சென்ற இடமெல்லாம் சிறப்பு

 


சென்ற இடம் எல்லாம் சிறப்பு

-----

 

     சென்ற இடம் எல்லாம் சிறப்புப் பெறுபவர் யார்?  என்றால்செல்வம் உடையவர்கள் என்று தயக்கம் ஏதும் இன்றி விடை கூறி விடலாம். பொருட்செல்வம் உடையவர்கள் எங்கே சென்றாலும் பலர் சூழச் செல்வதைக் காணலாம். இரயில் வண்டி நிலையங்களில் சில சமயங்களில் வண்டி புறப்பட்டுச் சென்ற பிறகுகீழே ரோஜா இதழ்கள் இறைந்து கிடக்கக் காணலாம். யாரோ பிரமுகரை வழி அனுப்ப வந்தவர்கள் போட்ட மாலைகளிலிருந்து உதிர்ந்த மலர்களே அவை. விசாரித்தால் பிரமுகர் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்

 

     பல சமயங்களில் அந்தப் பிரமுகர் பெயரைக் கூட நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். கல்வியில் பெரியவராக அவர் இருப்பினும்மக்களுக்கு நலன் பயக்கும் பணிகளில் பெரியவராக அவர் இருப்பினும்நம் போன்றவர் அறிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால்இவை இரண்டு துறைகளிலும் பெரியவராக இருப்பவரைப் பிறர் சாதாரணமாக அறிந்திருப்பினும்இவ்வாறு கெளரவப்படுத்தும் வழக்கம் நம் நாட்டில் குறைவுஅவர்களை இரயில் வண்டி நிலையத்தில் வந்து சந்தித்து வழியனுப்பும் அளவிற்கு யாரும் முன் வருவதில்லை.

 

     இன்றைய அறிஞர் உலகில் மிகப் பெரியவராய் இருப்பவர் ஒருவர் சென்னை இரயில் நிலையத்தில் பிரயாணத்திற்குக் காத்துக் கொண்டிருந்தார். அவரை யார் என்று அறிந்து கொள்ளக் கூட ஒருவரும் அங்கில்லை. சிறிது நேரத்திற்கு எல்லாம் பலர் புடைசூழ ஒருவர் வந்தார். அவர்உடையிலிருந்தே 'பெரிய இடம்என்பது நன்கு தெரிந்ததுஅனைவரும் அப்பெரிய இடத்தைச் சேர்ந்த பிரமுகரை வண்டிக்குள் ஏற்றிவிட்டனர்ஒருவர் அவருடைய படுக்கையைத் தட்டி விரித்தார். பெரிய இடத்தார் பெருமூச்சுவிட்டுக் கொண்டே இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்தார். உடனேஉடன்வந்தவர் ஒடோடிச் சென்று குளிர்ந்த பானம் ஒன்றை வாங்கி வந்தார்அங்கிருந்த மற்றவர் யாரும் வண்டிக்குள் ஏற முடியாதபடிபிரமுகரை வழியனுப்ப வந்த கூட்டம் வழியை அடைத்துக் கொண்டிருந்தது. இறுதியாகப் பிரமுகர் யார் என்று விசாரித்த பொழுது பெருஞ்செல்வர் என்ற உண்மை தெரிய வந்தது. பெரும் பொருள் படைத்தவர் என்பது தவிர அவரிடம் வேறு சிறப்பு ஒன்றும் இல்லை என்றாலும்பலர் அவர் பின்னே செல்வதில் குறைவில்லை.

     எந்த மொழி பேசுபவராய் இருப்பினும்எந்த நாட்டவராய் இருப்பினும்பலரும் ஒருவரை மதிக்க வேண்டுமாயின்அந்த ஒருவரிடம் தனிப்பட்ட ஒரு சிறப்புஇருத்தல் வேண்டும். அனைவரும் இடமொழி வேறுபாடு அற்று அந்தச் சிறப்பை அறிய வேண்டுமாயின்அது கால தேசவர்த்தமானம் கடந்ததாய்எல்லா நாட்டினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாய்இருத்தல் வேண்டும். அத்தகைய ஒரு பொருள் எது என்றால்,கல்வியே என்று சொல்லத் தேவைஇல்லை.

