அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பொக்குப்பை
(காஞ்சீபுரம்)
முருகா!
அடியவர் திருக்கூட்டத்தைச்
சார்ந்து வழிபட அருள்
தத்தத்தத்
தத்தத் தத்தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் ...... தனதான
பொக்குப்பைக்
கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக் ......
குடில்பேணிப்
பொச்சைப்பிச்
சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய்
துக்கத்துக்
கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே
சுத்தச்சித்
தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ
திக்குத்திக்
கற்றுப் பைத்தத்தத் திக்குச்
செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா
செப்பச்சொர்க்
கத்துச் செப்பொற்றத் தைக்குச்
செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே
கக்கக்கைத்
தக்கக் கக்கட்கக் கக்கிக்
கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே
கற்றைப்பொற்
றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பொக்குப்
பை, கத்தம் தொக்குப் பை, குத்து,
பொய்த்து, எத்து, தத்துக் ...... குடில்பேணி,
பொச்சைப்
பிச்சு அற்பக் கொச்சைச் சொல் கற்று,
பொன் சித்ரக் கச்சுக் ...... கிரியார் தோய்
துக்கத்
துக்கத்தில் சிக்குப் பட்டு இட்டு,
துக்கித் துக்க எய்த்துச் ...... சுழலாதே,
சுத்தச்
சித்தத்துப் பத்திப் பத்தர்க்கு ஒத்து
சற்று அர்ச்சிக்கப் ...... பெறுவேனோ?
திக்கு
திக்கு அற்று, பை தத்து அத்திக்குச்
செல், பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா!
செப்பச் சொர்க்கத்துச் செப்பொன் தத்தைக்குச்
செச்சைக் கொத்து ஒப்பித்து ...... அணிவோனே!
கக்கு
அக்கைத் தக்க அக்கக்கட்கு அக்கிக்
கண் கத்த அத்தர்க்குப் ...... பெரியோனே!
கற்றைப் பொற்று எத்தப் பெற்ற, பொன் சிற்பக்
கச்சிக்கு உள் சொக்கப் ...... பெருமாளே.
பதவுரை
திக்குத் திக்கு அற்று --- எந்தத்
திசையிலும் உதவி இல்லாது,
பைத் தத்து அத்திக்குச் செல் --- பசிய
அலைகள் வீசுகின்ற கடலுக்குள் சென்ற
பத்ரக் கொக்கை --- இலைகளுடன் கூடிய மாமரமாக
நின்ற சூரபன்மனுடன்
பொரும் வேலா --- போர் புரிந்த
வேலாயுதரே!
செப்பச் சொர்க்கத்துச் செம்பொன்
தத்தைக்கு --- செவ்வியே தேவலோகத்தில் வளர்ந்த சிவந்த பொன் போன்ற கிளியாகிய தெய்வயானைக்கு
செச்சைக் கொத்து ஒப்பித்து அணிவோனே ---
வெட்சி மலர்க் கொத்தினால் அலங்கரித்து மாலை சூட்டுபவரே!
கக்கு அக்கைத் தக்க அக்கக்கட்கு ---
பிரம தேவன் முதலியோரது சரீரத்தினின்றும் கழன்ற எலும்பை தகுந்தபடி தமது
அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி அணிந்தவரும்,
அக்கு அக்கி கண், கத்த அத்தர்க்குப் பெரியோனே ---அக்கினியை
கண்ணிலே வைத்த தலைவராகிய சிவபெருமானுக்கு குருநாதராகிய பெரியவரே!
கற்றைப் பொற்று எத்தப் பெற்ற --- திரளான
துதிப்பாடல்களால் ஏத்தப்பெற்ற,
பொன் சிற்ப --- அழகிய சிற்ப வேலைப்பாடுகள்
அமைந்த
கச்சிக்குள் சொக்கப் பெருமாளே --- காஞ்சிபுரத்தில்
வீற்றிருக்கும் அழகியவரே! பெருமையில் சிறந்தவரே!
பொக்குப் பை, கத்தத் தொக்குப் பை ---
குற்றங்கள் நிறைந்த பை, மலம் நிறைந்த பை,
குத்து --- சுடு சொல்,
பொய்த்து எத்து தத்துக் குடில்பேணி --- பொய்யுடன் கூடிய வஞ்சகம், ஆபத்து இவைகள்
எல்லாம் கலந்த குடிசையாகிய இந்த உடலை விரும்பி,
பொச்சை --- குற்றமானதும்,
பிச்சு --- பைத்தியம் கொண்டதும்,
அற்ப --- அற்பமானதும்,
கொச்சைச் சொல் கற்று --- இழிவானதுமான சொற்களைக் கற்று,
பொற்சித்ரக் கச்சுக் கிரியார் தோய் ---
அழகிய விசித்திரமான கச்சணிந்த மலைபோன்ற தனங்களை உள்ள மாதர்களைச் சேர்வதால் வரும்
துக்கத் துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு --- கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு
துக்கித் துக்கு எய்த்துச் சுழலாதே ---
துன்பத்தை அடைந்து, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல்,
சுத்தச் சித்தத்துப் பத்திப் பத்தர்க்கு
ஒத்து --- தூய உள்ளத்துடன் அன்பு பூண்ட அடியார்களுக்கு இணங்கி அடியேன் ஒழுகி
சற்று அர்ச்சிக்கப் பெறுவேனோ --- சிறிதளவேனும்
உமது திருவடிகளைப் பூசிக்கும் பேற்றினைப் பெறுவேனோ?
