வளைக்கின்ற கண்கள் - இளைக்கின்ற மனம்
-----
உடம்பு எத்தனைதான் பலம் உடையதாக இருந்தாலும், உடம்பை இயக்குகின்ற மனம் திண்மை அற்றதாக இருந்தால் அந்த உடம்பினால் பயன் இல்லை. மனத்தின் பலத்துக்கு ஏற்றபடியே மனிதன் பலம் உடையவனாகிறான். "உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு" என்று திருவள்ளுவ நாயனார் தவத்திற்கு இலக்கணம் வகுக்கிறார். தனக்கு எந்த ஊறு வந்தாலும் பொறுத்துக் கொள்ளுதல், பிறருக்குத் தீமை செய்யாமல் இருத்தல் என்று இரண்டு இலக்கணம் சொல்கிறார். முதலில் சொன்னது சகிப்புத் தன்மை. இரண்டாவது சொன்னது அகிம்சை. தனக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு, தனக்கு ஊறு செய்தவனுக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்வது என்பது நல்ல மன வலிமை உடையவர்களால்தான் முடியும். நம் குழந்தை நம்மைக் கிள்ளுகிறது. பதிலுக்கு நாம் குழந்தையைக் கிள்ளுவது இல்லை. நமக்கு அதன்மேலுள்ள அன்பால் அதனை அனைத்துக் கொள்கிறோம். அதைப் போல பண்புடைய மக்கள் எல்லா மக்களையும் அன்புடன் நேசிப்பதனாலே அவர்களால் தங்களுக்கு வருகின்ற துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு உண்டாகும். திரும்ப அவர்களுக்கு எவ்விதமான தீங்கும் செய்யாமல் அவர்களை அணைத்துக் கொள்கிறார்கள். இப்படி வாழ்வதுதான் துறவு மனப்பான்மைக்கு இலக்கணம்.
தவவேடம் பூண்டு, தவநெறியில் நின்று ஒழுகி, எப்போதும் இறைவனையே தியானம் செய்து வாழ்கின்ற துறவிகளுக்குப் பல படைக்கலங்கள் துணையாக இருக்கின்றன. அவர்களுக்குத் தாடி ஒரு படை. உடம்பில் பூசியிருக்கும் திருநீறு ஒரு படை, கழுத்தில் அணிந்துள்ள உருத்திராட்சம் ஒரு படை. பகைவர்கள் இவற்றைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.
புறத்திலே துறவுக்கு உரிய கோலத்தைப் புனைந்து கொள்வது அகத்திலே கொண்ட திண்மைக்கு அடையாளம். மனத்திற்குள் துறவுத் தன்மை இன்றி, வெறும் புறக்கோலம் மாத்திரம் இருந்தால் அவர்கள் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள். வெற்று வேடத்தால் பயன் இல்லை. "வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என்ன பயன்?"என்கின்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.
"மனத்தகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகள்,
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார்,
மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுனயோக ஞானிகள்
முலைத்தடத்து இருப்பினும் பிறப்பு அறுத்து இருப்பரே”
என்று பேசுகிறார் சிவவாக்கியர்.
மனசிலே மாசு இல்லாத உண்மை ஞானிகள் மகளிருக்கு அருகில் இருந்தாலும், அவர்களுடைய மார்பிலே பழகினாலும் மனத்திலே அழுக்கு உறாமல் இருப்பார்கள். 'அது எப்படி?' என்று கேட்கலாம். குழந்தைகள் இருப்பது இல்லையா? பெண்களின் மார்பிலே தவழ்ந்து கிடக்கிற குழந்தைகளுக்குக் காம உணர்ச்சி உண்டாவதில்லை. அந்த நிலையில் இருப்பவர்கள் உண்மை ஞானிகள். அவர்கள் எல்லாவற்றையும் துறந்தவர்கள், புலன்களை எல்லாம் வென்றவர்கள்.
முனிவர்கள் பொறிகளை அடக்கியவர்கள்.புலன் இன்பங்களை வேண்டாம் என்று உதறியவர்கள். அவர்கள் உள்ளத்தில் வீரம் மிக்கவர்கள். அப்படிப்பட்டவர்களையும் கெடுக்கின்ற பொல்லாதவர்கள் அக்காலத்திலும் இருந்தார்கள். இக்காலத்திலும் இருக்கின்றார்கள். அந்தப் பொல்லாதவர்களுடைய கண்கள் என்னும் படைக்கலமானது யாருடைய மனத்தையும் வளைக்கும் திறம் வாய்ந்தவை.
