திருவரத்துறை - 0769. கறுவி மைக்கண்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கறுவி மைக்கண் (திருவரத்துறை)

முருகா!
விலைமாதர் வயப்படாமல் காத்து அருள்.


தனன தத்தனத் தனன தத்தனத்
     தனன தத்தனத் ...... தனதான


கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
     கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக்

களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
     கருதி வைத்தவைப் ...... பவைசேரத்

தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
     தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச்

சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
     தருணி கட்ககப் ...... படலாமோ

பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
     பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும்

பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
     ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச்

சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
     சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன்

செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
     திருவ ரத்துறைப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

கறுவி மைக்கண் இட்டு, னிது அழைத்து, யல்
     கவி சொலி, சிரித்து ...... உறவாடி,

களவு வித்தை இட்டு உளம் உருக்கி, முன்
     கருதி வைத்த வைப்பு ...... அவைசேர,

தறுகணில் பறித்து, ரு கழுத்து உறத்
     தழுவி, நெக்கு நெக்கு ...... உயிர் சோர,

சயன மெத்தையில் செயல் அழிக்கும்இத்
     தருணிகட்கு அகப் ...... படல் ஆமோ?

பிறவியைத் தணித்து அருளும் நிட்களப்
     பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும்,

பெரு முனித்திரள் பரவு செய்ப்பதி,
     ப்ரபல கொச்சையில், ...... சதுர்வேதச்

சிறுவ! நிற்கு அருள் கவிகை, நித்திலச்
     சிவிகையைக் கொடுத்து ......அருள் ஈசன்

செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த்
     திரு அரத்துறைப் ...... பெருமாளே.


பதவுரை

      பிறவியை தணித்து அருளும் நிட்களப்பிரம சித்சுகக் கடல் மூழ்கும் பெருமுனித் திரள்பரவு செய்ப்பதி --- பிறவி வெப்பத்தை தணித்து உயிர்கட்கு அருள் புரியும், உருவம் அற்றதும், தூய்மை ஆனதும் ஆன ஞானானந்தக்கடலில் திளைத்து இருக்கும் முனிவர் கூட்டம் போற்றுகின்ற வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரே!

     ப்ரபல கொச்சையில் சதுர்வேதச் சிறுவ --- புகழ் விளங்கும் கொச்சைவயம் எனப்படும் சீகாழிப் பதியில் அவதரித்த நான்மறைச் சிறுவரே!

      நிற்கு அருள் --- உமக்கு அருள் புரிந்து,

     கவிகை நித்திலச் சிவிகையைக் கொடுத்து அருள் ஈசன் --- முத்துக் குடை, முத்துச் சிவிகை முதலியவற்றைக் கொடுத்து அருளிய சிவபெருமான் எழுந்தருளி உள்ள,

     செக தலத்தினில் புகழ்படைத்த மெய்த் திருவரத்துறைப் பெருமாளே --- பூவுலகத்தில் புகழோடு விளங்கும் திருவரத்துறை என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமையில் மிக்கவரே!

      கறுவி மை கண் இட்டு --- மை தீட்டிய கண்களினால் முதலில் கோபத்தோடு பார்ப்பது போல் நடித்து,

     இனிது அழைத்து --- பின்பு இனிமையாகப் பேசி அழைத்துத் தமது இடத்திற்குச் சென்று,

     இயல் கவி சொ(ல்)லி --- அழகாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடிக் காட்டி,

     சிரித்து உறவாடி --- சிரித்து உறவாடி

      களவு வித்தை இட்டு --- வஞ்சனையாகச் சாலங்களைப் புரிந்து,

     உளம் உருக்கி --- உள்ளத்தை உருக்கி,

     முன் கருதி வைத்த வைப்பு அவை சேர --- அவர் முன்னதாகவே திட்டமிட்டு, சேமித்து வைத்த பொருள்கள் எல்லாம் தம்மைச் சேரும்படியாக,

       தறுகணில் பறித்து --- கொடுமையாகப் பறித்து,

     இரு கழுத்து உறத் தழுவி --- இருவர் கழுத்தும் பொருந்தும்படியாக இறுகத் தழுவி

     நெக்கு நெக்கு உயிர் சோர --- உள்ளம் மிக நெகிழ்ந்து, உயிரும் சோரும்படி,

      சயன மெத்தையில் செயல் இழக்கும் இத் தருணிகட்கு அகப்படலாமோ --- படுக்கையில் செயல் அழியும்படியாகப் புரிகின்ற, இந்த இளம் பெண்களிடையே நான் அகப்படலாமோ?


