அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வஞ்சமே கோடி (குன்றுதோறாடல்)
முருகா!
மாதர் மயல் அறப் பாத மலர் அருள்
தந்தனா
தான தானன தந்தனா தான தானன
தந்தனா தான தானன ...... தனதான
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கணா ரார வாரமு ...... மருள்வோராய்
வம்பிலே
வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு ...... விலைமாதர்
பஞ்சமா
பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு ...... மெலியாதே
பந்தியாய்
வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை ...... யருள்வாயே
அஞ்சவே
சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர் ...... சிறைமீள
அன்பினோ
டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர ...... முதல்வோனே
கொஞ்சவே
காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா னாளு மேமகிழ் ...... புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கணஆர், ஆரவாரமும் ...... அருள்வோராய்,
வம்பிலே
வாது கூறிகள், கொஞ்சியே காம
லீலைகள்
வந்தியா, ஆசையே தரு ...... விலைமாதர்,
பஞ்ச
மாபாவமே தரு கொங்கைமேல் நேசமாய்,
வெகு
பஞ்சியே பேசி நாள்தொறும் ...... மெலியாதே,
பந்தியாய்
வான் உளோர் தொழ நின்ற, சீரே குலாவிய,
பண்புசேர் பாத தாமரை ...... அருள்வாயே.
அஞ்சவே
சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே, அயில்
அன்றுதான் ஏவி, வானவர் ...... சிறைமீள,
அன்பினோடே
மனோரதம் மிஞ்ச, மேலான வாழ்வுஅருள்
அண்டர் கோவே! பராபர! ...... முதல்வோனே!
கொஞ்சவே
காலின் மேவு சதங்கை தான்ஆட ஆடிய
கொன்றையான் நாளுமே மகிழ் ...... புதல்வோனே!
கொந்துசேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு
குன்றுதோறு ஆடல் மேவிய ...... பெருமாளே.
பதவுரை
சூரன் ஆனவன் அஞ்சவே --- சூரன்
அஞ்சும்படியும்,
உய்ஞ்சு போகாமலே --- பிழைத்து இராதபடியும்,
அயில் அன்று தான் ஏவி --- வேலாயுதத்தை அந்நாள் செலுத்தி,
வானவர் சிறை மீள --- தேவர்கள் சிறையினின்றும்
மீளுமாறு,
அன்பினோடே மனோரதம் மிஞ்ச --- அன்புடன்
அவர்களின் விருப்பம் நிறைவேற,
மேலான வாழ்வு அருள் --- மேலான நல்வாழ்வை
அவர்கட்கு வழங்கிய,
அண்டர் கோவே --- தேவர் தலைவரே!
பராபர - பெரும் பெரும் பொருளே!
முதல்வோனே - முதன்மையானவரே!
கொஞ்சவே காலின்மேவு சதங்கை தான் ஆட ஆடிய
--- இனிய ஒலி கொஞ்சும்படி திருவடியில் விளங்கும் சதங்கைகள் ஒலிக்க திருநடனம்
புரிந்த,
கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே ---
கொன்றைமலர் சூடிய சிவபெருமான் நாள்தோறும் மகிழ்கின்ற திருமைந்தரே!
கொந்து சேர் சோலை மேவிய --- பூங்
கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய,
குன்று சூழ்வாகவே வரு --- குன்றுகளின் சூழல்
உள்ள,
குன்றுதோறு ஆடல் மேவிய பெருமாளே ---
மலைகள்தோறும் திருவிளையாடல் புரிந்து வீற்றிருக்கும், பெருமையின் மிகுந்தவரே!
