மயிலின் ஆற்றல்

 


மயிலின் ஆற்றல்

-----

 

     சூரியன் இயல்பான ஒளியை உடையவன் அல்ல. அவனுக்கு அந்த ஒளியை அமைத்துக் கொடுத்தது சிவபரம்பொருள். "அருக்கனில் சோதி அமைத்தோன்" என்றார் மணிவாசகப் பெருமான். சந்திர மண்டலம் என்பது பூமியைப் போன்றது. சந்திரனுக்கும் இயற்கையான ஒளி இல்லை. சூரியனுடைய ஒளியை வாங்கிகுளிர்ந்த ஒளியாக வீசுமாறு அமைத்ததும் பரம்பொருள்தான். "திருத்தகு மதியில் தண்மை வைத்தோன்" என்றார் மணிவாசகப் பெருமான். சிவபரம்பொருள் இயற்கையான சோதி வடிவினை உடையது. அது அருட்பெருஞ்சோதி ஆகும். இறைவனிடம் உள்ள அருள் ஆற்றலைப் பெற்றுத் தாமும் ஒளிரும் பண்பு அவனைச் சுற்றிக் சூழ இருக்கிற பொருள்களுக்கும் உண்டு.முருகப் பெருமானுக்கு வாகனமாக இருக்கிற மயில்கொடியாக இருக்கிற கோழிஆயுதமாக இருக்கிற வேல் ஆகிய எல்லாம் அவனுடைய சார்பினால் தெய்வத் தன்மையும் ஆற்றலும் பெற்று விளங்குகின்றன.

 

     அருணகிரிநாதப் பெருமான் இறைவனைப் பாடும் பணியையே தனக்குப் பணியாகப் பணித்து அருளவேண்டினார். பாடு பொருளாகஆடுகின்ற மயிலையும்வேலையும்சேவல் கொடியையும் வைத்துப் பாடவேண்டும் என்று வேண்டினார். "ஆடும்பரிவேல்,அணிசேவல் எனப்  பாடும் பணியே பணியா அருள்வாய்" என்பது கந்தர் அனுபூதி.

 

     முருகனைப் போற்றுவது போலவேஅவனிடத்தில் உள்ள வேலையும்மயிலையும்கோழிக் கொடியையும் அடியார்கள் போற்றி வந்தார்கள். தமிழ்நாட்டில் பழங்கால முதலே வேலுக்கும் மயிலுக்கும் மிகச் சிறந்த நிலையில் வைத்து வணங்கி வந்து உள்ளார்கள். மந்திரங்கள் என்று சொல்லப்படுவன வடமொழியில்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. தமிழிலும் பல மந்திரங்கள் உண்டு.  'வேலும் மயிலும்என்பதும் பழங்காலம் தொட்டு வழங்கி வருகின்ற ஒரு மந்திரம். இம் மந்திரத்தைச் சதா சொல்லிக் கொண்டே இருப்பவன் இடும்பன். சிவபெருமானுக்குக் காவல் காக்கின்ற நந்தியம்பெருமான் எப்படி ஒரு சிறந்த தொண்டரோஅவ்வாறே முருகப் பெருமானுக்குப் பெரிய தொண்டனாக இருப்பவன் இடும்பன். முருகப் பெருமான் கோயிலில் இடும்பனுக்கும் தனியே ஒரு சந்நிதி இருக்கும். இடும்பன் சிவகிரிசத்திகிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகக் கட்டித் தோளில் தூக்கிச் சென்றான். சிவகிரிதான் பழனி என்ற திருப் பெயருடன் இன்றும் நின்று நிலவுகிறது. அவன் இரு மலைகளையும் தோளில் கட்டி எடுத்துச் சென்றதனால்தான் முருகனுக்கு காவடி எடுக்கும் சம்பிரதாயம் வந்தது. காவடி எடுக்கின்ற வழியைக் காட்டிக் கொடுத்தவன் இடும்பன். அவன், 'வேலும் மயிலும்’ என்று சதா சொல்லிக்கொண்டே இருப்பான். 'வேலும் மயிலும்என்பதே ஒரு மகாமந்திரமாகப் பண்டைக் காலம் முதற்கொண்டு வழங்கி வருகிறது. 

