காஞ்சீபுரம் -0495. மகுடக்கொப்பு ஆட





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மகுடக்கொப்பு ஆட (காஞ்சீபுரம்)

முருகா!
பொதுமாதர் உறவு நீங்க அருள்


தனனத்தத் தானத் தானன
     தனனத்தத் தானத் தானன
          தனனத்தத் தானத் தானன ...... தந்ததான


மகுடக்கொப் பாடக் காதினில்
     நுதலிற்பொட் டூரக் கோதிய
          மயிரிற்சுற் றோலைப் பூவொடு ...... வண்டுபாட

வகைமுத்துச் சோரச் சேர்நகை
     யிதழிற்சொற் சாதிப் பாரியல்
          மதனச்சொற் பாடுக் கோகில ...... ரம்பைமாதர்

பகடிச்சொற் கூறிப் போர்மயல்
     முகவிச்சைப் பேசிச் சீரிடை
          பவளப்பட் டாடைத் தோளிரு ...... கொங்கைமேலாப்

பணமெத்தப் பேசித் தூதிடு
     மிதயச்சுத் தீனச் சோலிகள்
          பலரெச்சிற் காசைக் காரிகள் ...... சந்தமாமோ

தகுடத்தத் தானத் தானன
     திகுடத்தித் தீதித் தோதிமி
          தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை

தடமிட்டுப் பாவக் கார்கிரி
     பொடிபட்டுப் போகச் சூரர்கள்
          தலையிற்றிட் டாடப் போர்புரி ...... கின்றவேலா

திகிரிப்பொற் பாணிப் பாலனை
     மறைகற்புத் தேளப் பூமனை
          சினமுற்றுச் சேடிற் சாடிய ...... கந்தவேளே

தினையுற்றுக் காவற் காரியை
     மணமுற்றுத் தேவப் பூவொடு
          திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


மகுடக்கொப்பு ஆடக் காதினில்,
     நுதலில் பொட்டு ஊர, கோதிய
          மயிரில் சுற்று ஓலைப் பூவொடு ...... வண்டுபாட

வகைமுத்துச் சோரச் சேர்நகை
     இதழில் சொல் சாதிப் பார், இயல்
          மதனச் சொல் பாடு, கோகில ...... ரம்பைமாதர்

பகடிச் சொல் கூறிப் போர் மயல்
     முக இச்சைப் பேசி, சீர் இடை
          பவளப் பட்டு ஆடைத் தோள், இரு ...... கொங்கைமேலாப்

பணம் மெத்தப் பேசித் தூது இடும்
     இதயச் சுத்த ஈனச் சோலிகள்,
          பலர் எச்சிற்கு ஆசைக் காரிகள் ...... சந்தம் ஆமோ?

தகுடத்தத் தானத் தானன
     திகுடத்தித் தீதித் தோதிமி
          தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை

தடம் இட்டுப் பாவக் கார்கிரி
     பொடிபட்டுப் போக, சூரர்கள்
          தலை இற்று, இட்டு ஆட, போர் புரி ...... கின்ற வேலா!

திகிரிப் பொன் பாணிப் பாலனை
     மறை கல் புத்தேள் அப் பூமனை
          சினம் உற்றுச் சேடில் சாடிய ...... கந்தவேளே!

தினை உற்றுக் காவல் காரியை
     மணம் உற்று, தேவப் பூவொடு
          திகழ் கச்சித் தேவக் கோன் மகிழ் ...... தம்பிரானே.


பதவுரை

      பேரிகை --- முரசு வாத்தியம்,

     சங்கு --- சங்குகள்,

     வீணை --- வீணைகள்,

     தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாட --- தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாட என்ற ஒலிகளை எழுப்பவும்,

     தடம் இட்டு --- தன்னிடத்தே வழியைக் காட்டி,

      பாவக் கார் கிரி --- பாவமாகிய இருள் நிறைந்து இடர் செய்யும் கிரவுஞ்ச மலை

     பொடிபட்டுப் போக --- தூளாக அழிந்து போகும்படியும்,

     சூரர்கள் தலை இற்று இட்டு ஆட ---  சிங்கமுகன் முதலிய சூரர்களுடைய தலைகள் அறுந்து விழவும்

     போர் புரிகின்ற வேலா --- போர் செய்த வேலாயுதரே!

