காஞ்சீபுரம் - 0493. புன மடந்தைக்கு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புன மடந்தைக்கு (காஞ்சீபுரம்)

முருகா!
எங்கும் சென்று உனது திருப்புகழைப் பாடிப் பரவி,
உனது திருவடியை அடைய அருள்


தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான


புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
     குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
          பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ......பிறிதேதும்

புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ......தனைநாளும்

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
     டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
          தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ......செயல்பாடித்

திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
     திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
          சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ......றருள்வாயே

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
     கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
          கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ......திருவாயன்

கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
     திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும்

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
     கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
          பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப்

பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
     பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


புன மடந்தைக்குத் தக்க புயத்தன்,
     குமரன் என்று எத்தி, பத்தர் துதிக்கும்
          பொருளை, நெஞ்சத்துக் கற்பனை முற்றும், ......பிறிது ஏதும்

புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம்,
     சகலமும் பற்றி, பற்று அற நிற்கும்
          பொதுவை, என்று ஒக்கத் தக்கது, ஓர் அத்தம் ......தனை, நாளும்

சினமுடன், தர்க்கித்து, சிலுகிக் கொண்டு,
     அறுவரும் கைக் குத்து இட்டு, ருவர்க்கும்
          தெரிவு அரும் சத்யத்தைத்  தெரிசித்து, உன் ......செயல் பாடி,

திசைதொறும் கற்பிக்கைக்கு, னி அற்பம்
     திருவுளம் பற்றி, செச்சை மணக்கும்
          சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு என்று ......அருள்வாயே.

கனபெரும் தொப்பைக்கு எள், பொரி, அப்பம்,
     கனி, கிழங்கு, க்கு, சர்க்கரை, முக்கண்,
          கடலை, கண்டு, ப்பி, பிட்டொடு மொக்கும் ...... திருவாயன்,

கவள துங்கக் கைக் கற்பகம், முக்கண்
     திகழும் நம் கொற்றத்து ஒற்றை மருப்பன்,
          கரிமுகன், சித்ரப் பொன்புகர் வெற்பன் ...... தனை ஈனும்
  
பனவி, ஒன்று எட்டுச் சக்ர தலப் பெண்,
     கவுரி, செம் பொன் பட்டு உத்தரியப் பெண்,
          பழயஅண் டத்தைப் பெற்ற மடப்பெண், ......  பணிவாரைப்

பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும்
     பவதி, கம்பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில், வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதவுரை

      கன பெரும் தொப்பைக்கு --- கனத்த பெரிய வயிற்றுக்கு

     எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு --- எள் உண்டை, பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு,

      சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி --- சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு முதலியவைகளை வாரி உண்டு,

     பிட்டொடு மொக்கும் திருவாயன் --- பிட்டையும் விழுங்கும் திருவாயை உடையவர்,

      கவள துங்கக் கை கற்பகம் --- சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடையவர், கற்பக விநாயகர் 

         முக்கண் திகழும் நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் --- முன்று கண்கள் விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர்,

     கரிமுகன் --- யானை முகம் உடையவர்,

      சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி --- அழகிய, பொலிவுள்ள புள்ளிகளை உடைய மலை போன்றவராகிய கணபதியைப் பெற்ற பார்ப்பனியும்,

      ஒன்று எட்டுச் சக்ரத் தலப்பெண் --- ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண்மணியும்,

      கவுரி --- பொன்னிறம் படைத்தவரும்,

     செம்பொன் பட்டுத் தரி அப்பெண் --- சிவந்த அழகிய பட்டாடை அணிந்துள்ள அந்தப் பெண்ணரசியும்,

      பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் --- பழமையானவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண்ணும்,

      பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி --- தன்னைப் பணிபவர்களுடைய பிறவியாகிய அலை கடலை விலக்கி நிறுத்தும் தேவியும்,

      கம்பர்க்குப் புக்கவள் --- ஏகாம்பரநாதரை அடைந்து மணந்த காமாட்சியம்மையின்

     பக்கம் பயில் --- அருகில் இருக்கும்படியான

      வரம் பெற்று --- வரத்தைப் பெற்று,

     கச்சியில் நிற்கும் பெருமாளே --- காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

