பழமுதிர்சோலை - 0441. அழகு தவழ் குழல்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அழகு தவழ்குழல் (பழமுதிர்சோலை)

சோலைமலை முருகா! 
பொதுமாதர் மயல் தீர அருள்.


தனன தனதன தனத்தத் தாத்த
     தனன தனதன தனத்தத் தாத்த
     தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான


அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
     விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி
     அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக

அவச இதமொழி படித்துக் காட்டி
     அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி
     அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம்

ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி
     எழுத வரியிடை வளைத்துக் காட்டி
     உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி

உருகு கடிதட மொளித்துக் காட்டி
     உபய பரிபுர பதத்தைக் காட்டி
     உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ......மொழிவேனோ

முழுகு மருமறை முகத்துப் பாட்டி
     கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட
     முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா

முடுகு முதலையை வரித்துக் கோட்டி
     அடியர் தொழமக வழைத்துக் கூட்டி
     முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர்

பழைய கடதட முகத்துக் கோட்டு
     வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு
     பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர்

பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
     குமர குலமலை யுயர்த்திக் காட்டு
     பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி,
     விழிகள் கடை இணை புரட்டிக் காட்டி,
     அணிபொன் அணிகுழை புரித்துக் காட்டி, ...... அநுராக

அவச இதமொழி படித்துக் காட்டி,
     அதரம் அழி துவர் வெளுப்பைக் காட்டி,
     அமர்செய் நகநுதி அழுத்தைக் காட்டி, ...... அணியாரம்

ஒழுகும் இருதனம் அசைத்துக் காட்டி,
     எழுத வரி இடை வளைத்துக் காட்டி,
     உலவும் உடைதனை நெகிழ்த்திக் காட்டி, ...... உறவாடி

உருகு கடிதடம் ஒளித்துக் காட்டி,
     உபய பரிபுர பதத்தைக் காட்டி,
     உயிரை விலைகொளும் அவர்க்குத் தேட்டம் .....ஒழிவேனோ?

முழுகும் அருமறை முகத்துப் பாட்டி
     கொழுநர் குடுமியை அறுத்துப் போட்ட
     முதல்வ! குகைபடு திருப்பொன் கோட்டு ...... முனி!நாடா

முடுகு முதலையை வரித்துக் கோட்டி,
     அடியர் தொழமகவு அழைத்துக் கூட்டி,
     முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர்,

பழைய கடதட முகத்துக் கோட்டு
     வழுவை உரி அணி, மறைச்சொல் கூட்டு
     பரமர், பகிரதி சடைக்குள் சூட்டு ...... பரமேசர்

பணிய, அருள் சிவமயத்தைக் காட்டு
     குமர! குலமலை உயர்த்திக் காட்டு!
     பரிவொடு அணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.


பதவுரை


     அரு மறை முகத்து முழுகும் பாட்டி கொழுநர் --- அரிய வேதத்தின் முகத்தில் முழுகுகின்ற கலைமகளின் கணவராகிய பிரமதேவரது,

     குடுமியை அறுத்துப்போட்ட முதல்வ --- குடுமியை அறுத்தெரிந்த தலைவரே!

     குகைபடு திரு பொன் கோட்டு --- குகைகள் அமைந்த அழகிய பொன் மேருகிரியை,

     முனி --- கோபித்தவரே!

     நாடா --- இறைவனை நாடி,

     முடுகு முதலையை வரித்து --- விரைந்து வரும்படி முதலையை வரவழைத்து,

     காட்டி அடியர் தொழு --- கூட்டமான அடியார்கள் தொழுது நிற்க,

     மகவு அழைத்து கூட்டி --- முதலையுண்ட மதலையை அழைத்துப் பெற்றோரிடஞ் சேர்த்து,

     முறை செய் தமிழினை --- சுந்தரர் முறையிட்ட தமிழ்மறையை,

     விரித்து கேட்ட --- விரிவாகக் கேட்டருளிய,

     முது நீதர் --- பழைய நீதிமானும்,

     பழைய கட தட முகத்து கோட்டு --- பழையதும் மதம் பாயும் விசாலமான முகத்தையும் கொம்பையும் உடையதுமான,

     வழுவை உரி அணி --- யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவரும்,

     மறை சொல் கூட்டு பரமர் --- வேத மொழியைச் சொன்ன மேலானவரும்,

     பகிரதி சடைக்கு உள் பரம ஈசர் --- சடைக்குள் கங்கா நதியை முடித்த பரமேச்சரரும், ஆகிய சிவபெருமான்,

      பணிய --- தேவரீரைப் பணிய,

     அருள் சிவமயத்தை காட்டு குமர --- அவருக்கு சிவமயமான பிரணவப் பொருளை அருள் செய்து காட்டிய குமாரக் கடவுளே!