பொழிப்புரை

      பிறவி வெப்பத்தை தணித்து உயிர்கட்கு அருள் புரியும், உருவம் அற்றதும், தூய்மை ஆனதும் ஆன ஞானானந்தக்கடலில் திளைத்து இருக்கும் முனிவர் கூட்டம் போற்றுகின்ற வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரே!

     புகழ் விளங்கும் கொச்சைவயம் எனப்படும் சீகாழிப் பதியில் அவதரித்த நான்மறைச் சிறுவரே!

       உமக்கு அருள் புரிந்து, முத்துக் குடை, முத்துச் சிவிகை முதலியவற்றைக் கொடுத்து அருளிய சிவபெருமான் எழுந்தருளி உள்ள, பூவுலகத்தில் புகழோடு விளங்கும் திருவரத்துறை என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமையில் மிக்கவரே!

     மை தீட்டிய கண்களினால் முதலில் கோபத்தோடு பார்ப்பது போல் நடித்து, பின்பு இனிமையாகப் பேசி அழைத்துத் தமது இடத்திற்குச் சென்று, அழகாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடிக் காட்டி, சிரித்து உறவாடி வஞ்சனையாகச் சாலங்களைப் புரிந்து,
உள்ளத்தை உருக்கி, வந்த அவர் முன்னதாகவே திட்டமிட்டு, சேமித்து வைத்த பொருள்கள் எல்லாம் தம்மைச் சேரும்படியாக, கொடுமையாகப் பறித்து, இருவர் கழுத்தும் பொருந்தும்படியாக இறுக்கத் தழுவி உள்ளம் மிக நெகிழ்ந்து, உயிரும் சோரும்படி, படுக்கையில் செயல் அழியும்படியாகப் புரிகின்ற, இந்த இளம் பெண்களிடையே நான் அகப்படலாமோ?

 
விரிவுரை

அடிகளார் இத் திருப்புகழ்ப் பாடலில் விலைமாதர்கள் புரியும் சாகசங்களையும், அவர்கள் புரியும் வஞ்சகச் செயல்களையும் அறிவித்து, விலைமாதர்களின் வலையில் சிக்காமல் காத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். நல்வினைப் பயன் வாய்க்காதபோது, தீயவழிகளில் மனமானது செல்லும். அதனால் இடர் உறும். விலைமாதர் வயப்படுவதும், பிறனில் விழைவதும் முற்பிறவியில் செய்த தீவினையின் பயனே ஆகும்.

கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என் செய்யார்?
காமம் கதுவபட் டார்.                           

என்றது நீதிநெறி விளக்கம்.

காமவெறி கொண்டவர்கள் கொலை செய்ய அஞ்சமாட்டார்கள். பொய் சொல்ல நாணமாட்டாரகள். மானத்தைக் காத்துக் கொள்ள மாட்டார்கள். திருட்டுத் தொழில் மட்டுமல்ல, மற்ற இழி தொழில்களையும் செய்யத் தலைப்படுவார்கள். பழிக்கும் பாவத்துக்கும் இடமான செயல் ஆயிற்றே என்று தெரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் எண்ணத்திற்குத் தடையாக எது வந்தாலும், அதை நீக்குவதற்கு, தகாத செயல்கள் செய்யவும் தயங்கமாட்டார்கள் என்கிறது இந்தப் பாடல்.

