கொடை என்னும் பண்பு
-----
எத்தனையோ பண்புகளை நாம் கேள்விப்பட்டது உண்டு; கொடையும் ஒரு பண்பா?’ என்று கேட்டால், ஆம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னார் இனியார் என்று பாராமல், வேண்டினவர்கட்கு எல்லாம் வேண்டினவற்றை வாரி வழங்குவதே கொடை என்று கூறப்பெறும்.
"சித்திரமும் கைப்பழக்கம்;செந்தமிழும் நாப்பழக்கம்;
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்;- நித்தம்
நடையும் நடைப்பழக்கம்;நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்." ---ஔவையார்.
சித்திரம் எழுதும் ஆற்றல் வேண்டுமானால், நாளும் கைப் பழக்கத்தால் அமைந்து விடும். செந்தமிழை நாவினிக்கப் பேசி பிறர் மனத்தை இனிக்கச் செய்யவேண்டுமானால், எழுத்துப் பிழை இல்லாமல், தெளிவாகப் பேசுகின்ற நாவின் பழக்கத்தால் அமைந்து விடும். சேமித்து வைத்த ஒப்பற்ற கல்விச்செல்வம் மனப் பழக்கத்தால் உருவாவது. நாள்தோறும் நடத்தையில் முறையாகப் பழகுவது நடையில் திறமையைத் தருவதாகிறது. நடக்காமலே இருந்தால், கால் முடமாகிப் போனது போலத் தோன்றும். ஆனால் நட்பும், இரக்க குணமும், கொடுக்கும் குணமும் பிறவியிலேயே படிந்துவரும் நற்குணங்களாகும்என்று ஔவையார் கூறகிறார்.
சிறு குழந்தைகளிடத்தில் உள்ள ஒரு பொருளை யாராவது கேட்டால், சில குழந்தைகள் கொடுத்து விடும். சில குழந்தைகள் கொடுக்க மறுக்கும். இதிலிருந்தே கொடைப் பண்பு என்பது பிறவியிலேயே அமைந்திருக்க வேண்டும் என்று தெரியவரும்.
கொடுத்தல்தான் கொடை என்றால், உலகத்தில் வாழும் அனைவரையும் கொடையாளிகள் என்று கூறி விடவும் முடியாது. கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இந்த உலகம் ஒரு நாள் கூட வாழ முடியாது. அன்றாடக் கூலி பெற்று வாழ்க்கை நடத்தும் ஒருவனில் தொடங்கி, பெரிய செல்வம் கொழிக்கும் அரசாங்கம் வரை கொடுக்கல் வாங்கல் இல்லாமல் வாழ முடியவில்லை.
கொடுப்பதை மட்டும் கொடை என்று சான்றோர் கூறவில்லை. தனக்கென எதையும் வேண்டாது, தன்னிடம் உள்ளதை, இன்னார் இனியார் என்று பாராமல் எல்லோருக்கும், வரையறை இல்லாமல், அற உணர்வோடு வாரி வழங்குவதே கொடை ஆகும். "அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின் மறவாது இது கேள், மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்" என்கிறது மணிமேகலைக் காப்பியம். எனவே, ஈகை அல்லது கொடை என்பது மனிதனுக்கு அமைந்திருக்க வேண்டிய ஓர் அருட்பண்பே ஆகும். இது பற்றிக் கூற வந்த திருவள்ளுவ நாயனார்,"வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" என்று தெளிவு படுத்தினார். எக்காலத்திலும், எந்த வகையிலும் இவர்களால் நாம் தருவதைத் திருப்பித் தரமுடியாது, என்று அறிந்திருந்தும் தருகின்றார் ஒருவர். அப்படியானால், அவரைக் கொடையாளி என்று கூறலாமா? இன்னும்ஒரு தேர்வினை வைத்து, அதிலும் தேறியவர்களையே கொடையாளி என்னும் பட்டத்திற்கு உரியவர்களாக்குகின்றது தமிழ். வறியவர்க்குத்தான் ஒருவர் கொடுக்கின்றார். ஆனால் எதனைக் கொடுக்கின்றார்? தம்மிடம் அதிகப்படியாக உள்ளவற்றையும், வேண்டாதவற்றையும் தமக்குப் பயன்படாதவற்றையும் பிறருக்குத் தருபவர்களும் உண்டு. கொடையாளிகள் என்று யாரைக் கூறலாம்? என்றால், மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்க்கு, மிகவும் உயர்ந்த பொருளையும், மிகவும் தேவையான பொருளையும் தருவதே கொடைப் பண்பு ஆகும்.
