பசித்தோர் முகம் பார்
----
அருணகிரிநாதர் திருத்தணிகை முருகன் மீதான திருப்புகழ்ப் பாடல் ஒன்றில், உடம்பின் நிலையாமையை உணர்த்தி, நிலையான அறமாகிய பசித்தோர்க்கு அன்னம் இடுதலை வலியுறுத்தி அருளிய பாடலைக் காண்போம்...
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் ...... தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் ...... கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் ...... புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் ...... புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
"அமைவு உற்று அடையப் பசி உற்றவருக்கு
அமுதைப் பகிர்தற்கு ...... இசையாதே,
அடையப் பொருள் கைக்கு இளமைக்கு என வைத்து,
அருள் தப்பி மதத்து ...... அயராதே,
தமர் சுற்றி அழ,பறை கொட்டி இட,
சமன் நெட்டு உயிரைக் ...... கொடுபோகும்
சரிரத்தினை நிற்கும் எனக் கருதித்
தளர்வு உற்று ஒழியக் ...... கடவேனோ?
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்-
தவருக்கு இசையப் ...... புகல்வோனே!
இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு
இரை இட்டிடு விக்- ...... ரமவேலா!
சமயச் சிலுகு இட்டவரைத் தவறி,
தவம் முற்ற அருள் ...... புகநாடும்
சடு பத்ம முக! குக! புக்க கனத்
தணியில் குமரப் ...... பெருமாளே."
பொழிப்புரை
மலையரசன் வளர்த்த, மயில் போன்ற உமாதேவியாருக்கு இடப்பாகத்தை அருளிய சிவபெருமானுடைய மனம் மகிழுமாறு உபதேசம் புரிந்தவரே! போரில் எதிர்ப்பவர்களைக் கழுகுக்கு இரையாகக் கொடுத்த வீரவேலாயுதரே! சமயச் சண்டை புரிபவரிடமிருந்து விலகி,அடியேன் தவம் நிறைவுபெறவும், திருவருளை அடையவும் விரும்புகின்ற, தாமரை மலர்போன்ற ஆறுமுகங்களை உடைய குகப் பெருமாளே! திருத்தணிகை மலையில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
பசியால் வருந்துகின்றவர்க்கு அமைதியுடன் அன்னத்தைப் பகிர்ந்து தருவதற்கு மனம் இன்றி, வரவர இளமையை அடைவது போலவும், அந்த இளமைப் பருவத்துக்கு ஆகும் என்றும் எல்லாப் பொருளையும் சேர்த்து வைத்து, அருள் நெறியினின்று தவறிப் போய், அகங்காரத்தால் தளர்ச்சி அடைந்து, சுற்றத்தார் சுற்றி அழவும், பறைகள் முழங்கவும், இயமன் உயிரைப் பற்றி நெடுந்தூரம் கொண்டு போகின்ற இந்த உடலை நிலையானது என்று எண்ணி, இவ்வுடம்புக்காகவே பாடுபட்டுத் தளர்ந்து அழிவது முறையாகுமோ?
இத் திருப்புகழ்ப் பாடலின் பொருளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்..
"அடையப் பசி" என்றார் அடிகளார். அடையப் பசி என்றால் முற்றிய பசி. பசிப்பிணி என்றும் சொல்லப்படும்.
உயிர்கட்கு மூன்று நோய்கள் இருக்கின்றன. 1) உடம்புக்கு இடையறாது வருகின்ற நோய் ஆகிய பசி. 2) உள்ளத்தில் எப்போதும் இருக்கின்ற நோய் ஆகிய காமம். 3) உயிருக்கு என்றும் அகலாது வருகின்ற நோய் ஆகிய பிறவி.
இவற்றுள் பசிநோய் அரசனுக்கும் உண்டு. ஆண்டிக்கும் உண்டு. யாராக இருந்தாலும், தொழுநோய், காசநோய் முதலிய நோய்களுடன் பல ஆண்டுகள் போராடுவார்கள். பசி நோயுடன் சில நேரம் கூடப் போராட முடியாது.