      திகிரிப் பொன் பாணிப் பாலனை --- சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின் பிள்ளையும்,

     மறை கல் புத்தேள் --- வேதங்களைக் கற்ற தேவனும்,

     அப் பூமனை --- அழகிய தாமரையில் வீற்றிருப்பவனுமாகிய பிரமதேவன் மீது

     சினம் உற்று --- கோபம் கொண்டு

     சேடில் சாடிய கந்தவேளே --- அவனது திரட்சியான தலையில் குட்டிய கந்தக் கடவுளே!

      தினை உற்றுக் காவல் காரியை --- தினைப் புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை

     மணம் உற்று --- திருமணம் செய்து கொண்டு,

     தேவ பூவொடு திகழ் --- தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து, விளங்கும்

     கச்சி --- காஞ்சிபுரத்தில் வீற்றிருந்து,

     தேவக் கோன் மகிழ் தம்பிரானே --- தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தனிப்பெரும் தலைவரே!

      மகுடக் கொப்பு ஆடக் காதினில் --- காதுகளில் மகுடம் போன்ற கொப்பு என்ற காதணிகள் ஆடவும்,

     நுதலில் பொட்டு ஊர --- நெற்றியில் திலகம் பரவி விளங்கவும்,

     கோதிய மயிரில் சுற்று ஓலைப் பூவொடு வண்டு பாட --- சீவி வாரப்பட்ட கூந்தலில் சுற்றி வைத்துள்ள தாழம்பூவில் வண்டு பாடவும்,

      வகை முத்துச் சோர --- நல்ல தரமான முத்தும் இழிவு படும்படி

     சேர் நகை --- விளங்கும் பற்களைக் காட்டி,

     இதழில் சொல் சாதிப்பார் --- வாயிதழில் தாங்கள் பேசும் சொற்களையே சாதிப்பவர்கள்.

     இயல் மதனச் சொல் பாடும் --- பொருந்திய காம லீலைப் பாடல்களைப் பாடுகின்ற

     கோகில ரம்பை மாதர் --- குயில் போன்ற, ரம்பையை ஒத்த விலைமாதர்கள்.

      பகடிச் சொல் கூறி --- பரிகாசப் பேச்சுக்களைப் பேசி

     போர் மயல் --- காமப் போர் மனதில் கிளம்பும்படி,

     முக இச்சைப் பேசி --- முகத்தில் விருப்பத்தைக் காட்டிப் பேசி,  

     சீர் இடை --- அழகிய இடையில

     பவளப் பட்டாடை --- செந்நிறப் பட்டாடையை

     தோள் இரு கொங்கை மேலா --- தோள் மீதும் இரு மார்பகங்களின் மீதும் இறுக்க அணிந்து,

      பணம் மெத்தப் பேசி --- பணம் நிரம்பத் தரும்படி பேசி,

     தூது இடும் --- அதன் பொருட்டுத் தூது அனுப்புகின்ற

     இதயச் சுத்த ஈனச் சோலிகள் --- மனத்தை உடைய மிக்க இழிவான தொழிலைப் பூண்டவர்கள்.

     பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் --- பல பேர்களின் எச்சிலுக்கும் ஆசைப்படும் இவ்வேசிகளின்

     சந்தம் ஆமோ --- தொடர்பு நல்லதாகுமா? (ஆகாது.)


பொழிப்புரை

         முரசு வாத்தியம், சங்குகள், வீணைகள் என்ற வாத்தியங்கள், தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாட என்ற ஒலிகளை எழுப்பவும், தன்னிடத்தை வழியைக் காட்டி, பாவமாகிய இருள் நிறைந்து உடர் செய்யும் கிரவுஞ்ச மலை தூளாக அழிந்து போகும்படியும்,  சிங்கமுகன் முதலிய சூரர்களுடைய தலைகள் அறுந்து விழவும் போர் செய்த வேலாயுதரே!

         சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின் பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில் வீற்றிருப்பவனுமாகிய பிரமதேவன் மீது கோபம் கொண்டு அவனது திரட்சியான தலையில் குட்டிய கந்தக் கடவுளே!

         தினைப் புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து, விளங்கும் காஞ்சிபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தனிப்பெரும் தலைவரே!

