சும்மா இருக்கும் எல்லை
-----
சும்மா இருப்பது சுலபம் அல்ல.
ஆனாலும், அதுவே சுகபூரண நிலை ஆகும்.
இறை அனுபவத்தை எப்படி எல்லாமோ சொல்லிக் கொண்டு வந்த அருணகிரிநாதர், ஒரு பாட்டில், "சொல்ல முடியாத அனுபவம் அல்லவா அது" என்று கூறுகிறார்.
ஒரு குழந்தை இறந்துவிட்டது. அக்குழந்தையின் தாயிடம் பலர் சென்று, "நேற்றுக் கூட விளையாடிக் கொண்டிருந்தானே! எப்படி இறந்தான்?" எனத் துக்கம் கேட்கிறார்கள். தாய், "நேற்றுக் கூட...... விளையாடிக் கொண்டுதான் இருந்தான்........ மாலையில் கூட நன்றாகப் பேசிக் கொண்டிருந்தான்......" என எல்லை மீறிய துக்கத்தினால் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாதவாறு இடை இடையே துன்பக் கொட்டாவி விடுவாள். எல்லை மீறிய இன்பம் அடைந்தவனும் இப்படித்தான் தனது அனுபவத்தைச் சொல்ல முடியாமல் திணறுவான். தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்ல வந்து அருணகிரியாருக்கு இடையிடையே வருகிறது அந்தக் கொட்டாவி. முதல் பாட்டிலேயே, "பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா!" என்று இந்த அநுபவ அதிசயம் வெளிப்பட்டது. இன்னொரு பாட்டில், "சொல்லுகைக்கு இல்லை என்று,எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல எனை விட்டவா!" என்று ஆச்சரியம் ததும்பத் தனது அனுபவாதீத்தை வெளிப்படுத்துகின்றார்.
சில அநுபவங்கள் சொல்ல முடியும். கேட்டவர்களும் அநுபவிக்க முடியும். பழம் இனிக்கிறது என்று மாத்திரம் சொல்ல முடியும். எப்படி இனிக்கும் என்று ஒருவாறு சொல்ல முடியாது.
பழத்தைத் தின்றால்தான் அது எப்படி இருந்தது என்று தெரியும். ஆனால், ஆன்ம அநுபவத்தைச் சொல்லவும் முடியாது. எல்லோரும் அநுபவிக்கவும் முடியாது. "நான் ஒர் எல்லைக்குள் இருந்தேன். பிறகு வேறொரு புதிய எல்லைக்குள் புகும்படி முருகப் பெருமான் அருள் செய்தான்" என்று தொடங்குகிறார். அவர் முன்பு இருந்த எல்லை நாம் இப்போது இருக்கும் துன்பமான எல்லை. எதையும் வாக்கினாலே சொல்கிற எல்லை. ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடியாத எல்லை. எப்பொழுதும் வேகத்தோடு வாழ்க்கை நடத்துகின்ற அந்த எல்லைக்குள் சும்மா செயலற்று இருக்கும் நிலை இல்லை. அந்த வேகம் கெட்டால்தான் இன்பநிலை வாய்க்கும். அதனை அருள் புரிந்த இறைவனை "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்" என்றார் மணிவாசகப் பெருமான். வேந்தனது ஆணைக்கு அடங்காதவரும் இருக்கலாகுமா? எனவே, தனது மனோவேகத்தைக் கெடுத்து, தன்னை ஆட்கொண்ட இறைவனை "வேந்தன்" என்றார். மனித வாழ்வில் எங்கே திரும்பினாலும் ஒரே பேச்சுத்தான். சும்மா இருப்பதனால்தான் சுகம் என்பதைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் கூட பேச்சு அடங்குவதாக இல்லை. தன்னை இழக்காத நிலை இது. அருணகிரியார் புகுந்த எல்லை, எல்லாம் அடங்கிச் சும்மா இருக்கும் மோன நிலை.தன்னை இழந்த நிலை.
