17. நல்லோர்
அடைக்கலம்
எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
அவனே மகாபுரு டனாம்;
அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்
அசைவிலன் மகாதீ ரனாம்;
தொடுத்து
ஒன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
தோன்றலே மகரா சனாம்;
தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
துரையே மகாமே ருவாம்!
அடுக்கின்ற
பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும்
அவனே மகாதியா கியாம்;
அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்
அவனே மகாஉசி தன்ஆம்;
அடர்க்கின்ற
முத்தலைச் சூலனே! லோலனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே --- தம்மை அடையாதாரைக்
கொல்லுகின்ற முத்தலைச் சூலத்தை ஏந்தியவனே!
லோலனே --- திருவிளையாடல்கள் புரிகின்றவனே!
அமலனே --- இயல்பாகவே குற்றம் அற்றவனே!
அருமை மதவேள் --- அரிய மதவேள் என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர
கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
அடைக்கலம் எனத் தேடி வருவோர் தமைக் காக்கும்
அவனே மகாபுருடன் ஆம் --- அடைக்கலம் என்று தம்மைத் தேடி வருவோர்களைக்
காப்பாற்றுவோன் மக்களில் சிறந்தவன் ஆவான்.
அஞ்சாமல் எது வரினும் எது போகினும், சித்தம்
அசைவு இலன் மகா தீரன் ஆம் --- எது வந்தாலும் எதுபோனாலும் அச்சம் இல்லாமலும், உள்ளத்
தளர்ச்சி இல்லாமலும் இருப்பவன் பெருவீரன் ஆவான்.
ஒன்று தொடுத்துச் சொன்ன சொல் தப்பாது
செய்கின்ற தோன்றலே மகராசன் ஆம் --- ஒன்றைப் பற்றிக் கூறிய சொல்லைத் தப்பாமல்
செய்கின்ற தலைவனே பேரரசன் ஆவான்.
தூறிக் கலைக்கின்ற பேர் வார்த்தை கேளாத
துரையே மகாமேரு ஆம் --- ஒருவர் மீது வீண்பழி தூற்றி, தனது மனத்தைக் கலைக்க முற்படுபவரின்
சொல்லை நம்பாத செல்வனே மகா மேருமலை ஆவான்.
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர் தீர்த்து
இரட்சிக்கும் அவனே மகா தியாகி ஆம் --- தன்னைச் சார்ந்தோர்க்கு வருகின்ற துன்பத்தை
நீக்கி, அவரைக் காப்பவனே பெரிய வள்ளல் ஆவான்.
அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும் அவனே
மகா உசிதன் ஆம் --- ஒவ்வொருவருடைய தகுதியையும் பார்த்து, தக்க மரியாதையைச் செய்பவனே
மதிப்புக் கொடுக்கின்றவனே சிறந்த தகுதி உடையவன் ஆவான்.
No comments:
Post a Comment