வாசனை. மழை-மேகம். இரு ஆகு பெயராகக் கூந்தலைக் குறிக்கின்றது.

வேல்களில் ---

வேல் போன்ற கண். இதுவும் ஆகு பெயர்.

கருத்துரை

கதிர்காமத் திருமுருகா! அடியேனுடைய ஆசையை அகற்றிய உன்பாத மலரை ஒருபோதும் மறவேன்.

                 

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...