     குலமலை உயர்த்தி காட்டு --- சோலைமலையை புகழால் உயருமாறு, காட்டியவரே!

     பரிவோடு அணிமயில் நடத்தி காட்டு --- அன்புடன் அழகிய மயிலை நடத்திக் காட்டிய,

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

     அழகு தவழ் குழல் விரித்து காட்டி --- அழகு தவழ்கின்ற கூந்தலை விரித்துக்காட்டியும்,

     விழிகள் கடை இணை புரட்டி காட்டி --- இனிய பேச்சுக்களைப் பேசிக்காட்டியும்,

     அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி --- வாயிதழின் செம்மை அழிந்த பவளம் போன்ற வெளுப்பைக் காட்டியும்,

     அமர் செய் நக நுதி அழுத்தை காட்டி --- போரிடும் நகத்தின் நுனி அழுத்தினதைக் காட்டியும்,

     அணி ஆரம் ஒழுகும் --- அழகிய முத்துமாலை தொங்குகின்ற,   

     இரு தனம் அசைத்து காட்டி --- இரண்டு கொங்கைகளையும் அசைத்துக் காட்டியும்,

     எழுத அரி இடை வளைத்து காட்டி --- எழுதற்கு அரிய இடையை வளைத்துக் காட்டியும்,

     உலவும் உடை தனை நெகிழ்த்திக் காட்டி --- உலாவுகின்ற புடவையைத் தளர்த்திக் காட்டியும்,

     உருகு கடிதடம் ஒளித்துக் காட்டி --- உறவு செய்து உள்ளத்தை உருகச் செய்கின்ற அல்குலை ஒளிப்பதுபோல் காட்டியும்

     உபய  பரிபுர பதத்தைக்  காட்டி --- சிலம்பு அணிந்த இரு பாதங்களைக் காட்டியும்,

     உயிரை விலை கொளும் அவர்க்குத் தேட்டம் ஒழிவேனோ --- உயிரை விலையாகக் கொள்ளுகின்ற பொதுமாதரின் விருப்பத்தை ஒழிக்க மாட்டேனோ?


பொழிப்புரை


     அருமையான வேதப்பொருளில் முழுகுகின்ற கலைமகளின் கணவராகிய பிரமதேவரின் குடுமியை அறுத்து எறிந்த தலைவரே! குகைகள் அமைந்த பொன் மேருகிரியைக் கோபித்தவரே!

     திருவருளை நாடி, விரைந்து வரும்படி முதலையை வரவழைத்து, கூட்டமாக நின்ற அடியார் தொழுமாறு முதலையுண்ட மதலையை அழைத்துப் பெற்றோரிடம் சேர்த்த சுந்தரருடைய முறை செய்த தமிழ்ப் பாடலைக் கேட்டவரும், பழமையான நீதிபதியும், மதம் பொழியும் விசாலமான முகத்தையும் தந்தத்தையும் உடைய பழைய யானையை உரித்துப் போர்த்துக் கொண்டவரும், வேதமொழியரும், பெரியவரும், கங்கையைச் சடைக்குள் முடித்தவரும், பரமேசரும் ஆகிய சிவபெருமான் பணிந்து கேட்க, சிவமயமான ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்தருளிய குமாரக் கடவுளே!

     சோலைமலையில் எழுந்தருளி அம்மலையைப் பெருமைப்படுத்தியவரே!

     அன்புடன் அழகிய மயிலை நடாத்தியருளிய பெருமிதமுடையவரே!

     அழகு தவழ்கின்ற கூந்தலை விரித்துக் காட்டியும், கண்ணின் கடைப்புறம் இரண்டையும் புரட்டிக் காட்டியும், அழகிய பொன் ஆபரணங்களையும் குழையையும் விளக்கமுறக்காட்டியும், காம விருப்பத்தை விளைவிக்க வல்லதும், தன்வசம் அழிக்க வல்லதும் ஆகிய இனிய மொழியைப் போன்ற வெளுப்பைக் காட்டியும், போரிடும் நகத்தின் நுனியை அழுத்திக் காட்டியும், முத்துமாலை தொங்குகின்ற இரு கொங்கைகளையும் அசைத்துக் காட்டியும், எழுதுதற்கு அரிய இடையை வளைத்துக் காட்டியும், உலாவுகின்ற புடவையைத் தளர்த்திக் காட்டியும், உறவு செய்து உள்ளத்தை உருகச் செய்கின்ற அல்குலை ஒளிப்பதுபோல் காட்டியும், சிலம்பு அணிந்த இரு பாதங்களைக் காட்டியும், உயிரை விலையாகக் கொள்கின்ற பொதுமகளிரின் விருப்பத்தை ஒழிக்கமாட்டேனோ?