சத்திரிய குலத்தில் பிறந்தவர் விசுவாமித்திரர். கெளசிகன் என்ற பெயரோடு விளங்கிய பேரரசர். வாளெடுத்துப் போர் செய்யும் மரபில் உதித்த அவருக்கு, காட்டில் போய் இருந்து கொண்டு தவம் செய்யும் ஆற்றல் இயல்பிலே உண்டாகாது. நாட்டைத் துறந்து, அரசாட்சியைத் துறந்து, அரசனுக்குரிய இன்பத்தைத் துறந்து, வனவிலங்குகளிடையே உறைந்து கடுமையான தவம் செய்தவர் விசுவாமித்திரர். தவம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உண்டானது எப்படி?
ஒருநாள் தன் பெரும்படைகளுடன் கெளசிகன் காட்டுக்குப் போனான். அங்கே வசிட்டர் தவம் செய்து கொண்டிருந்தார். அரசன் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வருகிறான் என்று உணர்ந்தவுடன் வசிட்டர் வரவேற்று அவனுக்கும் அவனுடைய பரிவாரங்களுக்கும் விருந்து அளிக்க நினைத்தார். தமது கருத்தை கௌசிகனிடம் தெரிவித்தார். காட்டில் வாழும் முனிவர், தம்முடைய உணவுக்கே வழியில்லாமல் காய் கிழங்குகளைத் தின்று கொண்டு வாழ்பவர், நமக்கும் நம் பரிவாரங்களுக்கும் விருந்து வைக்க எண்ணுவது முடியுமா என்று எண்ணினான். உணவு நேரம் வந்தது.
அடுத்த கணம் வசிட்டர் தேவலோகத்துப் பசுவாகிய காமதேனுவை ஏவினார். அது வந்தது. அத்தனை பேர்களுக்கும் உணவு கிடைத்தது. இத்தகைய விருந்தை கெளசிகன் உண்டதே இல்லை. உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போதே அவன் மனத்தில் கெட்ட எண்ணம் தோன்றியது. அவன் சத்திரியன். தன்னுடைய படை வீரத்தினால் பகைவர்களின் நாட்டைப் பற்றும் ஆசை ஊறிய உள்ளம் உடையவன். இந்தக் காமதேனுவை நாம் பிடித்துக் கொண்டு போய்விட்டால், நமக்கு வேண்டிய செல்வம் எல்லாம் இதனால் கிடைக்குமே! இந்த முனிவரிடம் கேட்போம். கொடுக்க மறுத்தால், நமது படைகளைக் கொண்டு இவரை அடக்கிவிட்டு, காமதேனுவைக் கைப்பற்றிச் செல்வோம் என்று எண்ணினான். விசிட்டரிடம் காமதேனுவைத் தனக்குத் தருமாறு கேட்டான்.
வசிட்டர் அதற்கு இசையவில்லை. இருந்தாலும் "உன்னால் முடியுமானால் அதை ஒட்டிக்கொண்டு போகலாம்" என்று சொன்னார். கெளசிகன் காமதேனுவைப் பிடிக்க நெருங்கினான். அப்போது அது தன் உடம்பைக் குலுக்கிற்று. அந்த ஒரே குலுக்கலில் எண்ணற்ற வீரர்கள் கீழே குதித்துக் கெளசிக மன்னனையும் அவன் படைகளையும் அடித்துத் துரத்திவிட்டார்கள். காமதேனு தேவலோகத்திற்குப் பறந்து போய்விட்டது.
ஏமாற்றத்தால் கெளசிக மன்னன் சினம் கொண்டான். கண்கள் சிவந்து விட்டன. "இந்த முனிவனுக்கு இவ்வளவு அகந்தையா? அந்த மாட்டைத் தானே பிடித்து என்னிடம் கொடுக்க வேண்டியதை விடுத்து, என்னைப் பிடித்துக் கொண்டு போ என்று சொல்லி எனக்குத் தோல்வியை உண்டு பண்ணுவதா? இவனையே எனது படைகளைக் கொண்டு அடித்துக் கொல்கிறேன் என்று பெரும்படையுடன் வசிட்டருடைய ஆசிரமத்தைத் தாக்க ஆரம்பித்தான். வசிட்டர் புன்னகை புரிந்தார். தமது கையில் இருந்த தண்டத்தைத் தமக்கு முன்னால் ஊன்றி அப்படியே அமர்ந்து இருந்தார். எத்தனை எத்தனையோ விதமாகக் கெளசிகன் போரிட்டான். அவனுடைய படைகளை எல்லாம் வசிட்டருக்கு முன்னால் இருந்த தண்டம் விழுங்கிவிட்டது.
