குன்றுதோறாடல் - 0437. தறையின் மானுடர்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தறையின் மானுடர் (குன்றுதோறாடல்)

முருகா!
ஒப்பற்ற சமாதி மனோலயத்தைத் தந்து அருள்


தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன தந்ததான


தறையின் மானுட ராசையி னால்மட
     லெழுது மாலருள் மாதர்கள் தோதக
          சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந்

தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
     யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
          சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ

பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
     ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
          பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம்

பகரொ ணாதது சேரவொ ணாதது
     நினையொ ணாதது வானத யாபர
          பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய்

சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
     மடிய நீலக லாபம தேறிய
          திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித்

திரைகள் போலலை மோதிய சீதள
     குடக காவிரி நீளலை சூடிய
          திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும்

மறவர் நாயக ஆதிவி நாயக
     ரிளைய நாயக காவிரி நாயக
          வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின்

மகிழு நாயக தேவர்கள் நாயக
     கவுரி நாயக னார்குரு நாயக
          வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


தறையின் மானுடர் ஆசையினால், மடல்
     எழுதும் மால் அருள் மாதர்கள், தோதக
          சரசர், மாமலர் ஓதியினால், ரு ...... கொங்கையாலும்,

தளர் மின் நேர் இடையால், டையால், நடை
     அழகினால், மொழியால், விழியால் மருள்
          சவலை நாய் அடியேன் மிக வாடி ...... மயங்கலாமோ?

பறவை ஆன மெய்ஞ்ஞானிகள், மோனிகள்
     அணுக ஒணாவகை நீடும், இராசிய
          பவன பூரக ஏகிகம் ஆகிய ...... விந்துநாதம்,

பகர ஒணாதது, சேர ஒணாதது,
     நினைய ஒணாதது ஆன, தயாபர
          பதி அதுஆன சமாதி மனோலயம் ...... வந்து தாராய்.

சிறை விடாத நிசாசரர் சேனைகள்
     மடிய, நீல கலாபம் அது ஏறிய
          திறல் விநோத! சமேள! தயாபர! ...... அம்புராசித்

திரைகள் போல் அலை மோதிய சீதள
     குடக காவிரி நீள் அலை சூடிய
          திரிசிராமலை மேல்உறை வீர!  ...... குறிஞ்சிவாழும்

மறவர் நாயக! ஆதி விநாயகர்
     இளைய நாயக! காவிரி நாயக!
          வடிவின் நாயக! ஆனை தன் நாயக! ......எங்கள்மானின்

மகிழும் நாயக! தேவர்கள் நாயக!
     கவுரி நாயகனார் குரு நாயக!
          வடிவு அது ஆம், மலை யாவையும் மேவிய ......  தம்பிரானே.

பதவுரை

      சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய --- தேவர்களுடைய சிறையை விடாது நின்ற அசுரர்களுடைய படைகள் மாண்டு ஒழிய,

     நீல கலாபம் அது ஏறிய திறல் விநோத! --- நீலநிறமுடைய தோகை மயிலின் மீது ஆரோகணித்த பேராற்றல் பொருந்தியவரே!


     சமேள --- திருவிளையாடல்கள் புரிபவரே!

      தயா பர --- கருணையின் மிக்கவரே!

      அம்புராசி திரைகள் போல் அலை மோதிய சீதள --- கடலினது அலைகளைப் போல பேரலைகள் வீசுகின்றதும் குளிர்ச்சி பொருந்தியதுமாகிய,

     குடக காவிரி நீள் அலை சூடிய --- குடகு மலையினின்றும் பெருகி வரும் காவேரி ஆற்றின் நீண்ட அலைகளைப் பொருந்திய

     திரிசிராமலை மேல் உறை வீர --- திரிசிரா மலையில் வாழ்கின்ற வீரம் பொருந்தியவரே!

     குறிஞ்சி மறவர் நாயக --- மலைப்பக்கங்களில் வாழ்கின்ற வேடர்களுக்குத் தலைவரே!

      ஆதி விநாயகர் இளைய நாயக --– முதற் பிள்ளையாராகிய விநாயகருக்கு இளையவரே,

      காவிரி நாயக --- காவிரி நதிக்குத் தலைவரே!

      வடிவின் நாயக --- அழகின் மிக்க தலைவரே!
        
     ஆனை தன் நாயக --- தெய்வயானை அம்மையாருக்குத் தலைவரே!

      எங்கள் மானின் மகிழும் நாயக --- எங்களுடைய மான்போன்ற வள்ளியம்மையாரிடத்தில் உள்ளம் உவக்கின்ற தலைவரே!

      தேவர்கள் நாயக --- தேவர்களுக்குத் தலைவரே!

