குன்றுதோறாடல் - 0436. எழுதிகழ் புவனம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எழுதிகழ் புவன (குன்றுதோறாடல்)

முருகா!
உன்னையே நினைந்து உருகும் இந்தப்
பெண்ணின் தனிமை தீர அருள்


தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான


எழுதிகழ் புவன நொடியள வதனி
     லியல்பெற மயிலில் ...... வருவோனே

இமையவர் பரவி யடிதொழ அவுணர்
     மடிவுற விடுவ ...... தொருவேலா

வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
     வழிபட மொழியு ...... முருகேசா

மலரடி பணியு மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வ ...... தழகோதான்

முழுகிய புனலி லினமணி தரள
     முறுகிடு பவள ...... மிகவாரி

முறையொடு குறவர் மடமகள் சொரியு
     முதுமலை யழக ...... குருநாதா

பழகிய வினைகள் பொடிபட அருளில்
     படிபவ ரிதய ...... முறுகோவே

பருவரை துணிய வொருகணை தெரிவ
     பலமலை யுடைய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


எழு திகழ் புவனம் நொடி அளவு அதனில்
     இயல்பெற மயிலில் ...... வருவோனே!

இமையவர் பரவி அடிதொழ, அவுணர்
     மடிவுற விடுவது ...... ஒருவேலா!

வழுதியர் தமிழின் ஒருபொருள் அதனை
     வழிபட மொழியும் ...... முருகேசா!

மலர்அடி பணியும் மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வது ...... அழகோதான்.

முழுகிய புனலில் இனமணி தரளம்,
     முறுகிடு பவளம் ...... மிகவாரி,

முறையொடு குறவர் மடமகள் சொரியும்
     முதுமலை அழக! ...... குருநாதா!

பழகிய வினைகள் பொடிபட, அருளில்
     படிபவர் இதயம் ...... உறுகோவே!

பருவரை துணிய ஒருகணை தெரிவ!
     பலமலை உடைய ...... பெருமாளே.

பதவுரை

      முழுகிய புனலில் --- முழுகிய நீரில்,

     இனமணி தரளம் --- கூட்டமான முத்து மணிகளையும்,

     முறுகிடு பவளம் மிகவாரி --- பின்னிய பவளங்களையும், நிரம்ப வாரியெடுத்து,

     முறையொடு குறவர் மடமகள் சொரியும் --- வாங்குங்கள் என்ற முறையீட்டோடு குறப் பெண்கள் சொரிகின்ற,

     முதுமலை அழக ---  பழமலையில் விளங்கும் அழகரே!

      குருநாத - குருநாதரே!

      பழகிய வினைகள் பொடிபட --- கூடவே பழகி வருகின்ற வினைகள், யாவும் பொடிபடும்படி,

     அருளில் படிவர் இதயம் உறுகோவே --- உனது திருவருளில் தோய்பவருடைய உள்ளத்தில் வீற்றிருக்கின்ற தலைவரே!

      பருவரை துணிய ஒருகணை தெரிவ --- பருத்த கிரவுஞ்சமலை பொடிபடும்படி ஒப்பற்ற ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்து விட்டவரே!

      பலமலை உடைய பெருமாளே --- பலமலைகட்கும் தலைவனாயுள்ள பெருமையில் சிறந்தவரே!

      எழுதிகழ் புவனம் --- ஏழு என விளங்கும் புவனங்களை

     நொடி அளவு அதனில் --- நொடிப்பொழுதில்

     இயல்பெற --- அழகு விளங்க

     மயிலில் வருவோனே --- மயில்மீது வலம் வந்தவரே!

      இமையவர் பரவி அடிதொழ --- தேவர்கள் துதி செய்து திருவடியைத் தொழ,

     அவுணர் மடிவுஉற விடுவது ஒரு வேலா ---  அசுரர் முடிவை அடையுமாறு செலுத்திய ஒப்பற்ற வேலாயுதரே!

      வழுதியர் தமிழின் ஒரு பொருள் அதனை --- பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழில் ஒப்பற்ற பொருளதிகாரத்தின் உரையை,

     வழிபட மொழியும் முருக ஈசா --- சங்கப் புலவர்கள் வழிபட்டு நிற்க ஆராய்ந்து உரைத்த முருகக் கடவுளே!