அப்போது நினைத்தான் கெளசிகன். தனது உடல் பலமும்,பெரிய படைப்பலமும் பயன் அற்றுப் போய்விட்டது. தன்னிடம் இருக்கும் செல்வத்தில் அணுவளவு கூட இந்த முனிவரிடம் இல்லை. எல்லாம் பயன் இல்லாமல் போகும்படியாகச் செய்ய இவரிடம் இருக்கும் படை இவருடைய தவம் ஒன்றுதான். அந்தத் தவத்தை நான் இனிச் செய்வேன் என்று துணிந்தான். அந்தக் கணமே எல்லாவற்றையும் துறந்துவிட்டு வசிட்டரைப் போலத் தவவலிமை உடையவன் ஆகவேண்டும் என்று உறுதி பூண்டு காட்டிற்கு ஓடிவந்தான் கெளசிக மன்னன். தன் குலத்திற்கு இயல்பாக அமையாத தவத் தொழிலை அவன் உறுதியாக மேற்கொண்டு முனிவன் ஆனான். அவனே விசுவாமித்திர முனிவர்.
அவரது தவத்தைக் கண்டு இந்திரனே நடுங்கினான். இவர் தவத்தைக் குலைக்க எண்ணினான். முனிவரின் தவத்தைக் குலைக்க வேண்டுமானால். அவரது மன உறுதியைக் குலைக்கும் ஆற்றலைப் பெற்ற படையை அனுப்ப வேண்டும். துறவியின் உள்ளத்தையும் தகர்க்கும் படை கண்தான். வாள் போன்ற கூர்மையான கண்ணை உடைய தேவலோகத்து மாதர்களில் ஒருத்தியான மேனகையை அனுப்பி வைத்தான்.
தனது கூர்மையான விழிகளை உருட்டிக் கொண்டு மேனகை விசுவாமித்திரரின் அருகில் வந்து நடனம் ஆடினாள். சதங்கைச் சத்தத்தைக் கேட்டவுடனேயே, "இவளை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது" என்று தம் கண்களை இறுக மூடிக்கொண்டார். மேனகையின் சதங்கை ஒலி அவர் உள்ளத்தைப் பிடித்துப் பிடித்து இழுத்தது. அவரது உள்ளம் மெல்லத் துடிக்கத் தொடங்கியது. கண் மெல்லத் திறந்து பார்க்க ஆரம்பித்தது. பார்த்தபோது அவர் நெஞ்சு பதைத்தது. அவளைப் பார்த்தவுடனேயே அவரது உள்ளமும் திறந்துவிட்டது. அந்தத் துறவியை வளைத்துப் பிடித்து, அவரது நெஞ்சதைப் பதைக்கப் பதைக்க வதைத்தது மேனகையின் வாள்கண். விசுவாமித்திரர் இளைத்துத் தவித்துத் தோற்றுப் போய் விட்டார்.
அத்தகைய மாமுனிவரே தோற்றுப் போய்விட்டார் என்றால் சாதாரண மக்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? மங்கையர் பார்வையிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அதையும் விட மிக்க வலிமை உடைய ஆயுதம் வேண்டும். அதுவே இறையருள். இறைவன் திருநாமமே சிறந்த படைக்கலம். "படைக்கலமாக உன நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்" என்று பாடினார் அப்பர் பெருமான். "துறந்தோர் உ(ள்)ளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்குஇளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?" என்று அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் முறையிடுகின்றார்.
துறந்தோர் உள்ளத்தையும் வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் படையை உடையவர்கள் மங்கையர்கள். பிறர் உள்ளத்தில் காமத்தைக் கொப்புளிக்கும்படியாகச் செய்கின்ற அலங்கார மாதர்கள் இவர்கள். எத்தனை தவம் உடையவர்களானாலும் அவர்கள் உள்ளத்தில் மகளிரது கண்ணாகிய படை நுழைந்து சிவகாமத்தை ஒழித்து, அவகாமத்தை எழுப்பி விடுகிறது.
எந்நாள் வந்து இரட்சிப்பையே என்று முறையிட்ட அருணகிரிநாதரை முருகப் பெருமான் இரட்சித்து விட்டார். பிரபஞ்சச் சேற்றைக் கழியவிட்டு, வெங்காம சமுத்திரத்தைக் கடக்க அவருக்குத் திடத்தை அருளினார். தாம் பெற்ற அருளைப் பெறாமல், நாம் தவிக்கின்றோம் என்கின்ற பெருங் கருணையினால் நாம் சொல்ல வேண்டிய விண்ணப்பத்தை அவர் வெளியிடுகிறார். முருகனைப் பார்த்துச் சொல்கிறார், "கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத் துளைத்துப் புறப்பட்ட வேற்கந்தனே!" என்று.