      கவுரி நாயகனார் குருநாயக --- உமையம்மையாருக்குத் தலைவராகிய சிவபெருமானுக்குக் குருமூாத்தியாகிய நாயகரே!

      வடிவது ஆம் மலை யாவையும் மேவிய தம்பிரானே --- அழகிய மலைகள் எல்லாவற்றிலும் விரும்பி வாழும் தனிப்பெருந் தலைவரே!

      தறையின் மானுடர் ஆசையினால் --- மண்ணுலகில் வாழும் ஆடவர், தம்மீது கொண்ட ஆசையால்

     மடல் எழுதும் --- மடல் ஏறுவதற்கு வடிவத்தை எழுதுகின்ற,

     மால் அருள் மாதர்கள் ---  மயக்கத்தைத் தருகின்ற பெண்களாகிய,

     தோதக சரசர் --- வஞ்சகமான காமச் செயலுடையாரது,

     மாமலர் ஓதியினால் --- சிறந்த பூக்களைச் சூடிய கூந்தலினாலும்,

     இரு கொங்கையாலும் --- இரண்டு தனங்களாலும்,

     தளர் மின்நேர் இடையால் --- சோர்கின்ற மின்னலைப் போன்ற
இடையினாலும்,

     உடையால் --- ஆடையின் பொலிவாலும்,

     நடை அழகினால் --- நடையின் அழகினாலும்,

     மொழியால் --- இனிய மொழியாலும்,

     விழியால் --- (உள்ளத்தைக் கவர்கின்ற) கண்களாலும்  

     மருள் --- மயக்கத்தை அடைகின்ற,

     சவலை நாய் அடியேன் --- பலவீனனாகிய நாயில் கடையேனாகிய அடியேன்,

     மிக வாடி மயங்கலாமோ --- மிகவும் வருத்தமுற்று மயங்குதல் தகுதியோ?

     பறவை ஆன மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஓணாவகை --- பறவைபோல் ஓரிடத்திலும் தங்காது பற்றற்றுத்திரியும் உண்மை ஞானிகளும், மௌனிகளும் சேர்வதற்கு முடியாத வண்ணம்,

     நீடும் இராசியம் --- மிக்க இரகசியமானதும்,

     பவன பூரக ஏகிகம் ஆகிய விந்துநாதம் --- பிராணவாயுவை ஒடுக்கிச் செய்யும் யோகத்தில் ஒன்றுபட்ட விந்துநாதங்களால்,

     பகர ஒணாதது --- சொல்ல வொண்ணாததும்,

     சேர ஒணாதது --- சேர முடியாததும்,

     நினைய ஒணாதது ஆன --- நினைக்க முடியாததும் ஆகிய,

     தயாபர பதியது ஆன --- அருளோடு கூடித் தலையைப் பெற்றுள்ள,

     சமாதி மனோலயம் --- மனம் இலயப் படுவதாகிய சிவசமாதியை,

     வந்து தாராய் --- தேவரீர் வந்து அடியேனுக்குத் தந்தருள்வீர்.


பொழிப்புரை

     தேவர்களுடைய சிறையை விடாது மறுத்த இராக்கதர்களுடைய சேனைகள் மாய்ந்தொழியுமாறு நீலநிறமுடைய தோகை மயிலின் மீது ஊர்ந்த ஆற்றலும் விநோதமு முடையவரே!

         கருணாகரரே!

         கடலைப்போல் அலைகளை வீசுகின்றதும் குளிர்ந்திருப்பதும் குடகமலையினின்றும் பெருகி வருவதுமாகிய காவிரி நதியின் நீண்ட அலைகளை மாலையாகச் சூடியுள்ள திரிசிராமலை என்னும் திருமலையின்மீது வாழ்கின்ற தலைவரே!

         மலைப்பக்கங்களில் வாழ்கின்ற வேடர்களுக்குத் தலைவரே!

         காவிரி நதிக்குத் தலைவரே!

         அழகின் மிக்க நாயகரே!

         தெய்வகுஞ்சரி அம்மைக்குத் தலைவரே!

         எங்களுடைய வள்ளியம்மையாரிடத்தில் மகிழ்கின்ற சிவமூர்த்திக்கு குருமூர்த்தியாக உபதேசித்த நாயகரே!

         அழகிய மலைகள் எல்லாவற்றிக்கும் நிவாசஞ் செய்கின்ற பெருமித முடையவரே!

         பூவுலகில் ஆடவர்கள் தம்மீதுள்ள ஆசையினால் மடற் குதிரையின்மீது ஏறும் பொருட்டு உருவத்தை எழுதுகின்ற மயக்கத்தத்தரும் பெண்களாகிய வஞ்சக லீலைகளைச் செய்வோருடைய சிறந்த இடையினாலும், ஆடையினாலும், நடையின் அழகினாலும், மொழியினாலும், கருத்தைக் கவர்கின்ற கண்களாலும், மயக்கத்தையுற்ற அறிவில் பலமற்ற நாயிற் கடையேன் வருந்தி மயங்கி வீணே அழிவது தக்கதோ?

