அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
படிறு ஒழுக்கமும்
(காஞ்சீபுரம்)
முருகா!
எனது இருவினைகள் அகல,
உனது திருவடியைத் தந்து அருள்.
தனன
தத்தன தனன தத்தன
தனன தத்தன ...... தனதான
படிறொ
ழுக்கமு மடம னத்துள
படிப ரித்துட ...... னொடிபேசும்
பகடி
கட்குள மகிழ மெய்ப்பொருள்
பலகொ டுத்தற ...... உயிர்வாடா
மிடியெ
னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட ...... மிகவாழும்
விரகு
கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத ...... மருள்வாயே
கொடியி
டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி ...... லமர்வோனே
குரவு
செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி ...... திருமார்பா
பொடிப
டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் ...... குருநாதா
பொருதி
ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
படிறு
ஒழுக்கமும், மட மனத்து உள
படி பரித்து உடன் ...... நொடி பேசும்
பகடிகட்கு, உள மகிழ மெய், பொருள்
பல கொடுத்து, அற ...... உயிர் வாடா,
மிடி
எனப் பெரு வடவை சுட்டிட,
விதனம் உற்றிட ...... மிகவாழும்,
விரகு
கெட்டு, அரு நரகு விட்டு, இரு
வினை அறப் பதம் ...... அருள்வாயே.
கொடி
இடைக் குற வடிவியைப் புணர்
குமர! கச்சியில் ...... அமர்வோனே!
குரவு, செச்சை, வெண்முளரி, புத்தலர்
குவளை, முற்று அணி ...... திருமார்பா!
பொடி
படப்பட நெடிய வில்கொடு
புரம் எரித்தவர் ...... குருநாதா!
பொரு
திரைக்கடல் நிருதரைப் படை
பொருது உழக்கிய ...... பெருமாளே.
பதவுரை
கொடி இடை --- கொடி போன்ற இடையை உடைய
குற வடிவியைப் புணர் --- குறமகளாம் அழகிய
வள்ளியை மருவிக் கலந்த
குமர --- குமாரக் கடவுளே!
கச்சியில் அமர்வோனே --- காஞ்சிபுரத்தில்
எழுந்தருளி இருப்பவரே!
குரவு, செச்சை, வெண் முளரி, புத்தலர் குவளை --- குராமலர், வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளை மலர்,
முற்று அணி திருமார்பா --- இவை எல்லாம்
நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய திருமார்பினரே!
நெடிய வில் கொடு --- நீண்ட வில்லினைக் கொண்டு,
பொடி படப்பட --- பொடியாகி அழியும்படி,
புரம் எரித்தவர் குருநாதா --- திரிபுரத்தை
எரித்தவரான சிவபிரானுக்குக் குருநாதரே!
பொரு திரைக்கடல் --- மாறுபட்டு
எழுகின்ற அலைகளை உடைய கடலையும்,
நிருதரைப் படை --- அசுரர்களையும், அவர்களது சேனைகளையும்
பொருது உழக்கிய பெருமாளே --- போர்
செய்து கலக்கிய பெருமையில் சிறந்தவரே!
படிறு ஒழுக்கமும் --- வஞ்சனையுடன் கூடிய
ஒழுக்கத்தை
மட மனத்து உளபடி பரித்து --- அறியாமையை உடைய
மனத்துள் உள்ளபடியே வைத்துக் கொண்டு,
உடன் நொடி பேசும் --- அப்போதைக்கு
அப்போது தந்திரமாகப் பேசும்
பகடிகட்கு --- வெளி வேடதாரிகளாகிய பொதுமகளிருக்கு,
உள மகிழ --- அவர்களின் மனம் மகிழுமாறு,
மெய், பொருள் பல கொடுத்து
--- எனது உடம்பையும் பொருட்கள் பலவற்றையும் கொடுத்து,
அற உயிர் வாடா --- மிகவும் உயிர் வாடா
நின்று,
மிடி எனப் பெரு வடவை சுட்டிட ---
தரித்திரம் என்ற பெரிய வடவாக்கினி என்னைச் சுட்டுப் பொசுக்க,
விதனம் உற்றிட --- பெருந்துன்பத்தை
அடைந்து,
மிக வாழும் விரகு கெட்டு --- அதனால் மிகத்
துயரத்தோடு வாழும் வஞ்சனை வாழ்வு நீங்கி,
அரு நரகு விட்டு --- அரிய நரகத்தில்
விழுவது விலகி,
இருவினை அற --- நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் ஒழிய,
பதம் அருள்வாயே --- உமது திருவடிகளைத்
தந்தருளுவீராக.
