எல்லா உயிரும் தொழும்

 


எல்லா உயிரும் தொழும்

-----

 

     "கொல்லான்புலாலை மறுத்தானைக் கை கூப்பிஎல்லா உயிரும் தொழும்" என்றார் திருவள்ளுவ நாயனார். உலகில் உள்ள எல்லா உயிர்களும் யாரைத் தொழும்என்னும் ஐயம் எழலாம். அதற்கு இவ்வாறு பதிலிறுத்தார் நாயனார். கொல்லாமையும்புலால் மறுத்தலும் ஆகிய இவ்விரண்டு அறங்களையும் ஒருமிக்க உடையவர்க்கு அல்லாமல்அவற்றுள் ஒன்று மாத்திரம் உடையவர்க்குஅதனால் பயனில்லை என்பதால்கொல்லமையுடன்புலால் மறுத்தலையும் சொல்லினார் என்பது பரிமேலழகர் கண்ட அரிய விளக்கம். 

 

     தானே ஒன்றைக் கொன்று புசித்தில்பிறர் கொன்ற ஒன்றைத் தான் புசித்தல்ஒன்றைக் கொன்றுதான் உண்ணாதுபிறர்க்கு உண்ணக் கொடுத்தல்ஓர் உயிரைக் கொன்று பிறர் உண்ண விற்றல் என்னும் நான்கினையும் மறுத்தவன் பேரருளாளன் ஆவான். அத்தகையவர்களின் சிறப்பு என்னஎன்றால்,அவர்கள் தங்களைப் பெரியவர்கள் என்று அறிந்து கொள்வதே இல்லை. எனவேதான்பிற உயிர்களை எல்லாம் வணங்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

 

     "பணியுமாம் என்றும் பெருமை” என்ற திருக்குறளுக்கு ஏற்ப வாழ்வை நடத்துகின்றவர்கள் ஆதலின்என்றைக்குமே தங்களை மிகச் சிறியவர்களாகவும்உலகில் உள்ள ஏனையோர் அனைவரையும் மிகப் பெரியவர்களாகவும் கருதிக் கொள்கின்ற பண்பு இவர்களிடம் உண்டு.

 

     "எவன் நூறு வருட பரியந்தம் வருடந்தோறும் அசுவமேத யாகம் செய்கின்றானோஎவன் மாமிசத்தைச் சாகும் அளவும் நீக்குகின்றானோ இவர் இருவருக்கும் புண்ணிய பலன் சரிதான்" என்கின்றது மனுதரும சாத்திரம். எனவேதான், "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று" என்று அருளினார் நாயானர். இதனால் நாயனார் வேதவேள்வியை மறுத்தார் என்று கொள்ளக் கூடாது. புலால் மறுத்தலின் சிறப்பையே கூறினார். இராமனைப் பார்க்கிலும் இலக்குவன் நல்லவன் என்னும்போதுஇராமனைப் பழித்ததாக எவ்வாறு கொள்ளப்படாதோஅவ்வாறே இதனையும் கொள்ளுதல் வேண்டும். வேள்வி இயற்றுவது என்பது எல்லோராலும் இயலாத காரியம். ஆனால்புலால் மறுத்தலை யாவாராயினும் கைக்கொள்ளலாம்.

 

     வேகமாய்ப் பறந்து கொண்டிருக்கும் மீன்கொத்திப் பறவைஎவ்வளவு உயரத்தில் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும்கீழே நீரில் நீந்துகின்ற மீனின்மேல் கண்ணை வைத்துக் கொண்டே செல்கிறது.ஒரு மீன் கண்ணில் தென்பட்டவுடன் தன் வேகத்தையும் போக்கையும் நிறுத்தி, வானில் அப்படியே சிறகை அடித்துக் கொண்டு சற்று நேரம் நின்றுவிடுகிறது. அதே போல எவ்வளவு ஆழமாக இவ்வுலகப்  பற்றில் ஈடுபட்டிருந்தாலும் இறைவனிடம் எப்படி மனத்தைப் பதித்து வைக்கவேண்டும் என்பதை எனக்கு இந்தப் பறவை எடுத்துக் காட்டுகின்றது. 