     பறவையைப்போல் ஓரிடமும் பற்றின்றி திரியும் மெய்ஞ்ஞானிகளும் மௌன விரதியரும் சேரவொண்ணா வகையினுள்ள, மிக்க இரகசியமும், பிராணவாயுவை ஒடுக்கிச் செய்யும் யோகத்தில் ஒன்றுபட்ட விந்து நாதங்களால் சொல்ல முடியாததும், சேரவொண்ணாததும், நினைய ஒண்ணாததுமான தயையோடு கூடி தலைமை பெற்றுள்ள மனோலய சிவசமாதியைத் தேவரீர் வந்து அடியேனுக்குத் தந்தருள்வீர்.


விரிவுரை

இப்பாடலில் பிற்பகுதியில் 10-முறை நாயக என்று வருவது போற்றற்குரியது.

தறையின் மானுடர்---

எதுகை நோக்கி தரை என்பது வல்லின ‘ற‘ கரம் பெற்றது. கம்பராமாயணப் பாடலையும் சான்று காண்க.

அறையு மாடரங்கும் மடப்பிள்ளைகள்
   தறையிற் கீறியிடிற் றச்சருங் காய்வரே”

ஆசையினால் மடல் எழுதும் ---

பண்டைக்காலத்தில் ஆடவர், தாம் காதலித்த பெண்ணை அடையும் பொருட்டு, மடல் பரியின்மீது மடல்எழுதி ஊரார் அறிய வலம் வருதல் வழக்கில் இருந்தது.

மதனன்விடு புஷ்பசர படலம் உடல் அத்தனையும்
 மடல் எழுதி நிற்கும் அதிமோகத் தபோதனனும்      --- வேடிச்சி காவலன்வகுப்பு.

காய்சின வேல்அன்ன மின்இயல் கண்ணின் விலைகலந்து
வீசின போது உள்ள மீன் இழந்தார், வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து, ர் கிழி பிடித்துப்
பாய்சின மாஎன ஏறுவர் சீறூர்ப் பனைமடலே.             --- திருக்கோவையார்
 
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்,
மடல் அல்லது இல்லை வலி.            --- திருக்குறள்.

தோதக சரசர் ---

வஞ்சகமான காமசேட்டை; விலைமகளிர் பொருள் பறிக்கச் செய்யும் சூழ்ச்சிகள்.

ஓதி ---     

பெண் மயிர்.

சவலை ---

பெண்களுடைய அழகிய மயிர், தனம், இடை, நடை, உடை, மொழி, விழி இவற்றைக் கண்டு உள்ளம் உடைந்து, உருகி, உணர்வு இளைத்துத் தேய்ந்து மெலிந்து போவது,

சவலை - பாலில்லாக் குழந்தை. அதுபோல் இளைத்து மெலிவது.

தாயாய் முலையைத் தருவானே,
    தாராது ஒழிந்தால், சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ?
    நம்பி இனித்தான் நல்குதியே,
தாயே என்றுஉன் தாள்அடைந்தேன்,
    தயா நீ என்பால் இல்லையே,
நாயேன் அடிமை உடனாக
    ஆண்டாய், நான்தான் வேண்டாவோ  --- திருவாசகம்.

உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல்உளனாய்க் கிடந்து, தடுமாறும்
கவலைக் கெடுத்து, கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவி,நாம் தெள்ளேணம் கொட்டாமோ.--- திருவாசகம்.

சவலை தீர்த்து உன தாளே சூடி” --- (நிருதரார்க்கொரு) திருப்புகழ்

பறவையான மெய்ஞ்ஞானிகள் ---

ஓரிடமென்று நில்லாது பறந்து திரியும் பறவை போலிருக்கின்ற பற்றற்ற உண்மை ஞானிகள் என்பது ஒரு பொருள்.

இனி, முட்டைக் குள்ளிருந்து பறவைக் குஞ்சு முற்றியவுடன் அம்முட்டையை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டபின் திரும்ப எவ்வாறு அம்முட்டையை விரும்பி அதனிடம் வருவதில்லையோ, அதுபோல், துறந்து நீங்கியபின், தான் வாழ்ந்த ஊர் வீடு மனைவி மக்கள் என்பனவற்றை மனதாலும் பற்றாமல் நிற்கும் மெய்யறிவினர் என்பது வேறு பொருள்.