 

     "வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் கந்த" என்பது அருணகிரிநாதர் அருள்வாக்கு. மயில் ஓங்கார வடிவமானது.  ஆடும் மயில்வட்ட வடிவமாகத் தன் தோகையை விரித்துக் கொண்டுஒரு காலைச் சற்றுத் தூக்கிய வண்ணம் இருக்கும். அப்போது அதன் முழு உருவத்தையும் கூர்ந்து பார்த்தால் ஓங்காரம் போலத் தோன்றும். பிரணவ சொரூபியாக இருப்பவன் முருகப் பெருமான். அதன் பொருளாகவும் இருக்கிறான். அதன் பொருளைத் தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதனாகவும் இருக்கிறான். ஒலி ஒளி இரண்டும் கலந்தது பிரணவம். "ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு துங்கார்” என்பது அருணகிரிநாதர் அருள்வாக்கு. ஓங்கார சொரூபியாகிய முருகன் ஓங்கார உருவமான மயிலின் மீது எழுந்தருளி இருக்கிறான். இந்தத் தத்துவத்தை ஆடும் பரியாகிய மயில் காட்டுகிறது. முருகன் ஞானமே வடிவானவன். அவன் வாகனமாகிய மயில் ஓங்கார வடிவம். "ஆன தனிமந்த்ர ரூப நிலை கொண்டதுஆடும் மயில் என்பது அறியேனே!" என்பது திருப்புகழ். எல்லா மந்திரங்களுக்கும் மேலான மந்திரமாகஒப்பற்ற மந்திரமாகதனி மந்திரமாக இருப்பது பிரணவம். அதன் உருவத்தைப் பெற்றது தோகை விரித்து ஆடும் மயில்.

 

     நம் உள்ளத்தில் பாசம் என்ற கட்டு இருக்கிறது. பாசம் பாம்பைப் போன்றது. பாம்பு அச்சத்தைத் தரும். அந்தப் பாம்பைப் போக்கவேண்டும் என்றால்,பாம்புக்குப்பகையான ஒன்று வேண்டும்.அதுதான் மயில். தோகை விரித்து ஆடுகையில் மிகமிக அழகாக இருக்கிறது. அது பாம்புக்குப் பகை. பெருமான் முருகன் அமர்ந்திருக்கின்ற மயிலின் திருவுருவத்தில்அதன் காலில் ஒரு பாம்பு இருக்கும். வளைந்து கொண்டு இருக்கிற பாம்பை மயில் கொத்திக் கொத்தி அடக்குகிறது. பாசம் என்ற பாம்பை அடியோடு ஒழிக்கக் கூடிய ஓங்கார தத்துவமாக மயில் விளங்குகிறது. 

 

     முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் சிறப்பாக உண்டு. ஆட்டுக் கிடா ஒரு வாகனம். நாரதர் வேள்வி செய்தபோது உலகத்தை அழிக்கின்ற கிடாய் அதிலிருந்து புறப்பட்டது. புவனம் அனைத்தையும் இழித்து உலவுகின்ற அந்தக் கிடாயைவீரவாகுத் தேவர் பிடித்துக் கொண்டுமுருகப் பெருமானிடம் வந்து அதில் ஏறி அமருமாறு வேண்டினார்.அதன் மேல் முருகப் பெருமான் ஏறி அமர்ந்து எண்திக்கும் நடத்தி விளையாடினான். மேஷத்தை வாகனமாக உடையவன் முருகன்."மருப்பாயும் தார் வீரவாகு,  நெருப்பில் உதித்து, அங்கண் புவனம் அனைத்தும் அழித்து உலவும்செங்கண் கிடாய் அதனைச் சென்றுகொணர்ந்து,   'எம்கோன்

விடுக்குதி'என்று உய்ப்பஅதன்மீது இவர்ந்துஎண்திக்கும் நடத்தி விளையாடும் நாதா!" என்பது திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா.

