அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வஞ்சக லோப மூடர்
(குன்றுதோறாடல்)
முருகா!
செந்தமிழால் உன்னைப் பாடி
உய்ந்திட,
உபதேசப் பொருளை அருள்.
தந்தன
தான தான தந்தன தான தான
தந்தன தான தான ...... தனதான
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது ...... பலபாவின்
வண்புகழ்
பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி ...... லழியாதே
செஞ்சர
ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும்
செந்தமிழ்
நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயே
பஞ்சவ
னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு ...... சமண்மூகர்
பண்பறு
பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு ...... தருவோனே
குஞ்சரம்
யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக்
கும்பிட
நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வஞ்சக லோப மூடர் தம்பொருள், ஊர்கள் தேடி,
மஞ்சரி, கோவை, தூது, ...... பலபாவின்,
வண்புகழ்
பாரி காரி என்று இசை வாது கூறி,
வந்தியர் போல வீணில் ...... அழியாதே,
செஞ்சரண், நாத கீத கிண்கிணி, நீப மாலை,
திண்திறல் வேல், மயூரம், ...... முகம் ஆறும்,
செந்தமிழ்
நாளும் ஓதி உய்ந்திட, ஞானம் ஊறு
செங்கனி வாயில் ஓர்சொல் ...... அருள்வாயே.
பஞ்சவன்
நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு
பஞ்சு அற வாது கூறு ...... சமண்மூகர்
பண்புஅறு
பீலியோடு, வெங்கழு ஏற, ஓதும்
பண்டித! ஞான நீறு ...... தருவோனே!
குஞ்சரம்
யாளி மேவு பைம்புன மீது உலாவு
குன்றவர் சாதி கூடி ...... வெறி ஆடிக்
கும்பிட, நாடி வாழ்வு தந்து, அவரோடு வீறு
குன்றுதோறு ஆடல் மேவு ...... பெருமாளே.
பதவுரை
பஞ்சவன் நீடு கூனும் --- பாண்டியனுடைய நீண்டு
விளைந்திருந்த கூனும்,
ஒன்றிடு தாபமோடு --- இடையில் வந்து பொருந்திய
வெப்புநோயும்,
பஞ்சு அற --- பஞ்சாகப் பறந்து அழியுமாறும்,
வாது சமண் மூகர் --- வாதம் புரிந்த சமணர்களாகிய
ஊமைகள்
பண்பு அறு பீலியோடு --- நன்மையற்ற மயிற்பீலியுடன்,
வெம் கழு ஏற --- வெப்பமான கழுவில் ஏறு மாறும்,
ஓது பண்டித --- திருஞானசம்பந்தராக வந்து
தமிழ் வேதத்தை ஓதியருளிய மாபெரும் புலவரே!
ஞான நீறு தருவோனே --- ஞானமயமான
திருநீற்றைத் தந்தவரே!
குஞ்சரம் யாளி மேவு --- யானைகளும், யாளிகளும், விரும்பி வாழ்கின்ற
பைம் புனம் மீது உலாவும் --- பசுமை தங்கிய
தினைப்புனத்தின் கண் திரிகின்ற,
குன்றவர் ஜாதி கூடி --- வேடர் குலத்தினர்
ஒருங்கு கூடி,
வெறியாடி கும்பிட --- ஆவேசம் வந்து ஆடியும்
பாடியும் வழிபட,
நாடி வாழ்வு தந்து --- அவர்களது களங்கமற்ற
பக்தியை எண்ணி அவர்கட்கு நல் வாழ்வு நல்கி,
அவரோடு --- அக் குன்றவருடன் குலாவி,
வீறு குன்றுதோறு ஆடல் மேவு பெருமாளே ---
பெருமை தங்கிய மலைகள் தோறும் நின்று திருவிளையாடல் புரிகின்ற பெருமையின் மிக்கவரே!