     மேலே காட்டிய உதாரணத்தில் கல்வியால் பெரியவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்பொருட்செல்வம் உடையவர்களையே மக்கள் கூட்டம் சுற்றி நிற்பதைக் கண்டோம். அவ்வாறானால், "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று கூறுவது பொருத்தமானதா என்ற வினாத் தோன்றும். பொருட்செல்வரை அவருடைய ஊரில் உள்ளவர் மட்டுமே மதிப்பர்அதுவும் அவரிடம் ஏதேனும் ஒரு பயனைக் கருதியே சுற்றி வருவர். அவர் ஒன்றுமே தாராத உலோபியாயினும் சுற்றிவரும் கூட்டத்திற்குப் பஞ்சம் இராது. மூடியுள்ள தேன் குடத்தில் இருந்து தேனைச் சுவைக்க முடியாவிடினும்எறும்புகள் அதைச் சுற்றி வருவதுபோல இக்கூட்டம் சுற்றி வரும்அதில் வியப்பில்லை. ஆனால்சுற்றி வருவதும் இச்சகம் பேசுவதும் வேறுஉண்மையில் மதிப்பது என்பது வேறுகற்றறிந்தவர்களை பயன் ஒன்றையும் கருதாமல் உண்மையிலேயே  உலகத்தார் மதிப்பர்அவரிடத்து அன்பு செய்வர்.

     நவகயிலாயங்களும்நவதிருப்பதிகளும் தன் கரையில் அமையப் பெற்ற தாமிரவருணி நதியின் வடகரையில் ஸ்ரீவைகுண்டம் என்று வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீகைலாசம் என ஒரு பகுதி உண்டு. அங்கே பரம்பரையாகத் தமிழ்ப் புலமையும் முருகக்கடவுளது பக்தியும் வாய்ந்த சைவ வேளாள குலத்தில் சண்முகசிகாமணிக் கவிராயர் என்ற ஒருவர் தம் மனைவியாரான சிவகாமசுந்தரி என்னும் அம்மையாரோடு வாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன் என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வருவாராயினர்.

 

     குமரகுருபரர் ஐந்தாண்டு வரையில் பேச்சின்றி ஊமை போல இருந்து வந்தனர். அது கண்டு நடுங்கிய பெற்றோர்கள் அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று,செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும் பாடு கிடந்தனர். முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல் பெற்றுக் கல்வியிலும் சிறப்புற்றனர். செந்தில் பெருமான் திருவருளால் வாக்குப்பெற்ற இவர். அப்பெருமான் விஷயமாக "கந்தர் பலிவெண்பா" என்ற பிரபந்தத்தைப் பாடினார். அப்பால் தம் ஊரில் எழுந்தருளியுள்ள கயிலாயநாதர் மீது "கயிலைக் கலம்பகம்" என ஒரு பிரபந்தம் இயற்றினார். 

 

     குமரகுருபரர் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞான சாத்திரங்களையும் திருவருளால் விரைவில் கற்றுத் தேர்ந்தார். மருவுக்கு வாசனை வாய்த்தால் போன்றுபக்தி ஞான வைராக்கியங்கள் இவரிடத்தே உண்டாகி வளரத் தொடங்கின. பல சிவத் தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்யத் தொடங்கினர். மதுரையிலே சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மையின் மீது ஒரு பிள்ளைத்தமிழ் பாடி அக்காலத்தில் மதுரையில் அரசாண்டிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். அதனை அரங்கேற்றுகையில் மீனாட்சியம்மையே குழந்தையுருவாக எழுந்தருளி வந்துகேட்டு மகிழ்ந்தாள் என்றும்குமரகுருபரர் முத்தப்பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் தம் திருக்கழுத்தில் இருந்த முத்துமாலை ஒன்றை எடுத்து இவருக்கு அணிவித்துவிட்டு மறைந்தாள் என்றும் கூறுவர். அந்தப் பிள்ளைத்தமிழைக் கேட்டு மனம் உவந்த திருமலை நாயக்கர் குமரகுருபரருக்குப் பலவகையான சம்மானங்களை அளித்து வழிபட்டார். குமரகுருபரர் பின்னும் சில காலம் மதுரையிலே தங்கி "மதுரைக் கலம்பகம்" என்னும் பிரபந்தத்தை இயற்றினர். பிறகு சோழ நாட்டுத் தலங்களைத் தரிசிக்கத் தொடங்கித் திருவாரூருக்குச் சென்றார். அங்கே தியாகப்பெருமானைத் தரிசித்துக் கொண்டு சிலகாலம் இருந்தார். அக்காலத்தில் "திருவாரூர் நான்மணிமாலை" என்னும் பிரபந்தத்தை இயற்றினார்.

     சிவஞானஉபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து  இவருக்கு வரவர அதிகமாயிற்று தமக்குரிய ஞானாசிரியரைத் தேடித் தேர்ந்து சரண் புகவேண்டுமென்று  இவர் மனம் ஆவலுற்று நின்றதுஅக்காலத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரஆதீனத்தில்  நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய மாசிலாமணிதேசிகர்  சிவஞானச்செல்வராக இருப்பதை அறிந்து அவரிடம் சென்றார்.  