 

     பன்னிரண்டு மாதங்களுக்குள் சித்திரை மாதத்திற்கு உரிய இராசி மேஷம். சூரியன் சித்திரை மாதம் முழுவதும் மேஷ இராசியில் இருப்பான். மலையாளிகள் சித்திரை மாதத்தையே மேஷமாசம் என்பர். அந்த மேஷராசிக்குச் சொந்தக்காரன் செவ்வாய். செவ்வாய்க் கிரகத்திற்கு முருகனுடைய அம்சம் உண்டு என்று சோதிட நூல் கூறும். செவ்வாய் சிவந்த உருவம் உடையது. முருகப்பெருமானும் சிவந்த திருமேனியன். செவ்வாய்க்கு வாகனம் ஆடு. முருகனுக்கும் அது வாகனம். 

 

     முருகனுக்கு "பிணிமுகம்" என்னும் ஒரு யானையும் வாகனம். அடியார்களுக்கு அருள் செய்யும்போதுயானை வாகனத்தில் எழுந்தருளுவான் முருகன். நக்கீர தேவர் திருமுருகாற்றுப்படையில் இதைச் சொல்கிறார். 

 

     பறவைகளில் ஆணைச் சேவல் என்றும்பெண்ணைப் பேடை என்றும் சொல்வது மரபு. ஆண் கோழியைச் சேவல்பெண் கோழியைப் பெட்டைக் கோழி என்கிறோம். சேவல் என்று சொன்னால் வீரம் பொருந்தியதுஆண்மை பொருந்தியது என்று பொருள்படும்.  முருகப் பெருமான் ஏறுகின்ற மயில் அழகானதுமென்மையானது. ஆனாலும் அதற்கு ஆண்மையும்வீரமும் இல்லை எனச் சொல்லக் கூடாது. அடியார்களுக்கு மென்மையாக இருக்கும் அம்மயில்,பகைவர்களுக்கு பயத்தை அளிக்கும் வீரம் உடையது. ஆகவேஅந்த மயிலைச் சேவல் என்று அழைக்கலாம் என்பர் பெரியோர். "முன் உறு மஞ்ஞை அம் சேவல்மேல் ஏறி” என்று கந்தபுராணத்தில் முருகன் ஏறும் மயிலுக்குச் சேவல் என்ற பெயரையிட்டு வழங்குகிறார் கச்சியப்ப சிவாசாரியார்.

 

     அந்த மயிலின் ஆற்றலைப் பற்றி அருணகிரிநாதர் பாடுகிறார்.

 

"குசை நெகிழா வெற்றி வேலோன்,அவுணர் குடர்குழம்பக்

கசையிடு வாசி விசைகொண்டவாகனப் பீலியின் கொத்து

அசைபடு கால்பட்டு அசைந்ததுமேருஅடியிட எண்

திசைவரை தூள்பட்டஅத்தூளின் வாரி திடர்ப் பட்டதே."

 

     குறிப்பு அறிந்து போகும் குதிரையானால் குதிரைக்காரன் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியதில்லை.சவுக்கால் அடிக்க வேண்டியதில்லை. குதிரை முரட்டுத்தனமாக ஓடினால் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்கவேண்டும்.  சவுக்கால் அடிக்கவேண்டும். எம்பெருமான் முருகன் ஏறுகின்ற மயில் குறிப்பு அறியும் தன்மை உடையது. ஆதலால் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்காமல் நெகிழ்த்து விடுகிறான்.

 

     மயிலையும் வேலையும் ஒருங்கே நினைக்கிறார் அருணகிரிநாதர். பாட்டு மயிலைப் பற்றியதுஅந்த மயிலை உடையவன்  வெற்றி வேலோன் என்று முருகனைக் குறிப்பிடும்போது வேலைப் பற்றிய எண்ணமும் வந்துவிடுகிறது.  வெற்றியைத் தருகின்ற வேலைத் தன் திருக்கரத்தில் உடையவன் முருகன். அவன் குசையை நெகிழ்க்கமயில்வாகனம் வேகமாகச் செல்கிறது.அதன் வேகத்தைக் கண்டு அசுரர்களின் குடல்கள் குழம்பின. வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது. நடக்கப் போகின்ற போரில் நாம் எல்லோரும்அழியும் காலம் வந்துவிட்டதே என்று அசுரர்கள் மயில் வாகனப் பெருமானைப் பார்த்துக் குடல் கலங்கிப் போனார்கள்.