      மலர் அடிபணியும் மடமகள் --- உமது மலர்போன்ற திருவடியைப் பணிகின்ற இந்த மடமகளானவள்

     பசலை மயல்கொடு தளர்வது  அழகோதான் --- ஆசைநோயால் உற்ற நிற வேறுபாட்டுடன் மோகமயக்கத்தால் தளர்ச்சியடைவது நியாயமகுமோ?

பொழிப்புரை

         நீரில் மூழ்கியெடுத்த கூட்டமான முத்துமணிகளையும், கொடிபோல் பின்னிய பவளங்களையும், நிரம்ப வாரியெடுத்து, “முத்து வாங்குங்கள்” "பவளம் வாங்குங்கள்” என்று கூவி அழைத்து குறச்சிறுமியர் சொரிகின்ற, பழமலையில் வாழ்கின்ற அழகரே!

         குருநாதரே!

         கூடவே பழகி வருகின்ற வினைகள் முற்றிலும் பொடிபடுமாறு, திருவருளில் தோய்ந்த அடியவர்களின் இதயக் கோயிலில் வாழ்கின்ற தலைவரே!

         பருத்த கிரவுஞ்சகிரி அழியும்படி ஒப்பற்ற கணையை விடுத்த பல மலைகட்கும் தலைவராகிய பெருமிதம் உடையவரே!

         ஏழு என்ற எண்ணிக்கையுடன் விளங்கும் உலகங்களை ஒரு நொடிப் பொழுதுக்குள் வலமாக அழகுடன் மயிலில் வந்தவரே!

         தேவர்கள் துதி செய்து திருவடியை வணங்க அசுரர்கள் மடியுமாறு வேலாயுதத்தை விட்டருளியவரே!

         பாண்டிய மன்னர்கள் வளர்ந்த தமிழில் செய்த அகப்பொருள் இலக்கணத்தில் உரையைச் சங்கப் புலவர்கள் வழிபட்டுக் கேட்க, உணர்த்திய முருகப் பெருமாளே!

         மலர்போன்ற திருவடியைத் தொழுகின்ற இம்மடமகள் பசலை நோயுற்று மயல்கொண்டு தளர்ச்சியடைவது உமது கருணைக்கு அழகாகுமோ?


விரிவுரை


எழுதிகழ் பவன நெடியளவதனில் இயல்பெற மயிலில் வருவோனே ---

கனி காரணமாக முருகவேள் மாமயிலின் மீது ஆரோகணித்து ஏழு உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் எங்குத் தானாகுந் தன்மையை உலகம் உணர்ந்து உய்யும்பொருட்டு வலம் வந்தருளினார்.

இமையவர் ---

கண்கள் இமைக்காமையால் தேவர்கள் இமையவர் என்று பேர் பெற்றார்கள். எப்போதும் எச்சரிக்கையாக விழிப்புடன் இருப்பவர்கள் என்பது பொருள்.

வழுதியர் தமிழின் ---

வழுதியர்-பாண்டியர். மதுரையில் பாண்டிய மன்னர்கள் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள்.

ஒரு பொருளதனை வழிபட மொழியும் ---

இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்குச் சங்கப் புலவர்கள் உரை கண்டார்கள். அவற்றுள் எது சிறந்த உரையென்று தெளிவு பெறாமல் தமக்குள் வாதிட்டுக் கொண்டர்கள். இறைவன் கட்டளைப்படி, முருகவேளின் திருவுருவாய்ந்த உருத்திர சன்மரை யழைத்து வந்து சங்கப் பலகை மீது எழுந்தருளச் செய்து, சங்கப் புலவர்கள் தாம் உரைத்த உரையைக் கூறினார்கள். உருத்திரசன்மர். மற்ற உரைகளைக் கேட்டு ஒவ்வோரிடங்களில் மட்டும் சிரக்கம்பம் புரிந்தும், நக்கீரர் செய்த வுரையைக் கேட்டு முழுவதும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தும், சிரக்கம்பம் கரக்கம்பம் புரிந்து சிறந்த உரையென விளக்கியருள் புரிந்தார்.
    
மலரடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோதான் ---

இப் பாடல் அகப்பொருள் துறையாக அமைந்தது.

பசலை என்பது ஒரு பெண்ணுக்குக் காமநோயால் உண்டாகும் நிறவேறுபாடு. இறைவன் நாயகனாகவும் ஆன்மாவை நாயகியாகவும் கொண்டு, இறைவனாகிய நாயகன்மீது வைத்த ஆசை நோயினால் பசலையுற்று நாயகி வருந்துகின்றான்.