வஞ்சமே கோடி கோடிகள் --- கோடிக்கணக்கான
வஞ்சனைகள்;
நெஞ்சமே சேர மேவிய --- உள்ளத்தில் பொருந்த
வைத்துள்ள,
வன்கணார் --- கொடியவர்கள்,
ஆரவாரமும் அருள்வோராய் --- ஆரவாரத்துடன்
அருள் புரிபவர்கள் போல, வம்பிலே வாது கூறிகள்
--- வீண்வாது பேசுபவர்கள்,
கொஞ்சியே --- கொஞ்சிபேசி,
காமலீலைகள் வந்தியா --- காமலீலைகளைப் பற்றிப்
புகழ்ந்து,
ஆசையே தரு விலைமாதர் --- ஆசையை வளர்க்கின்ற விலைமாதர்களுடைய,
பஞ்ச மா பாவமே தரு --- ஐம்பெரும் பாவங்களையும்
தருகின்ற,
கொங்கைமேல் நேசமாய் --- தனங்களின்மீது
விருப்பம் வைத்து,
வெகு பஞ்சியே பேசி --- மிகுந்த
வருத்தங்காட்டிப் பேசி,
நாள்தோறும் மெலியாதே --- தினந்தோறும் அடியேன்
மெலிந்து போகாமல்,
பந்தியாய், வானுளோர் தொழ --- வரிசையாக நின்று
தேவர்கள் தொழுது வணங்க,
நின்ற சீரே குலாவிய --- நிலைபெற்ற சிறப்பு
விளங்குகின்ற,
பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே --- பண்பு
மிகுந்த தேவரீருடைய பாதமாகிய தாமரையை அடியேனுக்கு அருள் புரிவீராக.
பொழிப்புரை
சூரபன்மன் அஞ்சும்படி, அவன் பிழைத்துப் போகா வண்ணம், அந்நாள் வேலாயுதத்தை விடுத்து தேவர்கள்
சிறியினின்றும் விடுதலையடையும்படியும், அன்புடன்
அந்த அமரர்களின் மனவிருப்பம் நிறைவேறும்படியும், அவர்கட்கு நல்வாழ்வு நல்கிய தேவாதி தேவரே!
பெரும் பெரும் பொருளே!
முதல்வரே!
திருவடியில் உள்ள சதங்ககைகள் இனிய
ஒலியுடன் கொஞ்சியோடுமாறு திருநடம் புரிந்த கொன்றை மலரைச் சூடிய சிவபெருமான், திருவுளம் மகிழ்கின்ற திருக்குமாரரே!
பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகளையுடைய
குன்றுகளால் சூழ்ந்துள்ள மலைகள்தோறும் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
நெஞ்சில் கோடிக் கணக்கான வஞ்சனைகள்
நிறைந்த கொடியவர்கள்; ஆடம்பரத்தைத்
தருகின்றவர்கள்; வீண்வாதம்
புரிபவர்கள்; கொஞ்சிப் பேசிக்
காமலீலைகளைப் புகழ்ந்து மயலைத் தருகின்ற விலைமாதருடைய ஐம்பெரும் பாவங்களைப்
புரிகின்ற தனங்களின் மீது ஆசைப்பட்டு வெகு வருத்தப்பாடுடன் பேசி தினந்தோறும்
சிறியேன். மெலியாது, வரிசையாக நின்று
தேவர்கள் தொழுது வணங்குகின்ற பெருமை தங்கிய பண்புடைய தேவரீரது திருவடிகளை
அடியேனுக்குத் தந்தருளுவீராக.
விரிவுரை
வஞ்சமே
கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வண்கணார் ---
நெஞ்சத்தில்
கோடிக்கணக்கான வஞ்சனைகள் குவித்து உறைய தம்மை அடுத்தோர்க்குக் கொடுமை புரிபவர்கள்.
ஆரவாரமும்
அருள்வோராய்
---
ஆடம்பரமான
வாழ்க்கை உடையவராய், தம்மை அடுத்தவரையும்
அப்படி வாழுமாறு கற்பிப்பவர்கள்.
விலையுயர்ந்த
துணிமணிகளும், உயர்ந்த விலை தந்து
பெறும் நறுமணப் பொருள்களும், விலை மதிக்க முடியாத
சயனங்களும் உடையவராய் ஆடவரை மயக்குவர்.
வம்பிலே
வாது கூறி
---
வீணான
வகையில் தருக்கம் பேசிப் பொழுது கழிப்பார்கள். இல்லாததை உண்டு என்றும், இருப்பதை இல்லையென்றும், துரும்பைத்
தூண்என்றும், தூணைத்
துரும்பென்றும், கரும்பை
இரும்பென்றும், இரும்பைக்
கரும்பென்றும் பேசி வாதம் புரிவார்கள்.
கொஞ்சியே ---
குழந்தைகள்
கொஞ்சிப் பேசுவதைப்போல், ஆடவரிடம் மழலை
மொழியால் கொஞ்சிப் பேசி மயக்குவார்கள்.
காம
லீலைகள் வந்தியர் ---
வந்தித்தல்
- புகழ்தல். ஆசையுடன், ஆடல்களை ஆடியும், பாடல்களைப் பாடியும் புகழ்ந்து கூறுவர்.