பொழிப்புரை
எந்தத் திசையிலும் உதவி இல்லாது, பசிய அலைகள் வீசுகின்ற கடலுக்குள் சென்ற
இலைகளுடன் கூடிய மாமரமாக நின்ற சூரபன்மனுடன் போர் புரிந்த வேலாயுதரே!
செவ்வியே தேவலோகத்தில் வளர்ந்த சிவந்த
பொன் போன்ற கிளியாகிய தேய்வயானைக்கு வெட்சி மலர்க் கொத்தினால் அலங்கரித்து மாலை
சூட்டுபவரே!
பிரம தேவன் முதலியோரது
சரீரத்தினின்றும் கழன்ற எலும்பை தகுந்தபடி தமது அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி
அணிந்தவரும், அக்கினியை கண்ணிலே
வைத்த தலைவராகிய சிவபெபுமானுக்கு குருநாதராகிய பெரியவரே!
திரளான துதிப்பாடல்களால்
ஏத்தப்பெற்றதும், அழகிய சிற்ப
வேலைப்பாடுகள் அமைந்ததும் ஆன காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் அழகியவரே!
பெருமையில்
சிறந்தவரே!
குற்றங்கள் நிறைந்த பை, மலம் நிறைந்த பை, சுடுசொல், பொய்யுடன் கூடிய வஞ்சகம், ஆபத்து இவைகள் எல்லாம் கலந்த
குடிசையாகிய இந்த உடலை விரும்பி,
குற்றமானதும், பைத்தியம் கொண்டதும், அற்பமானதும், இழிவானதுமான சொற்களைக் கற்று, அழகிய விசித்திரமான கச்சணிந்த மலைபோன்ற
தனங்களை உள்ள மாதர்களைச் சேர்வதால் வரும் கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு
துன்பத்தை அடைந்து, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல், தூய உள்ளத்துடன் அன்பு பூண்ட
அடியார்களுக்கு இணங்கி அடியேன் ஒழுகி, சிறிதளவேனும்
உமது திருவடிகளைப் பூசிக்கும் பேற்றினைப் பெறுவேனோ?
விரிவுரை
பொக்குப்பை
---
பொக்கம்
- பொய். பொக்கம் என்ற சொல் பொக்கு என
வந்தது. இந்த உடம்பு தோன்றி மறையும்
பொய்ம்மை ஆனது.
நெக்கு
நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு
நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்கம்
மிக்கவர் பூவும் நீரும்கண்டு
நக்கு
நிற்பர் அவர்தம்மை நாணியே. --- அப்பர்.
கத்தத்
தொக்குப் பை
---
கத்தம்
- மலம். தொக்கு - தொகுத்து உள்ளது. இந்த உடம்பு மலம் நிறைந்து உள்ளது.
குத்துப்
பொய்த் தெத்துத் தத்துக் குடில்பேணி ---
குத்து
- குத்திப் பேசுகின்ற கடும்சொல். பொய்த்து
எத்து - பொய்மையாக எத்துகின்ற வஞ்சகம்.
தத்து - ஆபத்து.
கடும்சொல்லும், வஞ்சகமும், ஆபத்தும் நிறைந்த இந்தப் பாழ் உடம்பையே
சதா வளர்த்து, நற்கதிக்கு வழி
தேடாது அலைகின்ற அவலம்.
பொச்சைப்
பிச்சற்பக் கொச்சைச் சொற்கற்று ---
பொச்சை
- குற்றம். பிச்சு - பயித்தியம். அற்பம் - உள்ளீடு இல்லாதது. கொச்சை - திருந்தாதது.
குற்றம், பயித்தியம், அற்பம், கொச்சை இவைகளுடன் கூடிய சொற்களைப்
பயின்று மக்கள் வாடுகின்றார்கள்.
துக்கத்
துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு ---
பெரிய
துன்பத்தில் அகப்பட்டு. மாதராசை பெரும்
துயரத்தைத் தருவது. இராவணன், கீசகன், சுந்தோபசுந்தர், சந்திரன், இந்திரன், நகுஷன் முதலியோர் பெண்ணாசையால்
பெருந்துயர் அடைந்தார்கள்.
சுத்தச்
சித்தத்துப் பத்திப் பத்தர் ---
சுத்தச்
சித்தம் - மாசில்லாத மனம். அழுக்குற்ற கண்ணாடியில் முகம் தெரியாது. கலங்கிய நீரில்
சந்திர பிம்பம் தோன்றாது. இதுபோல், மாசுபட்ட மனதில் இறைவன் தோன்ற மாட்டான்.