சும்மா இருக்கும் இடத்துக்கும், இருக்கிற இடத்துக்கும் நடுவில் ஒர் எல்லை உண்டு. "அந்த எல்லையைத் தாண்டி, சும்மா இருக்கும் எல்லைக்குள் செலுத்தினான்" என்கிறார். "அதைப் பற்றி எதுவும் சொல்லுகைக்கு இல்லை" என்கிறார். தன்னை இழந்த நிலை இது. இழப்பது என்பது நட்டம்தானே. என்னிடம் இருந்த ஒன்றை இழந்துவிட்டேன் என்று சொன்னால்,அது வருத்தப்பட வேண்டிய நிலை. ஆனால், இங்கே தாம் இழந்த நிலையைச் சிறப்பித்துப் பேசுகிறார். தன்னை இழப்பது நட்டமே அல்ல,இலாபம் என்று சொல்கின்றார் அருணகிரிநாதர். இலாபம் என்பது நலம். இழப்பு என்பது கேடு. "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்கின்றார்.
"உல்லாச நிராகுல, யோகஇதச்
சல்லாப விநோதனும் நீஅலையோ?
எல்லாம் அற,என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா! சுர பூபதியே!"
என்று கந்தர் அநுபூதியில் பாடுகிறார். "எல்லாம் அற்றுப் போக,என்னையும் நான் இழந்த அந்த நலம் எப்படி எனச் சொல்வாய், முருகா" என்று கேட்கிறார். எல்லாம் இழந்ததை "நலம்" என்கிறார். மூட்டை முடிச்சுக்கள் இல்லை என்றால் பயணம் இனிமையாகத் தானே இருக்கும். ஆனால், மூட்டை முடிச்சுக்கள் இல்லாமல் பயணம் செய்ய முடியாதே.
பாயசம் சாப்பிட்ட குழந்தை,அதன் சுவையை உணர்ந்து சொல்ல முடியவில்லை. "பாயசம் நல்லா இருந்தது, இல்லையா அம்மா" என்று தாயைக் கேட்பது போல, அருணகிரியாரின் அனுபவம் அமைந்து விட்டது. "உலக இன்பத்தை நுகர்வதற்குக் கருவியாக இருக்கும் கருவிகள்,கரணங்களை எல்லாம் இழந்தேன். அவற்றை இன்னவாறு இழந்தேன் என்று என்னால் சொல்லக் கூட முடியவில்லை. காரணம், நான் என்னையே இழந்துவிட்டேன். என்னையே இழந்த பிறகு, நான் அனுபவித்ததை உணரவும்,சொல்லவும் என்னால் சொல்ல முடியவில்லை. அந்த நிலைக்கு என்னை ஆக்கியவன் நீ. எல்லாம் அற என்னை நான் இழந்த நலத்தை நீதான் சொல்ல வேண்டும்"என்று முருகப் பெருமானைக் கேட்கிறார். எல்லாம் இழந்த நிலையில், தன்னை இழந்த நிலையும் அடங்கும்.
உடலைப் பற்றியிருக்கிற நோய் நீங்கினால், உடலுக்கு இன்பம் உண்டு. நோய்க்கு இடம் கொடுக்கிற உடம்பு உண்டாவதே ஒரு நோய்தான். அது பிறவிப் பிணி ஆகும்.
உலகில் பிறந்து புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வதனால் பிறவிநோய் உண்டாகிறது. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினாலே செய்கின்ற புண்ணிய பாவங்கள்தான், உயிரைப் பிணிக்கும் நோய்க்குக் காரணம். புண்ணியம் செய்தல் எப்படி நோய்க்குக் காரணமாகும் எனக் கேட்கத் தோன்றும். புண்ணியம் செய்கின்றவர்கள் தேவர்களாகப் பிறக்கின்றார்கள். பாவம் செய்கிறவர்கள் விலங்குகளாகவும், மனிதர்களாகவும் பிறக்கின்றார்கள். ஆகவே, பிறவி என்னும் நோய்,புண்ணியம், பாவம் ஆகிய இருவினைகளையும் செய்வாருக்கும் உண்டு. தங்கத்தினால் செய்த விலங்கைக் கைகளில் பூட்டினாலும், இரும்பினால் ஆன விலங்கைப் பூட்டினாலும் விலங்கு விலங்குதான். தங்கத்தினால் அமைந்த விலங்கு காப்பாகிவிடாது. காப்பாக இருந்தால் இரு கைகளையும் தனித்தனியே வீசி நடப்பதற்கு அனுகூலமாக இருக்கும்.இரு கைகளிலும் தனித்தனியே இருக்கும். புண்ணியம், பாவம் ஆகிய இருவினைகளிலும் ஏற்படுகின்ற நோயினால் உயிருக்குச் சுதந்தரத் தன்மை போய்விடுகிறது. இரண்டாலும் பிறப்பு ஏற்படுகின்றது. பிறப்பதனால் துன்பம் உண்டாகும்.
