மதி படைத்தவர்கள்
-----
ஒரு கரிக்கடைக்காரனுக்குக் கடை இல்லாத ஓய்வு நாள். வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். மெல்ல மெல்லச் சிந்தனை ஒடியது. "நம் கடையில் நூறு கரி மூட்டை வைத்திருக்கிறோம். மழைக்காலம் வரப் போகிறது. அப்போது கிராக்கி அதிகமாக இருக்கும். நூறு மூட்டையும் நல்ல விலைக்குப் போகும். மேலும் அதிகமான மூட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டால், அப்போது நல்ல விலைக்கு அவற்றை விற்கலாம். கரி மூட்டைகளை வாங்குவதற்குப் பதிலாக ஒரு சவுக்குத் தோப்பினையே ஏலம் எடுத்துக் கரி சுட்டால் பெருத்த இலாபம் கிடைக்குமே" எனச் சிந்தித்தான். கரி மூட்டைக்காரனுக்குச் சிந்தனை அப்படித்தான் போகும். ஒருவனுடைய தொழில் எதுவோ, அவனுக்கு நாட்டம் எதில் அதிகமாக இருக்கிறதோ, அதுவே அவனது சிந்தனைக்கும் கற்பனைக்கும் ஆதாரம். கற்பனை சும்மா இருக்கும்போது மட்டுமே சிறகடித்துப் பறக்கும். இது மனித இயல்பு.
ஆனால், குழந்தை இருக்கிறது. அதற்குக் குறிப்பிட்ட ஒரு தொழிலும் இல்லை. வியாபாரம், பொருள் ஈட்டல் ஆகியவற்றில் நாட்டம் இல்லை. குழந்தைக்கு எதன் மேலும் நாட்டம் இல்லை என்று சொல்ல முடியாது. குழந்தை பிறந்து அறிவு தோன்ற ஆரம்பித்தவுடன் அதற்கு முழு உருவமாக முதலில் தோன்றுபவள் தாய்தான். பிறகு தாய் காட்டத் தந்தையை அறிகிறது. தாய் தந்தையை அறிந்த குழந்தை அவர்களைக் கருவியாகக் கொண்டே உலகிலுள்ளவற்றை அளக்கும். காவல்காரன் ஒருவன் தனது குழந்தைக்கு, "ஒர் ஊரில் ஒரு ராஜா இருந்தான்" என்று கதை சொல்ல ஆரம்பித்தால், அந்த ராஜா தன் அப்பாவைப் போலவே தொப்பி போட்டிருப்பான், சீருடை அணிந்திருப்பான் என்று நினைக்கும். அதற்குத் தாய் தகப்பனை அன்றி உலகமே இல்லை.
உலக உயிர்களுக்குத் தாயும் தந்தையுமாக உள்ளவன் இறைவன் ஒருவனே. இறைவன் சந்நிதானத்தில் அருணகிரிநாதர் குழந்தையாகி விட்டார். தன்னுடையது என்பது எதுவும் இல்லாமல், தன் செயல் அற்று, எல்லாவற்றையும் தாயின் கையில் ஒப்படைத்துவிட்டு இன்பதுன்பம் எல்லாவற்றையும் தாய் வழியே பெறுவது குழந்தை. தாய் தெருப்பக்கம் சென்றால் குழந்தையும் தாயுடனே ஒடுகிறது. உள்ளே வந்தால் உள்ளே வருகிறது. படுத்துக் கொண்டால் படுத்துக் கொள்கிறது. இத்தகைய குழந்தையாக அருணகிரிநாதர் ஆகிவிட்டார். அவர் நினைவு, கற்பனை எல்லாம் இறைவனைப் பற்றியும், அவனோடு தொடர்புடைய பொருள்களைப் பற்றியுமே எழுகின்றன.