     உலகிலுள்ள மிகத் தாழ்ந்த உயிரிலிருந்து மிக உயர்ந்த மனிதன் வரைஎல்லா உயிர்களிடத்திலும் நன்மை தீமைஉயர்வு தாழ்வு ஆகிய இரண்டு பண்புகளும்  கலந்தே இருக்கும். எனவேஒன்றை நல்லது,அல்லது கெட்டது. என்று முடிவு செய்வதற்கு எந்த அடிப்படையைக் கொண்டு முடிவு செய்யலாம் என்ற வினாத் தோன்றும்.  இதற்கு விடை கூற வந்த திருவள்ளுவ நாயனார், "குணம் நாடிகுற்றமும் நாடிஅவற்றுள்  மிகை நாடிமிக்க கொளல்"  என்று கூறி அருளினார். அதாவது ஒருவனிடத்திலுள்ள நன்மை தீமை என்ற இரண்டையுமே எடுத்துக் கொண்டு ஆராய்ந்துஅவற்றுள் எது மிகுதியாக இருக்கிறதோ அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

     இந்த முறையில் ஆராய்ந்தால் எந்த ஒருவரையும் முழுவதும் நல்லவர் என்றோதீயவர் என்றோ கூறிவிட முடியாது. எவ்வளவு நல்லவரிடமும் ஒரு சில தீயபண்புகள் இருக்கலாம்.  எத்துணைத் தீயவரிடமும் ஒரு சில நற்பண்புகள்இருக்கலாம். எனவேஒருவரை நல்லவர்தீயவர் என்று முடிவு கூறும் முன்னர்நாயனார் கருத்தை மனத்துள் கொண்டுஆராய்ந்துஎது மிகுதியாக உள்ளதோ அதைக்கொண்டே முடிவு செய்யவேண்டும்.

     மனிதர்களிடம் உள்ள இப்பண்பாட்டை நன்கு அறிந்து கொண்டால்எத்துணைக் கருத்து வேறுபாடு உடையவர்களிடத்திலும் கூட நன்கு பழக முடியும். உலகில் எவரையும் பகைக்க வேண்டிய மனநிலை உண்டாகாது.  உலகில் உள்ள மக்கள் அனைவரும் குறைவு நிறைவு என்ற இரண்டும் கலந்தவர்களே என்ற உண்மையை அறிந்துவிட்டால் மட்டும் போதாது. அவ்வாறு அறியப்பட்டவுடன் தீயவர்களிடம் வெறுப்புத் தோன்றுவது இயல்புதான். வெறுப்புத் தோன்றாமல் அவர்களையும் மன்னிக்கும் இயல்பு போற்றுதலுக்கு உரியது ஆகும்.

     மன்னிப்பதோடு நின்று விடாமல்அவன் அறியாமல் செய்கிறான் என்று உணர்ந்து அவனிடம் அன்பு செய்ய வேண்டுமாயின்அது மனிதர்களுள் சிறந்தவர்களுக்கே முடியும். தம்மை இகழ்ந்தவர்கள் இடத்தும் பரிவு காட்டுதல் வேண்டும் என்று நாலடியார் கூறுகிறது. அந்தப் பரிவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதுதான் உச்சம்.

"தம்மை கழ்ந்தமை தாம்பொறுப்பது அன்றிமற்று

ம்மை கழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று

பரிவதூஉம் சான்றோர் கடன்."              --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     தன்னை இகழ்ந்து பேசியவர்களை மன்னிப்பதுடன்இப்போது இப்படி இவர்கள் இழிசொல் பேசிய காரணத்தால்மறுமையில் துன்பத் தீயில் விழுந்து இவர்கள் துயரம் அனுபவிக்க நேருமே என்றுஅவர்கள் பின்னால் அடையப் போகும் துன்பத்துக்காக இப்பொழுதே அவர்களுக்கு இரங்கி வருத்தப்படுவது பெரியோர் கடமை ஆகும்.

