காசியில் இறந்தால் முத்தி
----
"காசியில் இறந்தால் முத்தி" என்னும் சொற்றொடர் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. "காசியில் இறந்தால் முத்தி" என்பது ஓர் ஐதீகம். ஐதிகம் என்னும் சொல்லுக்கு நம்பிக்கை என்று பொருள். இதன் உண்மைப் பொருளைச் சிந்திக்கலாம்.
"காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்கள் ஆகும்,
காசியை வாழ்த்தும் நாவே நாவெனக் கழறல் ஆமால்,
காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும்,
காசியை இனிது காணும் கண்களே கண்கள் ஆகும்."
என்பது "காசிகண்டம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்.
"காசி" என்னும் சொல் ஓளியைக் குறிக்கும். ஒளி என்பது, உலகியலில் அறிவைக் குறிக்கும், அருளியலில் ஞானத்தைக் குறிக்கும். "காசம்" என்னும் சொல்லுக்கு, பொன், பளிங்கு, வானம் என்று பொருள். "காசு" என்னும் சொல்லுக்கு பொன், மணி என்று பொருள்.
அஞ்ஞானம் என்னும் இருள்நிலையில் இருந்து நீங்கி, ஞானம் என்னும் ஒளிநிலையில் ஆன்மா திளைத்து இருப்பதே காசி ஆகும். அந்த நிலையில் ஆன்மாவானது, தன்னுடைய நிலை இழந்து, "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்று அருணகிரிநாதர் கூறுவது போல் தன்னுடையது என்று கருதும் எல்லாவற்றையும் இழந்த நிலை காசியைக் குறிக்கும். தன்னை இழந்த ஆன்மா, இறைநிலையை அடைந்து நிற்கும். "என் உடல், என் உயிர், என் அறிவு எல்லாம், தன்ன என்று ஆக்கிய தயவு உடைத் தாயே" என்று வள்ளல் பெருமான் கூறுவது போலவும், "அன்றே என்தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும், குன்றே அனையாய், என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ" என்று மணிவாசகப் பெருமான் கூறுவது போலவும் ஆன்மாவானது நிற்கின்ற நிலையை "காசி" ஆகும். அந்த நிலையில் ஆன்மா பெறுவதுதான் முத்தி நிலை. தன்னை இழந்து நிற்கும் நிலை சாவு ஆகும். "தணியாதசிந்தையும் அவிழ்ந்து, அவிழ்ந்து, உரை ஒழித்து,என் செயல் அழிந்து, அழிந்து, அழிய, மெய்ச்சிந்தை வர, என்று நின் தெரிசனைப் படுவேனோ?" என்று இந்த அருள் நிலையை வேண்டி அருணகிரிதார் பாடுவார். இறந்த நிலை என்பது குறித்து, "மௌனத்தை உற்று, எல்லாம் ஒருங்கிய நிற்குணம் பூண்டு என்னை மறந்து இருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே" என்று காட்டினார் அருணகிரிநாதர். எனவே, இறந்த நிலை என்பது உடலை விட்டு உயிர் போகின்ற நிலை என்பதோடு அல்லாமல், பற்றுக்களை விட்டு, அருள்நிலையில் ஆன்மா திளைத்து இருத்தலையும் குறிக்கும் என்பதை அறிதல் வேண்டும். எனவே, "காசியில் இறத்தல்" என்பது, நான் எனது என்னும் அகப்புறப் பற்றுக்களை அறுத்து, அருள்நிலையில் ஆன்மா இருத்தல் என்பது ஆகும்.
"அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல் மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய செயல் மாண்டவா" என்று இந்த நிலையைக் காட்டி அருளினார் மணிவாசகப் பெருமான். "அயலார் என்பவர் யாரும் இன்றி, அரிய வினையினால் வந்த உறவினர் என்பவர் யாரும் இன்றி, உலகத்தின் மீது உள்ள மயக்கம் நீங்கி, மற்று உள்ள சொல்லும் இறந்து, என்னுடைய செயலும் கெட்டு நின்ற நிலைமை" அடைதலே இறத்தல் ஆகும்.
"வான்கெட்டு மாருதம்
மாய்ந்து அல் நீர் மண்கெடினும்
தான்கெட்டல் இன்றிச்
சலிப்றிபு அயாத் தன்மையனுக்கு
ஊன்கெட்டு, உயிர்கெட்டு,
உணர்வுகெட்டு, என் உள்ளமும்போய்
நான் கெட்டவா பாடித்
தெள்ளேணங் கொட்டாமோ!"
