அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆசை நாலுசதுர
(பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
சிவயோகத்தை அடியேனுக்கு
அருள்
தான
தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன ......
தந்ததான
ஆசை
நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி ஓடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு
......மிந்துவாகை
ஆர
மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின்
......விந்துநாத
ஓசை
சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியோரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ......
நந்தியூடே
ஊமை
யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை
......யின்றுதாராய்
வாசி
வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண .....செங்கையாளி
வாகு
பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை
......தந்தவாழ்வே
காசி
ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல்
.....செந்தில்நாகை
காழி
வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு
நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ......தம்பிரானே.
பதம் பிரித்தல்
ஆசை
நாலு சதுரக் கமலம் உற்று, இன் ஒளி
வீசி, ஓடி, இரு பக்கமொடு உறச் செல் வளி
ஆவல் கூர மண் முதற் சலச பொற்சபையும்
......இந்துவாகை
ஆர
மூணு பதியில் கொள நிறுத்தி, வெளி
ஆரு சோதி நுறு பத்தினுடன் எட்டு இதழ்
ஆகி ஏழும் அளவிட்டு, அருண வில் பதியில், ......விந்துநாத
ஓசை
சாலும் ஒரு சத்தம் அது இகப் படிக
மோடு கூடி ஒருமித்த அமுத சித்தியொடும்
ஓது வேத சர சத்திஅடி உற்றதிரு ...... நந்தியூடே
ஊமையேனை
ஒளிர்வித்து உனது முத்திபெற,
மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
யோக பேதவகை எட்டும் இதில் ஒட்டும் வகை
......இன்றுதாராய்.
வாசி
வாணிகன் எனக் குதிரை விற்று, மகிழ்
வாதவூரன் அடிமைக் கொளு க்ருபைக் கடவுள்,
மாழை ரூபன், முக மத்திகை விதத்து அருண .....செங்கையாளி
வாகு
பாதி உறை சத்தி, கவுரி, குதலை
வாயின் மாது, துகிர் பச்சைவடிவி, சிவை, என்
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை ......தந்தவாழ்வே!
காசி, ராமெசுரம், ரத்நகிரி, சர்ப்பகிரி,
ஆரூர், வேலுர், தெவுர், கச்சி, மதுரை, பறியல்,
காவை, மூதுர், அருணக்கிரி, திருத்தணியல், .....செந்தில், நாகை,
காழி, வேளுர், பழநிக்கிரி, குறுக்கை, திரு-
நாவலூர், திருவெணெய்ப் பதியின் மிக்க திகழ்
காதல் சோலைவளர் வெற்பில் உறை
முத்தர்புகழ் ......தம்பிரானே.
பதவுரை
வாசி வாணிகன் என --- குதிரை வியாபாரியாக
வந்து,
குதிரை விற்று --- மதுரையில் பாண்டியனிடம்
குதிரை விற்று,
மகிழ் வாதவூரன் அடிமை கொளும் --- அதனால் மனம்
மகிழ்ந்த திருவாதவூரரை அடிமை கொண்டவரும்,
க்ருபைக் கடவுள் --- கருணைக் கடவுளும்,
மாழை ரூபன் --- பொன்னிறமுடையவரும்,
முகம் மத்திகை விதத்து அருண செம் கையாளி ---
ஒலிக்கின்ற குதிரைச் சம்மட்டியால் குதிரையைச் செலுத்துகின்ற வகை பொருந்திய ஒளியும்
அழகும் உடைய திருக்கரத்தை யுடையவரும் ஆகிய சிவபெருமானுடைய,
வாகு பாதி உறை சத்தி ---
இடப்பாகத்திலிருக்கும் ஆற்றலுடையவரும்,
கவுரி --- பொன்னிறமுடையவரும்,
குதலை வாயின் மாது --- மழலை மொழி பேசும்
பெண்ணமுதமானவரும்,
துகிர் பச்சை வடிவி --- பவளங்கலந்த பச்சை
நிறத்தையுடையவரும்,
சிவை --- மங்கலம் பொருந்தியவரும்,
என் மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை ---
அடியேனுடைய குற்றமிக்க ஏழுவகையான பிறப்புக்களையும் அறுத்து ஆட்கொண்ட உமாதேவியாரும்
ஆகிய அம்பிகை,
தந்த வாழ்வே --- பெற்றருளிய திருமைந்தரே!
