அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அகரமுமாகி (பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
உலகமும் அடியேனும் வாழ,
என் முன் விரைந்து வருக
தனதன
தான தனதன தான
தனதன தான ...... தனதான
அகரமு
மாகி யதிபனு மாகி
யதிகமு மாகி ...... அகமாகி
அயனென
வாகி அரியென வாகி
அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு
மாகி யெவைகளு மாகி
யினிமையு மாகி ...... வருவவோனே
இருநில
மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி
யாகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை
வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண
சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி
வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அகரமும்
ஆகி, அதிபனும் ஆகி,
அதிகமும் ஆகி, ...... அகம் ஆகி,
அயன்
என ஆகி, அரி என ஆகி,
அரன் என ஆகி, ...... அவர்மேலாய்,
இகரமும்
ஆகி, எவைகளும் ஆகி,
இனிமையும் ஆகி ...... வருவோனே!
இருநிலம்
மீதில் எளியனும் வாழ
எனது முன் ஓடி ...... வரவேணும்.
மகபதி
ஆகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் ...... வடிவோனே!
வனம்
உறை வேடன் அருளிய பூஜை
மகிழ் கதிர்காமம் ...... உடையோனே!
செககண
சேகு தகுதிமி தோதி
திமி என ஆடும் ...... மயிலோனே!
திரு
மலிவான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு ...... பெருமாளே.
பதவுரை
அகரமும் ஆகி --- எழுக்களில் அகர
எழுத்தாகியும்,
அதிபனும் ஆகி --- எல்லாவுலகங்கட்குந்
தலைவராகியும்,
அதிகமும் ஆகி --- எல்லாவற்றிற்கும்
மேம்பட்டவராகியும்,
அகம் ஆகி --- முக்தி வீடாகியும்,
அயன் என ஆகி --- நான்முகனாக நின்று உலகத்தைப்
படைத்தும்,
அரி என ஆகி --- திருமாலாக நின்று உலகத்தைக்
காத்தும்,
அரன் என ஆகி --- உருத்திரமூர்த்தியென நின்று
எல்லாவற்றையும் அழித்தும்,
அவர் மேலாய் --- அம்மூவர்க்கு மேலான முதல்வராகியும்,
இகரமும் ஆகி --- சமீபத்தில்
இருப்பவருமாகியும்,
எவைகளும் ஆகி --- எல்லாப் பொருள்களுமாகியும்,
இனிமையும் அகி --- இனியைாகியும், வருவோனே - வருபவரே!
மகபதி ஆகி மருவும் --- நூறு அஸ்வமேத
யாகங்களைச் செய்து யாக பதியாக விளங்கி,
வல அரி --- வலன் என்ற அசுரனைக் கொன்ற
இந்திரன்,
மகிழ்களி கூரும் வடிவோனே --- மிக்க
மகிழ்ச்சியடையும் பேரழகுடையவனே!
வனம் உறை வேடன் அருளிய பூஜை ---
காட்டில் வாழுகின்ற வேடுவன் செய்தருளிய வழிபாட்டை,
மகிழ் --- களிப்புடன் ஏற்றுக்கொண்ட,
கதிர்காமம் உடையோனே --- கதிர்காமம் என்னுந்
திருத்தலத்தை உடையவரே!
செககண சேகு தகுதிமி தோதி திமி னெ ஆடும் ---
என்ற தாள இசையுடன் நடனஞ்செய்கின்ற,
மயிலோனே --- மயில்வாகனத்தை உடையவரே!
திருமலிவு ஆன --- செல்வம் மலிந்து
கிடக்கும்,
பழமுதிர்சோலை மலை மிசை மேவு --- பழமுதிர்
சோலை மலைமீது எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
இரு நில மீதில் --- பெரிய நிலவுலகத்தின்
கண்,
எளியனும் வாழ --- எல்லோரும் உய்வு பெறுவதுடன்
அடியேனும் உய்ந்து ஈடேறும் பொருட்டு,
எனது முன் ஓடி வரவேணும் --- என்முன் ஓடிவந்து
ஆட்கொள்வீர்.
பொழிப்புரை
எழுத்துக்களில் முதன்மை பெற்ற அகர
எழுத்தாகியும், எல்லாவுலகங்கட்குந்
தலைவராகியும், எல்லாவற்றிற்கும்
மேம்பட்ட வராகியும், பரகதியாயும், நான்முகனாகியும், திருமாலாகியும், உருத்திர மூர்த்தியாகியும், அம்மூவருக்கும் மேற்பட்டவராகியும், சமீபத்தில் உள்ளவராகியும், எல்லாமானவராகியும், இனிமையாக விளங்குபவருமாகியும் வருபவரே!
