கதிர்காமம் - 0430. மருவறா வெற்றி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மருஅறா வெற்றி (கதிர்காமம்)

முருகா!
உன்னை நாடும் தலைவியை வாழ்விக்க வந்தருள்


தனதனா தத்த தனதனா தத்த
     தனதனா தத்த ...... தனதான

மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
     வலிசெயா நிற்கு ...... மதனாலும்

மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
     மதிசுடா நிற்கு ...... மதனாலும்

இருகணால் முத்த முதிரயா மத்தி
     னிரவினால் நித்த ...... மெலியாதே

இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
     மிவளைவாழ் விக்க ...... வரவேணும்

கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
     கலவிகூர் சித்ர ...... மணிமார்பா

கனகமா ணிக்க வடிவனே மிக்க
     கதிரகா மத்தி ...... லுறைவோனே

முருகனே பத்த ரருகனே முத்தி
     முதல்வனே பச்சை ...... மயில்வீரா

முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
     முறியவேல் தொட்ட ...... பெருமாளே

பதம் பிரித்தல்


மரு அறா வெற்றி மலர் தொடா, வில்கை
     வலிசெயா நிற்கும் ...... மதனாலும்,

மதில்கள் தாவுற்ற கலைபடா வட்ட
     மதிசுடா நிற்கும் ...... அதனாலும்,

இருகணால் முத்தம் உதிர யாமத்தின்
     இரவினால் நித்தம் ...... மெலியாதே,

இடர்உறா, மெத்த மயல்கொளா நிற்கும்
     இவளை வாழ்விக்க ...... வரவேணும்.

கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி
     கலவி கூர் சித்ர ...... மணிமார்பா!

கனக மாணிக்க வடிவனே! மிக்க
     கதிர காமத்தில் ...... உறைவோனே!

முருகனே! பத்தர் அருகனே! முத்தி
     முதல்வனே! பச்சை ...... மயில்வீரா!

முடுகி மேல் இட்ட கொடிய சூர் கெட்டு
     முறிய, வேல் தொட்ட ...... பெருமாளே.


பதவுரை

       கரிகள் சேர் வெற்பில் --- யானைகள் வாழும் மலையில்

     அரிய வேடிச்சி கலவி கூர் --- அருமையான வள்ளிபிராட்டியின் கலவியின்பம் மிகுந்த,

     சித்ர மணி மார்பா  ---அழகிய மணிகள் நிறைந்த திருமார்பினரே!

      கனக மாணிக்க வடிவனே --- பொன்னில் பதித்த மாணிக்கம் போன்ற உருவினரே!

      மிக்க கதிர காமத்தில் உறைவோனே --- சிறந்த கதிர்காமத்தில் வாழ்கின்றவரே!

      முருகனே --- முருகக் கடவுளே!

      பத்தர் அருகனே --- அடியார்களின் அருகில் இருப்பவரே!

      முத்தி முதல்வனே --- முத்தியுலக்கிற்குத் தலைவரே!

      பச்சை மயில் வீரா --- பச்சைமயிலில் வரும் வீரமூர்த்தியே!

      முடுகி மேல் இட்ட --- விரைந்து வந்து மேலிட்டு எதிர்த்த,

     கொடிய சூர் கெட்டு முறிய --- கொடுமையான சூரன் கெட்டு அழியுமாறு,

     வேல் தொட்ட --- வேலை விடுத்த,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      மரு அறா --- வாசனை நீங்காததும்,