காசி --- காசியம்பதி,
ராமெசுரம் --- திருவிராமேச்சுரம்,
ரத்னகிரி --- வாட்போக்கி என்னும் இரத்தினகிரி,
சர்ப்பகிரி --- திருச்செங்கோடு,
ஆரூர் --- திருவாரூர்,
வேலூர் --- வேலூர்,
தெவுர் --- தேவூர்,
கச்சி --- காஞ்சிபுரம்,
மதுரை --- மதுரையம்பதி,
பறியல் --- திருப்பறியலூர்,
காவை --- திருவானகை்கா,
மூதுர் --- பழமலை என்னும் விருத்தாசலம்
(திருப்புனவாயில் எனினும் அமையும்)
அருணகிரி --- திருவண்ணாமலை,
திருத்தணியல் --- திருத்தணிகை,
செந்தில் --- திருச்செந்தூர்,
நாகை --- நாகப்பட்டினம்,
காழி --- சீகாழி,
வேளூர் --- புள்ளிருக்குவேளூர் என்னும்
வைத்தீச்சுரன் கோயில், பழநிக்கிரி --- பழநிமலை,
குறுக்கை --- திருக்குறுக்கை,
திருநாவலூர் --- திருநாவலூர்,
திருவெணெய்ப் பதியில் ---
திருவெண்ணெய்நல்லூர், என்னும்
திருத்தலங்களிலும்,
மிக்க திகழ் காதல் சோலை வளர் வெற்பின் உறை ---
மிகவும் திகழ்கின்றதும் அன்பை விளைவிப்பதும் சோலை வளர்கின்றதுமாகிய பழமுதிர் சோலை
என்னும் திருத்தலத்திலும் வாழ்கின்ற,
முத்தர் புகழ் --- சீவன் முத்தர்களால்
புகழ்ப்பெறுகின்ற,
தம்பிரானே --- தனிப்பெருந்தலைவரே!
இன் ஒளி வீசி ஓடி இருபக்கம் ஓடு உற செல்
வளி --- இனிய ஒலியைப் பரப்பி இடை பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியே
ஓடிக்கழியும் வாயுவை,
ஆசை நாலு சதுரக்கமலம் உற்று --- நான்கு
பக்கத்தையுடைய மூலாதாரத்திற் பொருந்தி,
ஆவல் கூர --- விருப்பமுற,
மூணு பதியில் --- அக்கினியாகி மூன்று
மண்டலங்களிலுள்ள,
மண் முதல் கலசம் --- (அங்கிருந்து சுழுமுனை
நாடி வழியாக) சுவாதிஷ்டானம் முதல் ஆக்கினை ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும்,
இந்து வாசை ஆர பொற் சபையும் --- சந்திரகாந்தி
நிறைந்த பொற்சபையும்,
கொள நிறுத்தி --- பிரமந்திரக் கமலத்திலும்
பொருந்த நிறுத்தி,
வெளி ஆரு(ம்) சோதி நூறுபத்தினுடன் எட்டு இதழ்
ஆகி ஏழும் அளவிட்டு --- அப்பால் ஆயிரத்தெட்டு இதழோடுங் கூடிய சோதி நிறைந்த
வெளியாகிய துவாதசாந்த கமலம் என ஏழுதலங்களையும் பொருந்தி,
அருண வில் பதியில் --- சூரிய ஒளி பொருந்திய
பிரமந்திரத்தால் விந்து நாத ஓசையாலும்,
ஒரு சத்தம் அதிகப்படு இகம் ஓடு கூடி ---
பிரமநாத ஓசைமிகுந்த சத்தம் அதிகப்படுகின்ற இடத்துடன் கூடி,
ஒருமித்து அமுத சித்தியொடும் ---
மதிமண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலாமிர்தப் பேற்றுடன்,
வேதம் ஓது சரசத்தி அடி உற்ற திருநந்தி ஊடே ---
வேதம் சொல்லுகின்ற வாசி சத்திக்கு ஆதாரமாகவுள்ள திரு நந்தி ஒளியையும்,
ஊமையேனை ஒளிர்வித்து --- ஊமையேனுக்குத்
தெரிசிப்பித்து,
உனது முத்தி பெற மூல வாசல் வெளியிட்டு ---
தேவரீருடைய முத்தியை அடியேன் பெற்றுய்யுமாறு பிரமரந்திர வெளிவிட்டு,
உனது உரத்தில் ஒளிர் --- உமது திருவருள்
வலிமையினால் விளங்குகின்ற,
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை ---
அஷ்டாங்கயோகமும் இதனுடன் பொருந்தும் வகையை,
இன்று தாராய் --- இன்று தந்தருள வேண்டும்.