விரிவுரை


இத்திருப்புகழில் முதற்பகுதி விலைமாதர்களின் சாகசங்களை விரித்துக் கூறுகின்றது.


முழுகும் அருமறை முகத்துப் பாட்டி ---

பாட்டி-பெரியவள். வேதத்தில் வல்லவன் சரசுவதி.

குடுமியை யறுத்துப் போட்ட ---

பிரமனின் தலையில் முருகவேள் குட்டியபோது குடுமி அறுந்து விழுந்தது.

சிகைதூளிபட தாளமிடும் இளையோனே”         --- (வாலவய) திருப்புகழ்.

திருப்பொற்கோட்டு முனி ---

பொன் மேருகிரியை உக்கிரப் பெருவழுதி செண்டால் எறிந்த வரலாற்றை இது குறிக்கின்றது.

மேருவைச் செண்டாலெறிந்த வரலாறு

         அறுபத்து நான்கு சக்திபீடங்களிற் சிறந்ததும் துவாத சாந்த க்ஷேத்திரமுமாகிய மதுரையம்பதியில் சோமசுந்தரக்கடவுள் திருவருளால் தடாதகைப் பிராட்டியாரது திருவுதரத்தின் கலவுறாது அயோநிஜராக முருகவேளது திருவருட்சத்தியுடன் சேர்ந்து முருக சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்ய மூர்த்திகளில் ஒருவர் உக்கிரகுமார பாண்டியராகத் தோன்றி, அறனெறி பரப்பி அரசாண்டு கொண்டிருந்த ஞான்று, கோள்கள் திரிந்ததால் மழை பொழியாதாயிற்று. அதனால் நதிகள், குளங்கள், கிணறுகள், முதலிய நீர் நிலகள் வற்றி, விளைபொருள் குன்றி, கொடிய பஞ்சம் ஏற்பட்டது. மாந்தர்கள் பசியால் வாடி வருந்தினார்கள். உக்கிர குமார பாண்டியர் “மழை வளம் வறந்தது யாது காரணம்” என்று வினவ, கால அளவுகளை நன்குணர்ந்த புலவர்கள் சோதிட நூலை யாராய்ந்து “மன்னரேறே! அழியாத பிரமகற்ப மட்டும் ஏனைய கிரகங்கள் கதிரவனை யடைந்து பார்த்து நிற்றலால் ஓராண்டு வரை வானத்தினின்றும் மழை பொழியாது” என்றனர்கள்.

         அதுகேட்ட உக்கிரகுமாரர் குழந்தையின் நோயைக் கண்டு வருந்தும் நற்றாய்போல் குடிகளிடத்து மனமிரங்கி அத்துன்பத்தை நீக்கும் உபாயத்தை உன்னி, ஆலயஞ் சென்று மதிநதி யணிந்த சோமசுந்தரக் கடவுளைக் கண்டு பணிந்து, “தேவதேவ மகாதேவ! தென்னாடுடைய சிவபரஞ்சுடரே! எந்நாட்டவர்க்கும் இறைவ! மழையின்றி மாந்தர்கள் பசியால் வாடி மெலிகின்றனர். தேவரீர் திருவருள் புரியவேண்டும்” என்று குறையிரந்தனர். முறையே மும்முறை வலம் வந்து வணங்கி தம் இருக்கை புக்கு கங்குல் வந்ததும் துயில் புரிவாராயினர். வெள்ளியம்பலத்தில் மறியாடிய வித்தகர் உக்கிரப்பெருவழுதியார் கனவில் வந்து தோன்றி, “சீருடைச் செல்வ! இக்காலத்து மழை பெய்தல் அரிது. அதனைக் குறித்து வருந்தாதே. மலைகட்கரசாயிருக்கிற மேருமலையின் கண் ஒருகுகையில் அளவுகடந்த ஒரு வைப்புநிதி சேமஞ் செய்துள்ளது; ஆங்கு நீ சென்று அம்மலையின் செருக்கழிய செண்டாலெறிந்து நின் ஆணைவழிப்படுத்தி சேமநிதியில் வேண்டியவற்றை எடுத்து அந்த அறையை மூடி நின் அடையளமிட்டு மீளுதி” என்று அருளிச் செய்தனர்.