அவ்வாறு காமம் மீதூரப்பட்டால், அறிவு, பொருள், கல்வி ஆகியவை யாவும் அழிவுறும் என்கின்றார்

நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல், - ஒண்தொடீ
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம், அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.             ---  நல்வழி.

நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் அழிவு அடையும் காலத்திலே, முறையே தாம் கொண்ட குஞ்சும், முத்தும், அரிசியும், குலையும் ஆகியவற்றை ஈனும். அதுபோல,
அறிவும், செல்வமும், கல்வியும் அழிந்து போகும் காலம் வரும்போது, பிற மகளிர் மேல் ஆசையை வைப்பார்கள் ஆடவர்கள்.

மருவஇனிய சுற்றமும், வான்பொருளும், நல்ல
உருவும், உயர்குலமும் எல்லாம், - திருமடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும், அவள்பிரிந்து
போம்போது அவளொடு போம்.                --- மூதுரை.

தழுவிய இனிய உறவும், மேலான பொருளும், நல்ல அழகும், உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், சீதேவி வந்து கூடும் பொழுது, அவளுடனே வந்து கூடும். அவள் நீங்கிப் போகும் பொழுது, அவளுடனே நீங்கிப் போகும்.

பிறப்புக்கு விதை அவா. ஒவ்வொரு பிறப்பை நல்கும். பெண்ணவா பெருந்துன்பத்தைத் தரும். இதிலும் பொதுமகளிர் உறவு திருவையும் தெளிவையும் உருவையும் அழிக்கும்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.                   ---  திருக்குறள்.
  
கள்ளைப்போல், அறிவை மயக்கும் தன்மை விலை மகளிர் உறவு. அதனால் திருவள்ளுவர் வரைவின் மகளிர்என்ற அதிகாரத்துக்குப் பின் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை அமைத்தனர்.

விலைமாது ஒருத்தி, தனது தோழியிடம் கேட்கின்றாள். "தோழி, என்னைப் புணர ஆசைப்பட்டு வருபவர்கள், எனக்கு இன்பத்தைத் தருவதோடு, தமது பொன்னையும் கொடுத்து, எனது பாதத்திலும் விழுவது ஏன்?"

அன்னையே அனைய தோழி,
     அறம்தனை வளர்க்கும் மாதே
உன்னை ஓர் உண்மை கேட்பேன்,
     உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையே புணரு வோர்கள்
     எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும் கொடுத்து, பாதப்
     போதினில் வீழ்வது ஏனோ.

இதற்குத் தோழி பகரும் மறுமொழி... "செல்வத்தை நிரம்பப் படைத்து இருந்தும், செம்மையாக அறம் செய்யாதவர்களுடைய செல்வமானது சிதறிப் போகவேண்டும் என்பதற்காகவே, விலைமாதர்களாகிய உம்மையும், கள்ளையும், சூதாட்டத்தையும் பிரமதேவன் படைத்து வைத்தான்."

பொம்மெனப் பணைத்து விம்மி
     போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முளையி னாளே,
     கூறுவேன் ஒன்று கேண்மோ,
செம்மையில் அறஞ்செய் யாதார்
     திரவியம் சிதற வேண்டி
உம்மையும் கள்ளும் சூதும்
     நான்முகன் படைத்த வாறே.     --- விவேகசிந்தாமணி.

விலைமாதருடைய மெல்லிய தோள்கள், அறிவில்லாத மூடர்கள் அழுந்துகின்ற நரகம் என்றும் திருவள்ளுவனார் கூறுகின்றார்.

வரைவிலா மாண்இழையார் மென்தோள், புரைஇலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

ஆதலின், அம்மகளிர் பின் சென்று அவமே அலைந்து திரியாது, ஆன்றோர் பின்சென்று மாந்தர் உய்தல்வேண்டும்.

திகழ்மாதர் பின்செருமி அழிவேனோ  என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். 

அம்மி துணையாக ஆறு இழிந்த ஆறு ஒக்கும்,
கொம்மை முலை பகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்று அன்று, மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.                ---  நல்வழி.