 

     தம்மை இகழ்ந்து பேசியதால் தானே அவர்கள் நரகத்திற்குப் போகும் வழி உண்டானது என்று பரிவதன் மூலம் தமது கோபத்தைப் பெரியவர்கள் இவ்வாறு தணித்துக் கொள்வார்களாம். இவர்களை எல்லா உயிரும் நிச்சயமாகத் தொழ வேண்டும். 

     போற்றுதற்கு உரிய இப்பண்பைப் பெறநிறைந்த மனோதிடமும்மனச் செம்மையும்  வேண்டும். அச்சம் என்பதை முற்றிலும்  மனத்திலிருந்தே அகற்றி விட்டால்,அந்த மனோதிடம் கைகூடும். அச்சத்தை எப்பொழுது அகற்ற முடியும்.  "கொல்லாமைஎன்றஅதிகாரத்தில் திருவள்ளுவநாயனார்கூறும்கூறும்படிவாழும்போதுதான்  இதுஇயலும்.  

     "கொல்லாமை" என்று கூறினவுடன் ஏதோ பிற உயிர்களைக் கொல்லாமல் தாவர உணவு உண்பதுதான் என்று நம்மில் பலரும் நினைக்கின்றோம். "அறவினை யாது எனின்? கொல்லாமைஎன்று எடுத்த எடுப்பில் கூறுகிறார் திருவள்ளுவ நாயனார். "கொல்லாமையே அறவினை" என்று வலியுறுத்துகிறார். "கொல்லா நலத்தது நோன்மைஎன்றும் "சான்றாண்மை" என்னும் அதிகாரத்தில் கூறுகிறார். என்றால், "கொல்லாமைஎன்ற சொல்லின்  பொருள் ஆழத்தை நன்கு அறிய வேண்டும். எனவேகொல்லாமை” என்றஅதிகாரம் முற்றிலும் சத்தியாக்கிரகி மேற்கொள்ள வேண்டிய ஒன்றையே குறிக்கிறது.

     கொல்லாமை மேற்கொள்பவன் போரிடும் வீரனைக் காட்டிலும் அதிக மனோதிடம் உடையவனாக இருத்தல் வேண்டும். தின்ன வரும் புலியினைக் கண்டு ஓடாமல் நிற்பதும்தடியை வீசிக் கொண்டு அடிக்க வருகின்ற காவலரின் எதிரே அச்சமின்றி  நிற்பதும் கொல்லாமை மேற்கொண்ட ஒருவனாலேயே முடியும். இத்தகைய ஒருவிரதத்தைத்தான் அப்பரடிகள் கடைப்பிடித்துக் காட்டினார். நமது காலத்தில் காந்தி அடிகளார் கடைப்பிடித்தார். அவரிடம் இருந்த அச்சமின்மை அளவிட்டு அறிய முடியாத அளவு நிறைந்திருந்தது. அந்த அளவு மனத்திட்பத்தைப் பிறரிடம் எதிர்பார்த்தல் இயலாத காரியம். தம்மைப்பொறுத்தவரை அவர் கடுமையான சில அளவு கோல்களைக் கொண்டிருந்தார். ஆனால்பிறரிடம் இத்தகைய கடுமையான மன நிலையைஅவர் எதிர்பார்க்கவில்லை. 

     கடவுள் நம்பிக்கை அற்றவர்களும்பிற மதத்தவர்களும் கூட காந்தி அடிகளைப் போற்றினார்கள். கை கூப்பியும் தொழுதார்கள். அடிகளார் வாழ்ந்த வாழ்க்கை தவவாழ்க்கை ஆகும். தவத்தை மேற்கொள்ள வேண்டுமானால்வீடுமனை முதலானவற்றைத் துறந்து காட்டிற்குச் சென்றுகாவி உடுத்தும்தாழ்சடை வைத்தும்காய்கனி துய்த்தும் துன்புற வேண்டாம். இல்லறத்தில் இருந்துகொண்டே தவத்தை ஒருவன் செய்யலாம். அவன் புலாலை மறுத்தவனாக இருந்தால் போதும் என்கிறது "அறநெறிச்சாரம்" என்னும் நூல்.

