அவை அடக்கம்


மாரிக்கு நிகர்என்று பனிசொரிதல் போலவும்,
         மனைக்குநிகர் என்றுசிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும், சந்த்ரன்முன்
         மருவுமின் மினிபோலவும்,

பாருக்குள் நல்லோர் முனேபித்தர் பலமொழி
         பகர்ந்திடும் செயல்போலவும்,
பச்சைமயில் ஆடுதற்கு இணைஎன்று வான்கோழி
         பாரில் ஆடுதல் போலவும்,

பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று
         போது வாய்க்கால் போலவும்,
புகல் சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப்
         பொருந்த வைத்தது போலவும்,

வாரிக்கு முன்வாவி பெருகல் போலவும், இன்சொல்
         வாணர்முன், உகந்து புல்லை
வால குமரேசர் மேல் சதகம் புகன்றனன்
         மனம்பொறுத்து அருள்புரிகவே.

          இதன் பொருள் ---

     மாரிக்கு நிகரென்று பனிசொரிதல் போலவும் --- மழைக்குபொழிவதற்குச் சமானமாகப் பனிப் பொழிதல்  போலவும்,

     மனைக்கு நிகர் என்று சிறுபெண் மணல் வீடு கட்டுவது போலவும் --- வீட்டுக்கு ஒப்பு என்று ஒரு சிறுமியானவள் மணலாலே வீடு கட்டுவது போலவும்,

     சந்த்ரன் முன் மருவும் மின்மினி போலவும் --- திங்களுக்குச் சமம் என்று மின் மினி ஒளிர்தல் போலவும்,

     பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் --- உலகத்தில் நல்லவர்கள் பேசுவதைப் போல என்று எண்ணி, பித்தர்கள் பலசொற்களைப் பிதற்றுவது போலவும்,

     பாரில் பச்சை மயில் ஆடுதற்கு இணையென்று வான்கோழி ஆடுதல் போலவும் --- உலகத்தில் அழகிய பசுமையான தோகையை விரித்து ஆடுகின்ற மயிலுக்கு ஒப்பாக வான்கோழி ஆடுவது போலவும்,

     பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகரென்று போது வாய்க்கால் போலவும் --- பெருக்கெடுத்துச் செல்லும் அழகிய காவேரி ஆற்றுக்குச் சமமாகப் போகின்ற சிறு வாய்க்கால் போலவும்,

     புகல் சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப் பொருந்த வைத்தது போலவும் --- புகழ்ந்து சொல்லப்படும் சிப்பியிலிருந்து வெளி வந்த முத்துக்குச் சரியாகப் பளிங்கைப் பொருத்துவது போலவும்,

     வாரிக்கு முன் வாவி பெருகல் போலவும் --- கடலுக்கு நிகராக, குளம் நிறைந்து காட்டுதல் போலவும்,

     இன்சொல் வாணர் முன் --- இனிய மொழிகளுடைய கவிஞர்கள் பலர் இருக்கவும்,

     புல்லை வால குமரேசர் மேல் உகந்து சதகம் புகன்றனன் --- திருப்புல்வயலில் என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளைப் பாட்டுடைத் தலைவராக வைத்து, விரும்பி, சதகம் என்னும் இந்த நூலைச் சொன்னேன்.

     மனம் பொறுத்து அருள் புரிக --- கற்ற பெரும்புலவர்கள் மனத்தில் பொறுத்துக்கொண்டு (நான் பாடியதை)_ஏற்று அருள்வாராக.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...