      புன மடந்தைக்கு தக்க புயத்தன் --- தினைப்புனத்தில் வாழும் மடந்தையாகிய வள்ளிநாயகிக்கு ஏற்றதான திருப்புயங்களை உடையவர்,

      குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும் பொருளை --- குமாரக் கடவுள் என்று போற்றி அன்பர்கள் துதி செய்கின்ற பரம்பொருளை,

      நெஞ்சத்து கற்பனை முற்றும் --- மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும்,

     பிறிது ஏதும் --- பிறவான பலவற்றையும்,

      புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி --- புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு வகையான இயல்பான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும் பற்றியும்,

      பற்று அற நிற்கும் பொதுவை --- பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை,

      என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை --- சூரியனுக்கு ஒப்பாகத் தக்க பேரொளியைக் கொண்ட ஒப்பற்றச் செல்வத்தை 

      நாளும் சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்ட --- நாள் தோறும், கோபத்துடன் தருக்கம் பேசி சண்டை இட்டுக் கொண்டு

      அறுவரும் கைக்குத்து இட்டு --- அறுவகைச் சமயத்தாரும் கையால் குத்திக்கொண்டு வாதம் செய்து,

      ஒருவர்க்கும் தெரி அரும் சத்யத்தை தெரிசித்து --- ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான உண்மைப் பொருளை அடியேன் கண்ணாரக் கண்டு,

      உன்செயல் பாடி திசைதொறும் கற்பிக்கைக்கு --- உமது திருவிளையாடல்களைப் பாடி, திசைகள் தோறும் உள்ளவர்கள் யாவருக்கும் எடுத்து உபதேசிக்க,

      இனி அற்பம் திரு உளம் பற்றி --- இனி தேவரீர் சிறிது திருவுள்ளம் வைத்து,

     செச்சை மணக்கும் சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே --- வெட்சி மாலை மணம் வீசுகின்றதும், சிறிய சதங்கைகளை அணிந்துள்ளதும் ஆன, அழகிய திருவடித் தாமரையை அடியேனுக்கு எப்போது தந்து அருள்வாய்?

பொழிப்புரை

         கனத்த பெரிய வயிற்றுக்கு எள் உண்டை, பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு, சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு முதலியவைகளை வாரி உண்டு, பிட்டையும் விழுங்கும் திருவாயை உடையவர், சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடையவர், கற்பக விநாயகர்  முன்று கண்கள் விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகம் உடையவர், அழகிய, பொலிவுள்ள புள்ளிகளை உடைய மலை போன்றவராகிய கணபதியைப் பெற்ற பார்ப்பனியும், ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண்மணியும், பொன்னிறம் படைத்தவரும், சிவந்த அழகிய பட்டாடை அணிந்துள்ள அந்தப் பெண்ணரசியும், பழமையானவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண்ணும், தன்னைப் பணிபவர்களுடைய பிறவியாகிய அலை கடலை விலக்கி நிறுத்தும் தேவியும், ஏகாம்பரநாதரை அடைந்து மணந்த காமாட்சியம்மையின் அருகில் இருக்கும்படியான வரத்தைப் பெற்று, காஞ்சீபுரத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

         தினைப்புனத்தில் வாழும் மடந்தையாகிய வள்ளிநாயகிக்கு ஏற்றதான திருப்புயங்களை உடையவர், குமாரக் கடவுள் என்று போற்றி அன்பர்கள் துதி செய்கின்ற பரம்பொருளை, மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும், புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு வகையான இயல்பான தத்துவ உண்மைகளும், ஆக எல்லாவற்றையும், பற்றியும், பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை, சூரியனுக்கு ஒப்பாகத் தக்க பேரொளியைக் கொண்ட ஒப்பற்றச் செல்வத்தை, நாள் தோறும், கோபத்துடன் தருக்கம் பேசி சண்டையிட்டுக் கொண்டு, அறுவகைச் சமயத்தாரும் கையால் குத்திக்கொண்டு வாதம் செய்து,  ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான உண்மைப் பொருளை அடியேன் கண்ணாரக் கண்டு, உமது திருவிளையாடல்களைப் பாடி, திசைகள் தோறும் உள்ளவர்கள் யாவருக்கும் எடுத்து உபதேசிக்க, இனி தேவரீர் சிறிது திருவுள்ளம் வைத்து, வெட்சி மாலை மணம் வீசுகின்றதும், சிறிய சதங்கைகளை அணிந்துள்ளதும் ஆன, அழகிய திருவடித் தாமரையை அடியேனுக்கு எப்போது தந்து அருள்வாய்?