நூறு அசுவமேதயாகங்களைப் புரிந்து
மகபதியென்று பேர் பெற்றவனும் வலன் என்ற அசுரனைக் கொன்றவனும் ஆகிய தேவர் கோமான்
மிக்கமகிழ்ச்சியுறுகின்ற கட்டழகுடையவரே!
வனத்தில் வாழுகின்ற வேடன் செய்த
வழிபாட்டை ஏற்று மகிழ்ந்து அருள் புரிந்த கதிர்காமம் என்னும்திருத்தலத்தை
யுடையவரே! செககண சேகு தகுதிமி தோதி திமி என்ற தாள இசையுடன் ஆடுகின்ற மயிலை வாகனமாக
உடையவரே!
செல்வம் மலிந்துள்ள பழமுதிர் சோலை
யென்னுந் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமித முடையவரே!
பெரிய நிலவுலகின்கண் எல்லோரும் ஈடேறவும்
அடியேன் உய்வு பெறவும் என்முன் ஓடிவந்து ஆட்கொள்ள வேண்டும்.
விரிவுரை
அகரமும்
ஆகி
---
“அகரமுதல எழுத்து எல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்ற
தெய்வப்புலவர் திருவாக்கை அறியாதார் யார்? எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக
வுடையது. அகரமின்றி ஏனைய எழுத்துக்கள் இயங்காது; இறைவனின்றி உலகமும் உயிரும் இயங்கா.
அகரமும் எல்லா எழுத்தக்களில் சிவணிக் கொண்டிருக்கிறது; இறைவனும் எல்லாப் பொருள்களிலும் சிவணி
நிற்கின்றனன்; யாதொரு
முயற்சியுமின்ற வாய் திறந்த மாத்திரத்தில் அகர உச்சரிப்பு உண்டாகின்றது; அதுபோல் இறைவன் தானே இயங்குபவன்; அகரத்திற்குள் அ,உ,ம,என்ற மூன்றெழுத்தும் அடங்கியிருப்பதை
நுனித்துணர்க. அதுபோல் இறைவன் முத்தொழிலையும் இயற்றுபவன்; அகரத்திற்குள் ஒரு பகுதியுள்
அருளெழுத்தாகிய வகரமும் அடங்கியிருக்கு மாறு காண்க; இறைவனும் அருளோடு கூறியிருப்பவன். அகரம்
தூரத்திலுள்ள பொருளைச் சுட்டுவது;
அதுபோல்
இறைவனும் தூய்மையில்லாதர்க்குச் சேய்மையிலுள்ளவன்.
அகர
உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில்
இறை நிற்கும் நிறைந்து. ---
திருவருட்பயன்
பேராய
அண்டங்கள் பலவும், பிண்ட
பேதங்கள்
பற்பலவும், பிண்டஅண்டத்தின்
வாராய
பல பொருளும்,கடலும், மண்ணும்,மலை
அளவும், கடல்அளவும், மணலும, வானும்
ஊராதவான்
மீனும், அணுவும், மற்றை உள்ளனவும்
அளந்திடலாம், ஓகோ உன்னை
யாராலும்
அளப்பரிது என்றுஅனந்த வேதம்
அறைந்து
இளைக்க அதிதூரம் ஆகும் தேவே. ---
திருவருட்பா
அகரம்என
அறிவாகி உலகமெங்கும் அமர்ந்து,அகர
உகரமக ரங்கள் தம்மால்
பகரும்ஒரு
முதலாகி, வேறும் ஆகி,
பலவேறு திருமேனி தரித்துக்கொண்டு,
புகரில்பொருள்
நான்கினையும் இடர்தீர்ந்து எய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து,அல் லார்க்கு
நிகரில்மறக்
கருணைபுரிந்து ஆண்டுகொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம். --- விநாயக புராணம்.
அதிபனும்
ஆகி
---
முருகப்பெருமாளே
தனிப்பெருந் தலைவர்;
“எந்தக் கடவுளும்
என்கோள் போழ்
கந்தக்கடவுளை மிஞ்சாதே” --- பாம்பனடிகள்.
“அரனார்க்கு அதிக
பொருள் காட்டுஅதிப
அடியார்க்கு எளிய பெருமாளே” --- (நிலையாப்பொருளை) திருப்புகழ்
என்று
அருணகிரியார் கூறும் அருமையினும் அருமையாகிய அருள்வாக்கை யுன்னுக.
அதிகமும்
ஆகி
---
எல்லாவற்றிக்கும்
மேம்பட்டவர் குமாரமூர்த்தி; “சுக்குக்கு மிஞ்சிய
வைத்தியமுமில்லை, சுப்மண்யருக்கு
மிஞ்சிய தெய்வமுமில்லை” என்று பழமொழியும் கருதி வாக்கியங்களும் இதனை
வற்புறுத்தும்.