உலகிலுள்ள மற்றக் குழந்தைகளுக்கும், அருணகிரிநாதக் குழந்தைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அந்தக் குழந்தைகள் உலகத்தை இன்னும் அறிந்து கொள்ளவில்லை. அருணகிரிநாதக் குழந்தையோ அறிந்து கொண்டதை மறந்துவிட்டது. குழந்தைகளின் உள்ளம் மாசு ஏறாத உள்ளம்.
நாம் பார்க்கிற இயற்கைக் குழந்தைகள் தமது தாய் தந்தையர்களையே மிகப் பெரியவர்களாக நினைப்பார்கள். யாரை நினைத்தாலும் தனது தாய்தந்தையர்களின் அளவைக் கொண்டு நினைக்கின்ற தன்மை உடையது அவர்களின் உள்ளம். அருணகிரிநாதக் குழந்தையும் ஒரு தந்தையினிடத்தில் அன்பு வைக்கிறது. உயிருக்குத் தந்தையாகிய முருகனை நினைத்து, தன் இன்ப துன்பம், உயர்வு, தாழ்வு ஆகிய எல்லாவற்றையும் அந்த இறைவனைச் சார்ந்தே நினைக்கிறது.
"கந்தர் அலங்காரம்" பாடுகிற அந்த அருணகிரிநாதக் குழந்தை, தன் மனம் என்னும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, அதன் வேகத்தில் தன் தந்தையாகிய இறைவனை நினைத்துப் பாடுகிறது. அப்பெருமானிடத்தில் உள்ள பொருள்களை வருணிக்கிறது.
ஒருவருடைய சிறப்பைப் புலப்படுத்த வேண்டுமானால் நேரே அவர் பெருமையைத்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை. அவரைச் சார்ந்தவர்களுடைய பெருமையைச் சொல்வதும் மறைமுகமாக அவருடைய பெருமையைப் புலப்படுத்துவதே ஆகும். ஒரு பணக்காரர் புகழைச் சொல்லும்போது, "அவருடைய கணக்கர் கார் வைத்திருக்கிறார்" என்று சொன்னால், அவர் பெருமை பின்னும் அதிகமானது என்றே பொருள். கணக்கரின் பெருமையை நேர்முகமாகச் சொல்வதுதான் இது. ஆயினும் மறைமுகமாக அவருடைய எசமானரின் பெருமையையும் அது புலப்படுத்துகிறது.
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்தில் ஒரு கதை. மதுரை நகரில் பாணபத்திரர் என்ற இசைப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதியில் இசைத் தொண்டு புரிவதிலேயே நாட்டம் உடையவராக இருந்தார். ஒருநாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற இசைவாணன் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடு, தன்னை இசையில் வெற்றி கொள்பவர் யார் இந்த நாட்டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். பாண்டியன் தனது அரசவையில் உள்ள பாணபத்திரருக்கு அவனோடு இசைவாது புரியக் கட்டளையிட்டான். பாணபத்திரருக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. அரசக் கட்டளையை மறுக்கவும் முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதிக்குச் சென்று, "இறைவா, ஏமநாதனை நான் இசையில் தோல்வியுறச் செய்ய முடியுமென்று தோன்றவில்லையே! அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் நான் மரண தண்டனைக்கு ஆளாக நேரிடுமே. உனது அடியவனுக்கு அப்பபடி ஒரு நிலை உண்டாகலாமா? அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும்? உனக்குத் திருத்தொண்டு எப்படிச் செய்ய முடியும்?" என்று கண்ணீர் விட்டுக் கதறினார்.
அன்று மாலை, சோமசுந்தரக் கடவுள் ஒரு கிழ விறகுவெட்டிக் கோலத்தை எடுத்துக்கொண்டு தலையில் ஒரு விறகுக் கட்டும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பழைய யாழும் கொண்டு தெருவோடு வந்தார். மழைக்கு ஒதுங்குகிறவனைப் போல, ஏமநாதன் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, பாட ஆரம்பித்தார். அந்த இனிய இசை ஏமநாதன் செவியில் பட்டது. யார் பாடுகிறார் என்று பார்த்தான். பார்த்தால் அவனுக்கே நம்பிக்கை இல்லை. பாடுகின்றவர் ஒரு கிழ விறகுவெட்டி. விறகுக் கட்டும் அவர் அருகில் இருக்கிறது. இந்தவிறகுவெட்டியா இத்தகைய இனிமையான இசையை எழுப்புகின்றான்? ஆச்சரியம் தாங்காமல் எழுந்திருந்து அவனிடம் சென்றான். "அப்பா, நீ யார்? இந்த இனிய இசையை யாரிடம் கற்றுக் கொண்டாய்?" எனக் கேட்டான்.
