"நான்" மடிந்தால் இன்பம்.
-----
நிலத்திலை போடப்பட்ட வித்து மடிந்தால்தான் விளைவு பெருகும். இல்லாவிட்டால் அந்த விதை அழிந்து போகும். அதுபோலவே, மனிதனுக்கு "நான், எனது" என்னும் அகப்புறப் பற்றுக்கள் ஒழிந்தால்தான் உண்மையான இன்பம் மிகுந்து வரும்.
மனிதனிடம் உயர்ந்த அறிவு பொருந்தி இருக்கின்றது. இருந்தும் இழிந்த எண்ணங்களால் அவனது அறிவு பாழாகிப் போகின்றது. தன்னுடைய தாழ்வுக்கும் உயர்வுக்கும், தனது மனமே காரணமாக உள்ளது என்பதை அவன் உணர்ந்து கொள்ளாமையால், ஊனங்கள் பல விளைந்து, ஈனங்கள் பெருகி வருகின்றன. துயரங்களையும் இழிவுகளையும் விளைத்துக் கொண்டு, வழிவழியாக அவல நிலைகளைச் சந்தித்து வருகின்றான்.
நிலத்தில் விதைத்து வித்து அப்படியே கிடந்தால், அதில் இருந்து யாதொரு விளைவும் உண்டாவதில்லை. அது உருமாறி மடிந்த போதுதான் அதிலிருந்து முளை கிளம்பி, விளைவு தோன்றுகின்றது.
மனிதனுக்கு நான் என்னும் அகங்காரமாகிய வித்து தடித்து இருக்கின்ற வரையில் இனிமையான போகங்கள் உதிப்பது இல்லை. துயரங்களுக்கு எல்லாம் விளைநிலமாக நான் என்னும் ஆணவம் உள்ளது.
"ஆங்காரம் ஆனகுல வேடவெம் பேய்பாழ்த்த
ஆணவத் தினும்வலிதுகாண்,
அறிவினை மயக்கிடும், நடுஅறிய ஒட்டாது,
யாதொன்று தொடினும் அதுவாய்த்
தாங்காது மொழிபேசும், அரிஅரப் பிரமாதி
தம்மொடு சமானம் என்னும்,
தடையற்ற தேரில் அஞ் சுருவாணி போலவே
தன்னில் அசை யாதுநிற்கும்,
ஈங்கு ஆர் எனக்குநிகர் என்ன ப்ரதாபித்து
இராவணாகாரம் ஆகி
இதயவெளி எங்கணுந் தன்னரசு நாடுசெய்து
இருக்கும், இதனொடு எந்நேரமும்
வாங்கா நிலா அடிமை போராட முடியுமோ?
மௌன உபதேச குருவே!
மந்த்ர குருவே! யோக தந்த்ரகுருவே! மூலன்
மரபில்வரு மௌனகுருவே".
என்று தாயுமான அடிகளார் பாடி இருக்கின்றார்.
"அகங்காரமாகிய செருக்கு என்னும் கொடிய குலவேடரை ஒத்த கொடிய பேயானது, வலிமை மிக்க ஆணவத்தினும் மிகுந்த வலிமை உடையது. அது அடியேனுடைய அறிவினை மயக்குகின்றது. நடுவுநிலைமை (நன்மை தீமை) இன்னது என என்னை அறியவொட்டாமல் தடுக்கும். யாதொரு பொருளைப் பற்றினும் அப் பொருள் தானாக நின்று (கருதவும் கேட்கவும்) பொறுக்க ஒண்ணாத மொழிகளையே வரம்பு இல்லாமல் பேசும். பிரமன், திருமால், அரன் என்னும் முத்தேவர்களும் (சில வேளை) எனக்கு ஒப்பானவர் என்று பேசும். எவ்வகைத் தடையும் இல்லாமல் எங்கும் அசைந்து உருண்டு செல்லும் தேரில் பொருத்தப்பட்டு உள்ள அழகிய அச்சாணி போல, மற்றவற்றை அசைவித்துக் கொண்டு, தான் மட்டும் அசையாது இருக்கும்.இவ்வுலகில் எனக்கு ஒப்பானவர் யார் என வீம்பு பேசும். இராவணனைப் போல எவ்விடத்திலும் தான் நினைத்தபடியே ஆணை செலுத்தவேண்டும் என்று எனது உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டாக்கும். இத்தகைய பொல்லாத செருக்கினை விட்டு விலகி இருக்கவும் என்னால் முடியவில்லை. அதனோடு போராடவும் முடியவில்லை" என்று இறைவனிடம் முறையிடுகின்றார்.
