விளக்கினை ஏற்று - அக விளக்கினை ஏற்று.




1. திருவிளக்கிட்டார் தமையே தெய்வம் அளித்திடும்

வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
     உட்புகுந்து, வலமாய் வந்தே,
ஒருவிளக்கு ஆயினும்பசுவின் நெய்யுடன்,தா
     மரைநூலின் ஒளிர வைத்தால்,
கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!
     கைலாசம் காணி ஆகும்!
திருவிளக்குஇட் டார்தமையே தெய்வம் அளித்
     திடும்! வினையும் தீரும் தானே!

இதன் பொருள் ---

     வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில் உட்புகுந்து வலமாய் வந்து --- வேண்டிய பேறுகளை அருளும் திருத்தண்டலை நீள்நெறிநாதரின் திருக்கோயிலின் உள்ளே சென்று, வலமாக வந்து வணங்கி,

     ஒரு விளக்காயினும் --- ஒரு விளக்காவது,

     பசுவின் நெய்யுடன் தாமரை நூலின் ஒளிர வைத்தால் ---பசுவின் நெய்யை விட்டு, தாமரை நூலிலே ஒளிரும்படி வைத்தால்

     கருவிளக்கும் பிறப்பும் இல்லை --- மறுமுறையும் கருவிலே ஊறி வரும் பிறவித் துன்பம் இல்லை,

     இறப்பும் இல்லை --- மரணமும் இல்லை,

     கைலாசம் காணி ஆகும் --- சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை உரிமை ஆகும்.

     திருவிளக்கு இட்டார் தமையே தெய்வம் அளித்திடும் --- திருவிளக்கு இட்டவர்வர்களையே தெய்வம் காப்பாற்றும்,

     வினையும் தீரும் --- பழவினையும் நீங்கும்.

     விளக்கம் --- அக் காலத்திலே, திருக்கோயிலில் அகல் விளக்கு மட்டுமே இருக்கும். கருவறையில் எழுந்தருளி இருக்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டு வணங்கத் திருவிளக்குத் துணை புரியும். திருக்கோயில் வலம் வருவாருக்கும் இரவுக் காலங்களில் விளக்கொளி துணைசெய்யும். திருக்கோயில் வலம் வருதற்கும், இறைவனை வணங்குதற்கும் திருவிளக்கு இடுதல் என்பது ஒரு திருப்பணியாகச் செய்யப்பட்டது. இது பற்றியே நமிநந்தி அடிகள் திருவிளக்கு இட்டார் என்பதும் அறியப்படும்.

     அதன்றியும், புறத்து இருள் நீங்க ஒளிவிளக்கு ஏற்றுவது போல, அகத்து உள்ள ஆணவ இருள் நீங்க ஞான விளக்கினை, அருள் விளக்கினை ஏற்ற வேண்டும் என்பதும் குறிப்பு.

அருள் ஒளி விளங்கிட, ஆணவம் எனும் ஒர்
இருள் அற, என் உள்ளத்து ஏற்றிய விளக்கே.

வெருள் மனமாயை, வினை, இருள் நீக்கி, உள்
அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ் சோதி,

சுருள் விரிவு உடைமனச் செயல் எலாம் அறுத்தே,
அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ் சோதி.

என்பது அருட்பெருஞ்சோதி அகவல்.

துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
     தோன்றிட, பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ் செய்தது, மா
     சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த,
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
     நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குஉணவு அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
     என் அம்மையே பள்ளி எழுந்து அருள்வாயே.

     திருப்பள்ளி எழுச்சி என்பதும் புற இருள் விடிவதை மட்டுமே குறிப்பது அல்ல. அக இருள் விடிவதையும் குறிக்கும் என்பதை, "நீறு அணிந்தார் அகத்து இருளும், நிறை கங்குல் புறத்து இருளும் மாற வரும் திருப்பள்ளி எழுச்சி" என்னும் தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவாக்கால் அறியப்படும்.

     "இல்லக விளக்கு, அது இருள் கெடுப்பது. ...... நல் அக விளக்கு, அது நமச்சிவாயவே" என்னும் அப்பர் பெருமான் அருள் வாக்கின் உண்மைப் பொருளை உணர்ந்து தெளிதல் வேண்டும். வெறுமனே சொல்லுக்குள்ள பொருளை மட்டும் காண்பது சிறப்பு அல்ல.

     எனவே, திருக்கோயிலில் மட்டுமல்ல, இல்லத்திலும் திருவிளக்கு ஏற்றுவதில், இந்த உண்மை பொதிந்துள்ளது. இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

     இக்காலத்தில் மின்னொளி விளக்குகள் நிறைந்து, மலிந்து விட்டதால், திருவிளக்கு இடும் பணியின் பொருளும் மாறிவிட்டது என்பதை உணராத பெருமக்கள் பலரும், திருவிளக்கு ஏற்றவேண்டும் என்பதற்காகத் திருக்கோயிலின் தூய்மையைச் சிதைத்து வருவது என்னும் பாவச் செயலைத் தம்மை அறியாமல் மேற்கொள்ளுகின்றனர். அறிந்தோர் அறிவுறுத்துவதும் இல்லை. அறிவுறுத்தினாலும் கேட்பார் இல்லை.

விளக்கினால் பெற்ற இன்பம்
     மெழுக்கினால் பதிற்றி ஆகும்,
துளக்கில் நன் மலர் தொடுத்தாநல்
     தூயவிண் ஏறலு ஆகும்,
விளக்கு இட்டார் பேறு சொல்லின்
     மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு
     அடிகள் தாம் அருளும் ஆறே.         ---  அப்பர்.

     திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால், தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும். கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர். அருட் பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன.


No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...