அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காதில் ஓலை (பொது)
முருகா!
அடியேன் மெய்ப்பொருளை அறிய அருள் புரிவாய்.
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம் ...... தனதான
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்
கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர்
காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்
காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய
கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்
கோவை வாய முதுக்குந் ...... தணியாமல்
கூரு வேனொ ருவர்க்குந் தேடொ ணாத தொரர்த்தங்
கூடு மாறொ ருசற்றுங் ...... கருதாயோ
பூதி பூஷ ணர்கற்பின் பேதை பாகர் துதிக்கும்
போத தேசி கசக்ரந் ...... தவறாதே
போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்
போத ஆத ரவைக்கும் ...... புயவீரா
சோதி வேலை யெடுத்தன் றோத வேலை யில்நிற்குஞ்
சூத தாரு வும்வெற்பும் ...... பொருகோவே
சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந்
தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும்,
கான யாழின் மொழிக்கும், ...... பொதுமாதர்
காணெ ஒணாத இடைக்கும், பூண் உலாவு முலைக்கும்,
காதில் நீடு குழைக்கும், ...... புதிது ஆய
கோது இலாத கருப்பஞ் சாறு போல ருசிக்கும்
கோவை வாய் அமுதுக்கும், ...... தணியாமல்
கூருவேன், ஒருவர்க்குந் தேட ஒணாத்து ஒர் அர்த்தம்
கூடுமாறு ஒரு சற்றும் ...... கருதாயோ?
பூதி பூஷணர், கற்பின் பேதை பாகர், துதிக்கும்
போத தேசிக! சக்ரம் ...... தவறாதே
போக பூமி புரக்கும் த்யாக! மோக குறப்பெண்
போத ஆதர வைக்கும் ...... புயவீரா!
சோதி வேலை எடுத்து, அன்று ஓத வேலையில் நிற்கும்
சூத தாருவும் வெற்பும் ...... பொருகோவே!
சூரர் சேனை அனைத்தும் தூளி ஆக நடிக்கும்
தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
பதவுரை
பூதி பூஷணர் --- திருநீற்றைத் திருமேனியில் அணிந்து உள்ளவரும்,
கற்பின் பேதை பாகர் --- கற்பில் சிறந்தவர் ஆகிய உமாதேவியைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய சிவபரம்பொருள்,
துதிக்கும் போத தேசிக --- போற்றுகின்ற ஞானாசாரியாரே!
சக்ரம் தவறாதே போகபூமி புரக்கும் த்யாக --- நீதியில் தவறமல் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாகசீலரே!
மோக குறப்பெண் போத ஆதர(ம்) வைக்கும் புயவீரா --- தேவரீர் மீது விருப்பம் நிறைந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தாங்கும் திருத்தோள் வீரரே!
சோதி வேலை எடுத்து அன்று ஓதவேலையில் நிற்கும் சூததாருவும் வெற்பும் பொருகோவே --- பேரொளி வீசும் வேலாயுதத்தை விடுத்துஅன்று அலைகடலில் நிற்கும் மாமரமாகிய சூரபதுனுடனும், (அவனுக்கு அரணாய் இருந்த) மலையுடனும் போர் புரிந்த தலைவரே!
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே --- சூரர்களுடைய படைகள் யாவும் பொடியாகும்படித் திருநடனம் புரியும் மயிலாகிய குதிரையை நடத்துகின்ற பெருமையில் மிக்கவரே!
பொதுமாதர் காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் --- விலைமகளிர் தமது காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்துசென்று அவற்றைக் கிழிக்கின்றமன்மதனின் அம்பை ஒத்த கண்களுக்கும்,
கான யாழின் மொழிக்கு ம்--- இனிய இசையை எழுப்பும் யாழினைப் போன்ற சொல்லுக்கும்,
காண ஒணாத இடைக்கும் ---காண அரிதாக உள்ள நுண்ணிய இடைக்கும்,
பூண் உலாவு முலைக்கும் --- அணிகலன்கள் அசைந்து ஆடுகின்ற முலைக்கும்,
காதில் நீடு குழைக்கும் --- காதுகளில் நீண்டு தொங்குகின்ற குண்டலங்களுக்கும்,
புதிது ஆய கோது இலாத கருப்பஞ் சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் --- புதிது போல விளங்குகின்ற, கோதுகள் இல்லாத கரும்புச் சாறு போல இனிக்கின்ற, கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயினிடத்து ஊறும் எச்சிலுக்கும்
தணியாமல் கூருவேன் --- தணியாத ஆசையை மிகுதியாகக் கொண்டு உள்ளேன். (அப்படிப்பட்ட அடியேன்)
ஒருவர்க்கும் தேட ஒணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ --- யாராலும் தேடிக் காண முடியாத ஒப்பற்ற பொருளைக் கூடி இன்புறுமாறு, ஒரு சிறிதேனும் திருவுள்ளத்தில் கருத மாட்டாயோ?