ஆங்காரம், ஆணவம் என்பன நான் என்னும் முனைப்புகளாய்த் தடித்து எழுகின்ற சீவத் திமிர்கள். ஆங்காரம் மனத்தில் இருந்து மண்டி எழுவது. ஆணவம் என்பது உயிரோடு எக்காலத்திலும் அத்துவிதமாக உள்ளது. இவை இரண்டும் உயிரினது அறிவு விளங்க ஒட்டாமல் தடுத்து, பிறவித் துயர்ங்களுக்கு மூலமாக அமைந்தவை. எல்லாம் என்னால் முடியும் என்று உள்ளத்தில் இருந்து செருக்கி வருவது அகங்காரம். அகம் - மனம். காரம் --- உறைப்பு, முனைப்பு. அகம் என்னும் சொல் முதல் நீண்டு வந்தது.
ஆங்காரம் அடங்கினால், ஆணவத்தின் வலியானது சிறிது சிறிதாகக் குன்றி வரும். எல்லாம் இறைவன் செயல் என்று, மனம் அடங்கி ஒழுகுவது உயர்ந்த ஞானவொழுக்கம் ஆகும். எல்லாம் எனது செயலை என்று இழிந்த நிலையில் ஒழுகுவது ஆங்காரத்தின் இயல்பு.
"அமைவு அறிந்திடா ஆணவப் பயலே!
அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
எமை நடத்துவோன்,ஈது உணராமல்,
இன்று நாம் பரன் இணையடி தொழுதோம்,
கமைவின் ஏத்தினோம்,அடியரும் ஆனோம்,
கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல்,
உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன்று உணரே".
இதன் பொருள் ---
உனது தகுதி இன்னது என்று அறியாது,திமிர் கொண்டு இருக்கும் ஆணவம் என்னும் சிறு பையனே! கோடிக் கணக்கான அண்டங்கள் அனைத்தையும் ஆட்டுகின்றவன் நம்மை நடத்துபவனாகிய இறைவனே. இதனை உணராமல், "இன்று நாம் பெருமானுடைய திருவடிகளையும் தொழுகின்றோம். பொறுமைப் பண்புடன் அவனை ஏத்தி வழிபடுகின்றோம், அவனுக்கு அடியவர் ஆகிவிட்டோம். அதனால் எமது உள்ளம் கனிந்து விட்டது"என்று நாங்கள் கருதுமாறு தலைக்கனம் கொள்ளச் செய்யாதே. உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவனான திருவொற்றியூர்ச் சிவனுடைய திருவருள் என்னும் வாளால் உன்னைத் துண்டாக வெட்டுவேன்; இதனை உண்மையாக உணர்வாயாக.
"கருமையாம் அகங்கார மர்க்கடவா!
கடையனே! உனைக் கலந்த அதனாலே,
அருமையாக நாம் பாடினோம்,கல்வி
அற அறிந்தனம்,அருளையும் அடைந்தோம்,
இருமை இன்பமும் பெற்றனம் என்றே,
எனை மதித்து, நான் இழிவு அடைந்தனன் காண்,
ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே".
இதன் பொருள் ---
கருமைப் பண்புடைய அகங்காரம் என்னும் குரங்காகிய கடையனே! உன்னோடு நான் கலப்புற்றமையால், 'நாம் அருமையாகப் பாடுகின்றோம். கல்வியும் முற்றக் கற்று உள்ளோம். திருவருளையும் பெற்று விட்டோம். இம்மை மறுமைக்கு உரிய இன்பமும் பெற்றுள்ளோம்' என்று என்னை நானே வியந்து இழிவுற்றேன். (அதனால், இனியும் நீ அடங்கவில்லையானால்) ஒருமை நலம் வாய்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள பெருமானுடைய திருவருளாகிய ஞானவாள் கொண்டு உன்னைத் துண்டாக வெட்டுவேன். இதனை மெய்யாக உணர்வாயாக.