 

     அந்த மயில்வாகனம் தானே குறிப்பு அறிந்து,இயல்பாக வேகமாய்ப் போகும் குதிரையைச் சவுக்கால் அடித்தால் எப்படிப் பறக்குமோ அப்படிப் போகிறது. மயிலின் தோகையில் உள்ள பீலி அசைகிறது. அசையும்போது விசிறி விசிறினாற்போலக் காற்று அடிக்கின்றது. 

 

     அசுரர்களைச் சங்காரம் செய்வதற்காக வீரமூர்த்தியாய் முருகப் பெருமான் எழுந்தருளுகிறான். உலகத்திற்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி இன்பத்தைச் செய்ய வேண்டுமென்று வருகிறான். உயிர்களுக்குத் துன்பம் இழைக்கும் அசுரர்களை அடித்து அடக்கி ஆட்கொள்ள வீராவேசத்துடன் வருகிறான். அப்படி வரும்போதுஅவனைச் சார்ந்துள்ள பொருள்களிலும் வீரம் எதிரொலிக்கிறது. அந்த வீரவேகத்தில் வேல் பளபள என மின்னுகிறது. 

 

     அதனால் பொன் நிறம் உடைய மேருமலை அசைந்தது. பிரபஞ்சத்துக்கு நடுவில் தூண் போல நிற்பது அது. சூரியனும் சந்திரனும் அதைச் சுற்றி வருகிறார்கள். அந்த மலையின் மீதுதான் தேவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அதற்குச் 'சுராலயம்என்று பெயர் உண்டு. பூமியின் நடு அச்சுப் போல் இருக்கிறது அது. அதை யாராவது கண்டது உண்டோ என்ற கேள்வி எழலாம். பூகோளத்தில் பூமத்திய ரேகை என்று ஒன்றைச் சொல்கிறார்கள். உலகத்தின் நடுவிலுள்ள கோடு இது. இந்தக் கோட்டைக் கண்டவர் யாரும் இல்லை. இது மானசீகக் கோடு. ஆனால்,இது உண்மை என்று கொண்டே பல கணக்குகளைப் போடுகிறார்கள். அந்தக் கோடு கற்பனையில் அமைந்தாலும் எப்படி இருப்பதாகவே கொள்கிறார்களோ அப்படியே மேருவும் இருப்பதாகவே புராணக்காரர்கள் கொள்கிறார்கள். 

 

     முருகப் பெருமானது வாகனம் ஆகிய மயில் வேகமாகப் போன போது அதன் பீலியின் கொத்து அசைந்ததனால் காற்று அடித்தது. அதனால் உலகத்தின் அச்சாக இருக்கிற மேருமலையே அசைந்தது.வீரமூர்த்தியாக முருகப் பெருமான் எழுந்தருளஅவனுடைய கருத்திற்கு இசைமயில் வாகனமும் வேகமாகப் போயிற்று. அதன் பீலியின் கொத்து அசைந்ததனால் வீசிய காற்றில் மேருமலை அசைந்தது.

 

     நேரான திசைகள் நான்கோடு,கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டுத் திக்குகள் உள்ளன. எட்டுத் திக்கின் முடிவிலும் எட்டு மலைகள் இருப்பததாகச் சொல்வது மரபு. மயில் கால் எடுத்து வைக்கஎட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் தூள் தூளாகப் போய்விட்டன. அந்தத் தூள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுப் பூமிக்குப் பக்கத்தில் இருக்கிற இடம் கடலில் விழுந்தது.தூள் நிரம்பவே கடல்கள் மேடிட்டுப் போய்விட்டனவாம். 

 

     முருகப் பெருமானது வேகத்தைஅவனுடைய வாகனத்தின் வேகத்தை வைத்துச் சொல்கிறார் அருணகிரிநாதர்.  இதற்கு உள்ளுறை பொருள் உண்டு.  சூரபதுமன்தனது தவத்தாலும் குணத்தாலும் உயர்ந்த பெரியவர்களைச் சிறியவர்கள் ஆக்கினான். அதனால்அவகுணம் நிறைந்துமிகச் சிறியவர்களாக இருந்த அரக்கர்கள் பெரியவர்கள் ஆனார்கள்.தவக்குணம் மிக்க தேவர்கள் சிறியவர்களாகப் போய்விட்டார்கள். இந்திர குமாரனைச் சிம்மாசனத்திலிருந்து இறக்கிச் சிறையில் தள்ளினான். 