"கொன்று ஊன் நுகரும்கொடுமையை உள்நினைந்து

அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்

இடுக்கண் என உண்டோ?இல்வாழ்க்கைக்கு உள்ளே

படுத்தானாம் தன்னைத் தவம்."       --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள்---

 

     உயிர்களைக் கொன்றுபுலால் உண்ணும் தீச்செயலைமனத்தால் ஆராய்ந்து அப்பொழுதே புலால் உண்ணலைஒருவன்முற்றிலும் நீக்குவானானால்எக்காலத்தும் அவனைத் துன்பங்கள் அணுகமாட்டா. அவன் இல்லறத்தானாக இருந்தே துறவற நெறியில் நின்று தவம் செய்வாரை ஒத்தவன்.

 

"ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையேம் என்பானும்,

தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும்,

காமுறு வேள்வியில் கொல்வானும்,இம்மூவர்

தாம் அறிவர் தாம் கண்டவாறு."       --- திரிகடுகம்.

 

இதன் பொருள்---

 

     ஒன்றின் மாமிசத்தைத் தின்றுஉயிர்களிடத்தில்கருணை உடையவன் நான் என்று சொல்வானும்தான் யாதொரு முயற்சிக்கும் உடன்படாமல்எல்லாம் செய்ய வல்லேன் என்கிறவனும்;ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய விரும்புகின்ற யாகத்தில் ஓர் உயிரைக் கொலை செய்வானும்ஆகிய இம் மூவரும்தாங்கள் அறிந்தபடியேங்களைஅறிந்தவர் ஆவர்.

 

     தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும்,எனக்கு உயிர்மீது இரக்கம் உண்டு என்று சொல்வதும்எல்லாம் விதியினால் வருகிறது என்று சொல்லிச் சோம்பி இருப்பதும்இம்மைப் பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின் உண்மை உணராதவர் செய்கைகளாம்.முட்டாள் ஒருவன் எப்போதும் தன்னை முட்டாள் என்று ஒத்துக் கொள்ளமாட்டான்.

 

     உயிரைக் கொன்று வேள்வி புரிவதை விஓர் உயிரையும் கொல்லாதும்அவற்றின் ஊனைப் புசித்து உயிர் வாழாதும் இருப்பதே உண்மைத் தவம் ஆகும். அத்தகைய மேன்மக்களை உலகத்து உயிர்கள் எல்லாம் கைகூப்பித் தொழும் என்பதால்,

 

"கொல்லான்புலாலை மறுத்தானைகைகூப்பி

எல்லா உயிரும் தொழும்."

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.  

 

     ஓர் உயிரையும் கொல்லாமலும்,புலால் உண்ணாமலும் இருப்பவன் பேரருள் உடையவனாய் இருப்பான். எனவேஅவனை இம்மையில் மனித வர்க்கங்களும்,மறுமையில் தேவ வர்க்கங்களும் கைகூப்பி வணங்கும் இயல்பினை உடையவனாக மேம்பட்டு விளங்குவான் என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     "எவன் ஜந்துக்களைக் கட்டாமலும்கொல்லாமலும்வருத்தப்படுத்தாமலும் இருக்கிறானோஅவன் சர்வ ஜனமித்ரனாக சகல சுகத்தையும் அனுபவிக்கின்றான்" என்றும், "எந்த துவிஜன் (துவி --- இரண்டு. ஜன் --- பிறப்பு. துவிஜன் --- இருபிறப்பினை உடைய முதல் மூன்று வகுப்பினைச் சார்ந்தவன்) இடத்தில் இருந்து ஒரு பிராணிக்கும் சிறிதும் பயம் உண்டாகவில்லையோஅவனுக்கு இறந்தபின் ஒருவரிடத்திலும் பயம் உண்டாவதில்லை" என்றும் மனுதரும சாத்திரம் கூறியிருக்குமாறு காண்க.

 

     புலால் உண்ணும் குலத்தில் பிறந்தவர்களானாலும்அவர்கள் புலால் உண்ணுதல் என்னும் தீ நெறியாகிய வெம்மை நெறியை விடுத்துஎவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தண்மை உடையவராய் இருந்தால்அவர்களை எல்லா உயிர்களும்எக்காலத்தும் கைகூப்பி வணங்கும் என்பது புராணங்களில் கண்ட வரலாறு. 