அதை ஏன் கேட்கிறீர்? என் தலைவிதி இப்படி இருக்கும்படி ஆகிவிட்டது! நான் பாடுவது என்ன, அவ்வளவு உயர்ந்ததா? என் குருநாதரிடம் இருக்கிற மற்ற மாணாக்கர்கள் பாடுவதைக் கேட்டால் அப்புறம் நீர் என்ன சொல்வீரோ எனக்குத் தெரியாது. நானும் இசை கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் குருநாதரிடம் சென்றேன். அவரும் மிகவும் அக்கறையோடுதான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். நானும் என் தலை நரைத்து கிழவன் ஆகிவிட்டேன். 'போ, இனி உனக்கு இசை வரவே வராது' என்று சொல்லி என் ஆசிரியர் என்னைத் துரத்திவிட்டார். எனக்கு வேறு வழி இல்லாமல் விறகு வெட்டிப் பிழைக்க ஆரம்பித்தேன்' என்றான்.
'இசை வரவே வராது எனச் சொல்லி குருநாதரால் கழித்து விடப்பட்ட இவனே இவ்வளவு நன்றாகப் பாடுவான் என்றால், இவன் குருநாதர் எப்படிப் பாடுவாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?” என்றான்."அவரை உமக்குத் தெரியாதா? அவர்தான் பாணபத்திரர். பாண்டியன் அவைக்களத்துப் பாணர்" எனச் சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான், அன்றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஒடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறைவன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ்வளவு நன்றாகப் பாடுகின்றேன் என்று நீர் சொன்னீரானால், என் குருநாதர் எப்படிப் பாடுவார் என்பதை நீரே ஊகித்துக் கொள்ளலாம்' எனச் சொல்வதுபோலச் சொன்னார்.
இதைப்போலவே, தனது உயிர்த் தந்தை ஆகிய முருகப் பெருமானின் பெருமையை அருணகிரிநாதர் என்னும் குழந்தை நேரே சொல்லவில்லை. அவனுடைய கொடியின் பெருமையைச் சொல்வதன் வாயிலாக அவன் பெருமையைப் புலப்படுத்துகிறது.
பெரிய வெற்றியை உடைய மன்னர்களின் அரண்மனையிலும்,கோட்டைகளிலும் கொடி பறக்கும். நெடுந்துரத்தில் வருகிறபோதே காற்றில் ஆடுகிற அந்த வெற்றிக் கொடியைப் பார்த்துவிட்டு எத்தனையோ பேர்கள் அஞ்சி ஒடுவார்கள்.
திருக்கோயிலின் வாசலிலும் கொடி பறக்கிறது. ஆடுகின்ற அக்கொடி அத் திருமாளிகையின் பெருமையையும், அதில் இருக்கிற தெய்வத்தின் வெற்றிச் சிறப்பையும் விளக்குகிறது. முருகனுடைய திருக்கோயிலில் பறப்பது சேவற்கொடி. அவன் திருக்கரத்தில் இருப்பதும் அதுவே. சேவலின் பெருமையை இப்போது நினைக்கிறார்.