பொழிப்புரை
திருநீற்றைத் திருமேனியில் அணிந்து உள்ளவரும், கற்பில் சிறந்தவர் ஆகிய உமாதேவியைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய சிவபரம்பொருள், போற்றுகின்ற ஞானாசாரியாரே!
நீதி தவறமல் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாகசீலரே!
தேவரீர் மீது விருப்பம் நிறைந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தாங்கும் திருத்தோள் வீரரே!
பேரொளி வீசும் வேலாயுதத்தை விடுத்துஅன்று அலைகடலில் நிற்கும் மாமரமாகிய சூரபதுனுடனும், (அவனுக்கு அரணாய் இருந்த) மலையுடனும் போர் புரிந்த தலைவரே!
சூரர்களுடைய படைகள் யாவும் பொடியாகும்படித் திருநடனம் புரியும் மயிலாகிய குதிரையை நடத்துகின்ற பெருமையில் மிக்கவரே!
விலைமகளிர் தமது காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்துசென்று அவற்றைக் கிழிக்கின்றமன்மதனின் அம்பை ஒத்த கண்களுக்கும், இனிய இசையை எழுப்பும் யாழினைப் போன்ற சொல்லுக்கும்,காண அரிதாக உள்ள நுண்ணிய இடைக்கும், அணிகலன்கள் அசைந்து ஆடுகின்ற முலைக்கும், காதுகளில் நீண்டு தொங்குகின்ற குண்டலங்களுக்கும், புதிது போல விளங்குகின்ற, கோதுகள் இல்லாத கரும்புச் சாறு போல இனிக்கின்ற,கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயினிடத்து ஊறும் எச்சிலுக்கும் தணியாத ஆசையை மிகுதியாகக் கொண்டு உள்ளவன் ஆகிய அடியேனும் யாராலும் தேடிக் காண முடியாத ஒப்பற்ற பொருளைக் கூடி இன்புறுமாறு, ஒரு சிறிதேனும் திருவுள்ளத்தில் கருத மாட்டாயோ?
விரிவுரை
பொதுமாதர் காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும்---
பொருளிலேயே நாட்டம் கொண்டு இருந்து, காமுகர்களைக் கவர்ந்து, தாம் தருகின்ற இன்பத்திற்கு விலையாகப் பெரும்பொருளைப் பெறுவதிலேயே நாட்டம் கொண்டு இருப்பவர்கள் விலைமகளிர் எனப்படுவர். பொருளிலேயே நாட்டம் இருக்கும். அன்பையும் அருளையும் ஒரு சிறிதும் கருதமாட்டார்கள். பொருளைக் கொடுத்துத் தம்மை மருவ வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கூடுவர். எனவே, பொதுமகளிர் எனப்படுவர்.
பொதுவாகவே, பெண்களின் கண்களைக் காது அளவு ஓடிய கண்கள் என்று புலவர்கள் கூறுவார்கள். குலமகளிரின் கண் பார்வை அன்பு கலந்ததாக இருக்கும். "ஒன்று நோய் நோக்கு, ஒன்று அதற்கு மருந்து" என்றார் திருவள்ளுவ நாயனார். குலமகளிரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்ற பார்வை அதுவாக இருக்கும். ஆனால், விலைமகளிரின் பார்வை துறந்தோர் உள்ளத்தையும் தொளைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிலே அன்பு இருக்காது. காம உணர்வே மிகுந்து இருக்கும். எனவே, "காமபாண விழி" என்றார் அடிகளார்.
