தன் பாவம் தன்னோடே




22. தன் பாவம் தன்னோடு

செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்
     நெறியே! நின் செயல் உண்டு ஆகில்
எங்கு ஆகில் என்ன? அவர் எண்ணியது எல்-
     லாம் முடியும்!, இல்லை ஆகில்,
பொங்கு ஆழி சூழ் உலகில் உள்ளங்கால்
     வெள் எலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
     தன் உடனே ஆகும் தானே.

              இதன் பொருள் ---

     செங்காவி  மலர்த் தடம் சூழ் தண்டலை நீள் நெறியே --- சிவந்த குவளை மலர்களை உடைய பொய்கைகளால் சூழப்பட்டு உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியவரே!

     நின் செயல் உண்டாகில் --- உமது நல் அருள் உண்டானால்,

     எங்கு  ஆகில் என்ன --- எவ்விடமாக இருந்தாலும் என்ன?

     அவர் எண்ணியது எல்லாம் முடியும் --- அவர்கள் எண்ணியது எல்லாம் முடியும்,

     இல்லை ஆகில் --- உமது அருள் இல்லையானால், 

     பொங்கு ஆழி சூழ்  உலகில் --- நீர்  மிகுந்து பொங்கும் கடலால் சூழப்பட்டு உள்ள இந்த உலகத்தில்,

     உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போக --- உள்ளங்காலில் உள்ள தசைகள் எல்லாம் தேய்ந்து, வெள்ளை எலும்பு தெரியும் படியாக,

     ஐங்காதம் ஓடிப் போனாலும் --- ஐந்து காத தூரம் ஓடிப் போய் அலைந்தாலும்,

     தன் பாவம் தன் உடனே ஆகும் --- தான் செய்த தீவினை தன்னுடனேயே இருக்கும்.

      விளக்கம் --- இறைவன் அருளானது நமது ஊழ்வினைக்கு ஏற்றவாறே அமையும். ஆகையால், "நின்செயல் உண்டாகில் எண்ணிய எல்லாம் முடியும்" என்றார். ‘உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போக' என்பது பழமொழி. ‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனே' என்பதும் பழமொழி.

      பொருளின் மேல் பேராசை கொண்டு அலையாமல், இறைவன் அருளை வேண்டி இருக்கவேண்டும் என்றது.


No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...