என்று மேலும் இந்த அருள் நிலையை விரித்துக் கூறுகின்றார் மணிவாசகப் பெருமான்.
"தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ,
சீவன் சிவச் சொருபம் ...... என தேறி,
நான் என்பது அற்று, உயிரொடு ஊன்என்பது அற்று, வெளி
நாதம் பரப்பிரம ...... ஒளிமீதே
ஞானம் சுரப்ப, மகிழ் ஆனந்த சித்தியொடெ
நாளும் களிக்க, பதம் ...... அருள்வாயே."
என்பார் அருணகிரிநாதப் பெருமான்
"சீவன் சிவச் சொருபம்" என்றதைக் கொண்டு,சீவனே சிவன் என எண்ணி பாழும் கும்பியில் விழக்கூடாது. சீவன் சிற்றறிவும் சிறுதொழிலும் மலப்பிணிப்பும் உடையது. சிவம் பேரறிவும் பேராற்றலும் மலரகிதமும் உடையது. சீவனைச் சிவமாகப் பாவித்தல் மலத்தினின்றும் விடுபடுதற் பொருட்டே ஆகும். "நான்" என்ற தற்போதம் அறவே அழிந்தால் அன்றி உண்மை இன்பம் தோன்றாது. நான் செய்கின்றேன்; நான் அனுபவிக்கின்றேன் என்ற எண்ணங்கள் அணுத்துணையும் இன்றி நீங்க வேண்டும். இதைத்தான், "நான் என்பது அற்று, உயிரோடு ஊன் என்பது அற்று" என்றார் அருணகிரிநாதப் பெருமான். “யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே” என்பது கந்தர் அனுபூதி. “நான் ஆன தன்மை நழுவியே, எவ்வுயிர்க்குந் தான் ஆன உண்மைதனைச் சாரும் நாள் எந்நாளோ” என்பது தாயுமான அடிகளார் அருள்வாக்கு.
புறத்தே சிவலிங்க வடிவாக வழிபடப்படும் பொருபொருளை, உள்ளத்திலும் கண்டு வழிபட வேண்டும். திருக்கோயிலில் மட்டுமல்ல. எல்லா உயிரிலும் பரம்பொருள் உள்ளது. எனவேதான், "தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித் தேட ஒண்ணாத் தேவனை என் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன்" என்றார் அப்பர் பெருமான். பரம்பொருளை ஒளிநிலையிலே உள்ளத்தின் உள்ளே அருட்பெருஞ்சோதி வடிவாகக் கண்டு, நாவார வாழ்த்துவதே வாய் ஆகும். அந்த நிலையில் அப் பரம்பொருளின் பொருள்சேர் புகழைக் கேட்பதே செவியின் தொழிலாக இருக்கும். காசித் தலத்தில், இறைவனைச் சிவலிங்க வடிவாகக் காண்பது ஒருநிலை.
திருமாலும், பிரமனும் தமக்குள் பிணக்கம் கொண்டு தாமே கடவுள் வாதிட்டுக் கொண்டு இருந்த நிலையில், அவர்களது செருக்கை அடக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபரம்பொருள் அவர்கள் இடையே நெருப்பு உருவாகிஅங்கே அளவு கடந்து நின்றது. அதன் அடி முடியைக் காணமாட்டாது போயினர் திருமாலும், பிரமனும். சிவபரம்பொருளே முழுமுதற்கடவுள் என்பது அவர்களுக்கு விளங்கிற்று. அப்படி சோதி வடிவாய் நின்ற குறிதான், சோதிலிங்கம் என்றும் சிவலிங்கம் என்றும் வழிபடப்படுவது. திருமால் பிரமன் இருவருக்கும் இடையே தழல் பிழம்பாய் நின்றதுதான் சிவலிங்கம். சோதிலிங்கம் எனப்படுவதும் அதுவே ஆகும்.
"காணாத அருவினுக்கும்
உருவினுக்கும் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு
நிகழ் குறியாம் சிவலிங்கம்,
நாணாது நேடியமால்
நான்முகனும் காண நடுச்
சேண் ஆரும் தழல்பிழம்பாய்த்
தோன்றியது தெளிந்தாராய்"
என்று பெரியபுராணத்தில் சாக்கிய நாயனார் புராண வரலாற்றில் இது தெளிவிக்கப்பட்டு உள்ளது அறியலாம்.
