வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன கைம்மாறு செய்யும்?




2.  வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

கூன்செய்த பிறை அணியும் தண்டலையார்
     கருணை செய்து, கோடி கோடி
யான்செய்த வினை அகற்றி நன்மைசெய்தால்
     உபகாரம் என்னால் உண்டோ?
ஊன்செய்த உயிர்வளர, தவம்தானம்
     நடந்து ஏற, உதவி யாக
வான்செய்த நன்றிக்கு வையகம் என்
     செய்யும்? அதை மறந்திடாதே.


இதன் பொருள் ---

     ஊன் செய்த உயிர் வளர --- இவ்வுடம்பிலே குடிகொண்டு இருக்கும் உயிர் வளரவும்; 

     தவம்  தானம்  நடந்து ஏற --- துறந்தோரின் தவமும் இல்லறத்தாரின் கொடையும் வளர்ந்து ஓங்கவும்,

     உதவி ஆக வான்செய்த நன்றிக்கு --- இரண்டிற்கும் உதவியாக வானமானது பெய்து செய்த நன்மைக்கு,

     வையகம் என செய்யும் --- இந்த உலகம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? என்றால்,

     அதை  மறந்திடாது --- அந்த நன்றியை மறவாமல்  இருக்கும்.

     அதுபோலவே,

     கூன்  செய்த பிறை அணியும் தண்டலையார் கருணை செய்து --- வளைந்த்துள்ள பிறைச் சந்திரனை முடியிலே சூடியுள்ள தண்டலை நீள்நெறி இறைவர் இன்னருள் புரிந்து,

     கோடி கோடி யான் செய்த வினை அகற்றி --- கோடி கோடியாக, அளவில்லாமல் நான் செய்து சேர்த்த வினைகளை அகற்றி,

     நன்மை செய்தால் என்னால் உபகாரம் உண்டோ --- எனக்கு நலம் புரிவாரானால், அதற்கு மாறாக என்னால் என்ன உதவி உண்டு? (ஒன்றும் இல்லை. அவன் திருவடியை மறவாமல். இருப்பதே சிறந்த கைம்மாறு ஆகும்)

     விளக்கம் -- உயிர் வளர என்றது உயிர் உணர்வு சிறக்க என்னும் பொருளில் வந்தது. கோடி கோடி : அடுக்குத்  தொடர்;  மிகுதி என்னும் பொருள் பற்றி வந்தது.

"விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி"

"விசும்பின் துளி வீழின் அல்லலால் மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது"

 "தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்'

என்னும் திருக்குறள்களின் கருத்தை உட்கொண்டு

"ஊன் செய்த உயிர் வளர, தவம் தானம் நடந்து ஏற, உதவியாக வான் செய்த நன்றி" என்றார். அருமை அருமை.

"கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லோ உலகு'

என்னும் திருக்குறள் கருத்துக்கு ஒப்ப, ‘வான் செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?' என்றார்.

     இறைவன்  நமக்குச் செய்த அளப்பரிய நன்மைக்கு, அவன் கருணையை நினைந்து, அவனை வழிபட்டு உய்வது அல்லாமல், வேறு கைம்மாறு நம்மால் இயலாது என்று வலியுறுத்தினார்.

     வான் சிறப்பு என்பது இறைவனின் கருணையையே குறித்து நின்றது.

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...