"இருள்சேர் இருவினையும் சேரா,இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு"
என்கிறார் திருவள்ளுவர். நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளையும் "இருள்சேர் இருவினை" என்று சொல்கிறார். நாம் செய்கின்ற வினைகளான புண்ணியம், பாவம் ஆகியவற்றினால் உயிரைப் பற்றும் பிறப்பாகிய நோய் வருகின்றது. இறைவனை அடைந்தவர்களிடம் இந்த இருவினையும் சேரா. பிறப்புக்குக் காரணமாக அமைந்தவை, உடம்பினால் நாம் செய்கின்ற செயல், வாக்கினால் நாம் பேசுகின்ற பேச்சு, மனத்தினால் நாம் நினைக்கின்ற நினைப்பு என்பவை.
பிறவி என்ற நோய் இல்லாமல் இருந்தால் இன்பம் உண்டாகும். நோய் தீர்ந்தால் இன்பம்.ஆகவே நோய்க்குக் காரணமான செயல்கள் இல்லாமல் ஒழிந்து போக வேண்டும். மனம் வாக்கு காயம் என்னும்மூன்று கரணங்களும் செயல் இழந்து போக வேண்டும். மூன்று கரணங்களும்செயலிழந்து போனால் புண்ணியமும் இல்லை.பாவமும் இல்லை. புண்ணிய பாவம் இல்லாமையினால் பிறவி நோய் இல்லை. மூன்று கரணங்களும் ஒருங்கே சும்மா இருக்க வேண்டும். ஒர் இடத்தைவிட்டு ஆடாமல் அசையாமல் இருப்பது உடம்பு சும்மா இருத்தல் (காஷ்ட மௌனம்). எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பது மனம் சும்மா இருத்தல் (மன மௌனம்).எதைப் பற்றியும் பேசாமல் இருப்பது வாக்கு சும்மா இருத்தல் (வாய் மௌனம்). இந்த மூன்றும் மூவகை மோனம்எனப்படும்.
அருணகிரியார், "சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல என்னை விட்டவாறு என்னே" என்று அதிசயப்படுகிறார். பல இடங்களில் அவர் இதைப் பற்றிச் சொல்கிறார். "சும்மா இருப்பது என்ன அவ்வளவு அருமையானதா? சும்மா எதுவும் பேசாமல், செய்யாமல்இருப்பவர்கள் சோம்பேறிகள் அல்லவா?" என்ற கேள்வி எழலாம்.
ஒர் ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் யாருடனும் எதுவும் பேசாமல் எப்பொழுதும் மெளனமாகவே ஒரு கோயிலின் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு அந்தக் கோயில் நிர்வாகிகள் ஒரு பட்டைச் சாதம் தினமும் கொடுப்பது வழக்கம். புது நிர்வாகி ஒருவர் வந்தார். கணக்குகளைப் பார்க்கும்போது, "சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை" என்று இருப்பதைக் கண்டார். அவருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்கு எதற்காகச் சோறு? இனி மேல் அந்தச் சாமியாருக்குச் சோறு கொடுக்கக்கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தார். சாமியாரிடம் மற்றவர்களுக்கு மரியாதை உண்டு. "அப்படிச் சொல்வது சரியல்ல" என்று அவர்கள் சொல்ல விரும்பினாலும் அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல மெல்ல நிதானமாக, "நீங்கள் அப்படி நினைக்கக் கூடாது. சும்மா இருப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. புலன் ஒடுங்கிய ஞானிகளுக்குத்தான் அது சாத்தியம். அவர் பெரிய ஞானி" என்று அதிகாரியிடம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தார். "சும்மா இருப்பது என்ன ஐயா அருமை? நான் இன்று முழுவதும் யாருடனும் பேசாமல் சும்மா இருக்கிறேன், பாரும்" என்று பந்தயம் போட்டார் அந்த அதிகாரி. 'சரி' என மற்றவர்கள் விட்டுவிட்டார்கள்.