பகட்டு மொழி பேசும் பரத்தையர்களின் உடல் உறுப்புக்களின் கவர்ச்சியைக் கண்டு, அவர்களிடம் மயங்கி, மனத்தைப் பறிகொடுப்பது, அம்மிக் கல்லை மிதக்கும் கட்டையாக எண்ணி, அதனைத் துணையாகக் கொண்டு ஆற்று வெள்ளத்தில் இறங்குவதற்கு ஒப்பாகும். அவர்களுடன் தொடர்பு கொள்வது, இந்தப் பிறவிக்கும், இனி வரும் பிறவிக்கும் பாவத்தைத் தேடுவது ஆகும். வேசியர் நட்பானது பெரிய செல்வத்தையும் அழித்து, கைப்பொருள் இல்லாத வெறுமையையும் வறுமையையும் உண்டாக்கும்.

எனவே, தீவினை வயப்பட்டு, விலைமாதர் பின் சென்று அழியும் நிலையை விலக்கி, நல்லறிவும் நல்லருளும் தந்து ஆட்கொள்ள வேண்டும் என்று அடிகளார் வேண்டிக் கொள்கின்றார்.  நாம் வேண்டத்தக்கதும் அதுவே ஆகும்.


கறுவி மை கண் இட்டு ---

கறுவி, கறுவுதல் - கோபித்தல்.

எதிர்ப்படும் ஆடவரை, விலைமாதர்கள் தமது மை தீட்டிய கண்களினால் முதலில் கோபத்தோடு பார்ப்பது போல் நடிப்பார்கள். வந்தவரின் உள்ளக்கிடையை அறிந்துகொள்வார்கள்.

    
முன் கருதி வைத்த வைப்பு அவை சேர ---

வைப்பு - சேமநிதி.

வாழ்நாளில் எய்ப்பு வரும் காலத்தில் உதவும் என்று ஈட்டிய பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்து வைப்பாக வைத்திருப்பர்.
"உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு" என்பார் வள்ளல் பெருமான்.

தறுகணில் பறித்து ---

"தறுகண்ணில்" என்னும் சொல் "தறுகணில்" என இடைக்குறைந்து வந்தது.

தறுகண் - கொடுமை, வன்கண்மை.


சயன மெத்தையில் செயல் இழக்கும் இத் தருணிகட்கு அகப்படலாமோ ---

தருணம் - இளமை.  இளம் பிறையைத் திருமுடியில் வைத்துள்ள சிவபெருமானை, "தருணேந்து சேகரன்" (தருண+இந்து) என்னும் திருவிசைப்பா.

தருணிகள் - இளம்பெண்கள். பதினாறு முதல் முப்பது வயது உள்ள பெண்களைத் தருணிகள் என்பர்.

பிறவியை தணித்து அருளும் நிட்களப்பிரம சித்சுகக் கடல் மூழ்கும் பெருமுனித் திரள்பரவு செய்ப்பதி ---

நிட்களம் - உருவம் இல்லாதது. தூய்மை ஆனது.

பிரமம் - முழுமுதல் பொருள். தனக்கு முன்னாக ஒன்றும் இல்லாதது. தனக்கு முதல் இல்லாதது.

சித் - தூய அறிவு.

இறைவன் தூய அறிவு வடிவானவன். "அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி" என்பார் பிறிதோர் திருப்புகழில். அந்த அறிவிலே விளங்கும் ஆனந்தம் கடலைப் போன்றது. சித்சுக ஆனந்தக் கடல். ஆன்மா, பிறவியை இறையருளால் ஒழித்து, ஆனந்தக் கடலில், ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருக்கச் செய்வது இறைவன் பெருங்கருணை. "நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதம்" என்பது உண்மை விளக்கம்.

செய் - வயல். செய்ப்பதி - வயலூர்.


ப்ரபல கொச்சையில் சதுர்வேதச் சிறுவ ---

ப்ரபலம் - புகழோடு விளங்குவது.

