அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
புரைபடும் செற்ற
(காஞ்சீபுரம்)
முருகா!
யாவர்க்கும் கீழாம் அடியேனை,
யாவர்க்கும் மேலான பதத்தில்
வைத்து அருள்
தனதனந்
தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ......
தனதான
புரைபடுஞ்
செற்றக் குற்றம னத்தன்
தவமிலன் சுத்தச் சத்யவ சத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந்
...... துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்
......கொடியேனின்
கரையறுஞ்
சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்
......கதிர்வேலுங்
கதிரையுஞ்
சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண்
......டடைவேனோ
குரைதருஞ்
சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென்
......றொருநேமிக்
குவடொதுங்
கச்சொர்க் கத்தரி டுக்கங்
கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங்
...... குடியேறத்
தரைவிசும்
பைச்சிட் டித்தஇ ருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம்
...... பகையோடத்
தகையதண்
டைப்பொற் சித்ரவி சித்ரந்
தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்
சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
புரைபடும்
செற்றக் குற்ற மனத்தன்,
தவம்இலன், சுத்தச் சத்ய அசத்யன்,
புகல்இலன், சுற்றச் செத்தையுள் நிற்கும் ......துரிசாளன்,
பொறைஇலன், கொத்துத் தத்வ விகற்பம்
சகலமும் பற்றி, பற்று அற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றும்இல் வெற்றன், ......கொடியேன்,
நின்
கரை
அறும் சித்ரச் சொல் புகழ் கற்கும்
கலை இலன், கட்டைப் புத்தியன், மட்டன்,
கதிஇலன், செச்சைப் பொன்புய வெற்பும், ......கதிர்வேலும்,
கதிரையும், சக்ரப் பொற்றையும், மற்றும்
பதிகளும், பொற்புக் கச்சியும், முற்றும்
கனவிலும் சித்தத்தில் கருதிக் கொண்டு
......அடைவேனோ?
குரைதரும்
சுற்றுச் சத்த சமுத்ரம்
கதறி, வெந்து உட்க, கண்புர துட்டன்
குலம் அடங்கக் கெட்டு ஒட்டு ஒழியச்சென்று, ......ஒருநேமிக்
குவடு
ஒதுங்க, சொர்க்கத்தர் இடுக்கம்
கெட, நடுங்கத் திக்கில் கிரி வர்க்கம்,
குலிச துங்கக் கைக் கொற்றவன் நத்தம்
...... குடி ஏற,
தரை
விசும்பைச் சிட்டித்த இருக்கன்,
சதுர்முகன் சிட்சைப் பட்டு ஒழிய, சந்-
ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம்
...... பகை ஓட,
தகைய
தண்டைப் பொன் சித்ர விசித்ரம்
தரு சதங்கைக் கொத்து ஒத்து முழக்கும்
சரண கஞ்சத்தில் பொன்கழல் கட்டும்
...... பெருமாளே.
பதவுரை
குரை தரும் சுற்றுச் சத்த சமுத்ரம் ---
பூமியைச் சுற்றியுள்ளதும் ஒலிக்கின்றதுமான ஏழு கடல்களும்
கதறி வெந்து உட்க --- ஓலமிட்டு, வெந்து அஞ்சவும்,
கட்புர துட்டன் --- பெருமை தங்கிய
வீரமகேந்திரபுரத்தில் வாழ்ந்த சூரபன்மனும்
குலம் அடங்கக் கெட்டு ஒட்டு ஒழிய --- அவனுடைய
குலம் முழுவதும் அழிந்து ஒழியவும்,
ஒரு நேமிக் குவடு சென்று ஒதுங்க ---
ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன் இடம் விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும்,
சொர்க்கத்தர் இடுக்கம் கெட ---
தேவர்களின் துன்பங்கள் தொலையவும்,
திக்கில் கிரி வர்க்கம் நடுங்க ---
எட்டுத் திக்கிலும் உள்ள குலகிரிக் கூட்டங்கள் யாவும் நடுங்கவும்,
குலிச துங்கக் கைக் கொற்றவன் ---
வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் வைத்துள்ள இந்திரன்
நத்தம் குடியேற --- தனது ஊராகிய அமராபுரியில்
மீண்டும் குடியேறவும்,
தரை --- மண்ணுலகத்தையும்,
விசும்பை --- விண்ணுலகத்தையும்
சிட்டித்த இருக்கன் சதுர்முகன் சிட்சைப்
பட்டு ஒழிய --- இருக்கு வேதத்தில் வல்லவனான நான்முகன்
தண்டிக்கப்பட்டு விலகவும்,
சந்ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம்
பகை ஓட --- எப்போதும் வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும்,
தகைய தண்டை --- அழகிய தண்டையும்,
பொன் சித்ர விசித்ரம் தரு சதங்கைக் கொத்து
--- பொன்னாலான அழகிய விசித்திரமான வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும்
ஒத்து முழக்கும் --- தாள ஒற்றுமையுடன் ஒலி
செய்யும்
சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும்
பெருமாளே --- பாதத் தாமரைகளில் அழகிய
வீரக் கழலைக் கட்டிய பெருமையில் சிறந்தவரே !