அதிகாரி, "இன்றைக்கு யாருடனும் பேசுவது இல்லை" என்ற விரதத்தோடு வீட்டுக்கு வந்தார். இது அவர் மனைவிக்குத் தெரியாது. அவர் வீட்டிற்குள் போவதற்குள்ளேயே, "இன்றைக்கு என்ன சமையல் பண்ணுவது? காய்கறி ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறீர்களா?" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவர் மெளனமாக உள்ளே போனார். அந்த அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சரிதான், பேசாவிட்டால் போங்கள். என்ன சமைக்கிறது என்று கேட்டால், ஊமை போல் இருந்தால் என்ன அர்த்தம்? நானும் பேசாமல் இருந்து விடுகிறேன்" எனக் கோபமாக உள்ளே போய்விட்டாள். இது ஏதடா வம்பாகப் போய்விட்டதே என்று அந்த அதிகாரி ஒன்றும் புரியாமல் மெளனமாகவே இருந்தார். "சாமி" எனக் கோயில் பூக்காரன் வந்தான். "இன்றைக்கு மாலை கட்ட வேண்டுமா? இல்லாவிட்டால் சரமாகவே கொண்டு வந்து விடட்டுமா?" என்று கேட்டான். "என் உறுதியைக் குலைப்பவர்கள் போல ஏனடா நிற்கிறீர்கள்?" என்று சொல்ல வேண்டும்போல அவர் மனம் துடித்தது. வாய் பேசவில்லையே தவிர, கையைக் காட்டி, முகபாவத்தால் ஏதோ சைகை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைச் சொறிந்து கொண்டே நின்றான். "சாமி மாட்டைப் பட்டிக்குப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்" என்று மாட்டுக்காரன் ஓடி வந்தான். அதிகாரியின் முகம் கோபத்தால் சிவந்து போய்விட்டது. இன்று எல்லோருமே அவரது மெளனத்தைக் குலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. அவருக்குத் தம்முடைய ஒரே குழந்தையிடம் அன்பு மிகுதி. அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போயிருக்கிறான் என எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையன் வந்தான். "மாமா, உங்கள் பையன் இன்று பள்ளிக்கூடம் வர வில்லையாம். வாத்தியார் அழைத்து வரச் சொன்னார்" என்றான். உள்ளே மிகக் கோபமாக இருந்த அவருடைய மனைவியின் காதில் இது விழுந்தது. "ஐயையோ! பள்ளிக்கூடம் போகிறேன் என்று அவன் எட்டு மணிக்கே போய்விட்டானே! எங்கே போனான்? கொஞ்சம் தேடிப் பாருங்களேன்" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள். "அப்படியா! எங்கே போயிருப்பான்? தனியாகவா போனான்?" என்று அதிகாரி பேசிவிட்டார். "என்னைக் கேட்டால்?கொஞ்சம் போய்த்தான் பாருங்களேன்" என்று துடித்தாள் அவர் மனைவி. "டேய் வேலா, டேய் முருகா, போய்க் குளம், குட்டையைப் பாருங்கடா; நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்த்து வருகிறேன்" என அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அதிகாரி வெளியே போய் விட்டார். சில மணி நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அப்பொழுதான் அவருக்குத் தெரிந்தது. மறுநாள் கோயிலுக்கு வந்தவர், "சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டைச் சோறு" என்று உத்தரவு போட்டுவிட்டார்.
உலகில் எதையும் சாதிக்கலாம். ஆனால், சிந்தையை அடக்கி, சும்மா இருப்பது என்பது மிகமிக அரிதான செயல். 'சும்மா இரு' என்று போகின்ற போக்கில் சொல்லிவிடலாம். இருப்பதிலேயே அதுதான் அரிதானது என்கிறார் தாயுமானவர்.
"கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம்;ஒருசிங்க முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து,ஐந்து உலோகத்தையும்
வேதித்து,விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல்கொ(ள்)ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்;
சலமேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம்அரிது, சத்தாகி என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தேசோ மயானந்தமே!" --- தாயுமானார்.