பறவை எவ்வாறு இரு சிறகினால் வானில் பறக்கின்றதோ, அதுபோல், உறுதி அன்பு என்ற இரு சிறகினால் மேல் நிலையில் உலாவுபவர் என்பதும் மற்றொரு பொருள்.

அந்த உறுதி, அன்பு என்ற இரண்டு கிடைப்பது மிக அருமையிலும் அருமை. இறைவனருளாலேயே கிடைக்கத் தக்கதாம்.

உன்திரு வடிக்கீழ் உறுதியும் அன்பும்
         உன்திரு வாருளினால் கிடைப்பது,
அன்றிநூல் பலவும் ஆய்ந்தால் உரைசெய்
         அளப்பறும் திறமையால், மதியால்
மன்றவே கிடைப்பது அன்று, மற்று அதனை
         மாதவம் செய்திலாக் கயமை
துன்றிய புலையோர் யாங்ஙனம் பெறுவர்,
         சோதியே கருணைவாரிதியே.    --- சிவதத்துவ விவேகம்.

மோனிகள் ---

ஆசாநிகளத்தைத் துகளாக்கிய பின் பேசா அனுபூதியில் நின்றவர். மோனம் என்பது ஞானவரம்பு என்பது கொன்றைவேந்தன்.. சும்மா இருக்கும் சுகசாந்த நிலை.

இராசியம் ---

இரகசியம் அநுபவத்தில் அறியும் தன்மையது. சமாதி மனோலயம்:-

மனம் இலயப்பட்ட அசைவற்ற நிலை. இதனைப் பேசவும் நினைக்கவும் சேரவும் முடியாது. என்னின் எழுவது எங்ஙனே யமையும். நம் அருணையடிகள் அந்த அனுபவத்தில் திளைத்து நின்ற இன்பத்தைப் பல இடங்களில் குறிப்பிட்டு வியந்து நிற்கின்றார்.

தன்னம் தனிநின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ”      --- கந்தர் அநுபூதி

வேலே விளங்கு கையான் செய்யதாளினில் வீழ்ந்து,இறைஞ்சி,
மாலேகொள இங்ஙன் காண்பது அல்லால், மனவாக்கு செய
லாலே அடைதற்கு அரிதாய் அரு உரு ஆகி ஒன்று
போலே இருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே.      --- கந்தர் அலங்காரம்
 
ஆனா அமுதே! அயில்வேல் அரசே!
ஞானா கரனே! நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னைவிழுங்கி, வெறுந்
தானாய் நிலை நின்றது தற்பரமே.              --- கந்தர் அநுபூதி.

அவ்வாறு அறிவார் அறிகின்றது, லால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப் பதுவே”    --- கந்தர் அநுபூதி

சமேள ---

சமேளனம்-சேர்க்கை.

வடிவின் நாயக ஆனைதன் நாயக ---

அழகின் மிக்கவராகிய தெய்வயானை அம்மையாருக்குத் தலைவரே என்றும் பொருள் கூறலாம்.
  
எங்கள் மானின் ---

வள்ளியம்மையார் இச்சாசக்தியாதலாலும், மண்ணுலகில் வந்து பிறந்தும் நம்முடன் கூடி நம்போல் மானுட வடிவந்தாங்கி நின்றமையாலும், “எங்கள் மான்” என்று சொந்தம் பாராட்டினார்.

நம் செந்தில் மேய வள்ளிமணாளர்க்குத் தாதை கண்டாய்”  என்ற அப்பர் மூர்த்திகள் அருமை வாக்கையும் உன்னுக.

வடிவதா மலை யாவையும் மேவிய ---

முருகனே முழுமுதற் கடவுளாதலின், உயர்ந்தோர்க்கு உயர்ந்த ஆசனந்தருதல்போல், அப்பரமபதியை மலையின்மீது வைத்து வழிபட்டனர் நம் பழந்தமிழர்.

மலைக்கு நாயக” “கிரிராஜ” என்ற அருள்வாக்குகளை உன்னியுள்ளம் உவக்க, எம் உள்ளத்தின் முன்னே வந்து தோன்றுகின்றன. அதனாலன்றோ நம் அடிகள் யாவர்க்கும் நாயகன் என்று அடுக்கிச் சொன்னார். 

கருத்துரை

யாவர்க்கும் நாயகனே, அடியேன் மாதர் ஆசைப்பட்டு மயங்காவண்ணம் மனோலய சாமதியைத் தந்து அருள்வீர்.




No comments:

Post a Comment

27. மன்னுயிரைத் தன் உயிர் போல் எண்ணுக

  "முன்னரிய மறைவழங்கும் தண்டலையார்       ஆகமத்தின் மொழிகே ளாமல் பின்னுயிரை வதைத்தவனும், கொன்றவனும்       குறைத்தவனும், பேரு ளோனும், அந்...