         காதுகளில் மகுடம் போன்ற கொப்பு என்ற காதணிகள் ஆடவும், நெற்றியில் திலகம் பரவி விளங்கவும்,  சீவி வாரப்பட்ட கூந்தலில் சுற்றி வைத்துள்ள தாழம்பூவில் வண்டு பாடவும், நல்ல தரமான முத்தும் இழிவு படும்படி விளங்கும் பற்களைக் காட்டி, வாயிதழ்களால் தாங்கள் பேசும் சொற்களையே சாதிப்பவர்கள். பொருந்திய காம லீலைப் பாடல்களைப் பாடுகின்ற குயில் போன்ற, ரம்பையை ஒத்த விலைமாதர்கள். பரிகாசப் பேச்சுக்களைப் பேசி காமப் போர் மனதில் கிளம்பும்படி, முகத்தில் விருப்பத்தைக் காட்டிப் பேசி, அழகிய இடையில செந்நிறப் பட்டாடையை தோள் மீதும் இரு மார்பகங்களின் மீதும் இறுக்க அணிந்து, பணம் நிரம்பத் தரும்படி பேசி, அதன் பொருட்டுத் தூது அனுப்புகின்ற மனத்தை உடைய மிக்க இழிவான தொழிலைப் பூண்டவர்கள். பல பேர்களின் எச்சிலுக்கும் ஆசைப்படும் இவ்வேசிகளின் தொடர்பு நல்லதாகுமா? ஆகாது.

    
விரிவுரை

மகுடக் கொப்பு ஆட ---

மகுடக் கொப்பு - காதில் அணிகின்ற அணிகலம்.  அது மகுடம் போன்ற வடிவில் அமைந்தது.  பழங்காலத்து நகை.

நுதலில் பொட்டு ஊர ---

பொது மாதர்கள் நடு நெற்றியில் நல்ல நிறத்துடன் பெரிய பொட்டாக வைத்து இளைஞர்களின் உள்ளத்தைக் கவர்வார்கள்.

இதனால்,

தெட்டிலே வலிய மடமாதர் வாய் வெட்டிலே,
        சிற்றிடையிலே, நடையிலே,
      சேல்ஒத்த விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
        சிறுபிறை நுதல் கீற்றிலே,
  பொட்டிலே, அவர்கட்டு பட்டிலே, புனை கந்த
        பொடியிலே, அடியிலே, மேல்
      பூரித்த முலையிலே, நிற்கின்ற நிலையிலே,
        புந்திதனை நுழைய விட்டு,
 நெட்டிலே அலையாமல், அறிவிலே, பொறையிலே,
        நின் அடியர் கூட்டத்திலே,
      நிலைபெற்ற அன்பிலே, மலைவற்ற மெய்ஞ்ஞான
        ஞேயத்திலே, உன் இருதாள்
 மட்டிலே, மனதுசெல, நினது அருளும் அருள்வையோ?
        வளமருவு தேவை அரசே!
      வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை
        வளர்காத லிப்பெண்உமையே.                       
 
 என்பார் தாயுமானார்.

கோதிய மயிரில் சுற்று ஓலைப் பூவொடு வண்டு பாட ---

கோதிய – வாரி முடித்த.  ஓலைப் பூ - தாழம் பூ.  கோதிச் சிக்கு எடுத்த கூந்தலில் தாழம் பூவைச் சூடுவர்.  அம் மலரில் வண்டுகள் ஒலி செய்து பாடும்.

வகை முத்துச் சோரச் தேர் நகை இதழில் சொல் சாதிப்பார் ---

வகை முத்து - நல்ல உயர்ந்த முத்து.  சோர – சோரும்படி.

மாதர்களின் பற்களைக் கண்டு அதற்கு நாம் தோற்றுப் போனோமே என்று முத்துக்கள் வருந்துகின்றன.

இந்தக் கருத்தில் சிவப்பிரகாச சுவாமிகளும் பின்வரும் அரிய பாடலைப் பாடுகின்றார்.

தன்னை நிந்தைசெய் வெண்ணகை மேல்பழிசார
மன்னி ஆங்கு அதுநிகர் அற வாழ்தரு மனையின்
முன்இறந்திடுவேன் என நான்றுகொள் முறைபோல்
என்ன வெண்மணி மூக்கணி ஒருத்தி நின்றிட்டாள்.      ---  பிரபுலிங்கலீலை.

