முருகனை வாழ்த்தியது




1. முருகன் திருவிளையாடல்

பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப்
    பொய்கைதனில் விளையாடியும்,
புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும்
    பாதனைச் சிறையில் வைத்தும்,

தேமிக்க அரியரப் பிரமாதி கட்கும்
    செகுக்கமுடி யாஅசுரனைத்
தேகம் கிழித்துவடி வேலினால் இருகூறு
    செய்தமரர் சிறைதவிர்த்தும்,

நேமிக்குள் அன்பரிடர் உற்றசம யந்தனில்
    நினைக்குமுன் வந்துதவியும்,
நிதமுமெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை
    நிகரான தெய்வமுண்டோ

மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணியும்மணி
    மார்பனே ! வள்ளிகணவா !
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
    மலைமேவு குமரேசனே.

          இதன் பொருள் ---

     மிக்க தேன் மா பருகு பூ கடம்பு அணியும் அணி மார்பனே --- வண்டுகள் மிகுந்த தேனை உண்ணுகின்ற அழகிய கடப்பமாலை புனைந்த திருமார்பினை உடையவனே!

     வள்ளி கணவா --- வள்ளியம்மையார் கணவனே!

     மயிலேறி விளையாடு குகனே --- மயில் மீது அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே! - திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!

     பூமிக்கு ஓர் ஆறுதலையாய் வந்து --- சூம்பன்மனால் துன்புற்ற உலகிற்கு ஓர் அமைதியை அளிக்க எழுந்தருளி வந்து,

     சரவணப் பொய்கைதனில் விளையாடியும் --- நாணல் நிறைந்த குளத்திலே திருவிளையாடல் புரிந்தும்,

     புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் --- குற்ற மற்றவரான சிவனபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளியும்,

     போதனைச் சிறையில் வைத்தும் --- நான்முகனைச் சிறையிலே அடைத்தும்,

     தே மிக்க அரி அரப் பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை - தேவர்களில் சிறந்த திருமாலும் சிவனும் நான்முகனும் போன்ற மும்மூருத்திகளாலும் அழிக்க முடியாத சூரபதுமனை,

     வடிவேலினால் தேகம் கிழித்து இருகூறு செய்து அமரர் சிறை தவிர்த்தும் --- கூரிய வேலாயுத்த்தினாலே உடலைப் பிளந்து இரு கூறாக்கி, தேவர்கள் சிறையை விடுத்தும்,

     நேமிக்குள் அன்பர் இடர் உற்ற சமயந்தனில் நினைக்குமுன் வந்து உதவியும் --- உலகத்தில் அடியவர்கள் துன்பம் அடைந்தபோது அவர்கள் நினைப்பதற்கு முன்னதாகவே வந்து அருள் புரிந்தும்,

     நிதமும் மெய்த் துணையாய் விளங்கலால் --- எப்போதும் உயிர்களுக்கு உற்ற உண்மைத் துணையாக நீ விளங்குவதால்,

     உலகில் உனை நிகர் ஆன தெய்வம் உண்டோ? --- இந்த உலகத்தில் உனக்குச் சமமான தெய்வம் உண்டோ? (இல்லை).

         
          ஆறு திருமுகங்களுடன் முருகன் பிறந்த வரலாறு : ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகங்களாக அறநெறி வழுவி, அமரரை வருத்தி, அரசு புரிந்த சூரபன்மனுடைய கொடுமையாகிய தீயினால் வெதும்பிய தேவர்கள் “இனிய உய்வு கிடைக்குமோ?” என்று ஏங்கி சிவபெருமானிடம் போய் முறையிட்டனர். சூட்டை சூட்டினால் நீக்கும் மருத்துவ முறை போல் சூராதி வுணரின் கொடுமைத் தீயை அவிக்க சிவபெருமானுடைய நெற்றிக்கண்களினின்றும் ஆறு சுயஞ்ஜோதி அருள் தீப் பொறிகள் தோன்றின. அவற்றை சிவபெருமான் ஆணையின்படி வாயுதேவனும் அக்கினி தேவனும் கங்கையிலிட்டனர்; கங்கை சரவணத்திற் சேர்த்தனள். நரவணப் பொய்கையில் ஆறுமுக வடிவுகொண்டு முருகப் பெருமான் திருவவதாரம் புரிந்தார்.