புரைபடும் செற்றக் குற்ற மனத்தன் ---
தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன்,
தவம் இலன் --- தவம் ஏதும் இல்லாதவன்,
சுத்தச் சத்ய அசத்யன் --- கலப்பில்லாத
உண்மைப் பொய்யன்,
புகல்இலன் --- வேறு திக்கு அற்றவன்,
சுற்று அச் செத்தையுள் நிற்கும் துரிசாளன்
... காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப் போன்றவன்,
பொறை இலன் --- பொறுமை இல்லாதவன்,
கொத்துத் தத்வ விகற்பம் சகலமும் பற்றி ---
பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றி நின்றும்,
பற்றற நிற்கும் பொருளுடன் --- பற்று
இன்றி நிற்கிற மெய்ப்பொருள் மேல்
பற்றுச் சற்றும் இல் வெற்றன் --- விருப்பம் சற்றும் இல்லாத பயனிலி,
கொடியேன் --- பொல்லாதவன்,
நின் கரை அறும் --- உமது எல்லையற்ற
சித்ரச் சொல் புகழ் கற்கும் கலை இலன் ---
அழகிய சொற்களுடன் கூடிய புகழைக் கற்கும் கலைஞானம் சிறிதும் இல்லாதவன்,
கட்டைப் புத்தியன் --- --- குறுகிய
புத்தி உடையவன்,
மட்டன் --- மட்டமானவன்,
கதி இலன் --- நற்கதி அடையும் பாக்கியம்
இல்லாதவனாகிய அடியேன்,
செச்சைப் பொற்புய வெற்பும் --- வெட்சிமலர்
அணிந்த அழகிய மலைபோன்ற உமது திருத்தோள்களையும்,
கதிர்வேலும் --- ஒளி வீசுகின்ற
வேலாயுதத்தையும்,
கதிரையும் --- கதிர்காமத்தையும்,
சக்ரப் பொற்றையும் --- வட்டமலையையும்,
மற்றும் பதிகளும் --- ஏனைய திருத்தலங்களையும்,
பொற்புக் கச்சியும் --- அழகிய காஞ்சிபுரத்தையும்,
முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதிக் கொண்டு அடைவேனோ --- முழுக்க முழுக்க, கனவிலும்
மறவாது என் சித்தத்திலே வைத்துத் தியானித்துக் கொண்டு உம்மைச் சேர மாட்டேனோ?
பொழிப்புரை
பூமியைச் சுற்றியுள்ளதும் ஒலிக்கின்றதுமான
ஏழு கடல்களும் ஓலமிட்டு, வெந்து அஞ்சவும், பெருமை தங்கிய வீரமகேந்திரபுரத்தில்
வாழ்ந்த சூரபன்மனும் அவனுடைய குலம் முழுவதும் அழிந்து ஒழியவும், ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன் இடம்
விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும்,
தேவர்களின்
துன்பங்கள் தொலையவும், எட்டுத் திக்கிலும்
உள்ள குலகிரிக் கூட்டங்கள் யாவும் நடுங்கவும், வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில்
வைத்துள்ள இந்திரன் தனது ஊராகிய அமராபுரியில் மீண்டும் குடியேறவும், பூமியையும் ஆகாயத்தையும் படைத்த, இருக்கு வேதத்தில் வல்லவனான நான்முகன்
தண்டிக்கப்பட்டு விலகவும், எப்போதும்
வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும், அழகிய தண்டையும், பொன்னாலான அழகிய விசித்திரமான
வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும் தாள ஒற்றுமையுடன் ஒலி செய்யும் பாதத் தாமரைகளில்
அழகிய வீரக் கழலைக் கட்டிய பெருமையில் சிறந்தவரே !
தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும்
உள்ள கறை படிந்த மனத்தன்.
தவம் ஏதும் இல்லாதவன்.
கலப்பில்லாத உண்மைப் பொய்யன்.
வேறு திக்கு அற்றவன்.
காற்றில் சுழலும் குப்பைக்கு உள்ளே நிற்கும்
அழுக்கைப் போன்றவன்.
பொறுமை இல்லாதவன்.
பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும்
பற்றி நின்றும், பற்று இன்றி நிற்கிற
மெய்ப்பொருள் மேல் விருப்பம் சற்றும் இல்லாத பயனிலி.
பொல்லாதவன்.
உமது எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும்
கலைஞானம் சிறிதும் இல்லாதவன்.
குறுகிய புத்தி உடையவன்.
மட்டமானவன்.
நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய
அடியேன்,
வெட்சிமலர் அணிந்த அழகிய மலைபோன்ற உமது
திருத்தோள்களையும், ஒளி வீசுகின்ற
வேலாயுதத்தையும், கதிர்காமத்தையும், வட்டமலையையும், ஏனைய திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும், முழுக்க முழுக்க, கனவிலும் மறவாது என் சித்தத்திலே
வைத்துத் தியானித்துக் கொண்டு உம்மைச் சேர மாட்டேனோ?
விரிவுரை
புரைபடும்
செற்ற குற்ற மனத்தன் ---
புரை
- குற்றம். மனதிலே உள்ள குற்றங்கள்.
பொறாமை, ஆசை, கோபம், பகை என்பன.
செற்றம்
- தணியாத கோபம். கோபத்தினால் பகை உண்டாகும்.
திருக்குஉறும்
அழுக்காறு அவாவொடு வெகுளி
செற்றம் ஆகியமன அழுக்கைத்
தியானம்என் புனலால்; பொய், புறங்கூறல்,
தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை
அருட்கிளர்
நினது துதியெனும் புனலால்;
அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை
அருச்சனை என்னும் புனலினால் கழுவா
அசுத்தனேன் உய்யும் நாள் உளதோ?
விருப்பொடு
வெறுப்பு இங்கு இலாதவன் என்ன
வெண்மதி யோடு வெண் தலையும்,
விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்
விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,
எருக்கையும்
அணிந்து, மின்னொளி கடந்த
ஈர்ஞ்சடை, பாந்தள் நாண்உடையாய்,
இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்
ஈசனே, மாசிலா மணியே. --- சிவப்பிரகாசர்.
மனதால் உண்டாகும்
அழுக்கு ஆகிய அழுக்காறு, அவா, வெகுளி, பகைமை உணர்வு ஆகியவற்றை, தியானம் என்னும்
நீரால் கழுவி அகற்ற வேண்டும்.
பொய்
சொல்லுதல்,
புறம்
கூறுதல்,
தீய
சொற்களைக் கூறுதல் என்னும் வாயால் உண்டாகும் அழுக்கை, இறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன்
மூலம் கழுவ வேண்டும்.
பாவச்
செயல்களில் ஈடுபடுவதனால் உண்டாகும் உடல் அழுக்கை, அருச்சனை என்னும் நீரால்
கழுவிப் போக்க வேண்டும்.
இவ்வாறு, மன அழுக்கு, வாய் அழுக்கு, உடல் அழுக்கு என்று
முக்கரண அழுக்கைச் சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதி, உணர்ந்து, ஒழுக வேண்டியது.
இதனைச் சுருக்கமாகத் திருவள்ளுவர், "மனத்துக்கண்
மாசுஇலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற"
என்று அருளிச் செய்தார். மனமாசு நீங்குதலே எல்லா அறங்களுமாகும். மன அழுக்கு
நீங்கினாலே, வாய் அழுக்கும், மெய் அழுக்கும்
இல்லாது ஆகும்.
