அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருவாகியெ தாய்
(பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
உலக வாழ்வையே உண்மை எனக்
கருதி உழலும் இந்த மூடனை,
உனது
திருப்புகழை ஓதி, மெய்ஞ்ஞானம் பெற அருள்.
தனனாதன
தானன தத்தன
தனனாதன தானன தத்தன
தனனாதன தானன தத்தன ...... தனதான
கருவாகியெ
தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு
கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர்
கையிலேவிழ
வேகிய ணைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினி ......
லினிதாகித்
தருதாரமு
மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
சதமாமிது தானென வுற்றுனை ......
நினையாத
சதுராயுன
தாளிணை யைத்தொழ
அறியாதநிர் மூடனை நிற்புகழ்
தனைநோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ .....தொருநாளே
செருவாயெதி
ராமசு ரத்திரள்
தலைமூளைக ளோடுநி ணத்தசை
திமிர்தாதுள பூதக ணத்தொடு ......
வருபேய்கள்
திகுதாவுண
வாயுதி ரத்தினை
பலவாய்நரி யோடுகு டித்திட
சிலகூகைகள் தாமுந டித்திட ......
அடுதீரா
அருமாமறை யோர்கள்து தித்திடு
புகர்வாரண மாதுத னைத்திகழ்
அளிசேர்குழல் மேவுகு றத்தியை ......
அணைவோனே
அழகானபொன்
மேடையு யர்த்திடு
முகில்தாவிய சோலைவி யப்புறு
அலையாமலை மேவிய பத்தர்கள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கருவாகியெ
தாய் உதரத்தினில்
உருவாகவெ கால்கை உறுப்பொடு,
கனிவாய், விழி, நாசி, உடல், செவி ...... நரை, மாதர்
கையிலே
விழ ஏகி, அணைத் துயில்
எனவே மிக மீது துயிற்றிய
கரு தாய் முலை ஆர்அமுதத்தினில் ...... இனிதாகித்
தரு
தாரமும், ஆகிய சுற்றமும்,
நலவாழ்வு, நிலாத பொருள், பதி,
சதம் ஆம் இது தான்என உற்று,உனை ...... நினையாத,
சதுராய்
உன தாள் இணையைத் தொழ
அறியாத நிர்மூடனை, நின் புகழ்
தனை ஓதி, மெய்ஞ்ஞானம் உறச்செய்வது .....ஒருநாளே?
செருவாய்
எதிர் ஆம் அசுரத் திரள்
தலை மூளைகளோடு, நிணத்தசை
திமிர் தாதுள பூதகணத்தொடு ......
வருபேய்கள்,
திகுதா
உணவாய் உதிரத்தினை
பலவாய் நரியோடு குடித்திட,
சிலகூகைகள் தாமும் நடித்திட ......
அடுதீரா!
அருமாமறையோர்கள்
துதித்திடு
புகர் வாரண மாது தனைத்திகழ்
அளி சேர் குழல் மேவு குறத்தியை ...... அணைவோனே!
அழகான பொன் மேடை உயர்த்திடு
முகில் தாவிய சோலை வியப்புறு
அலையா மலை மேவிய பத்தர்கள் ......
பெருமாளே.
பதவுரை
செருவாய் எதிர்ஆம் --- போரின் கண் எதிர்த்து
வந்த,
அசுர திரள் --- அசுரர் கூட்டங்களின்,
தலை மூளைகளோடு நிணம் தசை --- தலை மூளை
கொழுப்பு இறைச்சி இவைகளை,
திமிர் தாது உள --- தேகக் கொழுப்பும் சத்த
தாதுக்களும் படைத்த,
பூத கணத்தொடு வரு பேய்கள் --- பூதக்
கூட்டங்களுடன் வந்த பேய்கள்,
திகுதா உணவு ஆய் --- திகுதிகு என்று உணவாகக்
கொண்டு,
உதிரத்தினை --- உதிரத்தை,
பலவாய் நரி ஓடு குடித்திட --- மிகுதியாக
நரிகளுடன் குடிக்க,
சில கூகைகள் தாமும் நடித்திட --- சில
கோட்டான்களும் கூட நடித்திட,
அடு தீரா --- கொன்றருளிய தீர மூர்த்தியே!