பசி வந்தவுடன் மானம், குலம், கல்வி, வண்மை, பெருமிதம்,தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, காமம், என்ற பத்துக் குணங்களும் பறந்து போய்விடும்.
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை –தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்." --- ஔவையார்.
பசி அடைந்தவுடன் நாடி, ஊன், உள்ளம், உணர்வு முதலிய கருவி கரணங்கள் தன்னிலை அழிந்து சோர்ந்து விடுகின்றன. ஆகவே பசித்தோர்க்கு உணவு தருவதே மேலான அறமாகும்.
"ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்;
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை;
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே." --- மணிமேகலை.
இதன் பொருள் ---
பொறுக்கும் வன்மை உடையோராகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள்,அறத்தினை விலை கூறுவோரே ஆவர். வறுமை நிலையில் உள்ளவர்களின் தீர்த்தற்கு அரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை. அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம்உணவினை அளித்தோரே உயிர் கொடுத்தோர் ஆவர்.
பசி தவிர்த்தல் பற்றி வள்ளல்பெருமான் அருளிய உபதேசப் பகுதியில் வருவதாவது
---
சீவகாருணிய ஒழுக்கத்தில் அபரசீவகாருணியம் என்றும் பரசீவகாருணியம் என்றும் இருவகையாம். அவற்றில் பசி நீக்கலும் கொலை நீக்கலும் பரசீவகாருணியம். ஆதலால், விசேஷமாகக் குறிக்கப்பட்டது என்று அறிய வேண்டும். அன்றியும் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவு உடையவர்கள் தாகம் நீங்குதற்குத் தண்ணீர் கொடாமல் இரார்கள். தண்ணீர் கொடுப்பது பிரயாசமும் அல்ல. தண்ணீர் ஏரி குளம் கால்வாய் முதலான இடத்தும் இருக்கின்றது. தாகத்தால், மாற்றிக் கொள்ளத்தக்க ஏகதேச அபாயம் நேரிடுமே அல்லது, அதனால் தேகத்திற்கு ஆனி நேரிடாது. பசியினால் மாற்றிக் கொள்ள க்கூடாத கெடுதி தேகத்திற்கு நேரிடும்.
பசி மிகுதியினாலேயே பிணிகள் விருத்தியாகின்றன. ஆகாரப் பக்குவங்களாலேயே அப்பிணிகள் நீங்குகின்றன. பிணிகளுக்கு வேறு மருந்து கொடுப்பினும், பத்திய ஆகாரமே தேகம் நிற்பதற்கு அவசியமான ஆதாரமாய் இருக்கின்றது. பிணியோடு தேகத்தை நெடுநாள் வைத்திருக்கக் கூடும். ஒரு நாளாகிலும் ஆகாரமில்லாமல் தேகத்தை வைத்திருக்கக் கூடாது.
சீவர்களுக்கு உள்ளபடி பசி நேரிடுமாகில் ஆகாரத்தில் அல்லது மற்றொன்றிலும் இச்சையே இராது. ஆகாரம் கிடைக்கில் உண்டு பசி தீர்ந்தவர், தம் இச்சையைச் சிறிய முயற்சிகளால் முடித்துக் கொள்ளவும் கூடும். அல்லது சமாதானம் செய்து கொள்ளவும் கூடும். இச்சையோடு பல நாள் தேகத்தை வைத்திருக்கலாம். பசியோடு ஒரு நாளும் வைத்திருக்க முடியாது.
பசியினால் வரும் பயத்திற்கும், கொலையினால் வரும் பயத்திற்கும் மேற்பட்ட பயமே இல்லை. பயத்தை உபாயத்தால் நீக்கிக் கொள்ளக்கூடும். பசியை உபாயத்தால் நீக்கிக்கொள்ள முடியாது. பயத்தோடு தேகத்தை வைத்திருக்கலாம். பசியோடு வைத்திருக்கப்படாது. பசியினால் வரும் அவத்தைகளும் துன்பங்களும், கொலையினால் வரும் அவத்தைகளும் துன்பங்களும் தம்முள் ஒத்திருக்கின்றன. ஆகலால், பசியினால் வரும் துன்பத்தையும் கொலையினால் வரும் துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு முக்கிய இலட்சியம் என்று அறிய வேண்டும்.