ஒன்றோடு
ஒன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்
ஒன்றோடு
ஒன்று ஒவ்வாப் பொருள் தெரிந்து--ஒன்றோடுஒன்று
ஒவ்வா
உயிர் ஓம்பி,
உள்
தூய்மை பெற்றதே
அவ்வாயது
அறம் ஆகும். --- அறநெறிச்சாரம்.
ஒன்றோடு
ஒன்று பொருந்தாத புறச் சமய நூல்கள் பலவற்றுள்ளும், ஒன்றோடு ஒன்று வேறுபட்ட பொருள்
இவை என நன்கு ஆராய்ந்து அறிந்து, பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களைக் காப்பாற்றி, உள்ளத் தூய்மை பெற்றதே
சிறந்த அறம் ஆகும்.
தவம்
இலன்
---
மானமாசு
அற்றார்க்கே தவநிலை கைகூடும். தவம் -
வருகின்ற துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதல், பிற உயிர்க்குத் துன்பம் செய்யாது
இருத்தல்.
உற்றநோய்
நோன்றல், உயிர்க்குஉறுகண்
செய்யாமை,
அற்றே
தவத்திற்கு உரு. --- திருக்குறள்.
சுத்த
சத்ய அசத்யன்
---
கலப்பில்லாத
உண்மையான பொய்யன்.
கடுகளவு
கூட உண்மையில்லாத பொய்யே பேசுகின்றவன்.
புகல்
இலன்
---
புகல்
- அடைக்கலம் புகுகின்ற இடம். பரமபாதகன்
ஆதலின் எங்கும் அடைக்கலம் தருவார் இல்லாதவன்.
போக்கிடம்
அற்ற வ்ருதாவனை.. --- (தாக்கம) திருப்புகழ்.
துரிசாளன் ---
துரிசு
- துக்கம். துக்கத்தை உடையவன்.
சகலமும்
பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றும் இல் வெற்றன் ---
இறைவன்
எல்லாப் பொருள்களிலும் பற்றியும்,
அவைகளின்
பற்று அற்றும் நிற்பவன். வானம் எல்லாவற்றிலும் தோய்ந்தும் தோயாமல் நிற்பது போலும்.
கடல் மீனில் உப்பு ஏறாமல் நிற்பது போலவும் என அறிக.
இத்தகைய
இறைவனுடைய பற்று, ஏனைய பற்றுக்களை
அகற்றும். அப் பரமனைப் பற்றி, மற்ற பற்றுக்களைக்
களைய வேண்டும். கடவுள் பற்று சிறிதும் இல்லாதவன்.
வெற்றன்
- சாரம் இல்லாதவன்.
பொற்கழல்
கட்டும்
---
வீரர்கள்
தமது பாதத்தில் வீரக் கழல் கட்டுவார்கள்.
முருகப் பெருமான் வீரமூர்த்தி. அவர் தமது திருவடியில் வீரக் கழலைக்
கட்டியதனால் என்ன என்ன நிகழ்ந்தன என்று இத் திருப்புகழின் பிற்பகுதியில் சுவாமிகள்
கூறுகின்றார்.
1. சமுத்திரம் வெந்து கதறியது.
2. சூரன் குலம் ஒழிந்தது.
3. சக்ரவாள கிரி ஒதுங்கியது.
4. தேவர்கள் துயர் தீர்ந்தது.
5. குலமலைகள் நடுங்கின.
6. இந்திரன் தன் நகரில் குடி புகுந்தான்.
7. பிரமதேவர் தண்டனை அடைந்து விலகினார்.
8. அடியவரின் பகைகள் ஓடின.
9. கிண்கிணியும் சதங்கையும் ஒலித்தன.
கட்புர
துட்டன் ---
கண்
- பெருமை. புரம் - ஊர். பெருமை மிக்க வீரமகேந்திரபுரியில் வாழும்
சூரபன்மன்.
கொற்றவன்
நத்தம் குடியேற ---
கொற்றவன்
- இந்திரன். நத்தம் - ஊர். இந்திரன் தனது அமராவதி நகரில் குடியேற
முருகவேள் அருள் புரிந்தார்.
கருத்துரை
வீரக்
கழல் கட்டும் முருகவேளே, உம்மைக் கனவிலும்
மறவாது கருதி கழல் சேர அருள் செய்வீராக.