அரு மா மறையோர்கள் துதித்திடும் --- அரிய
சிறந்த வேதியர்கள் துதிக்கின்ற,
புகர் வாரண மாது தனை --- அழகிய
தெய்வயானை அம்மையையும்,
திகழ் அளிசேர் குழல் மேவு --- விளங்குகின்ற
வண்டுகள் சேரும் கூந்தலையுடைய,
குறத்தியை அணைவோனே --- வள்ளிநாயகியையும் தழுவுகின்றவரே!
அழகு ஆன பொன்மேடை --- அழகிய பொன்மயமான
மேடைகளும்,
உயர்த்திடும் முகில் தாவிய சோலை ---
உயரத்திலுள்ள மேகத்தை அளாவிய சோலைகளும்,
வியப்பு உறு அலை ஆம் மலை மேவிய --- அற்புதத்தையுங்
கொண்டு நிறைந்த மலையில் வீற்றிருக்கும்,
பக்தர்கள் --- அன்பர்கள் போற்றுகின்ற,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
கரு ஆகியெ --- கருவாய் அமைந்து,
தாய் உதரத்தினில் --- தாயின் வயிற்றில்,
உருவு ஆகவே --- உருவம் பெற்று,
கால், கை உறுப்பொடு --- கால் கை என்ற
உறுப்புக்களுடன்,
கனிவாய் விழி நாசி உடல் செவி --- இனிய வாய்
கண் மூக்கு உடல் காது என்னும் அங்கங்களுடன்,
நரை மாதர் கையிலே விழ ஏகி --- மருத்துவச்சியின்
கையில் விழும்படி வந்து,
அணை துயில் எனவே --- படுக்கையில் தூங்கு
என்று,
மிகமீது துயிற்றி --- மிகவும் பாராட்டிப்
படுக்கையில் தூங்கச் செய்த,
கருது ஆய் முலை ஆர் அமுதத்தினில் --- நலத்தை
எண்ணுகின்ற அன்னையின் முலையில் நிறைந்துள்ள பாலில்,
இனிது ஆகி --- அன்பாகி வளர்ந்து,
தரு தாரமும் --- தனக்கென்று தந்த மனைவி,
ஆகிய சுற்றமும் --- உண்டாகியுள்ள
உறவினர்களும்,
நல வாழ்வும் --- நல்ல வாழ்வும்,
நிலாத பொருள் --- நிலைத்து நிற்காத பொருளும்,
பதி --- ஊரும்,
சதம் ஆம் இதுதான் என உற்று --- இவையாவும்
நிலையாம் என்று கருதி,
உனை நினையாத சதுர் ஆய் --- தேவரிரை நினையாத
சாமர்த்தியம் உடையவனாய்,
உன தாள் இணையை --- உமது இருதிருவடிகளை,
தொழ அறியாத நிர்மூடனை --- தொழுவதற்கு அறியாத
முழுமூடனை,
நின்புகழ் தனை ஓதி --- உமது புகழினை ஓதி,
மெய்ஞானம் உற செய்வது ஒரு நாளே --- உண்மை
ஞானத்தை அடையச் செய்யும் நாள் ஒன்று உண்டாகுமோ?
பொழிப்புரை
போர்க்களத்தில் எதிர்த்து வந்த அசுரர்
கூட்டங்களின் தலை மூளை கொழுப்பு இறைச்சி இவைகளை, உடற் கொழுப்பும் ஏழு தாதுக்களும் படைத்த
பூதக் கூட்டங்களுடன் வந்த பேய்கள்,
திகுதிகு
என்று வேகமாக உணவாக உண்டு, நரிகளுடன் உதிரத்தை
நிரம்பவும் குடித்து, சில கோட்டான்களுடன்
கூத்தாடு மாறு கொன்ற தீரமூர்த்தியே!
அரிய சிறந்த வேதியர்கள் துதி செய்கின்ற அழகிய
தேவயானையைம், விளங்குகின்ற
வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய வள்ளியம்மையையும் தழுவுகின்றவரே!
அழகிய பொன்மய மான மேடைகளும், உயரத்திலுள்ள மேகங்கள் தழுவுகின்ற
சோலைகளும் உடைய அற்புதமான பழமுதிர் சோலை யென்ற மலையில் விற்றிருக்கும், அன்பர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!