உயிரினோடு அத்துவிதமாக அமைந்து உள்ள ஆணவத்தாலும், மனத்தில் குடிகொண்டு உள்ள ஆங்காரத்தினாலும் விளைந்த கேடுகளை உணர்ந்து தெளிந்த வள்ளல்பெருமான், ஆணவத்தையும், அகங்காரத்தையும் நோக்கி இவ்வாறு பாடி உள்ளார். ஆணவமும், அகங்காரமும் எவ்வளவு கொடியவை என்பதை இதனால் நாமும் உணர்ந்து கொள்ளலாம். "அகங்கார ஆணவங்களே! என்னை நீங்கள் பிறவிதோறும் கெடுத்து விட்டீர்கள். அறியாமையால் நானும் எங்கள் வழி அமைந்து கெட்டுப் போனேன். இப்பொழுது தெளிந்து கொண்டேன். இனிமேல் என்னிடத்து இல்லாது ஒழிந்து போய்விடுங்கள். நான் இறைவன் திருவருளைப் பெற்று நிற்கின்றேன். இனியும் என்னிடத்து நீங்கள் இருக்க எண்ணினால், என்னிடத்தில் உள்ள ஞானவாளைக் கொண்டு உங்களை வெட்டிவிடுவேன்" என வெகுண்டு கூறி உள்ளார்.
நான் என்னும் செருக்கு மனிதனை ஈனப்படுத்தி விடுகின்றது. எல்லாம் இறைவன் செயல், நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்று தெய்வச் சிந்தனையோடு ஒழுகி வந்தால் நலம் விளையும். தெளிந்த ஞானம் பிறந்து, இது வரையில் விளைந்து வந்த ஈனங்கள் தொலைந்து போகும். தூய நாட்டம் கொண்டபோது, தீயநாட்டம் ஓய்ந்து போகும். தீயநாட்டம் போகவே, ஏக இன்பம் தலைப்படும்.
விதை கெட்டால் விளைவு. அதைப் போலவே, நான் எனது என்னும் அகப்புறப் பற்றுக்கள் கெட்டுப் போனால், உயர்ந்த இன்பம் விளையும்.
"யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்"
என்றார் திருவள்ளுவ நாயனார்.
தான் அல்லாத உடம்பை நான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருள்களைத் தனது என்றும் எண்ணி, அவற்றின் மீது பற்று வைக்கின்ற அறிவு மயக்கத்தை விட்டவன், வானோர்களாலும் அடைய முடியாத முத்தி உலகத்தை அடைவான் என்றார். அவ்வாறு முத்தி உலகத்தை அடைகின்றவன், இந்த நிலவுலகத்தில் பருவுடலோடு வாழும் காலத்திலும் திருவருளால் செம்மையாகவே வாழ்வான். காரணம், அவனது அறிவு மயக்கமானது, கல்வி, அறிவு ஒழுக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, உண்மை அறிவு நிறைகின்றது. அதனால், வாழும் காலத்திலேயே பற்று அற்ற நிலையை அடைய முடியும். எந்த எந்த பொருளின் மீது பற்று வைக்கின்றோமோ, அந்த அந்தப் பொருள்களால் துன்பம் உண்டாகும். எந்த எந்தப் பொருளின் மீது வைத்த பற்றை விட்டுவிடுகின்றோமோ, அவற்றால் உண்டாகும் துன்பம் இல்லையாய் விடும் என்பதை, "யாதனின் யாதனின் நீங்கியான், நோதல் அதனின் அதனின் இலன்" என்று அற்புதமாகக் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.
யான், தான் என்னும் சொல் இரண்டும் கெட்டால் ஒழிய யாருக்கும் இறைவன் திருவருள் தோன்றாது, மெய்ப்பொருள் விளங்கப் பெறாது என்பது சத்தியம் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"யான், தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அன்றி யாவருக்கும்
தோன்றாது சத்தியம். தொல்லைப் பெருநிலம் சூகரம் ஆய்க்
கீன்றான் மருகன்,முருகன், கிருபாகரன், கேள்வியினால்
சான்று ஆரும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே".
நான் எனது என்னும் அறிவு மயக்கத்தைக் கெடுத்து, தன்மயமாக உயிரை ஆக்குவதே இறைவன் திருவருள் ஆகும். அப்படி விழுங்கப்பட்ட அனுபவத்தை, கந்தர் அனுபூதியில்,
"யானாகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே"
என்று பாடினார்.