     தாம் பெற்ற விருதுகளோடும் புலமைச் செருக்கோடும் மாசி(ல்)லாமணியாரை வந்து கண்டார் குமரகுருபரர். நல்ல பக்குவ நிலையில் இருந்தும்வழி காட்டுவார்  இன்மையால்மலர்ந்தும் மணம் பரப்பாத மலரைப் போல இருந்த குமரகுருபரரை எவ்வாறாயினும் பயனுனடயவராகச் செய்ய விரும்பினார் அருளுடைத் தலைவர். பெரியபுராணத்தில் உள்ள "ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள" என்ற பாடலுக்கு அனுபவப் பொருள் கூறுமாறு அவர் குமரகுருபரரைக் கேட்டாராம்.

     இதுவரை அறிவால் பெறும் பொருள் ஒன்றையே கண்டு,அதனையே பெரிது என மதித்துவந்த குமரகுருபரர் திடுக்கிட்டார்அறிவால் அடையும் கல்வியை அல்லாமல் உணர்வால் பெறும் கல்வியும் உண்டோ என்று வியப்புற்றார்தம்முடைய கல்வி  முழுத்தன்மை பெற்றது அல்ல என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தார். "தொட்ட அனைத்து ஊறும் மணற்கேணிமாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு"  என்று திருவள்ளுவ நாயனார் கூறுவது உண்மைதான். ஆனால்அறிவு மட்டும் ஊறினால் போதுமா?  அறிவு ஒன்றினாலேயே மனிதன் முழுத்தன்மை அடைந்து விட முடியுமாஅறிவின் பெருக்கம் தலைக் கனத்தை உண்டாக்கும். அது மட்டும் பெருத்தால் மனிதன் சரியானபடி நிற்க முடியாமல் நிலை குலைய நேரிடும். இன்று அறிவை மட்டும் வளர்த்துக் கொண்டுள்ள மனிதர்களால் உலகம் படும் பாட்டைக்கண்டு கொண்டுதானே இருக்கிறோம்!

     எனவேதம் குறைபாட்டை நன்கு அறிந்தார் குமரகுருபரர்உடனே  மாசில்லாமணித் தேசிகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தாம் பெற்ற பரிசில்களை யெல்லாம் காணிக்கையாக வைத்து விட்டார். அப்பொருளைக் கொண்டு தனியே மடம் ஒன்று அமைத்துச் சமயத்தைப் பரப்புமாறு சீடருக்குக் கட்டளை இட்டார் தலைவர்.

     அன்றியும்தமிழ் வழங்கும் நாட்டில் மட்டும் அல்லாமல்பிறமொழி  வழங்கும் நாட்டிலும் சென்று தெய்வத்தமிழ் நாட்டின் பெருமையைத் தம் சீடர் எடுத்துக் கூற வேண்டும் என்று விரும்பினார் தருமையாதீனத்  தலைவர். அறிவுக் கல்வியும்உணர்வுக் கல்வியும் ஒன்று கூடிய வழியே  பெருத்த நன்மை உண்டாக முடியும். இவை இரண்டையும் நிரம்பப் பெற்றிருந்த குமரகுருபரர்,  நேரே காசிக்குச் சென்றார். முகம்மதிய மன்னர் ஆட்சி செய்துகொண்டிருந்த அந்நாட்டில்கலைமகளின் அருளால் விரைவில் அவர்களுடைய மொழியைக் கற்றறிந்தார்அத்தேவியின் அருளால் சிங்கம் ஒன்றைப் பெற்று,  அந்த ஒரு சிங்க முதுகின்மேல் ஏறிச் சென்று மன்னவனைக் கண்டார்அவனுடைய மொழியிலேயே பேசிஅவனை மகிழ்வித்தார். தமிழ் நாட்டு இளந்துறவியின் கல்வி அறிவு ஒழுக்கம் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்த மன்னன் அவர் விரும்பின பரிசிலைத் தர இசைந்தான்.

     தமிழும் சைவமும் பரப்பவே காசிக்குச் சென்ற அப் பெரியார்தாம் ஒருமடம் கட்ட விரும்புவதாகவும்அதற்கு இடம் வேண்டும் எனவும் கூறினார்இரண்டு பருந்துகள் வட்டமிடும் பொழுது அவற்றின் இடைப்பட்ட இடம் தமக்குவேண்டும் என்று கேட்டார். மன்னனும் அவ்வாறே தருவதாக இசைந்தான். மறுநாள் பொழுது புலர்ந்தது. மன்னனுடைய அரண்மனையைச் சுற்றி இரண்டு பருந்துகள் வட்டம் இட்டனவாம். தன் சொல்லைக் காக்க விரும்பிய மன்னன்உடனே அவ்விடத்தைக் காலி செய்து குமரகுருபரருக்கு அளித்து விட்டதாக வரலாறு கூறுகிறது.