வஞ்சக லேபா மூடர் தம் பொருள் ஊர்கள்
தேடி --- வஞ்சகமும் உலோப குணமும் மூடத்தனமும் உள்ள கீழ்மக்களிருக்கின்ற, செல்வம் நிறைந்த ஊர்களைத் தேடிச் சென்று,
மஞ்சரி கோவை தூது பல பாவின் --- மஞ்சரி தூது
கோவை முதலிய பலவகையான பிரபந்தகளினால்,
வண் புகழ் பாரி காரி என்று இசைவாது கூறி ---
அவ் உலுத்தரைத் தெளிந்த புகழை உடைய பாரியென்றும், காரியென்றும், புகழ்ந்து அதற்கு உறும்
தடைகளை நீக்க வாதஞ்செய்து,
வந்தியர் போல வீணில் அலையாதே --- புகழ்ந்து
பாடுகின்றவரைப்போல, பயனின்றி அலைந்து
அழியாமல்,
செம்சரண் --- தேவரீருடைய சிவந்த
தாள்மலர்களையும்,
நாத கீத கிண்கிணி --- பாதத்திலணிந்துள்ள நாத
கீதங்களுடன் கூடிய கிண்கிணிகளையும்,
நீப மாலை --- கடப்பமலர் மாலையையும்,
திண் திறல் வேல் --- மிகுந்த வலியையுடைய
வேலையும்
மயூரம் --- மயிலையும்,
முகம் ஆறும் --- ஆறு திருமுகங்களையும்,
செந்திழ் --- செந்தமிழ் மொழியால்
நாளும் ஓதி உய்ந்திட --- நாள்தோறும்
துதிசெய்து அடியேன் உய்யும் பொருட்டு,
ஞானம் ஊறு செங்கனி வாயில் --- மெய்ஞ்ஞானம்
சுரந்து ஊற்றெடுக்கின்ற தேவரீருடைய சிவந்த திருவாக்கினால்
ஓர் சொல் அருள்வாயே --- ஒப்பற்ற ஓர் உபதேச
மொழியை அருள்புரிவீர்.
பொழிப்புரை
பாண்டியனுடைய நெடிய கூனும், (திருசானசம்பந்தப் பெருமான் திருமடத்தில்
அமணர் தீ வைத்ததனால்) வந்து பொருந்திய வெப்பு நோயும் பஞ்சுபோல் பறந்து போகுமாறும், தங்கள் சமயமே மெய்ச் சமயம் என்று
வாதுசெய்த சமணர்களாகிய ஊமைகள் வெப்பமான கழுவில் ஏறி அழியுமாறும் (திருஞானசம்பந்தப்
பிள்ளைாராக வந்து) தமிழ் வேதத்தை ஓதி அருளிய ஞானபண்டிதரே!
சிவஞானத்தைத் தருகின்ற திருநீற்றைத்
தந்தவரே!
யானை, யாளி முதலிய விலங்குகள் உலாவுகின்ற
பசுமை தங்கிய தினைப்புனத்தின் கண் திரிகின்ற வேடுவர்கள் ஒருங்குகூடி வெறியாட்டயர்ந்து
வணங்க அவர்களது அன்புக்கு மகிழ்ந்து அவர்கட்கு நல்வாழ்வு நல்கி அவர்களுடன் மலைகள்
தோறும் நின்று ஆடல் புரிகின்ற பெருமிதமுடையவரே!
வஞ்சமும் லோபமும்
அறிவின்மையுமுடையவர்களிடம் பொருளைக் குறித்துச் சென்று, மஞ்சரி, கோலை, தூது முதலிய பிரபந்தகளைப் பாடி, பாரி காரி என்ற வள்ளல்கள் நீவிரே என்று
புகழ்ந்து வாது செய்து, புகழ்ந்து
பாடுவோராகிய வந்தியர்களைப் போல அவமே திரிந்து அழியாமல்,
தேவரீருடைய சிவந்த சீறடியையும், நாதகீதமுடைய கிண்கிணியையும் கடப்ப மலர்
மாலையும் சிறந்த வலிபெற்ற வேலையும்,
மயிலையும், அறுதிருமுகங்களையும் செந்தமிழ் மொழியால்
நாள்தோறும் பரவிப்பாடி அடியேன் உய்யுமாறு மெய்ஞஞானம் ஊற்றெடுகின்ற சிவந்த
திருவாக்கால் இணையற்ற ஒரு மொழியை உபதேசித்து அருள்புரிவீர்.