 

     பெரியபுராணத்தில் வரும் நாயன்மார்களில் ஒருவரான,நந்தனார் என வழங்கும் திருநாளைப் போவார் நாயனார் பற்றித் திருத்தொண்டர் திருவந்தாதியில்நம்பியாண்டார் நம்பிகள் கூறுமாறு காண்க.

 

"நாவார் புகழ்த் தில்லை அம்பலத்தான் அருள் பெற்றுநாளைப்

போவான் அவனாம் புறத்திருத்தொண்டன்தன் புன்புலைபோய்,

மூவாயிரவர் கை கூப்பமுனி ஆயவன் பதிதான்

மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர் இம்மண்டலத்தே".

 

இதன் பொருள் ---

 

     பெரியோர்களால் வாயாரத் துதிக்கப்பட்ட புகழினை உடையதில்லையம்பலவாணருடைய திருவருளைப் பெற்றுத்தில்லைக்கு "நாளைப்போவார்" என்ற பெயர் பெறும்புறத்திருத் தொண்டராய்த் தமது புன்மையுடைய புலைப்பிறவி போய் நீங்கி,தில்லை மூவாயிரவரும் கைகுவித்துத் தொழும்படி முனியாகியவருடைய பதிமரங்கள் நெருங்கிய பொழில்கள் சூழ்ந்த ஆதனூர் என்று இந்நிலவுலகத்து எடுத்துச் சொல்லுவர்.

 

     நாளைப் போவார் நாயனார் தனது புன்மையான புலைத்தன்மை உடைய பிறவி நீங்கி,தில்லைவாழ் மூவாயிரவரும் ஒணங்கும் தன்மை பெற்ற முனிவராகத் தில்லை அம்பலவாணப் பெருமானின் திருவருள் பெற்றுத் திகழ்ந்தார். 

 

     ஆதனூரில் தில்லை நினைவு வந்த காலம் முதல் தமது குலத்தை  நினைந்துதில்லையினுள் செல்வது தமக்குக் கூடாது என்று அஞ்சி நின்றவர் நந்தனாரே ஆவர். இறைவன் பக்கத்தே அணுகவிடாது நந்தனாரைத் தடுத்தாரும் இல்லை.  பக்கத்தே வந்து தீண்டி ஊன் அமுதூட்டும்படி கண்ணப்ப நாயனாரை விடுத்தாரும் இல்லை.

 

     கண்ணப்ப நாயனாரையும்திருக்குறிப்புத் தொண்டரையும் கையால் பற்றித் தம்மிடத்தில் வைத்த இறைவர்நந்தனாரை மெய்திகழ் வெண்ணூலும் வேணிமுடியும் கொண்ட மறைமுனிவர் ஆக்கித் தனது அருகு வரவழைத்தார். மறைமுனிவர் ஆனால் அன்றோ அருகு செல்ல இயலும் என்று எண்ணிப் பயந்து கொண்டு வாழ்ந்த நந்தனாரின் மனநிலையும் ஒழுக்கமுமே இதற்குக் காரணம்.

 

     "ஐயர்" என்பது பெருமையுடையார் என்ற பொருளில் வரும் வழக்கு. சாதிப்பெயர் பற்றி வருதல் முன்னாள் வழக்கம் அல்ல. பெருமை காரணமாய் அன்றி இடுகுறியளவில் சாதிப்பெயராய் வழங்குதல் பிற்கால வழக்காகி விட்டது. 

 

     திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் நாயானார்பாணர் குலத்திலே அவதரித்தவர். அவர் செந்நெறியில் நின்று ஒழுகியதால்திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு தொழுதுஅவரோடு இருக்கவேண்டும் என்று எண்ணி வந்தார். அவரை அன்போடு வரவேற்றார் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தப் பெருமானார். தமது திருவாக்கினாலே திருநீலகண்ட யாழ்ப்பாணரை "ஐயர்! நீர் உளமகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம்" "ஐயர்! நீர் அவதரித்திட இப்பதி அளவில்மாதவம் முன்பு செய்தவாறு", "ஐயர்! நீர் யாழ் இதனை முறிக்கும் அது என்?" என்றெல்லாம் அருளியது எண்ணிப் பார்த்தால் சாதியை வைத்துத் தமிழர்கள் தீண்டாமையை அக் காலத்தில் வளர்க்கவில்லை என்பதும்அது பின்னாளில் சாதியை வைத்து,உயுர்வு தாழ்வு கற்பித்த அறிவிலிகளால் உண்டான தீ வழக்கம் என்பதும் தெரியவரும்.