கோழி எவ்வளவு பெருமையுடையது! தேவர்கள் பாராட்டும் கோழி அது. தேவமகளிர் வாழ்த்தும் கோழி. அருணகிரிநாதக் குழந்தை இந்தக் கோழியைப் பற்றிக் கற்பனை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கற்பனையில் இயற்கையோடு ஒட்டிய பொருத்தம் இருக்க வேண்டுமென்பது அவசியம் அல்ல. இது நடக்கும், இது நடக்காது என்று ஆராய்ந்து சொல்வதற்கு அங்கே வேலை இல்லை. இந்தக் கற்பனையான நினைப்பினால் உள்ளம் இன்புறுவதுதான் பயன்.
கடவுளர்களுக்கு பெரும்பாலும் எது வாகனமோ அதுவே கொடியாக இருக்கும். சிவபிரானுக்கு வாகனம் இடபம்; கொடியும் இடபம் தான். திருமாலுக்கு வாகனம் கருடன்; கொடியும் கருடன் தான். முருகப்பெருமானுக்கு அப்படி அல்ல. வாகனம் மயில்; கொடி கோழி. கொடி வேறாக இருந்தாலும் வாகனத்துக்கும் கொடிக்கும் ஒரு தொடர்பு உண்டு. சூரபதுமனது பாதி அம்சம் வாகனமாகிய மயிலாகவும், மற்றொரு பாதி சேவல் கொடியாகவும் இருக்கின்றன.
கோழிக் கொடியில் இரண்டு வகை உண்டு. முதற்கோழி நாதம் என்ற தத்துவம். இயங்காமல் இருக்கும் பரமசிவத்தின் உள்ளத்தில் அருள் என்ற இயக்கம் உண்டாகிறது. இயக்கத்தை ஆற்றல் (Force) என்றும், அதற்குரிய ஆற்றலை சக்தி (Energy) என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். பொருளை Matter என்பர். பொருள் என்பதும், சக்தி என்பதும் ஒன்றுதான். இயங்காமல் இருந்தால் பொருள் (Potential energy). இயங்கினால் சக்தி (kinetic energy). பொருள் சிவம். இயக்கம் சக்தி. சிவத்திலிருந்து சக்தி தோன்றியது. சக்திக்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தத்துவங்கள் தோன்றின. அப்படித் தோன்றியவைகளில் முதல் தத்துவம் நாதம். இந்த நாத தத்துவத்தைக் குறிக்கிறது கோழி.
சூரபதுமனது சங்கார காலத்தில் எழுந்தது. சூரபதுமனது உடலில் முருகப் பெருமன் விடுத்த வேல் பாய்வதற்கு முன், அவன் மாமரமாக நின்றான். வேல் அவன் உடலில் பாய்ந்த போது அவனது அகங்காரம், மமகாரம் இரண்டும் பிளக்கப்பட்டு இரு பகுதியாயின. ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவலாகவும் மாறின. அந்தச் சேவலைத் தன் கொடியாகக் கொண்டான் முருகப் பெருமான். அது மேலிருந்து கூவுகிறது.
உலகிலுள்ள எந்தக் கோழி கூவினாலும் வாழ்வு விடிவது இல்லை. ஆனால் எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவினால் விடிந்துவிடும். கோழி எப்படிக் கூவுகிறது? "கொக்கறு கோ" என்று கூவுகிறது. எந்த நாட்டுக் கோழியானாலும் இப்படித்தான் கூவுகிறது. இந்தக் குரலுக்குத் தமிழில் ஒரு பொருள் இருக்கிறது. கொக்கு என்பதற்கு மாமரம் என்பது ஒரு பொருள். அறு - அறுத்த; கோ - தலைவன் அல்லது கடவுள். ஆகவே “கொக்கறு கோ" என்பது, மாமரத்தை அறுத்த தலைவன் எனப் பொருள்படும். சூரபன்மன் ஆகிய மாமரத்தைப் பிளந்த தலைவன் முருகன். இயற்கையாகவே கோழி கூவுகிறது. அதி காலையில் துங்கிக் கொண்டிருக்கும்போது கூவுகின்ற கோழியை யாரும் பார்ப்பதில்லை. அதன் குரலையே கேட்கிறோம். அந்தக் குரல் நமக்கு மாமரத்தை அறுத்த முருகப் பெருமானையே நினைக்கச் செய்கிறது.