"மதயானையை நமது வசமாக்கிவிடலாம்; கரடி, புலியின் வாயைக் கட்டலாம்; சிங்கத்தின் முதுகில் ஏறலாம்;பாம்பைக் கையில் பிடிக்கலாம்; மற்ற உலோகங்களைப் பொன்னாக்கலாம்; இன்னொருவருக்குத் தெரியாமல் நடமாடலாம்; தேவர்களை அடிமையாக்கலாம்; எப்போதும் இளமையோடு இருக்கலாம்; இன்னோர் உடலில் புகலாம்; நீர் மேல் நடக்கலாம்; நெருப்பின் மேல் இருக்கலாம்; இணையில்லாத சித்திகளைப் பெறலாம்;ஆனால், இத்தனையையும் செய்தாலும், சிந்தனையை அடக்கிச் ‘சும்மா’ இருப்பது சிரமம். அந்தத் திறன் எளிதில் வந்துவிடாது, அதை எனக்கு அருள்வாய்!" என்கின்றார் தாயாமான அடிகளார்.
தாயுமான அடிகளாரின் இந்தப் பாடல் மூலம் செயற்கரிய செயல் எது என்பது தெரிகின்றது. நமக்கு அன்னியமாக உள்ளதை எல்லாம், அடக்கத் தெரிந்தாலும், நம்மோடு கூடவே இருக்கின்ற மனதை அடக்குவது ஒன்றுதான் மிகவும் அரிதான செயல். பொறிகளின் வாயிலாக,அறிவைப் பெற்று, உண்மைப் பொருளைத் தெளிவதற்காகவே இந்த உடம்பையும், இதில் உள்ள கருவிகளையும் படைத்துக் கொடுத்தான் இறைவன். ஐம்பொறிகளையும் ஆட்டுவித்து, அறிவைப் பெறவேண்டிய மனமானது, பொறிகளின் வழியே சென்று, அவற்றிக்கு அடிமையாக மாறிவிடுகின்றது.
சும்மா இருப்பதை "மோனநிலை" என்று சொல்லப்படும். உடல் அசையாமல் இருப்பது "காஷ்டமெளனம்". வாக்குப் பேசாமல் இருப்பது "வாய்மெளனம்". மனம் சிந்திக்காமல் இருப்பது "மனோமெளனம்". இந்த மூன்று வகையான மெளனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மனம் ஓடாமல் நிற்கிற போதுதான் பேச்சு நிற்கும்.உடம்பு அசையாமல் இருக்கும்.
ஒருவன் கட்டை போலப் படுத்துத் தூங்கினான் என்றால் அது மெளனம் ஆகாது. ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும், ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். சாப்பிடுவதற்குப் பொருள் இருந்தும் எதையும் புசிக்காமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுது, தூண்டுதல் பல இருந்தாலும் சாக்கிரம் என்னும் விழிப்பு நிலையில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல், எதுவும் சிந்திக்காமல் உடம்பு, வாக்கு, மனம்முதலியவற்றால்,உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. உடம்பும் வாக்கும் எப்பொழுது செயலற்று இருக்கும்? மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் இருக்கும். அதற்குத்தான் தியானம் என்று பேர். ஏதேனும் ஓர் உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி,மனோலயம் உண்டாகும்.
நாம் சும்மா இருப்பது மனோலயத்தை அடைவதற்கு. முதலில் ஒன்றை மனத்தில் வைத்து, மற்றவற்றை மறக்கப் பழகி விட்டால் அந்த ஒன்றையும் கடைசியில் நினைக்காமல் சும்மா இருக்கும் நிலை வரும்.
"முருகக் கடவுள் சும்மா இருக்கும் எல்லைக்குள் என்னைச் செலுத்தினான்" என்றார் அருணகிரியார். எப்படி இந்த நிலை வந்தது? கை இருக்கின்றன. அவை எதையும் செய்யவில்லை. கண்கள்இருக்கின்றன. அவை எதையும் பார்க்கவில்லை. உடம்பு இருந்தும் அது இயங்கவில்லை. வாக்கு இருந்தும் அது பேசவில்லை. மனம் இருக்கின்றது. ஆனால் அது இறந்து விட்டது. "இறந்தே விட்டது இவ்வுடம்பே" என்பார் அருணகிரிநாதர்.அது எதையும் சிந்திக்கவில்லை. எல்லாம் இருந்தும் சும்மா இருக்கும் நிலை அது.
