"உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்
வளர்க்கஉடல் உழல்வ தல்லால்,
மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்
தினம்பணிய மாட்டேன்! அந்தோ!
திருவிருக்கும் மணிமாடத் தண்டலைநீள்
நெறியே! என் செய்தி யெல்லாம்
சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய
நேரம்இல்லாத் தன்மை தானே!"
இதன் பொருள் ---
திரு இருக்கும் மணிமாடத் தண்டலைநீள் நெறியே - செல்வம் நிலைத்த மணிமாடங்கள் நிறைந்த "திருத்தண்டலை" என்னும் திருத்தலத்தில் "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!
உரு எடுத்த நாள் முதலா ஒருசாணும் வளர்க்க உடல் உழல்வது அல்லால் - இந்த உடம்பைத் தாங்கி வந்த நாள்முதலாக ஒருசாண் வயிற்றைக் காக்கவே இந்த உடம்பைக் கொண்டு உழைப்பது அல்லாமல், அந்தோ - ஐயோ! மரு இருக்கும் நின் பாதமலர் தேடித் தினம் பணியமாட்டேன் - மணங்கமழும் தேவரீருடைய திருவடி மலரை நாடி ஒவ்வொரு நாளும் வணங்காமல் விட்டு விட்டேன்! (என் செயலை என்ன என்று சொல்லுவது?)
என் செய்தி எல்லாம் - என் செய்கை யாவும், சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய நேரம் இல்லாத் தன்மை தானே - (குளிரைப் போக்க எண்ணியவனுக்கு) சருகு அரிக்க நேரம் இருக்குமே ஒழியக் குளிர்காய்வதற்கு நேரம் இல்லாத இயல்பு போலும்!
உழைத்துப் பொள் சேரப்பதிலேயே கருத்து இருக்கும். இறைவன் தந்த்து என்று அவனை வழிபட மனம் இருக்காது. வயிறார உண்டு உடுப்பதற்கோ அல்லது இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுவதற்கோ மனம் வராது என்பது கருத்து. சருகு அரிக்க நேரமே ஒழியக் குளிர் காய நேரம் இல்லை' என்பது பழமொழி.
No comments:
Post a Comment