அகம்
ஆகி
---
அகம்
- வீடு; இது முத்தி வீட்டைக்
குறிக்கின்றது; முத்தி வீட்டிற்கு
தலைவனும் முத்திவீடாக விளங்குபவனும் முருகனே யாகும்.
“கதிக்கு நாதன் நீ” --- (விலைக்கு) திருப்புகழ்
“தெரிசன
பரகதியானாய்” --- (அவகுண)
திருப்புகழ்
என்ற
அருள் வாக்குகளை யுய்த்துணர்க.
அயன்என
ஆகி, அரிஎன ஆகி, அரன்என ஆகி, அவர்மேலாய் ---
பிரமதேவராகவும்
திருமாலாகவும், உருத்திரராகவும்
நின்று முத்தொழிலை யிற்றுபவர் முருகப்பெருமாளே.
இதனைத்
திருமால் இந்திரனிடங் கூறுமாறு காண்க.
பொன்னுரு
அமைந்த கஞ்சப் புங்கவன் ஆகி நல்கும்,
என்உரு
ஆகிக்காக்கும், ஈசன்போல் இறுதி
செய்யும்,
மின்உரு
என்ன யார்க்கும் வெளிப்படை போலுமன்னான்
தன்உரு
மறைக ளாலும் சாற்றுதற்கு அரியது அன்றே.
மூவராகியும்
மூவர்காணாத முதலாகியும் எம்பெருமான் விளங்குகின்றனன் என்பதனைப் பல இடங்களிலும்
சுவாமிகள் கூறுவதை ஆங்காங்கு காண்க.
“படைத்து அளித்து அழிக்குந்
த்ரிமூர்த்திகள் தம்பிரானே”
---
(கனைத்ததிர்க்கு)
திருப்புகழ்
“மன்னா வயற்பதிமன்னா
குறத்தியின்
மன்னா முவர்க்கொரு தம்பிரானே” --- (என்னால்பிறக்கவும்)
திருப்புகழ்
“அரிஅர
பிரமபுரந்தராதியர் கும்பிடும் தம்பிரானே” --- (கரிபுரி)
திருப்புகழ்
இகரமும்
ஆகி
---
ஓராதார்க்குள்
தூரமாகி நின்ற இறைவன் உன்னுவார்க்கு அதி சமீபத்தில் இருக்கின்றான்.
“வீசத்தில் தூர
மிலாதது” --- (வேதத்திற்)
திருப்புகழ்
எவைகளும்
ஆகி:-
முருகன்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விளங்குபவராதலால் ”எவைகளுமாகி” என்றார்.
“எப்பொருளுமாய”
என்றார் பிறிதோரிடத்தில்.
இனிமையும்
ஆகி
---
முருகன்
அன்பர்கள் உணர்வில். இனிக்கும் இனியனாய் இலங்குகின்றனன்.
கனியினும்
இடினியன்; கடிபட்ட கரும்பினும்
இனியன்; பனிமலர்க்குழல்
பாவையரினும் இனியன்; தனிமுடி கவித்தாளும்
அரசினும் இனியன்; உயிரினும் இனியன்;
கனியினும்
கட்டிபட்ட கரும்பினும்
பனிமலர்க்குழல்
பாவை நல்லரினும்
தனிமுடி
கவித்துஆளும் அரசினும்
இனியன்
தன்அடைந்தார்க்கு இடைமருதனே
என்னில்
ஆரும் எனக்குஇனி யார்இல்லை,
என்னிலும்
இனி யான்ஒரு வன்உளன்,
என்உளே
உயிர்ப்பாய், புறம் போந்துபுக்கு
என்உ
ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே. --- அப்பர்
எளியனும்
வாழ எனது முனோடி வரவேணும் ---
எளியனும்
என்ற எச்ச உம்மையால் மற்ற ஆன்மாக்களும் என்று வருவிக்கப்பட்டது. வையகமெல்லாம்
வாழவேண்டுவதே ஆன்றோர் மரபு. “வையகமும் துயர் தீர்க” என்றார் திருஞான சம்பந்தர்.
விரைந்து
இறைவனைக் காண விரும்புகின்றார் ஆதலின் “ஓடிவரவேணும்”என்று அழைக்கின்றார்.
வனமுறை
வேடனருளிய பூஜை மகிழ் கதிர்காமம் ---
இது
கதிர்காமம் என்ற ஈழநாட்டுத் திருத்தலத்தில் ஒரு வேடன் அன்புருவாகிப் பூசித்து
அருள் பெற்ற வரலாற்றைக் குறிக்கின்றது.
கருத்துரை
எல்லாமாய்
நின்ற இறைவரே! கட்டழகுடையவரே! கதிர் காம வேலவரே! மயிலேறும் வள்ளலே! பழமுதிர் சோலை
மேவும் பரமரே! உலகமும் அடியேனும் வாழ என்முன் விரைந்து வந்தருள்வீர்.
No comments:
Post a Comment