 

     மேடு பள்ளமாகப் போயிற்று. பள்ளம் மேடாகி உயர்ந்தது. வீரத்தை வீரத்தால் மாற்ற வேண்டும். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்?முருகப் பெருமான் தன்னுடைய வீரத்தால் மறுபடியும் மேட்டைப் பள்ளமாகவும்பள்ளத்தை மேடாகவும் ஆக்க நினைத்தான். அசுரர்களை அடக்கித் தேவலோகத்தை இந்திரனுக்கு மீட்டுக் கொடுக்க எண்ணினான். அவனுடைய வாகனமாகிய மயில் கால் எடுத்து வைத்தனால் மேடு பள்ளம் ஆயிற்றுபள்ளம் மேடு ஆயிற்று. 

 

     தந்தையாகிய இரணியனுடைய மடிமீது அமர்ந்த போது பிரகலாத ஆழ்வார் இன்பம் அடையவில்லை.மலையின் மீதிருந்து உருட்டிவிட்ட போதும் துன்பம் அடையவில்லை. இன்ப துன்பமாகிய மேடு பள்ளம் இல்லாமல் பிரகலாத ஆழ்வாரின் உள்ளம் சம நிலையில் இருந்ததே அதற்குக் காரணம்.

 

     அப்பர் பெருமான் சமண மதத்தில் ஆசாரியராக இருந்தார். அவர் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்துவிட்டார். சமண மதத்தின் தலைவராக இருந்த ஒருவர்அதை விடுத்துசைவ மதத்தில் சேர்ந்ததால் அவமானம் நேர்ந்து விட்டதாகச் சமணர்கள் பல்லவ மன்னனிடம் போய்ச் சொல்லஅவன் திருநாவுக்கரசரைத் துன்புறுத்தத் துணிந்தான். யானையை விட்டு இடறச் செய்தான். சுண்ணாம்புக் காளவாய்க்குள் தூக்கிப் போட வைத்தான். இறைவன் திருநாமத்தைச் சொல்வதன் மூலம் துன்பத்தை வென்று அப்பர் பெருமானுடைய மனம் சமநிலையில் இருந்தது. கொடிய தண்டனைகளால் சிறிதும் இடர்ப்படவில்லை. உள்ளத்திலும்உடம்பிலும் துன்பம் உண்டாகவில்லை. உள்ளத்தில் இருந்த மலைகள் பொடியாகிகடல்கள் தூர்ந்து போய்ச் சமநிலை அடையப் பெற்றவர் அவர்.

 

     இது நமக்குச் சாத்தியம் ஆகுமா என்றால்,நிச்சயம் ஆகும் என்றே சொல்ல வேண்டும். இப்போதும் நாம் சிலவிதமான துன்பங்களைச் சகித்துக் கொண்டுதான் வாழ்கிறோம்.நாம் தொலைக் காட்சியைக் கண்டு கொண்டிருக்கிறோம். அப்போது ஒரு கொசுக் கடிக்கிறது. தொலைக் காட்சியில் மெய்ம்மறந்து இருப்பதால் கொசு கடிப்பது தெரிவதில்லை. கொசுக்கடியை அறியாதவர் போல இருக்கிறோம்.

 

     இறைவனுக்கு வேண்டுதல் என்று சொல்லிச் சிலர் சாலையில் புரண்டு கொண்டு வருகிறார்கள். அப்படிப் புரளுகிறவர் உடம்பும் நமது உடம்பைப் போன்றதுதான்.அவன் தாய் அவனைப் பத்து மாதம் சுமந்தே பெற்றிருக்கிறாள். அவன் தன் உடம்புக்குக் கவசம் ஒன்றும் போட்டுக் கொள்ளவில்லை. சாலையில் மெத்தை விரிப்பு ஏதும் இல்லை. சாலை கரடு முரடாகத்தான் உள்ளது. இருந்தாலும் இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே வீதியில் புரண்டு வருகிறான். அவன் உடம்புக்குச் சூடுதெரிகிறது. இருந்தாலும் அந்தச் சூட்டை அவன் தாங்கிக் கொள்கிறான். அந்த அளவில் அவன் மனம் சாட்சி மாத்திரமாக இருக்கிறது.

