இவர் இவர்க்கு இது இது இல்லை - பொருள் இல்லானுக்கு எதுவுமே இல்லை.





18. இவர் இவர்க்கு இது இது இல்லை

காமிக்கு முறைஇல்லை; வேசைக்கு நாண்இல்லை;
     கயவர்க்கு மேன்மை இல்லை;
  கன்னம்இடு கள்வருக்கு இருள் இல்லை; விபசார
     கன்னியர்க்கு ஆணை இல்லை;

தாம்எனும் மயக்குஅறுத்து ஓங்குபெரி யோர்க்குவரு
     சாதிகுலம்என்பது இல்லை;
  தாட்சணியம் உடையபேர்க்கு இகல் இல்லை; எங்கும்ஒரு
     சார்பிலார்க்கு இடம்அது இல்லை;

பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
     புகழ்என்பது ஒன்றும் இல்லை;
  புலையர்க்கு நிசம்இல்லை; கைப்பொருள் இலாததோர்
     புருடருக்கு ஒன்றும் இல்லை;

யாமினி தனக்கு நிகர் கந்தரத் திறைவனே!
     அன்புடைய அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     யாமினி தனக்கு நிகர் கந்தரத்து இறைவனே --- இருளுக்கு ஒப்பான கழுத்தினை உடைய இறைவனே!

      அன்பு உடைய அருமை மதவேள் --- அன்புள்ளம் கொண்ட அரிய மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே ---- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     காமிக்கு முறை இல்லை --- காம மயக்கம் கொண்டவனுக்கு முறை தோன்றாது.

     வேசைக்கு நாண் இல்லை --- பரத்தைக்கு நாணம் இராது,

     கயவர்க்கு மேன்மை இல்லை --- கீழ்மக்களுக்கு வாழ்வில் மேன்மை என்பது உண்டாகாது,

     கன்னம் இடு கள்வருக்கு இருள் இல்லை --- கன்னம் வைக்கும் திருடருக்கு இருளில் அச்சம் தோன்றாது,

     தாம் எனும் மயக்கு அறுத்து ஓங்கு பெரியோருக்கு வரு சாதி குலம் என்பது இல்லை --- நாம் எனும் அறிவு மயக்கத்தை நீக்கி மேன்மையுற்ற சான்றோர்களுக்குச் சாதியும் குலமும் இல்லை,

     தாட்சணியம் உடைய பேர்க்கு இகல் இல்லை --- கருணை உள்ளம் படைத்தவர்க்குப் பகைவர் உண்டாகமாட்டார்,

     எங்கும் ஒரு சார்பு இலார்க்கு இடமது இல்லை --- எவ்வித்தும் ஆதரவு இல்லாதவர்க்கு போக்கு இடம் கிடையாது,

     பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான புகழென்பது என்றும் இல்லை --- உலகத்தில் வறியோர்க்குக் கொடுத்து வாழாதவர்களுக்கு நிறைந்த புகழ் எப்போதும் இல்லை,

     புலையர்க்கு நிசம் இல்லை --- இழிந்தவர்களிடத்திலை உண்மை இருக்காது,

     கைப்பொருள் இலாத ஓர் புருடருக்கு ஒன்றும் இல்லை - கை வசம் பொருள் இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.

      கருத்து --- காமி முதலானோர்க்கு ஒவ்வொன்று இல்லை என்றார். ஆனால், பொருள் அற்றவர்க்கு எந்த நன்மையும் இல்லை என்றார். "பொருள் செயல்வகை" என்னும் அதிகாரத்துள் திருவள்ளுவ நாயனார் அருளியதைக் காண்க. "இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள். செல்லாது அவன் வாயில் சொல்" என்னும் ஔவைப் பிராட்டியின் அருள் வாக்கையும் எண்ணுக.


1 comment:

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...