மனத்துக்கண்
மாசுஇலன் ஆதல்அனைத்து அறன்
ஆகுல
நீர பிற. --- திருக்குறள்.
தேற்றாங்கொட்டை
இட்டு நீரைத் தெளிய வைப்பது போல்,
இறைவனுடைய
முலமந்திரத்தினால் மன அழுக்கை மாற்றித் தூய்மைப் படுத்தவேண்டும்.
எனவே, தூய உள்ளம் படைத்து, இறைவனிடம் அன்பு செய்யும் அடியார்களுடன்
இணங்கி உய்வு பெறவேண்டும்.
சற்று
அர்ச்சிக்கப் பெறுவேனோ ---
சிறிதேனும்
முருகனுடைய திருவடியை மலரால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.
புண்ணியம்
செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு,
அண்ணல்
அதுகண்டு அருள்செய்யா நிற்கும்,
எண்இலி
பாவிகள் எம்இறை ஈசனை
நண்ண
அறியாமல் நழுவுகின்றாரே. ---
திருமந்திரம்.
திக்குத்
திக்கு அற்று
---
சூரபன்மன்
முருகவேளுடன் போர் புரிந்து, எந்தத் திக்கிலும்
உதவி பெறாது அயர்ந்தான்.
பைத்
தத்து அத்திக்குச் செல் ---
பசுமை
வாய்ந்த அலைகள் தாவிக் குதிக்கின்ற கடலில் சென்று சூரபன்மன் மாமரமாய் நின்றான்.
பத்ரக்
கொக்கைப் பொரும் வேலா ---
பத்ரம்
- இலை. கொக்கு - மாமரம்.
சூரபன்மன்
எஃகு மயமான இலைகளுடன் கூடிய பெரிய மாமரமாய் நின்று, ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் நிழல்
பரப்பி உலகங்களை அலைத்துத் துன்புறுத்தினான். அவனைப் பெருமான் வேலினால் பிளந்து
மறக்கருணை பொழிந்தார்.
செப்பச்
சொர்க்கத்துச் செப்பொன் தத்தைக்கு ---
செப்பம்
- செவ்விய தன்மை. சொர்க்கம் - தேவர்
உலகம்.
விண்ணுலகில்
கற்பகச் சோலையில் வளர்ந்தவரும்,
செம்பொன்
கிளி போன்றவரும் ஆகிய தெய்வயானையம்மை.
செப்பு அ சொர்க்கம் எனப் பிரித்து, புகழ்கின்ற அந்த தேவலோகம் என்றும்
பொருள்படும்.
செச்சைக்
கொத்து ஒப்பித்து அணிவோனே ---
செச்சை
- வெட்சி மலர். முருகப் பெருமானுக்கு
உகந்த மலர் வெட்சி. தாம் அணிந்த அந்த மலர்மாலையைத் தெய்வயானைக்குச் சூட்டி
அருள் புரிகின்றார்.
கக்கக்
கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக் கட்கத்தத் தர்க்கு ---
கக்கு
அக்கை தக்க அக்கக்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர் எனப் பதப்பிரிவு செய்க.
கக்கு
அக்கை - பிரமாதி தேவர்களின் உடம்பிலிருந்து கழன்ற எலும்பை சிவபெருமான் தகுந்த
அங்கங்களில் அணிந்து அருள் புரிகின்றார்.
"அங்கங்கட்கு"
என்ற சொல் சந்தத்தை நோக்கி, "அக்கக்கட்கு" என
வந்தது.
சுரர்கள்
பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே... ---
(மன்றலம்)
திருப்புகழ்.
அக்கிக்
கண் - அக்கினிக் கண். இது ஞானவிழி. சிவபெருமான் ஒருவரே நெற்றிக்கண்ணர்.
கத்த
அத்தர் - தலைவராகிய சிவபெருமான்.
கற்றைப்
பொற்று எத்தப் பெற்ற ---
கற்றை
- திரள்.. போற்று, ஏத்தப் பெற்ற என்ற
சொற்கள், பொற்றெத்தப் பெற்ற என
வந்தன.
காஞ்சிபுரம்
சமய குரவர்கள் நால்வர்களின் பாடல்களும், ஐயடிகள்
காடவர்கோன் நாயனார் பாடலும், பரணதேவர், பட்டினத்தார் முதலியவர்களின் பாடலும்
பெற்ற அரிய திருத்தலம்.
பொற்சிற்பக்
கச்சி ---
பொற்
சிற்பம் - அழகிய சிற்பங்கள். சிற்ப வேலைக்கு மிகவும் பேர் பெற்றது
காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதர் திருக்கோயில்.
கருத்துரை
காஞ்சி
மாநகரில் மேவும் கந்தவேளே, உன்னை வழிபட அருள் செய்.