விந்தையானது மனித வாழ்க்கை. வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. உணவிற்கு ஒரு தொல்லையும் இல்லாதவர்களை விருந்துக்கு அழைக்கின்றோம். அப்படி அழைக்கப்பட்டவர்கள் வசதி மிகப் படைத்தவர்களாக இருந்தால், விருந்தின் அளவும் தரமும் மிகவும்உயர்ந்து விடுகின்றது. தம்மால் அழைக்கப்பட்டவர் மனம் மகிழவேண்டும் என்பதற்காக விதவிதமான உணவை வகைகளைச் செய்து படைக்கிறோம். ஆனால், அவர்கள் உண்பதை விட, வீணாக்குவதே அதிகமாக உள்ளதைக் காணலாம். காரணம், அவர்கள் பசி என்பதை அறியாதவர்களாக இருப்பார்கள். பத்தியச் சோறு உண்பவர்களாக இருப்பார்கள்.
புளிஏப்பமும் அசீரணமும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குச் செய்யப்படும் உபசாரம் வீணானது. அதே நேரத்தில் பழைய சோற்றுக்கு ஆலாய்ப் பறந்து கொண்டு, தீராத பணிப்பிணியால் கதறுகின்றவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அப்படிக் கதறிக்கொண்டு வருகின்றவர்கட்கு விருந்து அளித்தல் வேண்டும்.
"வெறுமிடியன் ஒருதவசி அமுது படை எனும் அளவில்,'மேலை வீடுகேள், கீழை வீடுகேள்', திடுதிடு என நுழைவதன் முன்எதிர் முடுகி, அவர்களொடு சீறி,ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்" என்று பாடுகிறார் அருணகிரிநாதர். "ஒன்றும் இல்லாத வறுமையாளனாகிய ஒரு தவசீலன், 'ஐயா, பசிக்கிறது, கொஞ்சம் சோறு போடுங்கள்' என்று கேட்டவுடனே, 'மேல் வீட்டில் போய்க் கேளும், கீழ் வீட்டில் போய்க் கேளும்'என்று கூறுபவர்களும், அந்த வறியவன் (ஐயா என்று கூறிக் கொண்டே) பசியைப் பொறுக்க மாட்டாமல் திடுதிடு என்று சிறிது விரைவாக வாசல்படி ஏறி நுழைய முயலும் முன்பாக, அவனுக்கு எதிராக விரைந்து சென்று, அவர்கள் மேல் மிகவும் கோபித்து, நாயைப் போலே அவர் மேல் வீழ்ந்து கடிப்பது போல் பேசுபவர்களும் இல்லாமல் இல்லை என்பதுதான் அருணகிரிநாதர் அருள்வாக்கில் இருந்து தெரிகிறது. அரிசியைக் கொடுக்க வேண்டாம். நொய்யரிசியைக் கொடுக்க வேண்டாம். தம்மிடம் உள்ள தவிட்டினைக் கூடப் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாத உலோபிகள் உள்ளனர்.
உயிரையே தர வேண்டி நேரிட்டாலும் மனம் உவந்து கொடுப்பவர்கட்கு அழகிய பட்டத்தைச் சூட்டும் வழக்கம் தமிழ் மண்ணில் உள்ளது. அதுதான் 'வள்ளல்' என்னும் பட்டம். பாரி, சிபி போன்றவர்களை 'வள்ளல்கள்' என்று குறிப்பிட்டனர். பாரி, கொழுகொம்பு இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்கு,தான் ஏறி வந்த தேரையே அளித்ததைஉலகம் நன்கு அறியும். இதை விடச் சிறந்த செயல், தன் உயிரையே வேண்டும் என்று இரந்த மூவேந்தர்கட்கு உயிரையே தந்துவிட்ட அந்தப் பெருவள்ளல் செயல்.
பாரி வாழ்ந்த இத் தமிழ்நாட்டின் மற்றொரு மூலையில் 'அதியமான்நெடுமான் அஞ்சி’ என்ற மற்றொரு வள்ளலும் வாழ்ந்தான். தன் பெயரைப் போலவே பெரிய மனமும் படைத்தவன் அப்பெரு வள்ளல். அவனுடைய நாடு, மலைநாடு. அந்த மலைப்பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் சிறந்த நெல்லி மரம் ஒன்று இருந்தது. பொதுவாகவே நெல்லிக்காய் மிகச் சிறந்த பயனை அளிக்கக் கூடிய ஒன்று. அதிலும் மலையில் வளரும் நெல்லி மிகவும் பயன் உடையது. அதியமானின் நாட்டில் தழைத்திருந்த அந்த அதிசய நெல்லி மரம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு பழந்தான் பழுக்கும். மரத்தின் சாரம் முழுவதும் அந்த ஒரே பழத்தில் இறங்கியதனால்,அந்தப் பழம் மிகவும் சிறந்ததாய் அமைந்திருந்தது. அந்தப் பழத்தை உண்டவர்கள் மிக நீண்ட காலம் நோய் நொடி இன்றிச் சிறந்த உடல் உரத்துடன் வாழ்வார்கள்.