முருகப் பெருமானிடத்தில் உண்டான அன்பு முறுக முறுக,இப்படி எல்லாம் நினைக்கத் தோன்றும். முருகப்பெருமானை நினைக்காதவர்களுக்குக் கோழி கூவுவதில் பொருள் ஒன்றும் இல்லை என்றே தோன்றும். ஆனால்,அவன் மீது அன்பு சுரக்க ஆரம்பித்தவுடன், கோழி "கொக்கறு கோ" என்று கூவினால் முருகன் திருநாமத்தையே அது சொல்வதாகத் தோன்றும். ஒவ்வொருவரும் அவரவர் மன இயல்புக்கு ஏற்ற வகையிலே எல்லாப் பொருள்களையும் உணர்ந்து கொள்கிறார்கள்.
உலகத்தில் உள்ளவர்கள் இருள் நிரம்பிய இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கோழியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் நிச்சயமாக இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடிந்து விடும் என எண்ணி, ஒளியை எதிர்நோக்கி விழித்துக் கொண்டு விடுகிறார்கள். சூரியன் எழப் போகிறான்.அவனை எதிர்நோக்கி இப்பொழுதே எழுந்துவிடுங்கள் என்று எச்சரிக்கை செய்வது போலக் கூவுகிறது கோழி. இது உலகத்துக் கோழியின் செயல்.
புறத்தே கவ்வி இருக்கும் இருளைப் போல மக்களுடைய அகத்திலும் இருள் உண்டு. அந்த இருளுக்கு அறியாமை அல்லது அஞ்ஞானம் என்று பெயர். புறத்தே இருளில் எந்தப் பொருளின் உண்மை உருவமும் தோன்றாததுபோல, அகத்தே உள்ள அஞ்ஞான இருளினால் பொருள்களின் உண்மையான இயல்பு தோன்றுவது இல்லை. எது நிலையானது, எது நிலையில்லாதது என்று பகுத்துப் பார்க்கும் திறமை இருப்பதில்லை. அறியாமையாகிய மருளால், பொருள் அல்லாதவற்றைப் பொருளாக எண்ணி மயங்கி, மேலும் மேலும் பிறவிக்கு வழிதேடிக் கொள்கிறோம். இந்த மருளை இறைவன் திருவருளே போக்கும்.
பொழுது விடிவதற்கு முன் துயில் எழுதல் வேண்டும் என்றும், அதுவே ஆசாரம், உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்றும் பெரியோர்கள் கூறுவார்கள். இது ஆண் பெண் ஆகிய இருபாலர்க்கும் பொருந்தும்.
"வைகறை யாமம் துயில் எழுந்து, தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து, வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுநு எழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை".
என்று பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான "ஆசாரக் கோவை" கூறும்
இதன் பொருள் ---
வைகறையாகிய பின் யாமத்திலே துயில் எழுந்து, தான் அன்றைய நாளில் செய்யவேண்டிய நல்ல அறத்தையும், அதற்குரிய நன்பொருளுக்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின் பொழுது புலர்ந்தால் பழுது இன்றித் தந்தையையும் தாயையும் தொழுது எழுந்து, ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய சான்றோர் சொல்லிய முறைமை ஆகும்.
சான்றோர் ஒரு நாளை, மாலை, யாமம், வைகறை, எற்பாடு, விடியல், நண்பகல் என ஆறுபொழுதாகப் பகுத்துள்ளனர். சாமம் என்பதே யாமம். ஒரு சாமம் எழரை நாழிகைக் காலம். அதாவது மூன்று மணிக்காலம்.