நாம் பற்றெனக் கருதி நிற்போர் எல்லாம் நமக்குப் பேரிடர் வருங்கால் கைவிட்டு அகலுவர். எமனுடைய பாசக்கயிறு வந்து மரண யாத்திரை செல்லும்போது, யாரும் துணையாக வரமாட்டார். இறைவன் ஒருவனே எப்பிறப்பிலும் உயிருக்குத் துணையாக வருவான். இந்த உண்மையை நம்மிடத்தில் உள்ள அகங்காரம், மமகாரம் விளங்கிக் கொள்ள ஒட்டாமல் பண்ணிவிடும்.
"என்பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போஎன்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம்உடைத்தார்
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே. --- பட்டினத்தார்.
ஆதலினால், உலகவர் மீதுள்ள பற்றை ஒழித்து, உயிர்க்குத் துணையாய் உள்ள இறைவனைப் பற்றி நிற்றல் வேண்டும். அவ்வாண்டவனே இம்மைக்கும் மறுமைக்கும் பற்றாவான்.
"இம்மைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி" --- ஆண்டாள்.
"பற்று என்னும் பாசத் தளையும், பலவழியும்
பற்றறாது ஓடும் அவாத்தேரும் – தெற்றெனப்
பொய்த்துரை என்னும் பகைஇருளும் இம்மூன்றும்
வித்துஅற வீடும் பிறப்பு". --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
பற்று என்று சொல்லப்படுகின்றகயிற்று விலங்கும், பல பொருள்களிலும் பிடிப்பு நீங்காமல் ஓடுகின்றஅவா ஆகிய தேரும், தெளிவாகப் பிறருக்குப் பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும்அறிவுக்குப் பகையாகிய ஆணவ இருளும் ஆகிய இம் மூன்றும், தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட பிறப்பு அழியும்.
அருணகிரிதாநர் அருளிய மொழியை வழிமொழிந்து நெஞ்சறிவுறுத்தலாகத் தாயுமான அடிகளார் பின்வருமாறு பாடி உள்ளார்.
"யான்தான் எனல்அறவே இன்பநிட்டை என்று அருணைக்
கோன் தான் உரைத்த மொழி கொள்ளாயோ? - தோன்றி
இழுக்கடித்தாய் நெஞ்சே, நீ என்கலைகள் சோர
அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய்."
இதன் பொருள் ---
நான் எனது என்னும் செருக்கு முற்றாக அற்று ஒழிந்தால், மாறுதல் இல்லாத இன்பநிட்டை எளிதாகவும் இனிதாகவும் கைகூடும் என்று மெய்யருள் பெற்றவர் ஆகிய அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள உறுதி மொழியை, எனது நெஞ்சமே, அறுதி பெறக் கொள்ள மாட்டாயோ? அழுக்கைப் போக்கத் துணியைத் துவைக்கின்ற வண்ணரைப் போல என்னை நீ மீண்டும் மீண்டும் தீய நெறியிலேயே செலுத்த எண்ணுகின்றாய்.
யான் --- அகங்காரம் எனப்படும் அகப்பற்று.
தான் --- எனது என்று சொல்லப்படும் புறப்பற்று.
இழுக்கடித்தல் --- தீய நெறியில் புகுத்தல்.
வண்ணார் துணிகளில் அழுக்கைப் போக்கத் துவைத்து எடுப்பது தொடர் நிகழ்வு. ஆடை மீண்டும் மீண்டும் அழுக்கு ஏறித் துவைக்கப்படும். அது போல,ஆன்மா மீண்டும் மீண்டும் பிறவியில் புகுந்து, பாசம் என்னும் சேற்றில் அழுந்தித் துன்புறும்.
கண்ணொளியும், கதிரவன் ஒளியும் கலந்தபோது தான் பொருளை விளக்கம் காணமுடியும். அதுபோல,ஆன்மாவும், பதியாகிய இறைவனும் கலந்து ஒன்றுபட்ட போதுதான், மெய்ப்பொருள் விளங்கும். அது விளங்கிய இடத்தில் "நான்" என்பது மடிந்து போகும். நான் என்பது மடிந்தால் இன்பம்.
No comments:
Post a Comment