பொழிப்புரை
மதுரையம்பதியில் குதிரை வியாபாரியாக
வந்து அரிமர்த்தன பாண்டியனிடம் குதிரை விற்று, அதனால் மகிழ்ச்சியுற்று மாணிக்கவாசகரை
அடிமைகொண்ட கருணைக் கடவுளும், பொன்னார் மேனியரும், குதிரைச் சம்மட்டியினால் குதிரையைச்
செலுத்துகின்ற வகையும் ஒளியும் உடைய சிவந்த திருக்கரத்தை உடையவரும், ஆகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில்
வீற்றிருப்பவரும், அருட்சத்தியும், பொன்னிறம் உடையவரும், மழலை மொழி பேசும் மாதரசும், பவள நிறத்துடன் கூடிய பச்சை
நிறமுடையவரும், மங்கலமானவரும், அடியேனுடைய ஏழு பிறப்பையும் அறுத்த
உமாதியாருமாகிய பார்வதியம்மையார் பயந்த திருப்புதல்வரே!
காசி, திருஇராமேச்சுரம், இரத்தினகிரி, திருச்செங்கோடு, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சி, மதுரை, திருப்பறியல், திருவானைக்கா, பழமலை, திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், சீகாழி, புள்ளிருக்கும் வேளூர், பழநி, குறுக்கை, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர் முதலிய திருத்தலங்களிலும், மிகவும் திகழ்கின்றதும் சோலைகளுடன்
கூடியதுமாகிய பழமுதிர்சோலையிலும் எழுந்தருளியுள்ள முத்தான்மாக்களால்
புகழப்பெறுகின்ற தனிப்பெருந்தலைவரே!
இனிய ஒளியைப் பரப்பி இடைகலை பிங்கலை
யென்னும் இரு நாடிகளின் வழியாக ஒடிக் கழியும் பிராணவாயுவை நான்கு பக்கத்தையுடைய
மூலாதாரத்திற் பொருந்தி, அங்கிருந்து சுழுமுனை
நாடி வழியாக, சுவாதிஷ்டானம் முதல்
ஆக்கினை யீறாகவுள்ள ஐந்து கமலத்திலும் ஓட்டி நிறுத்தி, அக்கினி சூரியன் சந்திரன் என்ற மூன்று
மண்டங்களிலும் செலுத்தி, பிரமந்திர
கமலத்திலும் பொருந்த நிறுத்தி, அப்பால் ஆயிரத்தெட்டு
இதழோடும் கூடிய சோதி நிறைந்த வெளியாகிய துவாதசாந்தக் கமலம் வரை ஏழுதலங்களையும்
பொருந்தச் செலுத்தி, சூரிய ஒளி வீசும் ஒளி
மண்டலத்தில் பிரமநாதமானது ஒலிக்க்,க அதனுடன் ஒருமித்து, மதிமண்டத்தில் கலாமிர்தம் பெருகிப் பாய
அவ்வமிர்தப் பேற்றுடன், வேதம் கூறுகின்ற சர
சத்திக்கு ஆதாரமாகவுள்ள திரு நந்தி ஒளியையும் ஊமையேனுக்குத் தெரிசிப்பித்து, தேவரீரது முத்தியைப் பெற, பிரமந்திர வெளி வாசல் திறந்துவிட்டு, இங்ஙனம் செய்வதால், உமது திருவருள் வலிமையால் விளங்குகின்ற
அஷ்டாங்க யோகங்களும் இதனுடன் பொருந்தும் வகையை அடியேனுக்கு இன்று தந்தருளவேண்டும்.