கொச்சை, கொச்சைவயம். சீகாழிப் பதிக்கு விளங்கும் பன்னிரண்டு திருப்பெயர்களில், கொச்சைவயம் என்பதும் ஒன்று.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.  ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி  சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய்  சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம்  சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம்  சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர்  செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீர்காழி  காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம்  பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

சீகாழி, திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த திருத்தலம். அவர் நான்மறை வித்தகர். "வேத பாரகர்" என்பார் செய்வச் சேக்கிழார். "நான்மறை வல்ல ஞானசம்பந்தன்" "நான்மறை கற்றவன்", "நான்மறை நாவன்" என்று பெருமான் தம்மைக் குறித்துத் தேவாரத் திருப்பதிகங்களில் வைத்துப் பாடி உள்ளார்.

முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர் சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று, முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு திருஞானசம்பந்தராக வந்த அவதாரம் புரிந்தது. முருகவேள் பிறப்பு இல்லாதவர் என்பதை நம் அருணகிரியார், "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக.  இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேல் அண்ணலே திருஞானசம்பந்தராகவும் உக்கிரகுமாரராகவும் பிறந்தார் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாதுயாது உண்டோ அவை அனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பிலி என்பதை வேதாகமங்களால் நுணுகி ஆராய்ந்து அறிக.

 நிற்கு அருள் ---

நிற்கு - நினக்கு, உமக்கு.

திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அருள் புரிந்தார் சிவபெருமான்.

கவிகை நித்திலச் சிவிகையைக் கொடுத்து அருள் ஈசன், செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த் திருவரத்துறைப் பெருமாளே ---

முத்துக் குடை, முத்துச் சிவிகை முதலியவற்றைத் திருஞானசம்பந்தருக்குக் கொடுத்து அருளிய சிவபெருமான் எழுந்தருளி உள்ளதும், பூவுலகத்தில் புகழோடு விளங்குவதும் ஆகிய திருவரத்துறை என்னும் திருத்தலம்.

நடு நாட்டுத் திருத்தலம் ஆகிய இது, திருவட்டுறை, திருவரத்துறை என்று மக்களால் இப்போது வழங்கப்படுகின்றது.

தொழுதூர் - விருத்தாசலம் சாலையில் தொழுதூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண் சாலையில் ஒரு கி.மி. சென்று இத்திருத்தலத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான பெண்ணாகடத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் திருநெல்வாயில் அரத்துறை உள்ளது.

இறைவர்     : அரத்துறைநாதர், ஆனந்தீசுவரர், தீர்த்தபுரீசுவரர்
இறைவியார் : அரத்துறைநாயகி, ஆனந்த நாயகி, திரிபுர சுந்தரி
தல மரம்     : ஆல மரம்
தீர்த்தம்      : நிவா நதி

மூவர் முதலிகளும் வழிபட்டு, திருப்பதிகங்கள் அருளப்பெற்றது.

திருவரத்துறையில் சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு அருள் புரிந்த வரலாறு

பாலறாவாயராகிய நம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பெண்ணாகடத்துத் திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தைத் தொழுது, திருவரத்துறை என்னும் அரும்பதியை வணங்க விரும்பிச் செல்லும்போது, இதற்கு முன்பு எல்லாம் தமது திருத் தந்தையாரது தோளின் மேல் அமர்ந்தருளும் நியமம் ஒழிந்து, தமது பாதபங்கயம் சிவந்து வருந்த, மெல்ல மெல்ல நடந்து சென்று, மாறன்பாடி என்னுந் திருத்தலத்தை அடையும்போது அப்பரம குருமூர்த்தியின் திருவடித் தளர்வினைக் கண்டு வருந்தினான் போல் சூரியன் மேற்கடலில் வீழ்ந்தனன்.