பசியினால் வரும் துன்பத்தை நீக்குதலும், கொலையினால் வரும் துன்பத்தை நீக்குதலும், சீவகாருண்யத்திற்கு முக்கிய இலட்சியமாக இருக்கவும், இவ்விடத்தில் பசி நீக்குதலை மாத்திரம்அடிக்கடி வலியுறுத்துவது ஏனெனில்,ஒரு சீவன் பசியினால் கொல்லப்படும் என்பதை அறிந்து காருணியத்தால் பசியை நீக்கி உயிர் பிழைக்கும்படி செய்பவர் வேறுவகையால் உயிர்க்கொலை நேரிட்டால் அதற்கு இரங்கி அந்தக் கொலையால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்யாமல் இரார்கள். கொலையால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்யாதவர்கள் பசியால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விக்கத் தக்க தயவு உடையவர்கள் ஆகார்கள்.பசியால் வரும் கொலையை ஆகாரத்தால் அன்றி வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப்படாது.
அன்றியும், தாகத்தால் வருந்துகின்றவரும், பிணியால் வருந்துகின்றவரும், இச்சையால் வருந்துகின்றவரும், எளிமையால் வருந்துகின்றவரும், பயத்தால் வருந்துகின்றவரும் பசிவருத்தம் உண்டாகும்போது அவ்வவ் வருத்தங்களை எல்லாம் மறந்து, பசிவருத்தம் மேற்பட்டு, ஆகாரம் தேட முயற்சி செய்கின்றார்கள். அன்றி, அரசன் ஆக்கினையால் கொலைக் குற்றம் பற்றிக் கொலை செய்ய விதிக்கப்பட்ட குற்றவாளியும் பசி வந்தபோது தன் பயத்தையும் துன்பத்தையும் மறந்து அந்தப் பசியை மாற்றிக் கொள்ள முயலுகிறான். வைத்தியரால் தாம் இறந்து விடுவது நிச்சயம் என்று தெரிந்துகொண்ட வியாதியாளரும் மூப்பாளரும் பசி வந்தபோது தமது துன்பத்தை மறந்து பசி நீக்க முயலுகின்றார்கள். பசிக்குத் தயவினால் ஆகாரம் கொடுக்கத் துணிந்தவன், வேறு வகையால் சீவர்கள் இம்சைப் பட்டு அழிவதற்குச் சம்மதிக்கவே மாட்டான். ஆகலினும்,பசியால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்விக்கிற தருமத்தை அடிக்கடி வலியுறுத்துவது என்று அறியவேண்டும்.
"யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை,
யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாய் உறை,
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி,
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன் உரை தானே."
என்று நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அறிவுறுத்துவது அறிக.
உடம்பு எல்லோருக்கும், எல்லாக் காலத்தும் நிலைத்து இருப்பது அல்ல. விகாரப் பட்டுக் கொண்டே வரும். "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். வயது ஏற ஏற கிழத்தனம் வருகின்றது. இளமை நீங்குகின்றது. நரை வருகிறது. தோல் திரைகிறது. இது உலக இயற்கை. சிலர் இதனை அறியாமையால் தமக்கு மேலும் இளமை வருவதாக எண்ணி, நீண்ட காலம் தாமே அனுபவித்து இருக்கலாம் என்னும் எண்ணத்தில், தம்மிடத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும், இம்மியளவு கூடச் செலவழிக்காமலும், அறம் செய்யாமலும், தான் மட்டும் உண்டு உடுத்து மகிழ்ந்து, இறுகப் பிடித்து வைத்திருப்பார்கள்.
இவர்கள் திருவருள் நெறியிலிருந்து விலகி, மதம் பிடித்து அழிபவர்கள். யானைக்கு மும்மதங்கள் உண்டு. அது போல் மனிதனுக்கு மூன்று மதங்கள் உண்டு. தனமதம், குலமதம், கல்விமதம் என்பன. செல்வத்தால் வளர்கின்ற மதம், குலத்தின் பெருமையால் வளர்கின்ற மதம், கல்வியின் பெருக்கால் வளர்கின்ற மதம். எனவேதானே, வள்ளல் பெருமான், "மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்” என்றார்.