இதன் பொருள் ---
கண்ணுக்குப் புலப்படாத அருவத் திருமேனிக்கும், கண்ணுக்குப் புலப்படும் உருவத் திருமேனிக்கும் மூலமான இருப்பிடமாய், நீண்ட பாம்பை அணிந்த சிவபெருமானை அறிந்து வழிபடுவதற்குச் சிறந்த அடையாளமகிய குறியாய் விளங்குகின்ற சிவலிங்கம், நாணம் இல்லாது தேடிய திருமாலும் நான்முகனும் காணுமாறு, அருளால் அவர்கள் நடுவே விண்ணையும் கீழ் உலகத்தையும் அளாவும், அனல் பிழம்புத் தூணாகித் தோன்றும் வடிவமே வடிவம் ஆகும் எனும் தெளிவு கொண்டவராய் (சாக்கிய நாயனார், அந்தச் சிவலிங்க வழிபாட்டை மேற்கொண்டார்)
காசியை வாழ்த்துவது என்றால், காசியில் திருக்கோயில் கொண்டு சோதிலிங்க வடிவாக எழுந்தருளி உள்ள பெருமானை வாழ்த்துவது என்று பொருள். அப் பெருமானை வாழ்த்துவதே நாக்கு ஆகும். அந்தப் பெருமானுடைய அருட்புகழைக் கேட்பவையே செவிகள் ஆகும். அந்தப் பெருமானைக் கண்ணாரக் கண்டு வழிபடுபவையே கண்கள் ஆகும். உருவத் திருமேனியாகக் கண்டு வழிபடுவதோடு, மனக்கண்ணாலும் கண்டு வழிபடுவதே சிறந்தது என்பதால், "உள் நாடி உள்ளே ஒளி பெற நோக்கினால், கண்ணாடி போலக் கலந்து நின்றானே" என்றார் திருமூல நாயனார்.
"காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்கள் ஆகும்" என்று சொல்லப்பட்டதற்கு மேலெழுந்தவாரியாக என்ன பொருள் என்பது விளக்கவேண்டியது இல்லை. "கால்" என்பது இங்கே நமது மூச்சுக் காற்றைக் குறிக்கும். பிராணவாயுவை மூலாதாரத்தில் இருந்து மண்டலித்து எழப்பண்ணி, ஆக்ஞை என்னும் புருவமத்தியில் நிறுத்துதலைக் குறித்து இப்படிச் சொல்லப்பட்டது.
அடுத்து, முத்தி என்னும் சொல் குறித்துக் காண்போம். முத்தி என்றாலே, உடம்பை விட்டுச் செல்வது என்று பொருள் அல்ல. இறப்பது என்று பொருள் அல்ல. இறந்து போகின்றவர்கள் எல்லோரும் முத்தி பெற்றவர்கள் அல்ல. "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். உயிரானது இயல்பாகத் தன்னிடத்தே பொருந்தி உள்ள பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். பாசம் என்னும் சொல்லுக்கு, மும்மலம், ஆணவமலம், பற்று, கட்டு என்றும் பொருள் உண்டு. உடம்பொடு வாழும் காலத்திலேயே பாசநீக்கம் பெற்றவர்களானால், அவர்களை, "சீவன் முத்தர்" என்று சொல்லலாம்.
முத்தி என்னும் சொல் ஒரு பொருளைக் குறிக்கும்போது முத்து என வந்தது. வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும்."முத்து" என்னும் சொல்லுக்கு, அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.
சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டை வெளியேற்றுவது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது.
கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.
காசியில் (அருள்நிலையில்) இறந்தால் (நான் எனது என்னும் அகப்புறப் பற்றுக்களை அறுத்து, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு இருந்தால்) முத்தி (வீடுபேற்றை அடையத் துணை புரியும் பாசநீக்கம் ஆகும்).
ஆக, "காசியில் இறந்தால் முத்தி" என்பதன் உண்மைப் பொருள் இதுவே ஆகும். காசியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பிரசாதம் வேண்டி அர்ச்சகர்களிடம் கையை நீட்டினால், தட்சணைத் தட்டைக் காட்டுகிறார்கள். காசு போட்டால்தான் பிரசாதம் கிடைக்கும். அருளையே நாடி இருக்க வேண்டிய திருக்கோயில் பணியில், பொருள் ஒன்றையே நாடி இருப்பவர்களை அருள்நிலையில் உள்ளவர்களாகக் கருத இடம் இருக்காது. அவர்கள் பற்று அற்றவர்கள் அல்லர். அவர்கள் இறந்தால், காசியில் இறந்தார்கள் என்பதாலேயே முத்தி கிடைக்குமா? சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
No comments:
Post a Comment