     வெற்றி மலர் தொடா --- வெற்றி பெறுவதுமான மலர்க்கணைகளை தொட்டுப் பயிலும்,

     வில் கை --- வில்லைக் கையில் பிடித்து,

     வலி செயா நிற்கும் --- வலிமையைச் செய்து நிற்கும்,

     மதனாலும் --- மன்மதனாலும்,

     மதில்கள் தா உற்ற --- மதில்களைத் தாண்டி வருகின்ற,

     கலை படா  --- கலைகள் குறையாத,

     வட்ட மதி --- வட்டமாயுள்ள சந்திரன்,

     சுடா நிற்கும் அதனாலும் --- சுட்டு நிற்பதனாலும்,

     இரு கணால்  --- இரண்டு கண்களில்,

     முத்தம் உதிர --- முத்துப் போன்ற கண்ணீர் சிந்த,

     யாமத்தின் இரவினால் --- யாமங்கள் கொண்ட இரவில்,

     நித்தம் மெலியாதே --- தினந்தோறும் மெலிவு அடையாமல்,

     இடர் உறா --- துன்பம் அடைந்து,

     மெத்த மயல் கொளா --- மிகவும் மயக்கங் கொண்டு,

     நிற்கும் இவளை வாழ்விக்க --- வருந்தி நிற்கும் இந்த நாயகியை வாழ்விக்கும் பொருட்டு,

     வரவேணும் --- தேவரீர் வந்தருளவேணும்.



பொழிப்புரை
        
     யானைகள் வாழும் வள்ளிமலையில் அருமை வாய்ந்த வேட்டுவப் பெண்ணாகிய வள்ளியம்மையின் கலவி இன்பம் மிகுந்த அழகிய மணிமார்பிணரே!

     பொன்னுடன் கூடிய மாணிக்க மணி போன்ற வடிவினரே!

     சிறந்த கதிர்காமத்தில் உறைகின்றவரே!

     முருகப் பெருமாளே!

     அடியார்களின் அருகில் உறைபவரே!

     முத்திக்கு முதல்வரே!

     பச்சை மயில் வீரரே! மிகுந்த வேகத்துடன் வந்த கொடிய சூரன்கெட்டு அழிய வேலைத் தொட்டருளிய பெருமிதமுடையவரே!

     வாசனை நீங்காததும் வெற்றி பெறுவதும் ஆன மலர்க்கணைகளைத் தொட்டுப் பயிலும் வில்லைக் கையில் வைத்து வலிமை செய்யும் மன்மதனாலும், மதில்களைத் தாண்டிவரும் கலைகள் குறையாத வட்டவடிவமான சந்திரன் சுட்டு நிற்பதனாலும், இருகண்களில் முத்துமுத்தாய் கண்ணீர் சிந்த யாமங்கள் தோறும் ஒவ்வொரு நாளும் இரவில் மெலியாதவாறு, காமமயக்கத்தால் துன்புற்று நிற்கும் இவளை வாழ்விக்க வந்தருளவேண்டும்.

விரிவுரை

இந்தத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.

தலைவியின் துன்பத்தைக் கண்டு இரங்கிய பாங்கி தலைவனாகிய முருகனிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மருவறா வெற்றி............மதனாலும் ---

வாசனையும் வெற்றியும் பொருந்திய மலர்க் கணைகளால் மன்மதன் இவனைச் சித்திரவதை செய்கின்றான். அதனால் இவளை முருகா! நீ வாழ்வித்தருள்.

மதிசுடா நிற்கு மதனாலும் ---

தலைவிக்கு விரகதாபத்தை மிகுதிப்படுத்திச் சந்திரன் சுடுகின்றனான்.

ஊரைச் சுடுமோ உலகத்தைத் தான்சுடுமோ?
ஆரைச் சுடுமோ? அறிகிலேன்-பாரில்
பொருப்பு வட்டமானமுலைப் பூவையை வாட்டும்
நெருப்பு வட்டமான நிலா

இருகணால் முத்த முதிர ---

இத்தலைவி தலைவனை நினைந்து இருகண்களினின்றும் முத்து முத்தாய் கண்ணீர் சிந்தி வருந்துகின்றாள்.

யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே ---

யாமம் 3 மணி நேரம். 71/2 நாழிகை.

யாமந்தோறும் - இரவில் இவள் தினமும் வேதனைப்படுகின்றாள். ஆதலால் காதலால் மெலியும் இவளை வாழ்விக்க முருகா! நீ வந்தருள்.

கனக மாணிக்க வடிவனே ---

அருணகிரியார் கதிர்காமம் சென்று தெரிசித்தபோது பொன்னில் பதித்த மாணிக்கம் போன்ற அழகிய திருவுருவுடன் முருகவேள் காட்சித் தந்தருளினார்.

கருத்துரை

கதிர்காம வேலவனே! உன்னை நாடும் இத்தலைவியை வாழ்விக்க வந்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...