     தென்தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த குமரகுருபரர் காசிக்குச் சென்றுதமிழே அறியாத மன்னனால்சைவ சமயத்திற்குப் புறம்பான முகம்மதிய மதத்தைச் சேர்ந்த ஒரு மன்னனால் மதிக்கப்பட்டார் எனில்அதற்கு யாது காரணம் என்ன என்பதைத் திருவள்ளுவ நாயனார்,

"யாதானும் நாடாமால்,ஊராமால்;என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு?"

என்று அழகாக உணர்த்தி அருள்கிறார்.

     "கற்றவனுக்குத் தனது  நாடும்தனதுஊருமேஅல்லாமல்எந்தநாடும்எந்த ஊரும் தனது நாடும்ஊரும் போன்றவையே ஆகும்அப்படி இருக்கஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாமல் வாழ்நாளைக் கழிக்கின்றது என்ன நினைந்து?" என்று வினவுகின்றார்  நாயனார்சாகும் வரையிலும்கூடகல்வியை ஒருவன் பயிலாது இருப்பது பெருமைக்குஉரியது அல்ல"கல்வி கரை இல" என்றதால்கல்வி கற்கத் தொடங்கிய ஒருவன்இதுபோதும் என்று அமையாதுதனது வாழ்நாள் இறுதிவரையிலும் கற்றலை  விடாது மேற்கொள்ளவேண்டும் என்பதும்  வலியுறுத்தப்பட்டது.

     தமிழ் அறியாத வடதேசத்திற்குச் சென்று தமிழில் பாடிமுகம்மதிய மன்னனிடம் பரிசில் பெற்றகுமரகுருபரரும்அமெரிக்கா நாட்டுக்குச் சென்றுஇந்நாட்டுப் பண்பாட்டைப் பரப்பிய இந்தியநாட்டின் இணையிலாத் துறவியாராகிய விவேகானந்தரும் திருக்குறள் வழியில் வாழ்ந்து காட்டியவர்கள்.

     கற்க வேண்டிய நூல்கள்உயிருக்கு உறுதி பயப்பவையே ஆகும். உயிருக்கு உறுதி பயப்பவை அறம்பொருள்,இன்பம்வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களே ஆகும். "அறம்பொருள்இன்பம்,வீடு அடைதல் நூற்பயனே" என்கிறது நன்னூல். உயிருக்கு உறுதி பயக்கும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தவரே கற்றார் எனப்படுபவர். பின்வரும் பாடலைக் காண்போம்...

"ஆற்றவும் கற்றார் அறிவுடையார்,அஃது உடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை --- அந்நாடு

வேற்று நாடு ஆகா,தமவே ஆம்,ஆயினால்

ஆற்று உணா வேண்டுவது இல்."   --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார்அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசைகளிலும் பரவாத நாடுகள் இல்லைஅந்த நாடுகள் அயல் நாடுகள் ஆகாஅவ் அறிவுடையோர் நாடுகளே அவை. எனவேவழியில் உண்பதற்கு அவர்கள் உணவு (கட்டமுது) கொண்டு செல்ல வேண்டியதில்லை.

 

      "கற்றாருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு"

 

       "அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்என்பது "வெற்றிவேற்கை". ஆதலால்,அறிவு உடைய ஒருவன் செல்லுகின்ற இடந்தோறும் அங்கு உள்ளோர்களால் வரவேற்கப்பட்டு வேண்டிய நலனை அடைவான். ஆதலால்,  அவனுக்கு வழியிடைக் கட்டுச்சோறு வேண்டுவது இல்லை.

 

     மன்னையைம் கற்றோனையும் சீர் தூக்கிஔவையார் பாடி அருளிய பாடல் ஒன்றைக் காண்போம்கற்றோன் என்றால்மனமாசு அறும்படியாகக் கற்றவரையே குறிக்கும்.

 

"மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின்,

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் --- மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை,கற்றோற்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு."   ---  மூதுரை.

 

இதன் பொருள் ---

 

     அரசனையும் கசடு அறக் கற்ற புலவனையும் ஆராய்ந்து பார்த்தால்அரசனைக் காட்டிலும் கற்றவனே சிறப்பு உடையவன் ஆவான். அரசனுக்குத் தன் நாட்டிலல்லாமல் (பிற நாடுகளில்) சிறப்பு இல்லை. ஆனால்கற்று அறிந்தவனுக்கோ அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும்.