விரிவுரை
வஞ்சக
லோப மூடர்:-
செல்வத்தை
நிரம்ப உடையவர்களாய் இருந்தும்,
வஞ்சகமும், உலோபத்தனமும், அறிவின்மையும் உடையவர்களிடம் சென்று, காமதேனுவின் பாலைக் கமரில் கவிழ்ந்தது
போல் அருமையான தமிழால், மஞ்சரி, கோவை, பரணி, தூது, மாலை முதலிய பிரபந்தங்களை அவ்வுலோபர்மீது
பாடி வறிதே அழிகின்றதை சுவாமிகள் இப்பாடலில் நன்று கண்டிக்கின்றார். முருகனைப்
பாடினால் இம்மையில் சோறும் கூறையுந்தந்து இடர் கெடுத்து, எம்பெருமான் மறுமையில் சிவகதியையும்
வழங்குவர்.
தம்மையே
புகழ்ந்த், இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை
யாளரைப் பாடாதே, எந்தை
புகலூர்
பாடுமின் புலவீர்காள்!
இம்மையே
தரும்சோறும் கூறையும்,
ஏத்தலாம் இடர் கெடலும் ஆம்,
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவுஇல்லையே
மிடுக்கு
இலாதானை வீமனே, விறல்
விசயனே வில்லுக்கு இவன் என்று,
கொடுக்கிலாதானைப்
பாரரியே என்று,
கூறினும் கொடுப்பார் இலை,
பொடிக்
கொள்மேனி எம் புண்ணியன்,புக-
லூரைப் பாடுமின் புலவீர்காள்!
அடுக்குமேல்
அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவுஇல்லையே --- சுந்தரர்
வண்புகழ்
பாரி ---
பாரி
பறம்பு நாட்டை ஆண்டவன்; பெரிய வீரன்; இவன் வேளீர் வழி வந்தவனாதலால் “பாரிவேள்”
வேள்பாரி” என்று கூறுவர். மூவேந்தரையும் வென்று புகழ்மாலை சூடியவன்; கபிலர் என்னும் செந்தமிழ்ப் புலவரை
நண்பராக உடையவன்; எல்லா வகையிலும்
சிறந்தவன். இல்லையென்றார்க்கு இல்லை என்னாது வழங்கும் பெருவள்ளல். பறம்பு
நாட்டிற்கு 300 ஊர்கள் உண்டு. அந்த
முன்னூறு ஊர்களைப் பரிசில்களாகப் பலர்க்கு வழங்கி விட்ட பெருங் கொடையாளி.
பாரி
வள்ளல் ஒருநாள் பொன்தேரின் மீது ஏறிக்கொண்டு கானகம் சென்றான். அங்கே உலாவிக்
கொண்டு வந்தான். ஆங்கு ஒரு முல்லைப்பூங்கொடி கொழு கொம்பு இல்லாமல் காற்றால்
அலைந்து கொண்டிருந்தது. பாரி அதனைக் கண்டான். கருணை
தங்கிய
அவன் உள்ளம் துடித்தது. ஓரறிவுடைய அந்தக் கொடி அலைவதற்கு அவன் மனம் சகிக்கவில்லை.
முன் பின் ஒன்றும் யோசியாமல் உடனே தேரை விட்டுக் கீழே இறங்கினான். அம்முல்லைக்
கொடியருகில் தேலை நிறுத்தினான். கொடியை அதன் மேல் எடுத்துவிட்டான். பின்பு அக்
கொடியை நோக்கி “பூங்கொடியே! இனிய காட்சியும், நறிய மணத்தையும் நீ உலகுக்கு
நல்குகின்றனை, காற்றினால் அலைந்தனை; இனி உனக்குக் காற்றால் ஒருவிதத்
துன்பமும் நேராது. இன்பமாய் எழுந்து வளர்ந்து இன்புறுவாயாக” என்று வாழ்த்திவிட்டு
இரதத்தில் பூட்டிய குதிரைகளை அவிழ்த்து, ஒன்றின்மேல்
ஏறிக்கொண்டு ஏனையவை தன் பின்வர வீடுபோய்ச் சேர்ந்தான். ஆ! ஆ! எத்தனைப் பெரிய கொடை? பாரியைத் தவிர இவ்வாறு செய்வார் யாருளர்? இது உலகிற்கு வியப்பாக இருக்கும். “இவன்
சுத்த அசடு; ஒரு கொடிக்கு தேரை
கொடுப்பது அறிவுடைமையா?” என்று உலோபியர்
கூறலாம். சற்று சிந்தித்தால் விளங்கும். ஒரு கொடியினிடத்து இவ்வளவு கருணையைக்
காட்டினால் அவன் உள்ளம் எத்துணைப் பெரிது; கருணையின் ஊற்று அவன் உள்ளத்தில்
இடைவிடாது சுரந்து கொண்டிருந்தது. கொடிக்கே இவ்வளவு பெரிய கொடை கொடுத்தவன்
மனிதரிடம் எப்படி நடந்திருப்பான். அதனால் அல்லவா சமயகுரவராகிய சுந்தரமூர்த்திகள்
திருவாக்கில் பொன்னேபோல் விளங்கும் பெரும்பேறு பெற்றான்.