ஒரு முறை, இங்ஙனம் பழுத்த ஒரே நெல்லிப்பழம் அதியமானின் கையில் கிடைத்தது. வேறு யாராக இருப்பினும் கிடைத்தற்கு அரிய அதனை எப்படியும் உண்டிருப்பார்கள். ஆனால், அதியமான் அதை உண்பதற்காகக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மையார் ஒருவர் அவனைக் காண வந்தார். வந்தவர் அறிவு ஆற்றல்களோடு வயதிலும் முதிர்ந்தவராகிய ஔவைப் பிராட்டியாரே தான். பல்லாண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்துவிட்ட அந்தப் பாட்டிக்கு அந்தப் பழம் தேவை இல்லைதான். அதியமானைப் பார்த்துவிட்டுப் போக வந்த ஔவையாரை அதியமான் வரவேற்று உபசரித்தான். தனது அரண்மனையில் உள்ள அரிய உணவு வகைகளைக் கொடுத்து உபசரிக்கவில்லை. தன் கையில் இருந்த அந்த அதிசயமான நெல்லிக் கனியை அவருக்குக் கொடுத்தான். அதன் பெருமையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை அவன். சாதாரண நெல்லிப் பழம் என்று நினைத்து வாங்கி உண்டுவிட்டார் ஔவைப் பிராட்டியார்.
பழத்தை உண்ட பிறகுதான் அதனுடைய சுவை சாதாரண நெல்லிக் கனியின் சுவை அன்று என்பதை அறிந்தார் ஔவையார். அப்பழத்தின் தனிச் சிறப்பு யாது என்று அதியமானை வினவினார். வள்ளல் அதியமான் பழத்தின் வரலாற்றைக் கூறினான். அசந்து போய் விட்டார் ஔவையார். அதியமான் அன்பு மிக்கவன். அரசன் என்பது மட்டுமல்லாது வள்ளல் என்பது ஔவையாருக்கும் தெரியும். ஆனால், ‘அமிர்தம்' போன்ற நெல்லிக் கனியைக்கூடத் தான் உண்ணாமல் பிறருக்கு வழங்குவான் என்று அவர் கனவிலும் கருதவில்லை. உடனே அமுதம் கிடைத்த வரலாறு நினைவிற்கு வருகின்றது ஔவையாருக்கு. பாற்கடலில் இருந்து அமுதம் கிடைத்தபோது, ஒருவருக்கும் பங்கு தாராமல்தாமே உண்ண வேண்டும் என்று நினைத்த தேவர்கள் எங்கே! அமிழ்தமாகிய அந்த நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல்,சாகப் போகும் கிழப் பருவத்தில் இருந்த ஔவையாருக்குத் தந்த அதியமான் எங்கே!
அடுத்தபடியாகச் சிவபெருமான் நினைவு வந்தது ஔவையாருக்கு. சிவபெருமானுக்குப் பங்கு தர க்கூடாதென்று அவனை ஒதுக்கினார்கள் தேவர்கள். கடைசியில் அமுதத்திற்குப் பதிலாக, ஆலகால விஷம் வந்தது பாற்கடலில். அந்த நஞ்சுக்கு அஞ்சி சிவபெருமானிடம் ஓடினார்கள். முறை இட்டார்கள். தன்னை எண்ணாமல், முன்னிலைப் படுத்தாமல், பாற்கடலைக் கடைய முற்பட்டவர்கள் இந்தத் தேவர்கள். தன்னை மதியாதவரை, மன்னித்தான் இறைவன். தேவர்கள் வாழவேண்டி அவர்கட்கு அமுதத்தைத் தந்துவிட்டுத் தான் நஞ்சை உண்டான் சிவபெருமான்!