எழுத்தைப் பழகுவதற்கு ஆசிரியர் ஒருவர் துணை வேண்டும். அதுபோலவே, மற்ற எல்லாவற்றையும் பழகுவதற்கு ஒரு துணை வேண்டும். துணை இன்றி ஏதும் நடவாது. தன்னையே இழந்த பிறகு உயிரின் முயற்சி மடங்கப் போய்விடும். இங்கே அருணகிரிநாதரை எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையில் சென்று இருக்கத் துணை புரிந்தது முருகன் திருவருள். "என்னுடைய ஆற்றலால் நான் எதுவும் செய்யவில்லை. இறைவன் தன்னுடைய அருள் ஆற்றலால் என்னை அந்த எல்லைக்குள் விட்டான். நான் என்னையே இழந்துவிட்டதால் என்னுடைய முயற்சியின் பயனாக அங்கே போகவில்லை. எல்லாம் அற, என்னை இழந்த நலத்தை விளைவித்தவனே முருகப் பெருமான்தான். முருகனே அந்த எல்லைக்குள் என்னைச் செலுத்தினான். அவனது அருள் வல்லமை என்னை அந்த நிலையில் விட்டது" என்கிறார்.
அவ்வாறு செலுத்தியவன் யார்? அருணகிரிநாதர் பாடியருளியதைக் காண்போம்....
"சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மாஇருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா! இகல் வேலன்,நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே".
இதன் பொருள் ---
போர் புரியும் வேலாயுதத்தை உடைய குமாரக் கடவுள், கொல்லிப் பண்ணைப் பொருந்திய இனிய மொழிகளை உடையவரும், மலையில் வாழ்பவரும், கொவ்வைப் பழத்தை ஒத்த சிவந்த வாயிதழை உடையவரும் ஆகிய வள்ளிநாயகியை விரும்பிக் கூடுகின்ற, பெருமை தங்கிய மலைபோன்ற திருத்தோள்களை உடை முருகப்பெருமானுடைய திருவருளாற்றலின் தன்மை, இன்ன தன்மையை உடையது என்று அளவிட்டுக் கூற முடியாதது என்று, மனம் வாக்கு காயம் என்னும் திரிகரணங்களை இழந்து, நினைவு, சொல், செயல் என்று ஏதும் அற்ற அனுபூதி நிலையில் அசைவற்று இருக்கும் எல்லையில் புகுமாறு அடியேனைச் செலுத்திய பெருங்கருணை அற்புதம்.
சும்மா இருக்கும் சுகத்தை ஆண்டவன் அருளால் அடைய முடியாமல், எதை எதையோ சுகம் என்று கருதி வாழ்கின்றோம் என்பதை, பின்வரும் தாயுமானவர் பாடல்களால் அறியலாம்.
"சும்மா இருக்கச் சுகம் உதயம் ஆகுமே,
இம்மாயா யோகம் இனி ஏனடா?- தம் அறிவின்
சுட்டாலே ஆகுமோ?சொல்ல வேண்டாம், கன்ம
நிட்டா! சிறுபிள்ளாய் நீ".
"சும்மா இருக்கச் சுகம்சுகம் என்று சுருதி எல்லாம்
அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும்,அறிவுஇன்றியே
பெம்மான் மவுனி மொழியையும் தப்பி,என் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன், அந்தோ என் விதிவசமே".
"நான் எனவும் நீ எனவும் இருதன்மை
நாடாமல்,நடுவே சும்மா
தான் அமரும் நிலை இதுவே சத்தியம்
சத்தியம் என, நீ தமியனேற்கு
மோனகுரு ஆகியும் கை கட்டினையே,
திரும்பவும் நான் முளைத்துத் தோன்றி
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே,
பரந்தேனே,வஞ்சனேனே".
"எம்மால் அறிவது அற,எம்பெருமான் யாதும் இன்றிச்
சும்மா இருக்க ஒரு சூத்திரம் தான் இல்லையோ".
"சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே".
"சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே".
அப்படிப்பட்ட நிறைவான சுகம், நிறைவான இன்பம், பூரணசுகம் எப்போது வரும் என்று ஏங்கிய வள்ளல்பெருமான், அந்த ஏக்கத்தை இறைவனிடமே வெளியிட்டு விட்டார்.
"இன்று வருமோ?நாளைக்கே வருமோ? அல்லது மற்று
என்று வருமோ?அறியேன்,என் கோவே!
துன்று மலவெம்மாயை அற்று,வெளிக்குள்
வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்."
சும்மா இருக்கும் சுகமானது நமக்கும் இந்தப் பிறவியிலேயே வாய்க்கவேண்டும். தப்பிப் போனால் இனிவரும் பிறவியிலாவது வாய்க்கவேண்டும்.
No comments:
Post a Comment