விரிவுரை

புனமடந்தைக்குத் தக்க புயத்தன் ---

ஞானம் ஆகிய தினை விளையும் ஞானவல்லியாம் வள்ளிக்கு இசைந்த வீரத் தோள்களை உடையவர் முருகவேள்.

குமரன் என்று எத்தி ---

குமரன் என்று ஏத்தி.  "ஏத்தி" என்ற சொல் "எத்தி" என வந்தது. ஏத்தி - துதி செய்து.

எண்பத்தெட் டெட்டியல் த்தவம் ---

எண்பத்து எட்டு, எட்டு.  தொண்ணூற்றாறு தத்துவங்கள்.
  
என்றொக்க ---

என்று ஒக்க.  என்று - சூரியன்.  உதயசூரியனை ஒப்பாகக் கூறுவது மரபு.

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரதரு
பலர்புகழ் ஞாயுறு கடல்கண் டாங்கு...---  திருமுருகாற்றுப்படை.

அறுவரும் ---

ஆறு சமயத்தாரும், தமக்குள் பிணங்கிக் கொண்டு, தருக்கம் செய்தும் வாய்ச் சண்டையுடன் நில்லாமல் கைச் சண்டையும் இட்டு உழல்வார்கள்.

திசைதொறும் கற்பிக்கைக்கு ---

திசைதொறும் உள்ள அன்பர்கள் எல்லோருக்கும் முருகன் புகழைக் கற்பிக்க வேண்டும் என்று கூறுவதனால் அருணகிரியாரின் பெருமை விளங்குகின்றது.

இனி அற்பம் திருவுளம் பற்றி ---

முருகா, இனி சிறிதாவது அடியேனிடம் தேவரீர் திருவுளம் இரங்கி அருள் புரிய வேண்டும் என்று கூறும் இந்த அடி கல்லையும் கரைக்கின்றது.  அற்பம் - சிறிது.

கனபெரும் தொப்பைக்கு ---

பிள்ளையார் தம் பெருவயிற்றில் எள் முதலிய பட்சணங்களை அடியார் படைக்க, அவற்றை அடைத்து உண்டு அருள் புரிகின்றார்.

பனவி ---

பனவி - பார்ப்பனி.  சிவமூர்த்தி - அந்தணன்.  திருமால் - ்ரசன்.  பிரமா - வைசியன்.  இந்திரன் - வேளாளன்.

ஒன்று எட்டுச் சக்ர தலப் பெண் ---

ஒன்றும் எட்டும் --- ஒன்பது. நவசக்ர பீடத்தில் வாழ்பவள் தேவி.

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே  ---  அபிராமி அந்தாதி.

பட்டு உத்தரியப் பெண் ---

பட்டால் ஆகிய ஆடையை உத்தரியமாக அணிந்திருக்கின்றாள் தேவி.

தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே         ---  திருமந்திரம்.

அண்டத்தைப் பெற்ற மடப்பெண் ---

அண்டங்களை எல்லாம் ஈன்றவள் அம்பிகை.

அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே, பின்னையும்
கன்னி என மறை பேசும் ஆனந்தரூப மயிலே. --- தாயுமானார்.

கம்பர்க்குப் புக்கவள் பக்கம் பயில் வரம்பெற்று ---

ஏகாம்பரநாதரை மணந்த காமாட்சியம்மையின் அருகில் நிற்கும் வரம் பெற்று முருகன் எழுந்தருளி இருக்கின்றார். இது குமரகோட்டத்தைக் குறிக்கின்றது.

கருத்துரை

குமரகோட்டம் மேவிய முருகா, உனது பாதமலரைத் தருவாய்.


                 

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...