பொழுது விடியப் போவதை உணர்த்தவே கோழி கூவுகின்றது. கோழி கூவியும் எழுந்திருக்காத மக்கள் இருக்கிறார்கள். சூரியன் உதயமாகியும் தூங்குகின்ற கும்பகர்ணர்களும் இருக்கிறார்கள். கோழி கூவுவதைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள், சூரியன் ஒளியையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
முருகன் ஞானமே வடிவானவன்."ஞானபண்டித சாமி" என்று அருணகிரிநாதர் போற்றுகின்றார். அவன் அருளால் அறியாமை இருள் ஒழிய வேண்டும். ஞான ஒளி உதயம் ஆக ஆக, அஞ்ஞான இருளானது கொஞ்சம் கொஞ்சமாக ஒழியும். அது ஒழிவதற்கு முன்னால் நம்முடைய தூக்க மயக்கம் போக வேண்டும்; தாமத குணம் தொலைய வேண்டும். அதுவும் இறைவன் திருவருள்தான். இறைவனுடைய திருவருளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதன அருள். அவனுடைய பேரருளைப் பெறுவதற்கு ஏற்ற முயற்சிகளைச் செய்யும் ஆற்றலை அளிப்பது. "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்று மணிவாசகர் குறிப்பிடும் அருள் அது. அவன் தாளை வணங்கிப் பக்குவம் அடைந்தபோது கிடைக்கும் அருள் சாத்தியஅருள். சாதன அருள் என்பது கருவி. சாத்திய இருள் என்பது அதனால் பெற்றப்படும் பேறு.
இறைவனை வணங்குவதற்கும் அவன் அருள் வேண்டும் என்று எல்லோருக்கும் தோன்றுவது இல்லை. அவன் அருள் இருந்தால்தான் அவனை வணங்கவே முடியும். அதற்குரிய பாக்கியத்தை அவர்கள் பெற்று இருக்கவில்லை என்பதுதான் உண்மை. தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பும் கோழியைப் போல, அவனை வணங்கிச் சாதனை செய்ய இறைவனுடைய சாதன அருளே வேண்டும். அந்த அருளுக்கு அடையாளமாக நிற்பது கோழி. அது தூங்குகிறவர்களை எழுப்பி கதிரவனது வருகைக்குக் காத்திருக்கச் செய்கிறது. அவன் அருளைக் கொண்டேதான் உலகில் உள்ளவற்றில் நித்தியம் எது, அநித்தியம் எது என்று சிந்தித்து அறியும், "நித்தியாநித்திய வஸ்து விவேகம்" உண்டாகின்றது.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நாம் இறந்து போகப் போகிறோம் என்ற உண்மை தெரியாதது அல்ல. நாளும் நமது கண் முன்னரேயே பலரும் செத்துக் கொண்டு இருப்பதைக் காண்கின்றோம். கேட்டும் அறிந்துகொள்ளுகின்றோம். இருந்தும், வாழ்வின் நிலையாமையை உணர்ந்து,நல்ல நெறியில் செல்ல முயல்வதில்லை. நமக்குச் சாவு வருவது உறுதி என்பதை உணர்ந்து, பிறந்து பிறந்து சாகாமல் இருக்கும் நிலையை நாம் அடைய வேண்டுமென்ற உணர்ச்சி உடையவர்களுக்கு, உலகிலுள்ள இருளில் அகப்பட்டு மயங்கித் தூங்கிப் போகாமல் இருக்க எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவுகிறது. அதைக் கேட்டு முயற்சி உடைய மனிதர்கள் எல்லோரும் அந்தக் கோழியைக் கொடியாக உடைய முருகனை வணங்கத் தலைப்படவேண்டும்.
"கோழிக் கொடியன் அடி பணியாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலிகாள்" என்று கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றில் கூறுகின்றார் அருணகிரிநாதர். இறைவன் திருவடியை வணங்காமல், இந்த உலகில் வாழ்ந்து இருக்கலாம் என்று எண்ணுகின்றவர்களை மதி இல்லாதவர்கள் என்கின்றார். ஆயின், இறைவன் திருவடியை வணங்கி வாழுகின்றவர்கள் மதி படைத்தவர்கள் என்றுதானே பொருள்.
No comments:
Post a Comment