 

     இது மட்டுமல்ல. திருநீலகண்ட யாழ்ப்பாணரும்மற்ற அடியவர்களும் சூழ,திருஞானசம்பந்தர் திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளிய போதுஅவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் திருநீலநக்க நாயானார். இவர் அந்தணர் குலத்தில் பிறந்தவர். பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்குத் தக்க திருவமுது செய்வித்து மகிழ்ந்திருந்தார். அன்று இரவில் திருஞானசம்பந்தர் தம் மனையில் தங்குவதற்கு வேண்டுவதெல்லாம் அமைத்தார். திருஞானசம்பந்தர்திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்குவதற்கோர் இடம் கொடுத்தருளுமாறு பணித்தார். அப்பணிப்பிற்கு இன்புற்றுத் தாம் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே பாணருக்கும்,பாடினியாருக்கும் இடம் கொடுத்தார் அவ் அந்தணனார். அப்பொழுது வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னரிலும் மேலாக வலஞ்சுழித்து எரிந்தது. பாணர் மனைவியாருடன் வேதிகை அருகில் பள்ளிகொண்டார். (நாயன்மார் காலத்தில் சாதி வேற்றுமையும் தீண்டாமையும் உண்டு. அக் கொடுமைகளை ஒழிக்கவேஇறையருளால் நாயன்மார்கள் தோன்றினார்கள் என்பது உணரத் தக்கது.)

 

     நந்தனார் என வழங்கும் திருநாளைப் போவாரையும்திருநீலகண்ட யாழ்ப்பாணரையும்அறுப்பது மூவரில் வைத்து திருக்கோயில்களில் படிமம் உள்ளது. இன்றும் சைவப் பெருமக்கள் வணங்கி வருவது காணலாம். இவர்கள் அவதாரத் திருநாளைக் குருபூசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

     திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வார் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம்.

 

     இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம்,காலக் கிரமத்தில் தீண்டாக் குலம் ஆனது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும்தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும்,அம் மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சிகாவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனைப் பாடி வந்தார். காவிரியிலிருந்து தண்ணீர் குடத்தோடு அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் எனும் கோயில் பட்டர்வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரைப் பலமுறை அழைத்தும் செவிமடுக்காததால்பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். அக்கல் அவரின் தலையில்பட்டு குருதி பெருகஅதைக் கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் பக்தியையும் உயர்வையும் உணர்த்த விரும்பிய இறைவன்இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சிக் கொடுத்ததோடுசாரங்கரைபாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தன் திருமுன் நிறுத்தும்படியும் ஆணையிட அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு பாணருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

 

     வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபில் ஒப்பற்றவாரக விளங்கிய வள்ளல்பெருமான்ஜீவகாருண்ணியமும்ஆன்மநேயமுமே சிறந்து விளங்கிமனிதர்கள் யாவரும் ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமை உடையவர்களாய் விளங்கவேண்டும் என்று விழைந்தவர். உயிர்கள் மட்டுமல்லபயிர்கள் படும் துன்பத்தையும் காணச் சகியாதவராய் இருந்த இருந்தவர். "என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்" என்று முழங்கி,உயிர்கள் எல்லாம் அன்பின் வழிநின்று மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்று சன்மார்க்கம் என்னும் பெருவழியே உலகுக்குக் காட்டியவர். 

 

     "கைகூப்பி எல்லா உயிரும் தொழும்" என்று நாயானார் காட்டியபடியே ஒழுக்க நெறியாலும்உயிர்க் கருணையாலும் உயர்ந்து விளங்கிய இப் பெருமானார்களை உலகமக்கள் கைகூப்பித் தொழுகின்றனர்.

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...