அஞ்ஞானத்தால் காமம் முதலிய படைகள் அடுத்தடுத்து வந்து தாக்கித் துன்புறுத்துகிறபோது மனிதன் தன் தைரியத்தை இழந்துவிடுவான். அந்தப் படைகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஞானம் வேண்டும். அந்த ஞானமே உருவானது வேல். வேலின் துணை இல்லையானால், மகளிரது கூர்மையாகிய கண் படைக்கு அகப்பட்டுப் பதைத்துப் பதைத்து இளைத்துத் தவிக்கின்ற நிலை மாறாது. அருணகிரியார் கற்புடைய மகளிரது கண்களைக் குறிப்பிடவில்லை. பல திருப்புகழ்ப் பாடல்களிலே சொன்னது போலப் பொது மகளிரைப் பற்றியே இங்கும் கூறுகிறார்.
"கண்ணார்க்கு" என்பது கண்ணிலே நஞ்சை உடைய அலங்கார மாதர்களைக் குறித்தது. அவர்களுடைய பார்வை மென்மையானதுதான். ஆனால் அது வன்மையான உள்ளத்தை உடைக்கும் ஆற்றலுடையது. அந்தக் கண் படையை வெல்வதற்கு உலகத்தில் நாம் பெற்றிருக்கும் படை எதுவும் பயன்படாது. ஆயுதங்களால் உண்டான புண்ணை மருந்து இட்டு ஆற்றி விடலாம். ஆனால், கண்ணால் குத்தி உண்டான காமப் புண்ணை வேறு எதனாலும் மாற்ற முடியாது. அதற்கு முருகனது வேற்படை வேண்டும். அந்த வேல் ஞானசத்தி ஆகும். அது அஞ்ஞானத்தை அழிக்கும்.
இனிப்புக் கடையிலே பலப்பல வடிவங்களில் இனிப்புகள் இருக்கின்றன. அவை யாவும் சர்க்கரையினால் ஆனவைகளே. அவற்றைப் பிட்டு வாயில் போட்டால் சர்க்கரையின் சுவைதான் கிடைக்கும். அதைப் போலப் பலப்பல உருவத்திலே ஞானம் முருகனிடம் இருக்கிறது. எம்பெருமான் திருக்கரத்தில் அது வேலாக விளங்குகின்றது. அறியாமையைப் போக்குவது ஞானம். அறியாமையின் விளைவாகிய காமத்தைப் போக்குகின்ற ஞானம் வேலின் உருவமாக முருகவேளின் திருக்கரத்தில் படையாக விளங்குகின்றது. அவனுக்கு "ஞான சக்திதரன்" என்று ஒரு திருநாமம் உண்டு.
நம்முடைய முயற்சியும், இறைவனிடத்தில் அன்பும் இருக்குமானால் எத்தகைய மகளிரது கூட்டத்தில் பழகினாலும் காமத்தினால் மனம் மயங்காது. மகளிர் அனைவரையும் தாயாகப் பார்க்கின்ற பக்குவம் வரும்.
உடம்பினால் அந்த மகளிரை விட வளர்ந்தவர்களாக இருந்தாலும் உள்ளத்தால் அவர்களுடைய குழந்தையாகி அவர்களைத் தாயாகப் பார்க்கின்ற மனோபாவம் வந்துவிடும். குழந்தைவேலனைக் கும்பிடுகிறவர் உள்ளம் குழந்தை உள்ளமாக மாறிவிடும். ஞானத்தையே வேலாக உடைய குழந்தைவேலனை வழிபடுகின்ற ஞானிகளும் எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்த்தார்கள். ஞானிகளின் இலக்கணம் சொல்ல வந்த பட்டினத்து அடிகளார், "நல் மங்கையரைத் தாய்போல் நினைந்து"என்று படினார். நன்மங்கையரிடத்தில் பழகும் போது தாயாகப் பார்ப்பார்கள். தீய மங்கையர்களிடம் அவர்கள் பழகவே மாட்டார்கள்.
தம் மனைவி அல்லாத மற்றப் பெண்களை எல்லாம் இந்நாட்டவர், 'அம்மா' என்று அழைப்பது மரபு. மனைவியையும்'அம்மா'என்றே அழைக்கும் பக்குவம் உள்ளவர்களும் உண்டு. அம்மா என்று அழைக்கும் உள்ளத்திலே அவகாமம் தோன்றாது. சிவகாமம் தோன்றும்.