பல்லுக்குத் தான் நிகர் ஆகாமையால், அந்தத் துக்கம் தாளாமல் முத்து தூக்குப் போட்டுக் கொண்டது போல், மூக்கில் தொங்குகின்றதாம்.  அழகிய கற்பனை.

தாங்கள் கூறியதுவே சரியென்று பிடிவாதத்தால் சாதிப்பவர்கள்.

மதனச் சொல் பாடும் கோகில ரம்பை மாதர் ---

மதன லீலையுடன் கூடிய பாடல்களை குயில் போன்ற குரலில் பாடுகின்றவர்கள்.  ரம்பை போன்றவர்கள்.

ரம்பை - தெய்வலோகத்து நடனமாது.

பகடிச் சொல் கூறி ---

தம் பால் வரும் இளைஞர்களைப் பரிகசித்துப் பேசுவார்கள்.

போர் மயல் முக இச்சை பேசி ---

ஆடவர்களின் மனதில் ஆசைப் போர் விளையவும், முகத்தில் விருப்பம் தோன்றவும் இனிமையாகப் பேசுவார்கள்.

பணம் மெத்தப் பேசி தூதிடு ---

தூது ஏவி பணம் நிரம்பத் தருமாறு பேசிக் கேட்பார்கள்.

சுத்தீனச் சோலிகள் ---

சுத்த ஈன சோலிகள்.  சுத்தம் என்பது ஈனத்தின் மிகுதித் தன்மையைத் தெரிவிக்கின்றது.

நல்ல பாம்பு என்ற சொல்லில், நல்ல என்ற சொல், கொடுமையை உணர்த்துவது போல் என அறிக.

சோலி - செயல். ஜோலி என்ற சொல் சோலி என வந்தது.

பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ ---

தம்மை விரும்பி வருபவர்கள் எல்லோருடைய எச்சிலையும் விரும்பி உண்பவர்களாகிய அப் பொதுமாதரின் உறவு ஆகாது என்று அடிகளால் அறிவுறுத்துகின்றார்.

தடமிட்டுப் பாவக் கார்கிரி ---

கிரவுஞ்சன் என்பவன் ஒரு அரக்கன்.  இவன் மக்கள் செல்லும் வழியில் மலை வடிவில் நின்று, மாயையால் தனக்குள் வழிபோல் காட்டுவான். அவ்வழி சென்றோர், உட்புகுந்தவுடன் வழியின்றித் திகைத்து மயங்குவர். அவர்களைக் கொன்று தின்பான்.

இவ்வண்ணம் மாயம் புரிந்து பலரையும் மாய்த்து வந்த அவ்வரக்கன், ஒரு சமயம் அகத்தியர் அவ்வழி வரக் கண்டான்.  வழக்கம்போல் மலை வடிவாக நின்று வழி காட்டினான்.  அவ்வழியே அகத்தியர் சென்றார்.  மலைக்குள் சென்று வழியின்றித் திகைத்தார்.  இது அசுர மாயை என்று உணர்ந்தார்.  யோகதண்டத்தால் தொனைத்து வெளிப்பட்டார்.  "தீயோய், நீ இம்மலை வடிவாகவே நிற்பாயாக.  முருகவேளின் வேற்படையால் அழிவாயாக" என்று சபித்தார்.

திகிரப் பொற் பாணிப்பாலனை ---

திகிரி - சக்கரம்.

சக்கரத்தை அழகிய திருக்கரத்தில் ஏந்திய திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றியவர் பிரமர். 

திருமாலின் நாபியில் தோன்றியவர் பிரமர்.
இதயத்தில் தோன்றியவன் மன்மதன்.
கண்களில் தோன்றியவர்கள் அமுதவல்லியும் சுந்தரவல்லியும்.

ஒன்றுக் கொன்று மேலீடாக மக்கள் தோன்றினார்கள்.  இது வளர்ச்சியைக் குறிக்கின்றது.

மறைகற்புத் தேளப்பூமனை ---

மறை கல் புத்தேள் அ பூ மன்.  வேதங்களைக் கற்ற தேவனாகிய அந்த மலர் மன்னன்.

தேவப் பூ ---

தேவ உலகத்து மலர் போன்றவர் தெய்வயானை அம்மை.

கருத்துரை

திருக்கச்சித் தலைவரே, பொது மாதர் உறவு ஆகாது.


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...