புகழ்ந்து
பாடுவோர்க்கு வந்தியர் என்று பெயர். ஆசை ஆடல்களைப் புகழ்ந்து கூறித் திரிவோர்.
பஞ்சமா
பாவமே தரு கொங்கை ---
பொது
மகளிரது தனங்களை விரும்புவதனால் ஐம்பெரும் பாவங்களும் விளையும்.
ஆசை
வசப்பட்டு கொலை, களவுகள், பொய், சூது ஆகிய மாபதங்களை ஆடவர்கள்
புரிவார்கள்.
பந்தியாய்
வானுளோர் தொழ
---
தேவர்கள்
கடப்பமலர் மாலைகளைத் தனித்தனியே கரங்களில் ஏந்திக்கொண்டு முருகனைத் தொழும்
பொருட்டு வருகின்றார்கள். தனித்தனியே வந்தவர்களை முறையே வணங்குமாறு வீரவாகு தேவர்
பணிக்கின்றார். வரிசையாகக் கடப்பமலர் மாலையைச் சூட்டி வானவர்கள்
வணங்குகின்றார்கள்.
ஆலுக்கு
அணிகலம் வெண்தலைமாலை, அகிலம் உண்ட
மாலுக்கு
அணிகலம் தண் அம் துழாய், மயிலேறும் ஐயன்
காலுக்கு
அணிகலம் வானோர் முடியும் கடம்பும், கையில்
வேலுக்கு
அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே. --- கந்தர்
அலங்காரம்
பண்பு
சேர் பாத தாமரை அருள்வாயே ---
நற்குணங்களின்
சிகரமாகத் திகழ்வது பண்பு.
அரம்போலும்
கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்
பண்பில்லா தவர்.
எழுமை
எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்கா
பண்புடை
மக்கட் பெறின்” --- திருக்குறள்
இத்தகைய
இனிய பண்புத் திரண்டு புகலிடமாக முருகன் திருவடிகளில் சென்று சேர்ந்தன.
சூரனானவன்
உய்ஞ்சு போகாமலே அயில் அன்றுதான் ஏவி ---
சூரனும்
பன்மனும் முற்பிறப்பில் முருகப்பெருமானுக்கு மயிலும் சேவலுமாகித் தொண்டுபுரிய
விரும்பி அளவற்ற அரும் பெருந்தவம் புரிந்தார்கள். அவ்விருவரும் சேர்ந்து
சூரபன்மனாகப் பிறந்தனர். ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் அரசு புரிந்தான்
சூரபன்மன்.
முருகவேள்
அவனை அரக்கனாகவே இருந்து பிழைக்கா வண்ணம், வேலால் தடிந்து, முற்பிறப்பில் செய்த தவத்தில்
காரணத்தால் சேவலும் மயிலுமாக்கி ஆட்கொண்டருளினார்.
முன்
தேவர்கள் சூரபன்மனை அச்சத்தால் வணங்கினார்கள். இப்போது “சேவலும் மயிலும் போற்றி”
என்று அன்பினால் வணங்குகின்றார்கள்.
மேலான
வாழ்வு அருள் அண்டர் கோவே ---
தேவர்களையும்
தேவ மாதர்களையும் சூரன் சிறையில் அடைத்துப் பெருந்துன்பம் விளைத்தான். இனி நமக்கு
வாழ்வு இல்லையென்று கருதித் துன்பக் கடலில் அழுந்தி வேதனையுற்றார்கள்.
முருகவேள்
சூரனைத் தடிந்து, தேவர் சிறை தீர்த்து
உயர்ந்த வாழ்வினை வழங்கி அருள்புரிந்தருளினார்.
தேவ
தேவ தேவாதி தேவனாக விளங்கும் தனிப் பெருந் தெய்வசிகாமணி முருகவேள்.
கொஞ்சவே
காலின்மேவு சதங்கை தானாட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே ---
உலகமெல்லாம்
அசையும் பொருட்டு இறைவன் அசைந்து ஆடுகின்றான். உலகின் நடு இடத்தில் அப்பரம பதி
ஆடுகின்றான்.
குன்று
தோறாடல் மேவிய
---
மன்று
தோறாடுகின்ற மணிகண்டரது மகனார்,
குன்று
தோறாடுகின்ற குகனார்.
கருத்துரை
குன்று
தோறும் ஆடிய குமரவேளே! மாதர் மயல்அற உனது பாதமலரைத் தருவீர்.
No comments:
Post a Comment