அதை நினைந்துதான் அருணகிரியார், 'வேற்கந்தனே' என்று கூவி அழைக்கிறார். எல்லாப் பற்றுக்களையும் அறது துறந்து, தவநிலையில் வாழ்பவர்களின் உள்ளத்தையும் வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கின்ற வல்லமை பொதுமகளிரின் கண் பார்வைக்கு உண்டு. விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.
இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி,இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை. உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.
மணிவாசகப் பெருமானும், திருவாசகத்தில் பின்வருமாறு பாடி அருளினார்....
"வேனில்வேள் மலர்க்கணைக்கும்,
வெண்ணகைச் செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும்
பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்எலாம் நின்று உருகப்
புகுந்து ஆண்டான்,இன்றுபோய்
வானுளான் காணாய், நீ
மாளா வாழ்கின்றாயே". --- திருவாசகம்.
"பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!"
"மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே."
என்று பாடுகின்றார் பட்டினத்து அடிகளார்.
மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.
என்கின்றார் (திருப்போரூர்ச் சந்நிதி முறை) திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.
விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால், இவை இறையருள் வாழ்க்கப் பெறாத முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய அருளாளரைப் பொது மகளிர் மயக்க இயலாது. திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,
"ஆடுவார்,பாடுவார்,அலர்மாரி மேல்பொழிவார்,
கூடுவார் போன்று அணைவார்,குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார்,மாரவேளுடன் மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்"
என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய "பெரியபுராணம்" கூறுகின்றது. இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்”என்று அருளிச் செய்தார்.ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.
"ஞான வேலைப் படையாக உடைய கந்தப் பெருமானே"என்று ஓலமிட்டு அழைத்து அலறினால்,வேற்படை துணையாக வரும். இளைத்துத் தவிக்கின்ற நிலை வராது.
அந்த வேல் முன்பு சூரனைச் சங்காரம் செய்தது. சூரன் மாயையின் பிள்ளை. பல பல உருவங்களோடு அவன் கிளைத்துப் புறப்பட்டுக்கொண்டே இருந்தான். இறக்க இறக்கத் திரும்பவும் பலவித உருவங்களோடு எழுந்து கொண்டே இருந்தான். அவனுக்குக் கவசமாக இருந்தது பொன்மலை என்னும் கிரெளஞ்சகிரி. முருகன் விடுத்த வேல் அந்தக் கிரியைத் துளைத்து உள்ளே போய்க் கிளைத்துப் புறப்பட்ட சூரன் மார்பையும் துளைத்து வெளியே புறப்பட்டு வந்துவிட்டது. அந்த வேலை நினைத்தால்,உள்ளத்தில் திரும்பத் திரும்பக் கிளைத்துப் புறப்படுகின்ற காமமாகிய அசுரன், மாயா சக்தியோடு கலந்து எழும் அவகாமம் ஆகிய அசுரன், கிளைத்துக் கிளைத்துப் புறப்பட்ட மாயையின் பிள்ளையாகிய சூரனைப்போல அழிந்து போவான். எனவே, என்னை எந்தநாள் வந்து இரட்சித்து அருள்வாய் என்று வேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்
துளைத்துப் புறப்பட்ட வேல்கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?"
என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல்.
இதன் பொருள் ---
கிளைத்துப் புறப்பட்ட --- கிளைகள் கொண்டு போருக்குப் புறப்பட்டு வந்த, சூர்மார்பு உடன் --- சூரபதுமனது மார்போடு, கிரி ஊடு உருவ --- கிரவுஞ்ச மலையையும் நடுவில் வழி உண்டாகுமாறு, துளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே --- தொளைத்துக் கொண்டு வெளிப்பட்ட வேலாயுதத்தை உடைய கந்தப் பெருமானே! துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்து --- துறவிகளுடைய மனத்தை வளைத்துப் பற்றி,பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு --- துடிதுடிக்குமாறு வதை செய்கின்ற கண்களை உடைய பெண்களுக்கு, இளைத்துத் தவிக்கின்ற என்னை --- மெலிந்து காமதாகம் கொண்டு அலைகின்ற அடியேனை, எந்நாள் வந்து இரட்சிப்பையே?--- எக் காலத்தில் அடியேன் முன் எழுந்தருளி வந்து காத்து அருள் புரிவீரோ?
No comments:
Post a Comment