தாயின் வயிற்றில் கருவாகி உருவம் பெற்று, கால் கை இனிய வாய் கண் மூக்கு உடல் காது
என்ற உறுப்புக்களுடன் மருத்துவச்சியின் கையில் விழும்படி வந்து, தாய் மிகவும் சீராட்டிப் படுக்கையில்
தூங்கு என்று தூங்கச் செய்த, நலத்தைக் கருகின்ற
அன்னையின் முலையில் நிறைந்துள்ள பாலில் பிரியம் உடையவனாகி வளர்ந்து, தனக்கென்று தந்த மனைவி, சுற்றம், நல்லவாழ்வு, நிலையில்லாத செல்வம், ஊர் முதலியவைகளை நிலையானவையென்று எண்ணி, உமது இரு திருவடிகளை வணங்கத் தெரியாத
முழு மூடனை, உமது புகழை ஓதி உண்மை
ஞானத்தைப் பெறச் செய்யும் நாள் ஒன்று எனக்கு உண்டாகுமோ?
விரிவுரை
கருவாகியெ
தாய் உதரத்தினில் உருவாகவே ---
உயிர்கள்
அநேக பிறவிகளில் செய்த புண்ணியத்தால் மனிதப் பிறப்பில் வருகின்றன. தாயின்
வயிற்றில் கருவில் உருவாகி கண் காது முதலிய அங்கங்களை இறைவன் அமைத்துத்தரப்
பெறுகின்றோம்.
இந்த
மனித உடம்பு பலப்பல கருவிகளுடன் கூடிய அழகிய படைப்பு. அதியற்புதமானது.
நரைமாதர்
கையிலே விழவேகி ---
நரைமாது-மருத்துவச்சி.
மகவைப் பெறும்போது அருகில் இருந்து உதவி செய்கின்ற அவள் கையில் குழந்தை வந்து
விழுகின்றது.
அணைத்துயிலென
---
அணை-படுக்கை.
படுக்கையில் தூங்குக என்று தாய் தாலாட்டித் தூங்க வைப்பாள். தமிழ் நாட்டில்
தாலாட்டும் பாட்டிலேயே பல அரிய உண்மைகள் அடங்கிக் கிடக்கும்.
கருதாய்
---
கருது
ஆய். குழந்தையின் நலத்தையே எண்ணுகின்ற அன்னை,
தருதாரமுமாகிய
சுற்றமு நலவாழ்வு நிலாத பொருட்பதி சதமாய் இதுதானென ---
பெண்
வீட்டார் கன்னிகாதானமாகத் தந்த மனைவி, சுற்றத்தார்கள், நல்லவாழ்வு, நிலையில்லாத செல்வம், ஊர் முதலியவற்றை அறிவின்மையால் என்றும்
சதம் என்று மாந்தர் கருதி மாய்கின்றனர்.
நில்லாதவற்றை
நிலையின என்று உணரும்
புல்லறி
வாண்மை கடை ---திருக்குறள்.
உன
தாளிணையைத் தொழ அறியாத நிர் மூடனை ---
இறைவனுடைய
திருவடியைத் தொழுதால் நிலையான பேரின்பங் கிடைக்கும்.
இறைவனைத்
தொழுதவரை உலகமெல்லாந் தொழும். அப்பரமனைத் தொழாதார் வறியராய் எல்லோரையுந் தொழுது
அழுது அவல நிலையில் அல்லல் படுவர்.
நிற்புகழ்
தனை ஓதி மெய்ஞ்ஞானம் உறச் செய்வது ஒருநாளே ---
இறைவன்
புகழ் இருள்சேர் இரு வினையைக் கெடுத்து ஞான வொளியைக் கொடுக்கும்.
இருள்சேர்
இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர்
புகழ்புரிந்தார் மாட்டு ---
திருவள்ளுவர்.
“ஆதலால் முருகா! உனது
திருப்புகழை யோதி அடியேன் மெய்ஞ்ஞான நிலையைப் பொருந்தும் நாள் என்று கிடைக்குமோ?” என்று அருணையடிகள் இறைவனிடம்
முறையிடுகிறார்.
திகுதா
வுணவாய் ---
திகுதிகு
எனல்-விரைவுக்குறிப்பு.
அலையா
மலை ---
அலை-மிகுதி.
அதிசயங்கள் மிகுந்த மலை சோலைமலை.
கருத்துரை
சோலைமலைக்
குமரா! உன் திருப்புகழைப் பாடி அடியேன் மெய்ஞ்ஞானம் பெற அருள்புரிவீர்.
No comments:
Post a Comment