 

     அப்பர் பெருமான் திருக்கயிலையில் சிவபரம்பொருளைக் கண்டு வழிபட வேண்டும் என்னும் கருத்தில்மலை ஏறி வருகின்றார். உடம்பில் ஊறு உண்டாகிறாத. எலும்புகள் தேய்கின்றன. நிணம் வெளிப்படுகிறது. "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கு கண்டு அல்லால்மாளும் இவ்வுடம் கொண்டு மீளேன்" என்னும் உறுதி அவர் உள்ளத்தில் இருந்ததால்விளைந்த ஊறு அவர் உள்ளத்தைக் குலைக்கவில்லை.

 

     கர்ணன் பரசுராமனிடம் தான் பிராமணன் எனச் சொல்லி வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஆசிரியர் படுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார். தலையணை இல்லை. தமது மாணாக்கன் ஆகிய கர்ணன் மடிமீது தலையை வைத்துக் கொண்டு படுத்தார். தம்மை மறந்து சுகமாகத் துங்கினார். அப்போது ஒரு வண்டு கர்ணன் துடையைத் தொளைக்க ஆரம்பித்தது. அசைந்தால் குருநாதர் எழுந்துவிடுவாரே என்று கர்ண்ன் பேசாமல் இருந்தான். கர்ணன் துடையில் இருந்து குருதி குபுகுபு எனப் பீறிட்டு வந்தது. இருந்தும் அவன் அசையவில்லை. காரணம் மனத்திலுள்ள் வீரம். வண்டு துளைக்கும் வலியாகிய அனுபவம் இருந்தது. ஆயினும்  அதனால் மனம் மாறுபாடு அடையவில்லை. மனம் சாட்சி மாத்திரமாக இருந்தது.

 

     கொசுக் கடியையும் மறந்து தொலைக் காட்சியில் திளைத்து இருக்கலாம் என்றால்இறைவனை எண்ணிஅவன் திருவருளைப் பெற்றவர்கள் உலகத்தில் ஏற்படும் இன்ப துன்பங்களை எல்லாம் சாட்சி மாத்திரமாய் இருந்து நுகர்தலும் கூட  மனத்திலே சமநிலை ஏற்பட்டால் சாத்தியமாகும்.

 

     அத்தகைய சமநிலையை முருகன் திருவருளால் பெறலாம். முருகப் பெருமான் மயில் வாகனனாக எழுந்தருளி வந்தால் மேடு பள்ளம் தூர்ந்து போய் எல்லாம் சமமாகிவிடும். முருகப் பெருமானைத் தியானம் செய்தால்மயில் மேல் ஏறி வரும் கோலத்தில் உள்ளத்தே இருத்திக் கொண்டால் போர்க்களமாகஅசுர சம்பத்தால் பள்ளம் விழுந்தும்தேவ சம்பத்தால் மேடிட்டும் இருக்கிற நமது உள்ளம்சமநிலை பெற்றுவிடும். இன்ப துன்பங்களைச் சாட்சி மாத்திரமாய் இருந்து அனுபவிக்கலாம். இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை நுகரலாம். 

 

"குசை நெகிழா வெற்றி வேலோன்அவுணர் குடர்குழம்பக்

கசை இடு வாசி விசைகொண்டவாகனப் பீலியின்கொத்து

அசைபடு கால்பட்டு அசைந்ததுமேருஅடியிட எண்

திசைவரை தூள்பட்டஅத்தூளின்வாரி திடர்பட்டதே."

 

இதன் பொருள் ---

 

     வெற்றியை உடைய வேலாயுதக் கடவுள்அரக்கர்களுடைய குடல்கள் கலங்குமாறு செலுத்திகடிவாளமானது தளராமல் பிடித்துசவுக்கினால் அடித்து விரட்டகுதிரையின் வேகத்திலும் மிகுந்த வேகத்தைக் கொண்ட மயில்வாகனத்தினது தோகையின் தொகுதி அசைவதால் உண்டான காற்றுப் பட்டு பெரிய மேரு மலை அசைந்தது. அந்த மயில் வாகனமானது அடி எடுத்து வைக்க எட்டுத் திக்குகளிலும் உள்ள மலைகள் தூள்பட்டு அழிந்தன. அந்தத் தூளினால் கடலானது மேடாகி விட்டது. 

 

 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...