பொழிப்புரை
கொடி போன்ற இடையை உடைய குறமகளாம்
அழகிய வள்ளியை மருவிக் கலந்த குமாரக் கடவுளே!
காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருப்பவரே!
குராமலர், வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளை மலர், இவை எல்லாம் நிரம்ப அணிந்து கொள்ளும்
அழகிய திருமார்பினரே!
பொடியாகி அழியும்படி, மேருமலையாகிய நீண்ட வில்லினைக் கொண்டு
திரிபுரத்தை எரித்தவரான சிவபிரானுக்குக் குருநாதரே!
மாறுபட்டு எழுகின்ற அலைகளை உடைய
கடலையும், அசுரர்களையும், அவர்களது சேனைகளையும் போர் செய்து
கலக்கிய பெருமையில் சிறந்தவரே!
வஞ்சனையுடன் கூடிய ஒழுக்கத்தை அறியாமையை
உடைய மனத்துள் உள்ளபடியே வைத்துக் கொண்டு, அப்போதைக்கு அப்போது தந்திரமாகப் பேசும்
வெளி வேடதாரிகளாகிய பொது மகளிருக்கு, அவர்களின்
மனம் மகிழுமாறு, எனது உடம்பையும் பொருட்கள் பலவற்றையும் கொடுத்து,
மிகவும்
உயிர் வாடா நின்று, தரித்திரம் என்ற
பெரிய வடவைத் தீ ஆனது என்னைச் சுட்டுப் பொசுக்க, பெருந்துன்பத்தை
அடைந்து, அதனால் மிகத்
துயரத்தோடு வாழும் வஞ்சனை வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் ஒழிய, உமது திருவடிகளைத் தந்தருளுவீராக.
விரிவுரை
படிறு
ஒழுக்கமும்
---
படிறு
- வஞ்சனை, பொய். படிற்றொழுக்கம்
- வஞ்சனையுடன் கூடிய நடவடிக்கை.
வஞ்ச
மனத்தான் படிற்றொழுக்கம், பூதங்கள்
ஐந்தும்
அகத்தே நகும். --- திருக்குறள்.
பொது
மாதர்கள் தங்கள்பால் வரும் ஆடவரிடம் மெய் போல், பொய்யாக நடித்து, அன்புடையவர் போல் பழகி, உள்ள பொருள் அனைத்தும் பறிப்பார்கள்.
மட
மனத்து ---
மடம்
- அறியாமை. அறியாமையுடன் கூடிய மனம்.
உள
படி பரித்து ---
பரித்தல்
- தாங்குதல். பொய்யொழுக்கத்தை உள்ளபடியே மனத்தில்
தங்குகின்றவர்.
நொடி
பேசும் பகடிகட்கு ---
நொடி
- தந்திரம். காமுகரிடம் தந்திரமான சொற்களைப் பேசுபவர் விலைமகளிர்.
பகடி
- வெளி வேடதாரிகள். உள்ளொன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசி நடிப்பவர்கள்.
மெய்ப்பொருள்
பல கொடுத்து
---
மெய்
- உடல். பொதுமாதர்கட்கு ஆடவர் தமது
உடம்பையும் பொன் பொருள்கள் பலவற்றையும் தத்தம் புரிவார்கள்.
அற
உயிர் வாடா ---
அற
– மிகுதியாக. உள்ளம் உடல் வாடியதோடு
உயிரும் வாடி நிற்பர்.
மிடி
எனப் பெரு வடவை சுட்டிட ---
மிடி
- வறுமை. தரித்திரமாகிய கொடுமை
வடவாமுகாக்கினி போல் மனிதர்களைச் சுடும்.
அதனால்தான், ஔவையார், "கொடிது கொடிது வறுமை
கொடிது" என்றார்.
கொடியது
கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது
கொடிது வறுமை கொடிது,
அதனினும்
கொடிது இளமையில் வறுமை,
அதனினும்
கொடிது ஆற்றஒணாத் தொழுநோய்,
அதனினும்
கொடிது அன்பிலாப் பெண்டிர்,
அதனினும்
கொடிது
இன்புற
அவர் கையில் உண்பது தானே. ---
ஔவையார்.