விரிவுரை
ஆசைநாலு
சதுர.........................இந்து வாகை ---
ஆசை
- பக்கம்; நாலு சதுரக் கமலம் -
மூலாதாரம். இடைபிங்கலை என்ற இரு நாடிகளின் வழியே ஓடிக்கழியும் பிராண வாயுவை அங்ஙனம்
செல்லவிடாது முதுகுத் தண்டின் நடுவே தாமரை நூல் போல் நுணுகியுள்ள கழுமுனை நாடி
வழியே செலுத்துதல் வேண்டும். சிவயோகத்தின் கருத்தை மிகவும் தெள்ளிதின் உணர்ந்த
அருணகிரிநாத சுவாமிகளே அன்றி யார்தான் இதனை விளக்கவல்லார்?
மூலங்கிலர்
ஓர்உரு வாய்நடு
நால்அங்குல மேனடு வேரிடை
மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல்வோர்கள்
மூணும்பிர
காசம தாய்ஒரு
சூலம்பெற
வோடிய வாயுவை
மூலந்திகழ் தூண்விழியேயள விடவோடி” ---
திருப்புகழ்.
அங்ஙனம்
கழுமுனை வழியே செலுத்தும் பிராண வாயுவை முறைப்படி சுவதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம்
விசுத்தி ஆக்கினை யென்ற ஐந்து ஆதாரங்களில் நிறுத்தி பிரமரந்திரத்தில் செலுத்தி அதற்குமேல்
சகஸ்ரார கமலமாகிய துவாதசாந்தத்தில் செலுத்துதல் வேண்டும்.
இந்து
வாகை
---
இந்து-சந்திரன்.
இந்து வாகை ஆர-சந்திரகாந்தி நிரம்ப.
மூணுபதி ---
சந்திரமண்டலம், சூரியமண்டலம், அக்கினி மண்டலம்.
விந்துநாத
ஓசையாலும்....................அமுத சித்தி ---
மூலாதாரத்தில
மூண்டெழுங் கனலை காலா லெழுப்புங் கருத்தறிந்து முறைப்படி எழுப்பி மதிமண்டலத்தில்
தாக்கச் செய்வதால் அமிர்ததாரை பொங்கி வழியும். வாயு அடங்கி உடம்பெஞ்கும்
வியாபிப்பதால் தசவித நாதங்கள் உண்டாகும்.
“அங்கிதனை முட்டி அண்ட
மொடு தாவி விந்து ஒலி
கத்த மந்திரவதான வெண்புரவி மிசையேறி” --- (கட்டிமுண்ட) திருப்புகழ்.
“நாளும்அதிவேக
கால்கொண்டு தீமண்ட
வாசிஅனல்ஊடுபோய்ஒன்றி
வானின்கண்
நாமமதி மீதில் ஊறுங் கலாஇன்ப அமுதூறல்
நாடிஅதன்மீது
போய்ஒன்றி ஆனந்த
மேலை வெளியேறி நீயின்றி நான்இன்றி
நாடியினும் வேறு தான்இன்றி வாழ்கின்றது ....
ஒருநாளே”
--- (மூளும்வினை) திருப்புகழ்.
என்று வரும்
அநுபவத் தெளிவுகளாகத் திகழும் அருமைத் திருப்புகழ்டிகளால் தெளிக.
ஊமையேனை ---
சிவயோக
நிலையில் சித்திர தீபம் போல் அசைவற நிற்பதனால்
பேசா
அநுபூதி பிறக்கும். சொல்லறச் சும்மாயிருத்தல், அந்நிலைபெற விரும்புவதனால் ஊமையேன்
என்றனர்.
“உரைஅவிழ உணர்வு அவிழ
உளம் அவிழ உயிர் அவிழ
உளபடியை உணரும் அவர் அநுபூதி ஆனதுவும்” --- சீர்பாத வகுப்பு.
மூலவாசல்
வெளிவிட்டு
---
பிரமரந்திர
வழி திறத்தல்.