கான யாழின் மொழிக்கும்---
கானம் --- இசை. யாழிலிருந்து வெளிப்படுகின்ற இனிய ஓசையாது இனிமை தருவதாக இருக்கும். எனவே, "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ, இன்பம் சேர்க்கமாட்டாயா" என்று பாவேந்தர் அருமையாகப் பாடினார். உள்ளத்தில் கள்ளம் சிறிதும் இல்லாமல் பேசுகின்ற மொழி இனிக்கும். குழந்தைகள் அப்படி இருப்பார்கள். எனவே, தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர், குழல் இனிது, யாழ் இனிது என்பர் என்றார் திருவள்ளுவ நாயனார்.
காண ஒணாத இடைக்கும்---
உள்ளதோ இல்லையோ என்று தெளிந்து அறிய முடியாதபடி நுண்ணியதாக இருக்கும் இடை. அது ஒரு அழகு.
பூண் உலாவு முலைக்கும்---
பூண் --- அணி, கவசம்.
மார்பகத்தின் மீது கவசம் போல அணிகலன்களை அணிந்து இருப்பார்கள்.
காதில் நீடு குழைக்கும்---
குழை --- குண்டலம்.
புதிது ஆய கோது இலாத கருப்பஞ் சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும்---
பெண்களின் வாயிதழ் கோவைக் கனியைப் போன்று சிவந்து இருக்கும். விலைமாதர்கள், தாம்பூலம் தரித்துக் கொள்வதன் மூலம் தமது வாயிதழைச் சிவக்க வைத்துக் கொள்வார்கள். அந்த அழகில் காமுகர் மயங்குவர். அவர்களைக் கூடி இருந்து, அவர்கள் வாயில் ஊறுகின்ற எச்சிலைக் கருப்பஞ்சாறு போலக் கருதி உண்டு மகிழ்வார்கள் காமுகர்கள். "பாலொடு தேன் கலந்து அற்றே, பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்" என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பினால் ஊறுகின்ற எச்சில் இனிக்கலாம். விலைமாதரின் வாயில் ஊறுகின்ற எச்சில், அறிவு மயக்கத்தைத் தந்து, பின்னர் துன்பத்தை விளைவிக்கும். எச்சிலை அமுது எனக் கொள்வார்கள் காமுகர்கள். அது என்றைக்கும் புதிதாகத் தோன்றும் காம வயப்பட்டவர்க்கு.
தணியாமல் கூருவேன்---
தணியாத -- குறையாத, ஆறாத.
கூர்தல் -- உள்ளது மிகுதல்.
ஒருவர்க்கும் தேட ஒணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ ---
அர்த்தம் --- பொருள். இங்கே பரம்பொருளாகிய இறையைக் குறிக்கும். பரம்பொருளின் தன்மை இன்னதுதான் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. ஊனக் கண்களால் தேடிக் காணவும் முடியாது. அதன் பெருமையை அடிகளார் பல இடங்களில் பாடி உள்ளார்.
"வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது
மாயைக்குச் சூழ ஒணாதது ...... விந்துநாத
ஓசைக்குத் தூரம் ஆனது மாகத்துக்கு ஈறுஅது ஆனது
லோகத்துக்கு ஆதி ஆனது..." --- திருப்புகழ்.
"காண ஒணாதது உருவோடு அருஅது
பேச ஒணாதது உரையே தருவது
காணு நான்மறை முடிவாய் நிறைவது ......பஞ்சபூதக்
காய பாசம் அதனிலே உறைவது
மாய மாயுடல் அறியா வகையது
காய மானவர் எதிரே அவரென ...... வந்துபேசிப்
பேண ஒணாதது வெளியே ஒளியது
மாய னார்அயன் அறியா வகையது
பேத பேதமொடு உலகாய் வளர்வது ...... விந்துநாதப்
பேரு மாய்கலை அறிவாய் துரியஅ
தீத மானது வினையேன் முடிதவ
பேறு மாய்அருள் நிறைவாய் விளைவது..." --- திருப்புகழ்.
"மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான், வார்சடையான், என்னின் அல்லால்,
ஒப்பு உடையன் அல்லன், ஒருவன் அல்லன்,
ஓர் ஊரன் அல்லன், ஓர் உவமன் இல்லி,
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே"
என்று அருமையாகப் பாடிக் காட்டினார் அப்பர் பெருமான்.