காரி ---
காரியும்
பாரியைப் போல் கடை எழுவள்ளல்களில் ஒருவன்.
பஞ்சவன்
நீடு கூனும்..................தருவோனே ---
ஒருகால்
பாண்டிய நாடு சமண இருளால் மூடப்பெற்றது; அப்போது
அங்கு அரசாண்டவன் கூன் பாண்டியன். அங்கு பாண்டிமா தேவியும் குலச்சிறையார் என்கிற
அமைச்சர் பெருமானும் சிவபக்தியிற் சிறந்திருந்தார்கள். அவ்விருவர்களது அழைப்பிற்
கிணங்கி திருமறைக் காட்டில் தங்கியிருந்த திருஞானசம்பந்த சுவாமிகள் அடியார்
குழாங்கள் சூழ மதுரைக்கு எழுந்தருளினார். அப்பொழுது சமணர்கட்குப் பல துன்னிமித்
தங்கள் உண்டாயின. மங்கையர்க் கரசியார் ஏர்குலச் சிறையார் எதிர்கொண்டு இறைஞ்சி
ஏத்தித் திருக்கோயிலுக்குக் கொண்டு சென்றார்.
வெம்பந்தம்
நீக்கும் திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியாரையும் குலச்சிறையாரையும்
சிறப்பித்துப் பதிகம் பாடியருளினார். பிறகு திருமடத்தில் தங்கி இருந்தார். கொடுங்குணமுடைய
சமணர்கள் அழுக்காற்றால், பிள்ளையார் இருந்த
திருமடத்தில் தீ வைத்தனர். சம்பந்தப் பிள்ளையார் அத்தீயைப் “பையவே சென்று
பாண்டியற்காகவே” என்று திருவாய் மலர்ந்தருள, உடனே அத்தீ பாண்டியனைப் பற்ற வெப்பு
நோயால் வெதும்பி கழிபெருந் துன்புற்றான். சமணர் மணி மந்திர ஒளஷதங்களால் நீக்க
முயன்று பயன் பெறாது ஓய்ந்தனர். அவர்கள் முயற்சியால் கணவன் அனுமதி பெற்று திருசானசம்பந்தப்
பெருமாளை எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அங்கு வர அவரது அருளுருவைச் சமணர்கள்
கண்டு கதிரவனைக் கண்ட குமுதம் மலர்கள் போலாயினார், ஏனையோர்.
ஞானத்தின்
திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின்
மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை
தேனக்க
மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின்
எழுபிறப்பைக் கண்குளிரக் கண்டார்கள்.
பெருமான்
“மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தை உலகம் உய்யப் பாடி, திருநீறு பூசி, பாண்டியன் வெப்பு நோயைத்
தீர்த்தருளினார். பிறது சமணருடன் கனல்வாது, புனல்வாது, புரிந்து, “வாழ்க அந்தணர்........ வேந்தனும்
ஓங்குக‘ என்று பாடியருளி, பாடிணயன் கூனையும்
நீக்கியருளினார். பாண்டியன் நின்ற சீர் நெடுமாற நாயனராக விளங்கினான். சமணர்கள்
கழுவேறினார்கள்.
கருத்துரை
ஞானசம்பந்தராக
வந்து சைவசமயத்தை வளர்த்தவரே! மலைகள் தோறும் நின்ற முருகனே! உலோபிகளைப் பாடி
வீணேயழியாமல் தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள்புரிவீர்.
No comments:
Post a Comment