அரசன், ஆண்டி, கற்றவன், கல்லாதவன், மணமகன், தனவந்தன் என்று பாராமல் சமமாக நினைத்து ஆயுள் முடிந்தவனைப் பற்றிச் செல்வதனால், இயமனுக்குச் "சமன்" என்ற பேர் ஏற்பட்டது. நடுநிலை தவறாதவன் ஆதலால் "நடுவன்" என்றும் பேருண்டு.
எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,
அப்போது, அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான்; பொருள்தரப் போகான்;
சாற்றவும் போகான்; தமரொடும் போகான்;
நல்லார் என்னான்; நல்குரவு அறியான்;
தீயார் என்னான்; செல்வர் என்று உன்னான்;
தரியான் ஒருகணம்; தறுகணாளன்;
உயிர்கொடு போவான்; உடல்கொடு போகான்;
ஏதுக்கு அழுவீர்?ஏழை மாந்தர்காள்!
உயிரினை இழந்தோ?உடலினை இழந்தோ?
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்
உயிரினை அன்றும் காணீர் இன்றும் காணீர்
உடலினை அன்றும் கண்டீர் இன்றும் கண்டீர்.
என்று"கபிலர் அகவல்"அறிவுறுத்துகின்றது.
இதன் பொருள் ---
எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் என்பவன் வருவான். அந்த சமயத்தில்,அந்தக் கூற்றுவன் ஆனவன்,தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான். "வேண்டிய பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு" என்று, மிக்க பொருளைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை நாளடைவில் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகாது, ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான், தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான். ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்க மாட்டான், அவன் அஞ்சாநெஞ்சம் படைத்தவன், உயிரைத் தன்னோடு கொண்டு போவான். உடம்பைக் கொண்டு போக மாட்டான். (அது பயன்றறது என்று தள்ளி விடுவான். பயனற்றுப் போகக் கூடிய ஒன்றுக்குத் தானே இத்தனை பாடுபடுகின்றோம்?????)
அறத்தைச் செய்யாது இருந்து, வாழ்நாளை வீணாக்கிவிட்டு, நீங்கள் நிலைத்திருக்கும் என்ற கருதி இருந்த உடலை விட்டு விட்டு, உயிரைக் கொண்டு போன மாத்திரத்திலேயே நீங்கள் எதையோ இழந்து விட்டதாக எண்ணி, அறிவுற்ற மனிதர்களே! நீங்கள் எதற்கு அழுவீர்கள்?உயிரை இழந்தது கருதி அழுவீர்களா? உடம்பை இழந்தது கருதி அழுவீர்களா?உயிரை இழந்து விட்டது கருதி அழுகின்றோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உயிர் எப்படி இருக்கிறது என்பதை அன்றும் நீங்கள் கண்டீர்கள் இல்லை, இன்றும் நீங்கள் காணவில்லை. அழியாது எப்போதும் நிலைத்து இருக்கும் என்று கருதிப் போற்றிய உடம்பானது உயிர் நீங்கின உடனே அழிந்து போகின்றது. அதனை முன்னரும் பார்த்தீர்கள். இப்போதும் பார்க்கின்றீர்கள்.
நமன் உயிரை உடம்பினின்றும் பிரித்துத் தன் உலகத்துக்குக் கொண்டு போவான். அந்த வழி போகப்போகத் தொலையாத அளவுக்கு நெடுந்தூரம் உள்ளது. வழியும் கல்லும் முள்ளும் அடர்ந்து பசி தாகம் தரத்தக்க வெப்பமுடைய வழியானது எவ்வளவு கொடுமையானதோ, அவ்வளவு கொடுமை நிறைந்தது நாம்,இந்த உடம்பை விட்டுப் போகப் போகின்ற நெடுவழி.