இதன் பொருள் ---
இறைவன் மைபூசிய கண்களை உடைய உமாதேவியும் தானுமாக,கச்சி மயானத்தில் எழுந்தருளி இருப்பவனும், நீண்ட சடையினை உடையவனும் ஆவான்என்று கூறலாம். இந்த சொற்களில் அடக்கிவிடக் கூடிய தன்மைய்யை உடையவன் இறைவன் அல்ல. அவனுக்கு ஒப்பாக எந்தப் பொருளையும் காட்ட முடியாது. உலகப் பொருள்களில் ஒருவனாகவும் அவன் இல்லை. ஏகன் அநேகன் என்றார் மணிவாசகப் பெருமான். அவன் ஓர் ஊருக்கு உரியவனும் இல்லை. அவன் இன்ன தன்மையை உடையவன் என்றும், இன்ன நிறத்தை உடையவன் என்றும் நமது ஊனக் கண்களைக் கொண்டும், மனக் கண்ணைக் கொண்டும் காண முடியாது. அவனது திருவருளையே கண்ணாகக் கொண்டு மட்டுமே காண முடியும். அவனது திருவருளைப் பெறுவதற்கு முயல்வதை விடுத்து, அவன் இப்படிப்பட்டவன், இன்ன நிறத்தை உடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்ட இயலாது.
"ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே,
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே,
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே,
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே,
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே,
பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே,
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே,
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே."
என்று அழகாக அருளிச் செய்தார் அப்பர் பெருமான்.
நெற்றியில் கண்ணுடைய பெருமானே! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவரும் இல்லை.அடக்குவித்தால் அடங்கிப் போகாதவரும் ஒருவர் இல்லை. நீ ஓட்டுவித்தால் ஓடாதவர் ஒருவரும் இல்லை. நீ உருகுவித்தால் உருகாதார் யாரும் இல்லை. நீபாட்டுவித்தால் பாடாதார் ஒருவரும் இல்லை. பணியச் செய்தால் பணியாதார் ஒருவரு இல்லை. நீ காட்டுவித்தால் காணாதார் ஒருவரும் இல்லை. நீ காட்டவிட்டால் காணக் கூடியவர் யாரும் இல்லை.
எனவே, அவனைக் காணவும், அடைந்து இன்புறவும் அவனது திருக்கருணையை வேண்டுகின்றார் அடிகளார்.
பூதி பூஷணர்---
பூதி - திருநீறு. பூடணம் என்னும் தமிழ் சொல், வடமொழியில் பூஷணம் என வழங்கப்படுகின்றது. பூண்டம் - அணிகலன்.
"மெய்யெலாம் திருநீறு சண்ணித்த மேனியன்" என்பார் அப்பர் பெருமான்.
கற்பின் பேதை பாகர்---
உமாதேவியைரக் குறிக்கும்.
துதிக்கும் போத தேசிக---
போதம் -- மெய்யறிவு, ஞானம்.
தேசிகன் --- குரு, ஆசான்.
"நாதா! குமரா! நம" என்று சிவபரம்பொருள் போற்றித் துதித்து, "சுசி மாணவ பாவம்" என்று பாம்பன் அடிகளார் கூறுகின்ற வகையில் மாணவ பாவத்தோடு இருந்து, "ஓதாய்" என்று சிவபரம்பொருள் கேட்டார். குருநாதனாக இருந்து, "சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும்" பகர்ந்த குருநாதன் முருகப் பெருமான்.
எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
"நாத போற்றி என, முது தாதை கேட்க,அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே" --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
"தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே!" ---(கொடியனைய) திருப்புகழ்.
"மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா...." --- (விறல்மாரன்) திருப்புகழ்.
"சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா..." --- திருப்புகழ்.
பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்து அருளினார்.
"அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர, ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே." --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.
"தேவார்ந்த தேவன்" என்று சிவபரம்பொருளைக் குறிப்பார் அப்பர் பெருமான். தேவதேவன் அத்தகைய பெருமான். மாணவ பாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.
உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
"தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
"மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!"
என்னும் திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
"தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே".
என வருவதும் அறிக. சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின், அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
"வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே." --- திருமந்திரம்.
பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.
"தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே." --- அபிராமி அந்தாதி.
"சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே." --- சிவஞான சித்தியார்.