          நான்முகனைச் சிறையில் அடைத்தது: முருகப் பெருமான்
திருக்கயிலாய மலையிலே குழந்தையாக விளையாடி, பற்பல திருவிளையாடல்களைப் புரிந்துகொண்டு இருந்த போது, திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானை வணங்கும் பொருட்டு வந்தனர். நான்முகனும் சிவபிரானை வணங்க வந்தான்.  எல்லோரும் முருகப் பெருமானை வணங்கிச் சென்றனர். பிரமன் முருகப் பெருமானை வணங்காமல் இறுமாப்புடன் சென்றான். முருகப் பெருமான் அவனை அழைத்து, "நீ யார்" என்றார். அவன் "வேதத்தை ஓதி, படைப்புத் தொழிலை இயற்றும் பிரமன்" என்றான். முருகப் பெருமான், உனக்கு வேதம் வருமா?' என்று வினவினார். அவன் தெரியும் என்றான். "சொல் பார்க்கலாம்" என்றார் முருகப் பெருமான்.  பிரமன் ஓங்காரத்தை ஓதி, வேத்த்தை ஓதத் தொடங்கினான். "நில். நீ சொன்ன பிரணவத்திற்குப் பொருள் தெரியுமா?" என்றார். தெரியாமையால் அவன் விழித்தான். "பிரணவத்தின் பொருள் தெரியாத நீயா உலகைப் படைக்கும் தொழிலுக்கு ஏற்றவன்?" என்று கூறி அவன் தலைகளிலே குட்டினார். பிறகு சிறையில் அடைத்தார்.

     "மறை ஆதி எழுத்து என்று உகந்த பிரணவத்தின் உண்மை புகன்றிலையால், சிட்டித் தொழில் அதனைச் செய்வது எங்ஙன் என்று முனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே" என்றது கந்தர் கலிவெண்பா.

      சிவபிரானுக்குப் பிரணவத்தைக் கூறியது : நான்முகன் சிறையில் அடைபட்டதை அறிந்த வானவர்கள் சிவபிரானிடம் முறையிட்டனர். அவர் எழுந்தருளி வந்து முருகக்
கடவுளிடமிருந்து நான்முகனை விடுவித்தார். பிறகு, ‘நீ பிரணவத்தின் பொருளை அறிவையோ?' என்று வினவினார். அவர் அறிவேன்' என்றார். ‘அங்ஙனமாயின் கூறுவாயாக!' என்றார். ‘அது மறை ஆகையால் ஆசிரியனிடம் மாணவன் பெற்றுக் கொள்வதுபோல ஏற்றுக்கொள்வதானால் கூறுகிறேன்' என்று குமரக்கடவுள் கூறினார். சிவபிரான் அவ்வாறே அவரை உயர்ந்த இருக்கையில் எழுந்தருளச் செய்து, தாம் மாணவர்போல அவர் எதிரே நின்றார். சுவாமிநாதன், சிவபிரான் திருச்செவியிலே பிரணவ மந்திரத்தைக் கூறியருளினார்.

          சூரபதுமன் இரு கூறானது: சூரபதுமன் அழியாவரம் பெற்றவன். ஆகவே, அவனை வடிவேலால் இரண்டாகப் பிளந்தவுடன் சேவலும் மயிலுமாக மாறினான். சேவலைக்
கொடியாகவும் மயிலை ஊர்தியாகவும் முருகக் கடவுள் கொண்டார்.

"கார் அவுணன் அங்கம் இரு கூறாய், அடல் மயிலும் சேவலுமாய்த் துங்கமுடன் ஆர்த்து எழுந்து தோன்றுதலும், அங்கு அவற்றுள் சீரும் அரவைப் பொருத சித்ர மயில் வாகனமா ஏறித் தனி நடத்தும் எம் கோவே! மாறி வரு சேவல் பகையைதி திறல் சேர் பதாகை என மேவத் தனித்து உயர்ந்த மேலோனே!" என்பது கந்தர் கலிவெண்பா.

     குமாரக் கடவுளே தெய்வங்களில் சிறந்தவர் என்று தமது பாட்டுடைத் தலைவனை வியந்து போற்றினார்.

No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...