         உக்கிரகுமாரர் கண்விழித்தெழுந்து மகிழ்ந்து காலைக் கடனாற்றி அங்கையற் கண்ணம்மையுடன் எழுந்தருளியுள்ள ஆலவாயானை வழிபட்டு விடைபெற்று நால்வகைப் படைகள் சூழ சங்குகள் முழங்கவும், ஆலவட்டங்கள் வீசவும் வந்தியர்கள் பாடவும் இரதத்தின் மீதூர்ந்து வடதிசையை நோக்கிச் செல்வாராயினர். தென் கடலானது வடதிசையை நோக்கி செல்வது போலிருந்தது அக்காட்சி. எதிர்ப்பட்ட மன்னர்களால் வணங்கப்பெற்று இமவரையைக் கடந்து பொன்மயமாய்த் திகழும் மகாமேருகிரியின் பாங்கர் அடைந்து அம்மேருமலையை நோக்கி “எந்தையாகிய சிவபெருமானது அரிய சிலையே! உலகிற்கோர் பற்றுக்கோடே! கதிரும் மதியும் உடுக்களும் சூழ்ந்து வலம்வரும் தெய்வத வரையே! தேவராலயமே!’ என்று அழைத்தனர். வழுதியர்கோன் அழைத்தபோது மேருமலையரசன் வெளிப்பட்டுவரத் தாமதித்ததால், இந்திரனை வென்ற இளங்காவலன் சினந்து மேருமலையின் தருக்ககலுமாறு வானளாவிய அம்மகா மேருவின் சிகரத்தை செண்டாயுதத்தால் ஓங்கி அடித்தனர். மேருமலை அவ்வடி பட்டவுடனே பொன்னாற் செய்த பந்துபோல் துடித்தது. எக்காலத்தும் அசையாத அம்மலை அசைந்து நடுங்கியது. சிகரங்கள் சிதறின; இரத்தினங்களைச் சொரிந்தது.

அடித்தலும் அசையா மேரு அசைந்துபொன் பந்துபோலத்
துடித்தது, சிகரப்பந்தி சுரர்பயில் மாடப்பந்தி
வெடித்தன, தருணபானு மண்டலம் விண்டு தூளாய்ப்
படித்தலை தெறித்தால், ன்னப் பன்மணி உதிர்ந்த அன்றே.

மேருமலையின் அதிதேவதை உடனே அட்டகுல பருவதங்கள் போன்ற எட்டுப் புயங்களையும் நான்கு சிகரங்களையும் கொண்டு நாணத்துடன் வெளிப்பட்டு உக்கிர குமார பாண்டியரை வணங்கியது. பாண்டிய நாட்டிறைவன் சினந்தணிந்து “இதுகாறும் நின் வரவு தாமதித்த காரணம் யாது?” என்று வினவ, மேருமலையின் அதிதேவதை “ஐயனே! அங்கயற் கண்ணம்மையுடன் எழுந்தருளியுள்ள சோமசுந்தரேசுவரரை இவ்வடிவத்துடன் ஒவ்வொருநாளும் சென்று வழிபடும் நியமம் பூண்டிருந்தேன். இன்று அறிவிலியாகிய அடியேன் ஒரு மடவரலைக் கண்டு மனமருண்டு வெங்காம சமுத்திரத்தில் மூழ்கி ஆலவாய்க் கடவுளை வழிபடும் நியமத்தை மறந்து வாளாயிருந்தேன். எம்பெருமானது திருவடிக்குப் பிழைசெய்த இத்தீங்கின் காரணத்தால் தேவரீரது செண்டாயுதத்தால் அடியும் பட்டேன். புனிதனாயினேன். சிவ வழிபாட்டினின்றுந் தவறிய எனது அஞ்ஞானத்தை நீக்கி யுதவி செய்தனை. அண்ணலே! இதைக் காட்டிலுஞ் சிறந்த உதவி யாது உளது? இதற்குக் கைம்மாறு அடியேன் யாது செய்ய வல்லேன். பற்றலர் பணியுங் கொற்றவ? இங்கு வந்த காரணம் என்கொல்? திருவாய் மலர்ந்தருளவேண்டும்” என்று வினவ, உக்கிர குமாரர் “வரையரசே! பொன்னை விரும்பி நின்பால் வந்தனன்” என்றனர். மலையரசன் “ஐயனே! பொன் போன்ற தளிரையுடைய மாமர நிழலில் ஓரறையில் ஒரு பாறையில் மூடப்பட்டுக் கிடக்கிறது. அச்சேம நிதியில் நினக்கு வேண்டியவற்றைக் கொண்டு நின் குடிமக்களுக்கீந்து வறுமைப் பிணியை மாற்றுதி” என்று கூற, வருணனை வென்ற மாபெருந் தலைவராகிய உக்கிரப் பெருவழுதி அவ்வறைக்குட் சென்று பாறையை எடுத்து அளவற்ற பொன்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அப்பாறையை மூடி மிகுந்த பொருளையுந் தம்முடையதாகத் தமது கயல் முத்திரையை அப்பாறை மேல் எழுதி, ஆங்கிருந்து புறப்பட்டு, மதுரையம்பதியை யணுகி, தேரை விட்டிழிந்து முக்கட் பரமனுடைய திருவாலயம் புகுந்து மூவர் முதல்வனை மும்முறை வணங்கி அந்நிதிகளை யெல்லாம் மாந்தர்களுக்கீந்து பசி நோயை நீக்கி இன்பந் தந்து இனிது அரசாண்டனர்.