 

     பெரும் சிறப்பைத் தருவதோடுஅறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களையும் அடையச் செய்யும் கல்வியைப் போன்று ஒருவனுக்கு உற்ற துணை வேறு ஏதும் இல்லை என்கிறார் குமரகுருபர அடிகளார்.

 

"அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை."      --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     ஒழுக்கமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றையும் வீடுபேற்றையும் கொடுக்கும்உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும்வருத்தம் ஒன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும்ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்களுக்குத் தக்க துணை கல்வியை விடப் பிறிதில்லை.

 

     ஆன்மா அறிவுப் பொருள். ஆன்மாவுக்கு உள்ளது சிற்றறிவு. அறிவித்தால் அறிந்து கொள்ளும். ஆணவம் உள்ளதால்எதையும் முழுமையாக அறிந்து கொள்ள முயலாமல்அறிந்ததைக் கொண்டு நான் அறிந்தேன் என்று செருக்கு உறும். அறிவித்தால் அறியும்.  ஒவ்வொன்றாக அறியும். அறிந்ததை மறக்கும். எல்லாவற்றையும் ஒருசேர அறிய அதனால் முடியாது.இறைவனும் அறிவுப் பொருள். இறைவன் பேரறிவு வடிவமானவன். இயல்பாகவே மலமற்றவன். எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் இயல்பு உடையவன்.ஆன்மா அறிவைப் பெறவேண்டுமானால் அறிவு நூல்களைக் கற்று உணர்ந்து அவற்றின் வழி நிற்கவேண்டும். அறிவு நூல் வேறு. உலக நூல் வேறு.

 

     அறிவு என்பது நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் எள்ளவாறு உணர்ந்து தெளிவதே ஆகும். எது நன்மை பயக்குமோ அதைப் பற்ற வேண்டும். எது தீமை தருமோஅதை விலக்க வேண்டும். இதை "மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார். மேலும், "அறிவினுள் எல்லாம் தலை என்பதீய செறுவார்க்கும் செய்யா விடல்" என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டியபடிஅறிவின் பயனானது யாருக்கும் நன்மையைச் செய்வதே ஆகும். இப்படிப்பட்ட தெளிவான நல்ல அறிவை அருள் நூல்களே தரும்.  உலக நூல்கள் தரமாட்டா. தடுமாற்றத்தையே அவை மிகுக்கும். அறிவு நூல்கள் தடுமாற்றத்தைத் தவிர்க்கும்.

 

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல

கூஉந் துணை அல்லால்கொண்டு தடுமாற்றம்

போஒந் துணை அறிவார் இல்."               --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஆய்ந்து அறிந்துநல்ல அறிவு நூல்களைக் கல்லாதுஇவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம்இவ்வுலகில் கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவலாமே அல்லாதுஅந்த நூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடத் துணையாக மாட்டா.

 

     உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயேதிருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும்அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும்.

 

     அநபாயன் என்ற சோழ மன்னன்சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோதுஅமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "மன்னர் பெருமானே! இது அவநுல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.

 

     அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின்அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல்ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகமக்கள் உய்வு பெறவேண்டும்."அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல். இதனை நன்கு சிந்திக்கவும்.

 

     திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவைகற்றபின் நிற்க அதற்குத் தக”.  இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும். "கற்பவை என்பதனால்அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றிபிற பொருள் உணர்த்துவனசின்னாள்,பல்பிணிசிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவதுவிபரீத ஐயங்களை நீக்கிமெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”. பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை "அறநெறிச்சாரம்" என்னும் நூல் உணர்த்துவது காண்க.

 

"மறஉரையும்காமத்து உரையும்மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்."               --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும்பிறவற்றினை வளர்க்கும் நூல்களும்கலந்து நிறைந்த உலகில்அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்றவீட்டுலகினை உடையவர் ஆவர்.பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

 

"தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர்--பித்தர்அவர்

நூல்களும் பொய்யேஅந் நூல்விதியின் நோற்பவரும்

மால்கள் எனஉணரற் பாற்று."          --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள்விருப்பம்,காட்சிஎன்ற இவையோடுஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும்அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும்அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்க அறிவினை உடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

 

     எனவேகற்க வேண்டிய அறிவு நூல்களைக் கசடு அறக் கற்றுத் தேர்ந்துஅறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்க வேண்டுவதே மனிதப் பிறவியின் பயன் ஆகும். அப்படிப்பட்டவர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு உண்டாகும்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...