உயிர் நீங்கிய பிறகு, இந்தப் பருவுடல் சுட்டுப் பொசுபக்கப்படும். அப்படிப் பொசுக்கப்பட்ட பின்னர், ஒரு பிடி சாம்பல் கூடத் தேராது. என்ன வளர்த்து என்ன பயன்? முடிசார்ந்த மன்னருக்கும் இதே கதிதான்.
"முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதும் கண்டு,பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால்,பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவார் இல்லையே."
என்று இரங்குகிறார் பட்டினத்து அடிகளார்.
நவமணிகள் பொதிக்கப்பட்ட தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி, உலகையேஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலும் ஆசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!
"அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ!"
என்பது நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி.
தனது ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்களின் மணிமுடிகள் தங்கள் காலில் படுமாறு விழுந்து வணங்கும்படி ஆட்சி புரிந்தனர் பேரரசர்கள். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபையில் வீற்றிருந்தனர். ஆனால், அவர்களே பின்னொரு நாளில் இவை யாவும் அழியும்படி, போரில் தோற்றுப் பொடியாக மடிந்து பின்னர் சாம்பல் ஆகிப் போவார்கள். ஆகவே, மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினையுங்கள்.
எனவே, இறைவனால் கொடுத்து அருளபட்ட,இந்த உடம்பைக் கொண்டு தேடிய பொருளை, அறம் செய்து, அருளாக மாற்றிக் கொண்டு, போகின்ற வழிக்குத் துணையைத் தேடிக் கொள்ளவேண்டும். உற்றார், உறவினர், பெற்ற பொருள் ஏதும், துணைக்கு வரமாட்டா. என்ன செய்யவேண்டும்? இறைவனை வழிபட்டு இருந்து, வந்தவர்க்கு ஒரு பிடி சோற்றினை அளித்து, பிறகு நீங்கள் பசயாறிக் கொண்டு இருங்கள். அதுபோதும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி,நித்தம்
இரு,பிடிசோறு கொண்டு இட்டுஉண்டு,இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே".
என்று அறிவுறுத்துகின்றார் அருணை வள்ளல், தாம் அருளிய கந்தர் அலங்காரத்தில்.
இதன் பொருள் ---
வலிமை மிக்க கிரௌஞ்ச மலை பிளந்து ஒழியுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானைப் புகழும் அருட்பாடல்களைக் கேட்டு உள்ளம் உருகி, ஏனைய இழிந்த பாடல்களைக் கற்காமல் இருப்பீர்களாக. நெருப்புடன் கூடிய நரகக் குழியையும் அதனால் அனுபவிக்கக் கூடிய துன்பத்தையும், தண்ணீரும் இல்லாத வழியே சென்று தவித்து, இயமனுடைய ஊருக்குப் போகின்ற கொடிய வழியையும் அதனால் உண்டாகும் துன்பத்தையும் மறந்தவர்களுக்குச்சொல்லுங்கள், [மீண்டும்] சொல்லுங்கள்.
"பசித்தோர் முகம் பார்" என்று சொல்லி, மேலும்,
"அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செய்யும்
சென்மம் எடுத்தும், சிவன் அருளைப் போற்றாமல்,
பொன்னும், மனையும், எழில் பூவையரும், வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே"
என்கிறார் பட்டினத்து அடிகள்.
இதன் பொருள் ---
மனமே, நீ உண்ணுகின்ற சோற்றினை ஆதரவு அற்றவர்க்கும் பங்கிட்டு அளிப்பதற்கே இந்தப் பிறவியானது இறைவனால் அருளப்பட்டது. அவன் திருவருளைப் போற்றி வழிபடாமல், (பொன் ஆசை கொண்டு) பொன்னினையும், (மண் ஆசை கொண்டு) மண்ணினையும், (பெண் ஆசை கொண்டு) அழகு வாழ்ந்த பெண்ணினையும், அவைகளால் உண்டாகும் போகத்தையும் இன்னும் நீ சதமாக எண்ணிக் கொண்டு இருக்கின்றாயே.
"மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
எனவே, நில்லாத உடம்பைக் கொண்டு, நிலையான அறமாகிய பசியாற்றுதலைச் செய்து, ஈடேறுவோம்.
No comments:
Post a Comment