மடமகள் ---

மடம் - கொளுத்தியது விடாமை. ஆன்றோர்கள் கூறிய அறிவுரையை விடாது பற்றிக் கொள்ளுங் குணம்.

இறைவனே! உன்னை அடையப்பெறாத ஆன்மாவாகிய இப்பெண் தளர்ச்சியடைகின்றாள். அங்ஙனம் தளர்வது நின் கருணைத் திறனுக்கு அழகு ஆகுமோ? ஆகாது. ஆதலால் விரைந்து ஆட்கொள்வாய்.


முழுகிய புனலில் இனமணி தரள முறுகிடு பவள மிகவாரி முறையொடு குறவர் மடமகள் சொரியு முதுமலை ---

தண்ணீரில் முழுகி நிரம்பவும் முத்து மணிகளை வாரியெடுப்பர். பவளத்தைப் பின்னலாக முறுக்கி மாலை செய்வார்கள். குறப்பெண்கள் முத்தையும் பவளத்தையும் சுமந்து பழமலையென்ற தலத்தில் “முத்தோ! பவளமோ!” என்று கூவிவிற்பார்கள். அங்ஙனம் விலை கூறி அழைத்து, நிரம்பவும் சொரிந்து விற்பார்கள். இத்தகைய வளமையுள்ளது பழமலைக்கு அருகில் ஓடுவது மணிமுத்தாறு என உணர்க.

திறங்கொள் மணித் தரளங்கள் வரத்திரண்டுஅங்கு
     எழில்குவறர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்து மணி செலவிலக்கி
    முத்துஉலைப்பெய் முதுகுன்றமே”     --- திருஞானசம்பந்தர்.

உயர்ந்து வளர்ந்துள்ள திருவண்ணாமலையில் வானுற ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களில் இருந்து முத்துக்கள் உதிர்கின்றன. அந்த முத்துக்கள் பலவற்றையும் எல்லாம் குறவர்குலச் சிறுமிமார்கள் குவித்து வைத்துக் கொண்டு, வாங்க வாருங்கள் என்று  கூவி அழைத்து, ஆடிப்பாடி அளந்து அளிக்கின்றார்கள்.

இந்த அருமையான காட்சியை திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய அருமையைக் காணுங்கள்.

தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர் பெருமானை
மூடிஓங்கி முதுவேய்உகுத்த முத்தம் பலகொண்டு
கூடிக்குறவர் மடவார் குவித்துக் கொள்ள வம்மின்என்று
ஆடிப்பாடி அளக்கும் சாரல் அண்ணா மலையாரே.

அருணகிரிநாதர் திருஞானசம்பந்தருடைய தேவாரத்தில் ஈடுபாடுடையவர் என்பது இதனால் தெளிவாகின்றது.

பழகிய வினைகள் பொடிபட ---

முன்செய்து விளைந்த வினைக் கூட்டங்கள், ஆன்மாவுடன் பழகி உடனாக வந்து பயன் விளைவிக்கும். அவ்வினைகள் முருகன் அருளால் வெந்து நீறாகும்.
   
அருளில் படிவர் இதயம் உறுவோனே ---

திருவருளிலேயே அடியவர்கள் தோய்ந்து நிற்பார்கள். அவ்வண்ணம் திருவருளில் தோய்ந்து அருள் வசப்பட்ட அடியவர்களது உளக்கோயிலில் முருகன் எழுந்தருளியிருப்பான்.

பலமலையுடைய பெருமாளே:-

சேயோன் மேய மைவரை உலகும்”

என்ற தொல்காப்பிய வாக்கின்படி குறிஞ்சி நிலக்கடவுள் குமரன், எல்லா மலைகளையும் தனக்கு உறைவிடமாகக் கொண்டவன். உயர்ந்தவனை உயர்ந்த இடத்தில் வைப்பார்கள். அதுபோல தெய்வநாயகனைப் பழம் பெருமக்கள் மலைமீது வைத்து வழிபட்டார்கள்.


கருத்துரை

மலைதோறும் மேவிய முருகவேளே! இப் பெண்ணின் தனிமையைத் தீர்த்து ஆட்கொள்வீர்.


No comments:

Post a Comment

52. பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போசனம் செய்யலாமா?

  “சுற்றமாய் நெருங்கியுள்ளார், தனையடைந்தார்,      கற்றறிந்தார், துணைவேறு இல்லார், உற்றவே தியர்,பெரியோர்க்கு உதவியன்றிப்      பிறர்க்குதவும் ...