“தங்கிய தவத்து உணர்வு தந்து, அடிமை முத்திபெற
சந்திர வெளிக்கு வழி அருள்வாயே” --- (ஐங்கரனை)
திருப்புகழ்.
வாசி
வாணிகன்............செங்கையாளி ---
மாணிக்கவாசகர்
குதிரை வாங்கக் கொண்டுபோன செல்வத்தைத் திருப்பணியில் செலவழித்து, குருந்தடியில் குருவருள் பெற்று சிவஞான
போதச் செல்வராய் அமர்ந்திருந்தனர். சிவபெருமான் அவர் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி
வேதப் புரவி மீது குதிரைச் சேவகராக மதுரையில் சென்று பாண்டியனிடம் குதிரை விற்று
மணிவாசகரை ஆட்கொண்டருளினார்.
“பரி என்ப நரிகள் தமை
நடனம் கொடு ஒரு வழுதி
பரி துஞ்ச வரு மதுரை நடராஜன்” --- (திரைவஞ்ச)
திருப்புகழ்.
ஏனைய
அன்பர்கள் பற்பல செயற்கரும் செயல்களாம் திருத்தொண்டு புரிந்து பெருமானுக்கு
அடிமைப்பட்டனர். சிவப்பிரகாச சுவாமிகள் கூறுமாறு காண்க.
“கடல்நிற வண்ணன் கண்ஒன்று
இடந்து
மறைச்சிலம்பு அரற்று மலரடிக்கு அணியப்
பரிதி கொடுத்த சுருதி நாயகற்கு
முடிவிளக்கு எரித்தும், கடிமலர்க் கோதைச்
சுரிகுழல் கருங்கண் துணைவியை அளித்தும்,
அருமகள் நறும்பூங் கருமயிர் உதவியும்,
நென்முளை வாரி இன்னமுது அருத்தியும்,
கோவணம் நேர் தனை நிறுத்துக் கொடுத்தும்,
அகப்படு மணி மீன் அரற்கு என விடுத்தும்,
பூட்டி அரிவாள் ஊட்டி அரிந்தும்,
தலைஉடை ஒலிக்கும் சிலைஇடை மோதியும்,
மொய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்தும்,
தந்தையைத் தடிந்தும், மைந்தனைக் கொன்றும்,
குற்றம் செய்த சுற்றம் களைந்தும்,
பூக்கொளும் மாதர் மூக்கினை அரிந்தும்,
இளமுலை மாதர் வளமை துறந்தும்,
பண்டைநாள் ஒரு சிலர் தொண்டராயினர்”
ஆனால்
ஆராலும் காணாத அரனார் ---
“மதுரை மா நகரில் குதிரை மாறியும்,
விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும்,
நீற்று எழில் மேனியில் மாற்று அடிபட்டும்”.
மாணிக்கவாசகரைத்
தொண்டு கொண்டனர்.
ரத்னகிரி ---
இது
குளித்தலை இரயில் நிலையத்திற்குத் தெற்கே 6.30 மைல் தொலைவில்
உள்ளது.
சர்ப்ப
கிரி
---
திருச்செங்கோடு; நாகாசலம் என்றும் சொல்லப்படும்.
தேவூர் ---
இத்
திருத்தலம் கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்குத் தெற்கே 3 மைலில் உள்ளது. தேவர்கள்
சிவபெருமானிடம் மந்த்ரோப தேசம் பெற்ற அருமைத் தலம்.
குறுக்கை ---
அட்டவீரட்ட
தலங்களுள் ஒன்று; மன்மதனை எரித்த இடம்.
இது திரு அன்னியூரிலிருந்து வடமேற்கே மட்சாலை வழியே 3 மைல் சென்று அங்கு நின்று ஐயாவையன்
வாய்க்காலுக்கு மேற்புரம் ஒரு மைலிலுள்ளது.
கருத்துரை
காசிமுதல்
ராமேச்சுரம் ஈறாக பல தலங்களிலும் பழமுதிர் சோலையிலும் எழுந்தருளிய எம்பெருமானே!
பார்வதி பாலரே! சிவயோகம் எட்டும் எளிதில் எனக்குச் சித்திக்கும் வகை இன்றே
அருள்புரிவீர்.
No comments:
Post a Comment