அமுதம் உண்டவர்கள் சாகமாட்டார்கள். அதே போன்று ஔவைப் பாட்டிக்கு, நீண்ட நாள் உயிர்வாழக் கூடிய ஆற்றலைத் தரவல்ல அமுதம் போன்ற நெல்லிப் பழத்தைக் கொடுத்துவிட்டுத் தான் சும்மா இருந்துவிட்டானே அதியமான்! அதிலும் ஒரு சிறப்பு உண்டு. அந்தப் பழத்தின் தன்மை இத்தகையது என்று அவன் கூறியிருந்தால் ஔவையார் அதை உண்டிருக்க மாட்டார். கொடுப்பதிலும் ஒரு சிறப்பு என்னவெனில், வாங்குபவர் மனம் வருந்தாமல் கொடுப்பதுதான். அவ்வாறு செய்பவர்களைக் காண்பது இன்று அரிதிலும் அரிது. முக்கியமான ஒன்றைக் கொடுப்பதன்முன், அது எவ்வளவு முக்கியம் என்பதையும், அதனுடைய பெருமையையும், தம் பெருமையையும் வாங்கிக் கொள்பவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பாடுபடுகின்றனர். தானாகச் சொல்லாவிட்டாலும், பிறரைக் கொண்டு சொல்ல வைக்கின்றனர். இதனால் கொடுப்பதன் பயனே இல்லாமல் போய்விடுகிறது.
அதியமான் இன்னது என்று கூறாமல் கொடுத்து நெல்லிக் கனியை உண்ணச் செய்தான். அச்செயலைக் கண்ட ஔவைப் பிராட்டியார் அவனை "நீல மணிமிடற்று ஒருவன்போல மன்னுக பெரும நீயே!" என்று வாழ்த்துகிறார். நீலகண்டனாகிய சிவபெருமானையும் அதியமானையும் ஒருசேர வைத்து மதிக்கிறார்.
"வலம்படு வாய்வாள் ஏந்தி,ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்க
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே,தொல்நிலைப்
பெருமலை விடர் அகத் தருமிசைக் கொண்ட
சிறிஇலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே" --- புறநானூறு.
என்று ஔவையார் அதியமானைப் புகழ்ந்து பாடினார்.
இதன் பொருள் ---
வெற்றி கொள்ளும் கூர்மை பொருந்திய வாளை ஏந்திப் பகைவரைப் பல போர்களிலே கொன்று அழித்த வீரவளை அணிந்த பெரிய கையினை உடைய, நறுந்தேன் மலர் சூடிய அதியமான் நெடுமான் அஞ்சியே! போர்க்கள வெற்றிக்கு உரிய பொன்னரி மாலை அணியும் தலைவனே! எம் கோவே! நெடிய, பழமை மிக்க மலை இடுக்கில் உச்சியிலே பழுத்து இருந்த சிறிய இலையை உடைய அருநெல்லிக் கனியை நீயே உண்டு நெடுநாள் வாழ நினைக்காது, அதன் அருமையையும் எனக்குக் கூறாது, எனக்குத் தந்து, என்னை உண்ண வைத்து, எனது உயிர்க்கு நெடுநாள் வாழ்வு அளித்த பெருமைக்கு உரிய நீ, பால்போன்ற வெள்ளிப் பிறை நிலவைச் சூடிய திருமுடியும், கருநீலமணி போன்று கழுத்தையும் உடைய இறைவனைப் போல நீ நீடூழி வாழ்வாயாக.
உண்டால் மூப்பு இன்றி வாழ உதவும் அருநெல்லிக் கனியைத் தானே உண்ண விரும்பாது, தனக்குத் தந்து மகிழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சியை, சிவபெருமானைப்போல என்றென்றும் வாழ்க என்று ஔவையார் உள்ளம் குளிர வாழ்த்தினார். மிகச் சிறிய சிற்றரசன் அதியமான், என்றாலும், திருக்குறள் கண்ட வாழ்வை வாழ்ந்தவன். திருக்குறளே வாழ்வியலாக அமைந்து இருந்தது நமது பழந்தமிழ்ப் பெருமக்களுக்கு. திருக்குறள் ஒரு வாழ்வியல் வேதம் ஆகும். அதியமானுடைய வாழ்வு ஒரு திருக்குறளுக்கு இலக்கியமாய் அமைந்துவிடுகின்றது.
"அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்பு உடையார்
என்பும் உரியர் பிறர்க்கு."
என்னும் திருக்குறள்தான் அது. தனக்குக் கிடைத்த அமுதமாகிய நெல்லிக் கனியைத் தானே உண்ணாமல், ஔவையாருக்குக் கொடுத்துவிட்டதன் மூலம்.அன்புடையார் தமது எலும்பையும் பிறர்க்கு வழங்குவர் என்ற திருக்குறளை வாழ்ந்துகாட்டினான் அதியமான்.
No comments:
Post a Comment