சக்ரம் தவறாதே போகபூமி புரக்கும் த்யாக---
சக்கரம் என்பது திருவாணாச் சக்கரத்தைக் குறிக்கும். அரச ஆணையை ஒருசக்கரமாகக் கூறுதல் மரபு. செலுத்தியவாறு எல்லாம் ஓடிச் சுற்றிச்செல்வதனால் சக்கரம் போன்றது அரசனது ஆணை. போகபூமி என்பது சுவர்க்கத்தைக் குறிக்கும். சுவர்க்கத்தில் உள்ள தேவர்களைது நெறிமுறைப்படி காத்து அருள் புரிபவர் முருகப் பெருமான்.
தியாகம் --- கொடை.
சோதி வேலை எடுத்து அன்று ஓதவேலையில் நிற்கும் சூததாருவும் வெற்பும் பொரு கோவே---
சோதி வேல் --- ஒளி பொருந்திய வேல். ஒளி என்பது அருளைக் குறிக்கும். இருள் என்பது துன்பத்தைக் குறிக்கும்.
சூத தாரு --- மாமரம். மாமரமாகக் கடலில் நின்றவன் சூரபதுமன். தரு என்றால் மரம். தாரு என நீண்டது.
கரிய நிறத்தை உடைய அசுரனாகிய சூரபதுமன் தேவர்களை சிறைவிடுத்து வணங்காது இருந்தமையால்,கொடுமை நிறைந்த அசுரர்களுடைய தேர், யானை, குதிரை, காலாள் என்ற நால் வகைப் படைகளையும் அடியோடு அழித்து, பானுகோபன் முதலான அக்கினி முகன், இரணியன், வச்சிரவாகு, மூவாயிரவர் என்னும் சூரபதுமனுடைய மக்களோடு, சிங்கமுகா சூரனையும் வென்று வெற்றி மாலை சூடி, பூவுலத்திற்கு ஆடைபோல் சூழ்ந்து உள்ள கடலில் புதிய மாமரமாக நின்ற நெடிய சூரபதுமனுடைய உடலை, ஒளி மிக்க வேலை விடுத்து அருளிஇரு கூறு ஆக்கினார் முருகப் பெருமான். சூரபதுமனுடைய உடல் பிளந்ததனால் இரு பகுதியாய், அவற்றுள் ஒரு பகுதி வலிமை மிக்க மயிலும், மற்றொரு பகுதி சேவலும் ஆகி, சிறப்புடன் ஆரவாரித்து எழுந்து விளங்குதலும், அவ்விடத்து விளங்கிய அந்த இரண்டு பகுதியுள், சீறுகின்ற பாம்பை மோதி அழிக்கும் அழகுடைய மயிலை வாகனமாகக் கொண்டு அதன் மீது ஏறி செலுத்தினார். உடல் மாறி வந்த சேவலாகிய பகைவனை, வெற்றி பொருந்திய பெரும் கொடியாக ஆக்கி, அதனைப் பிற கொடிகளுக்கு எல்லாம் மேலாக உயர்த்தினார்.
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே ---
தோகை என்பது முருகப் பெருமான் அமர்ந்து அருளும் வாகனம் ஆகிய மயிலைக் குறித்தது. வாசி என்பது குதிரையை. வேகமாகச் செல்லுகின்ற மயிலை, "தோகைவாசி" என்றார் அருணை வள்ளலார்.
மயிலின் பெருமையைக் குறித்து, "முது திகிரிகிரி நெரிய வளைகடல் கதற, எழுபுவியை ஒருநொடியில் வலமாக ஓடுவது" என்று அருளினார் சீர்பாத வகுப்பில் அடிகளார்.
"சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டு க்ரவுஞ்ச சயிலம்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு
தனி வெற்பும் அம்புவியும் எண்
திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு
சித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெம்சூரர்
திடுக்கிட நடிக்கும் மயிலாம்.."
என்றும்,
"உக கோடி முடிவில் மண்டிய சண்டமாருதம்
உதித்தது என்று அயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொன் குவடு உறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து இரு
விசும்பில் பறக்க விரிநீர்
வேலை சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை
வீசிப் பறக்கும் மயிலாம்"
என்றும் மயில் விருத்தத்தில் அடிகளார் முருகப் பெருமானின் வாகனம் ஆகிய மயிலின் சிறப்பைக் கூறுமாறு காண்க.
கருத்துரை
முருகா! அடியேன் மெய்ப்பொருளை அறிய அருள் புரிவாய்.
No comments:
Post a Comment