வெம்பந்தம் தீர்த்து, உலகு ஆள் வேந்தராது நம் சம்பந்தப் பிள்ளையார் அன்றிரவு அப்பதியில் திருவஞ்செழுத்தை ஓதித் தங்கினார். திருவரத்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், திருஞானசம்பந்தப் பெருமானுடைய திருவடியின் வருத்தத்தைப் பொறாதவராய், ஏறுதற்கு முத்துச் சிவிகையும், மணிக்குடையும், கூறி ஊதக் குலவு பொற்சின்னங்களும் அமைத்துக் கொடுக்கத் திருவுளம் கொண்டு, அவ்வூர் வாழும் மேலோர் கனவில் தோன்றி, “ஞானசம்பந்தன் நம்பால் வருகின்றான்; அவனுக்குத் தருமாறு முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் நம் திருக்கோயிலில் வைத்திருக்கின்றோம். நீங்கள் அவைகளை அவன்பால் கொண்டு கொடுங்கள்” என்று பணித்தருளினார்.

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்,
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆள சின்னம் நம்பால் கொண்டு, அருங்கலைக்
கோன், அவன்பால் அணைந்து கொடும் என.   --- பெரியபுராணம்.

அவர்கள் ஆலமுண்ட அண்ணலின் திருவருளையும் திருஞானசம்பந்தருடைய பெருமையையும் உன்னி, உள்ளத்தில் உவகையும் வியப்பும் எய்தி, நீராடி விடியற்காலை திருக்கோயிலின் திருக்கதவம் திறந்து பார்க்க, அவைகள் அவ்வாறிருக்கக் கண்டு மிகவும் விம்மிதமுற்று, அவைகளை எடுத்துக் கொண்டு, திருஞானசம்பந்தப் பெருமானை எதிர்கொண்டு சென்றனர்.

சிவபெருமான் திருஞானசம்பந்தர் கனவிலும் சென்று, “குழந்தாய்! முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் உனக்குத் தந்தனம். அவைகளைக் கொண்டு நம் பதிகள் தோறும் வருக” என்று கட்டளை இட்டருளினார். திருஞானசம்பந்த அடிகள் கண் துயிலுணர்ந்து, எந்தையாரது எளிவந்த வான் கருணையை உன்னி, உள்ளம் உவந்து, நீராடி திருவரத்துறைக்கு வருவாராயினார்.

அவ்வூர் வாசிகள் எதிர்கொண்டு திருவடியில் வீழ்ந்து பணிந்து பாம்பணிந்த பரமனது கட்டளையை விண்ணப்பித்தனர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவைகள் இறைவன் திருவருள் மயமாதலால் சோதி முத்தின் சிவிகையை வலம் வந்து நிலம் உறப் பணிந்து, அச் சிவிகையின் ஒளி வெண்ணீறு போன்று விளங்கலால் அதனையும் துதித்து, அச் சிவிகை திருவருள் வடிவாதலின் திருவஞ்செழுத்தை ஓதி எல்லா உலகமும் ஈடேற அதன் மீது எழுந்தருளினார். முத்துச் சின்னங்கள் முழங்கின. அடியவர் அரகர முழக்கம் செய்தனர். முத்துக் குடைகள் நிழற்றின. வேதங்கள் முழங்கின. புங்கவர் பூமழை பொழிந்தனர்.

பல்குவெண் கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றுஒளி யுடன்பொலி புகலி காவலனார்
அல்கு வெள்வளை அலைத்து எழு மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி உதித்தென வந்தார்.    --- பெரியபுராணம்.

திருவரத்துறைத் திருக்கோயில் வந்ததும், சிவிகை விட்டு இறங்கி, திருக்கோயில் சென்று இறைவனை வணங்கி, அவனது திருவருளைப் போற்றித் திருப்பதிகம் பாடியருளினார்.

எந்தை! ஈசன்! எம்பெருமான்!
     ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால்,
     சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி,
     கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில்
     அரத்துறை அடிகள் தம் அருளே.

எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் இறைவனது அருளானது, அவனை வழிபடுவோர்க்கே சித்திக்கும் என்பதை உணர்த்தி அருளினார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் வயப்படாமல் காத்து அருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...