மகவு அழைத்துக் கூட்டி முறை செய் ---

அவிநாசியில் முதலை உண்ட பாலனைச் சுந்தரர், “கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே” என்று தேவாரம் பாடி வருவித்துப் பெற்றோரிடம் சேர்த்தருளியதைக் கூறுகின்றனர்.

     நம்பியாரூரர் திருவாரூரிலே இருக்கும் காலத்து, ஒரு நாள் சேரமான் பெருமாள் நினைவு தோன்றியது. திருவாரூரை விடுத்து, வழியில் பல திருத்தலங்களையும் வழிபட்டுக்கொண்டே கொங்கு நாட்டினை அடைந்தார். திருப்புகொளியூர் மாட வீதியில் வந்தார்.

     அப்பொழுது, அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. சுவாமிகள் அது குறித்து அங்கு இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள், "அடிகளே! ஐந்து வயதுடைய இரண்டு சிறுவர்கள் மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இந்த வீட்டில் உபநயனம் நடைபெறுகின்றது. இந்த மங்கல ஒலி இறந்தவன் நினைப்பைப் பெற்றோருக்கு எழுப்பி உள்ளது" என்றார்கள். அதனைக் கேட்ட நம்பியாரூரருக்கு கருணை மேலிட்டது. அவர் அங்கேயே நின்றார். 

     மகனை இழந்த தாய் தந்தையர், நின்றவர் வன்தொண்டர் என்று உணர்ந்து, ஓடி வந்து அவரை வணங்கினர்.  வன்தொண்டர், அவர்களைப் பார்த்து, "மகனை இழந்தவர் நீங்களா" என்றார். அவர்கள், "அடிகளைக் கண்டு வணங்கவேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாட்களாக உண்டு. அது திருவருளால் இன்று கூடியது" என்று மகிழ்வு எய்தி நின்றார்கள். அது கண்ட ஆரூரர், 'இவர்கள் மகனை இழந்த துன்பத்தை மறந்து எனது வரவு குறித்து மகிழ்கின்றார்கள். இவர்கள் அன்பே அன்பு. நான் இறைவன் அருளால், இவர்கள் புதல்வனை முதலை வாயில் இருந்து அழைத்துக் கொடுத்தே, அவிநாசி அப்பரைத் தொழுவேன்' என்று திருவுள்ளம் கொண்டு, அருகில் இருந்தவர்களைப் பார்த்து, "மடு எங்கே உள்ளது" என்றார். மடு உள்ள இடத்தைத் தெரிந்து, அங்கே சென்று, "கரைக்கால் முதலையைப் பிள்ளல தரச் சொல்லு காலனையே" என்று இறைவரை வேண்டித் திருப்பதிகம் பாடி அருளினார். உடனே, காலன், பிள்ளை பூமியில் வளர்ந்தால் என்ன வயதை அடைந்து இருப்பானோ, அந்த வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலை, பிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது. தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார். தாயும் தந்தையும் சுவாமிகளை வணங்கினார்கள்.

     சுவாமிகள் பிள்ளையை அழைத்துக் கொண்டு அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார். பின்னர் அந்தப் பிள்ளையின் வீட்டுக்குச் சென்று, அவனுக்கு உபநயனம் செய்வித்தார். அங்கும் மங்கல ஒலி எழுந்தது. பின்னர், சுவாமிகள் அவிநாசி விடுத்து, மலைநாடு நோக்கிச் சென்றார்.

குலமலை ---

குலமலை-பழமுதிர் சோலை.

கருத்துரை

சோலைமலை மேவு பெருமாளே! பொதுமாதர் மயல்தீர அருள் செய்யும்.
                 


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...