தரித்திரம்
மிக்க வனப்பினை ஒடுக்கி,
சரீரத்தை உலர்தர வாட்டும்.
தரித்திரம்
தலைவன் தலைவியர்க்கு இடையே
தடுப்பரும் கலாம்பல விளைக்கும்,
தரித்திரம்
அளவாச் சோம்பலை எழுப்பும்,
சாற்றரும் உலோபத்தை மிகுக்கும்,
தரித்திரம்
மிக்க பொய்மை பேராசை
தரும், இதில் கொடியது ஒன்று இலையே.
--- குசேலோபாக்கியானம்.
முடியாப்
பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால்
படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு
நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய
பெருமாள் திருநாமம் புகல்பவரே.
--- கந்தர் அலங்காரம்.
அறிவு
இலாதவர் ஈனர், பேச்சு இரண்டு
பகரும் நாவினர், லோபர்,தீக் குணங்கள்
அதிக பாதகர், மாதர்மேற் கலன்கள்
...... புனைஆதர்,
அசடர், பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியும் மானுடர், பேதைமார்க் கிரங்கி
அழியும் மாலினர், நீதிநூற் பயன்கள்
...... தெரியாத
நெறி
இலாதவர், சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய், ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பால் சிறந்த
...... தமிழ்கூறி
நினைவு
பாழ்பட வாடி,நோக்கு இழந்து
வறுமை ஆகிய தீயின்மேல் கிடந்து
நெளியும் நீள்புழு ஆயினேற்கு இரங்கி
...... அருள்வாயே. --- திருப்புகழ்.
திமிர
உததி அனைய நரக
செனனம் அதனில் ...... விடுவாயேல்
செவிடு
குருடு வடிவு குறைவு
சிறிதும் மிடியும் ...... அணுகாதே
அமரர்
வடிவும் அதிக குலமும்
அறிவும் நிறையும் ...... வரவே,நின்
அருளது
அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் ...... வரவேணும்... --- திருப்புகழ்.
வடிவும்
தனமும் மனமும் குணமும்
குடியும்
குலமும் குடிபோகியவா
அடிஅந்தம்
இலா அயில்வேல் அரசே,
மிடிஎன்று
ஒருபாவி வெளிப்படினே. --- கந்தர் அநுபூதி.
விதனம்
உற்றிட மிக வாழும் விரகு கெட்டு ---
விதனம்
- துன்பம். வறுமையால் வருந்தி அத்துன்ப
வாழ்விலேயே நெடுங்காலம் வாழ்வது. அப்படி
வாழ்கின்ற நிலைமை அழிய வேண்டும்.
அரு
நரகு விட்டு ---
கொடுமை
மிகுந்த நரகில் வாழும் துயரம் விலகுமாறு அருள் புரியவேண்டும்.
இருவினை
அற
---
நல்வினை, தீவினை என்ற இரண்டும் நீங்க வேண்டும்.
இருவினைய
மும்மலமும் அற
இறவியொடு
பிறவி அற... --- (அறுகுநுனி) திருப்புகழ்.
பதம்
அருள்வாயே ---
பதம்
- முருகன் திருவடி. திருவடிகள் கிரியா
சத்தி, ஞான சத்திகள் என
உணர்க.
கொடி
இடைக் குறவடிவி ---
பெண்கள்
இடை சுருங்கி இருப்பது அழகு. இடைக்கு
உடுக்கை, நூல் முதலியவற்றை
உவமையாகக் கூறுவர். வடிவி - அழகி.
குரவு
செச்சை வெண்முளரி புத்தலர் குவளை ---
குரவு
- குராமலர். இது முருகனுக்கு உகந்த மலர்.
செச்சை
- வெட்சி. இதுவும் முருகனுக்கு இனிய மலர்.
வெண்
முளரி - வெண்தாமரை.
புத்தலர்
குவளை - புதிதாக மலர்ந்த குவளை மலர்.
இந்த
மலர்களை அடியார்கள் புனைய, முருகப் பெருமான்
அணிந்து கொள்ளுகின்றார்.
நெடிய
வில்
---
திரிபுரம்
எரித்தபோது, சிவபெருமான் நீண்ட மேருமலையை
வில்லாகக் கொண்டார்.
கருத்துரை
கச்சியம்பதி
மேவும் கந்தவேளே, அடியேனுடைய வினைகள் அகல, உன் திருவடி மலரைத் தந்து அருள்.