எல்லாவற்றையும் இறைவன் அறிவான்
-----
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமது சொற்பொழிவின் போது, மேடையிலோ அல்லது முன்வரிசையிலோ அமர்ந்துள்ளவர்கள் சிலரைக் குறித்து, இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளுவார். அது உண்மையில் பாராட்டா? வஞ்சப் புகழ்ச்சியா? என்பது சுவாமிகளுக்கும், அறிந்த சிலருக்குமே தெரியும். யாருக்கும் தெரியாது என்று இருந்தோமே, சுவாமிகளுக்குத் தெரிந்துவிட்டது போல் இருக்கிறதே என்று தமக்குள்ளேயே எண்ணிக் கொள்வார்கள். இந்திரன், சந்திரன் போன்றவர் யார் என்பது சுவாமிகளுக்குத் தெரியும். இந்திரன், சந்திரன் என்று சுவாமிகள் சொன்னதில் பொருள் உண்டு. இந்திரன் சந்திரன் என்று ஒருவரைப் புகழ்ந்தால், அது வஞ்சப் புகழ்ச்சியே.
இந்திரன் கௌதம முனிவரின் பத்தினியின் அழகில் மயங்கி, முனிவர் இல்லாத சமயம் பார்த்து, வஞ்சகமாக அவர் வடிவில் சென்று, அவரது பத்தினியாகிய அகலிகையைக் கலந்து, பின்னர் முனிவரின் சாபத்துக்கு ஆளானவன். யாராவது வேள்வி புரிகின்றார்கள் என்றால், தனது பதவிக்கு வேட்டு வந்துவிடுமோ என்னும் அச்சத்தால், மேங்களை ஏவி, யாகங்கள் புரிவதற்கு இடையூறு விளைத்தவன்.
சந்திரன் தனது மனைவிமார்கள் அனைவரின் மீதும் அன்பு செலுத்தாமையால், தக்கனது சாபத்திற்கு ஆளானவன். இந்திரன், சந்திரன் போன்றவர்கள் எக்காலத்தும் உண்டு.
இந்திரன் இரண்டு வஞ்சகச் செயல்களைப் புரிந்தான். ஒன்று, கண்ணனின் ஆணைப்படி, அந்தணர் வடிவில் சென்று, கர்ணனுடைய கவசகுண்டலங்களைக் கவர்ந்தான். அறத்தை நிலைநாட்ட எண்ணிய கண்ணனின் ஆணைப்படி இது நடந்ததாலும், அவனாக இதைச் செய்யவில்லை என்பதாலும், இந்த வஞ்சகச் செயல் இந்திரனைச் சாராது. ஆனால், கௌதம முனிவரின் பத்தினியை வஞ்சகமாகச் சென்று கலந்தது அவன் செய்த பாவம்.
வஞ்சகமாக எதைச் சாதித்தாலும், சாதித்தவனுடைய மனம் சஞ்சலப்படும். யாருக்கும் தெரியாது என்றாலும் கூட, செய்தவனுடைய நெஞ்சுக்கும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கும் தெரியும். ஆனால், தவறு செய்யும்போது, இவற்றை எல்லாம் கருதாது, தன்னலத்தை மட்டுமே கருதிச் செய்வதும், பிறகு வருந்துவதும் மனித இயல்பு. இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை இகழ்ந்து வாழ்வதும் மனித இயல்புதான். பின்னர் துன்பப்பட நேரும்போது, இறைவனிடம் முறையிடுவதும் மனித இயல்புதான். காரணம், சமயவாதிகள் நம்மைத் தெளிவுபடுத்தத் தவறிவிட்டனர். எந்தப் பாவத்தைச் செய்தாலும், ஒரு பரிகாரத்தைக் காட்டினார்கள். பரிகாரம் எதற்கு,பிராயச்சித்தம் எதற்கு என்பதை நமக்கு அறிவிக்கவில்லை. காரணம், அவர்களும் நூல்களைப் படித்தார்களே ஓழிய, அவற்றின் பொருளை நன்கு உணரவில்லை. மழை பொழிவது என்பது வினைப் பயனைப் போன்றது. மழை பொழிவதைத் தடுக்க முடியாது. ஆனால், பொழிகின்ற மழையில் இருந்து காத்துக் கொள்ளக் குடையைப் பிடித்துக் கொள்ளலாம். குடை பிராயச்சித்தம் போன்றது. சோதிட நூலைக் கற்றவர்களின் அறியாமையால், பாமர மக்களுக்கு விளையும் கேடுகள் பலப்பல. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் பிணக்கு இல்லை, பேதமும் இல்லை.
யாராவது நம்மை இகழ்ந்தால், காரணத்தை ஆராயாது, மனம் பொறுக்காமல், உடனே வெருக் கொண்டு பழி தீர்த்துக் கொள்ள முனைகின்றோம். நமது பக்கம் தவறு இருந்தாலும் கவலைப் படுவது இல்லை. இறைவன் அப்படிப்பட்டவன் இல்லை. ஒரு செயலின் உட்பொருள் இகழ்ச்சியா அன்பா அவனுக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் அறிந்தவனும்,எங்கும் நிறைந்தவனும் ஆகிய பரம்பொருள், நாம் புரியும் வஞ்சகச் செயல்களை நன்கு அறிவான் என்பதைத் திருமூல நாயனார் காட்டுகின்றார்.
"இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள் கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அது ஆமே." --- திருமந்திரம்.
இதன்பொருள் ---
மக்கள் அன்பைப் போற்றாது இகழ்ந்து நடத்தலையும், இகழாது போற்றிப் பெற்று ஒழுகுதலையும் சிவபெருமான் நன்கு அறிவன் ஆதலின், முதற்படியாகிய அன்பை முதலில் பெற்றுப் பின்பு அதன் முடிநிலையாகிய அருளை மிகச் செய்ய வல்லவர்க்கே அவன் விரும்பி அருள் புரிவன். அதற்குக் காரணம், அன்பை உவந்து அதன்மேல் அவன் கொண்டுள்ள பித்தே ஆகும்.
அன்பு முதல்படி, அதன் முடிநிலை அருள் என்று காட்டியிருப்பது, "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்னும் திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கோடு வைத்து எண்ணத் தக்கது. எனவே, அறியாமல் கூட, யாரும் அறியவில்லை என்று கருதி வஞ்சகச் செயல்களில் மனதைச் செலுத்தக் கூடாது. எல்லாம் அறிந்த இறைவன் நமது செயலை அறிவான் என்று உள்ளம் பதைக்க வேண்டும். அதுவே அறிவான செயல் ஆகும்.
இதனை, குமரகுருபர அடிகளார், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில், பின்வரும் பாடலால் அறிவுறுத்துகின்றார்.
"வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தேம் என்று மகிழன்மின், - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொல் என்றுஅஞ்சி
அங்கம் குலைவது அறிவு."
இதன் பொருள் ---
பிறரை வஞ்சித்து வாழுகின்ற அறிவிலிகளே! எல்லோரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நீங்கள் மகிழ வேண்டாம். (நீங்கள் புரிந்த வஞ்சனை அறிவு உள்ள செயல் அல்ல) நீங்கள் வஞ்சித்த செயலை, எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் இறைவன் காண்கின்றானோ என்று அஞ்சி, உங்கள் உடலும் உள்ளமும் பதறுவதே அறிவுள்ள செயல் ஆகும்.
இந்த அருமையான கருத்தைக் கொண்ட, ஒரு திரைப்படப் பாடலை நான் அண்மையில் கேட்க நேர்ந்தது. "சிரித்து வாழவேண்டும்" என்னும் திரைப்படத்தில் வந்த அந்தப் பாடல் வரிகள், குமரகுருபர அடிகள் காட்டிய நெறியினை எவ்வளவு எளிமையாக அறிவிக்கின்றன பாருங்கள்....
"யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்;
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான்"
"மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்".
சாக்கிய நாயனார் தினமும் ஒரு கல்லை எடுத்துச் சிவலிங்கத்தினை மீது எறிந்த வழிபடுவதை நியமமாகக் கொண்டார். நாயனார் கல் எறிந்ததை அன்போடு ஏற்று அருள் புரிந்தார் சிவபெருமான்.ஆனால், மன்மதன் இறைவன் மீது மலர் அம்புகளைத் தான் தொடுத்தான். அவன் கல்லை எறியவில்லை. இருந்தாலும், அவனது நோக்கம் வஞ்சனையானது என்பதை அறிந்து, அவனைத் தனது நெற்றிக் கண்ணால் பொடியாக்கினார்.
கண்ணப்ப நாயனார் செய்கையும் இப்படித்தான். தனது செருப்புக் காலால், சிவலிங்கத் திருமேனியின் மீது இருந்த மலர்களைத் தள்ளினார். வாயில் இருந்த பொன்முகலி ஆற்று நீரைச் சிவலிங்கத்தின் மேல் உமிழ்ந்தார். தானே அறுத்துத் தீயில் காய்ச்சி, நன்றாக வெந்து உள்ளதா என்று தனது வாயில் இட்டு மென்று பார்த்து, கல்லையில் (தொன்னையில்) கொண்டு வந்த பன்றி இறைச்சியை இறைவன் முன் படைத்தார். கண்ணப்ப நாயானாருடைய செயல்கள் யாவும் இகழத் தக்கவையே. ஆனாலும், அவர் செயலின் நோக்கத்தை அறிந்து இறைவன் மகிழ்ந்தார்.
சாத்திரம் கற்ற ஆசார சீலரான சிவகோசரியார் என்னும் அந்தணரோ,நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகம விதிப்படி பசுநெய் பூசி, மணம் மிகு மலர்களோடு வில்வம் தூவி, தூய ஆடைக் கட்டி, தூபதீபம் இட்டு, காலம் தவறாமல் பூசை செய்பவராக சிவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். அவருக்குக் கண்ணப்பர்தான் அனுசிதம் செய்தார் என்பது தெரியாது.நாளும் நாளும் நிகழும் அனுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். அவலம் செய்வது யார் என்று அறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையில் பெருமான் கனவில் தோன்றி "இச்செய்கை செய்பவனை நீ இகழ வேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாய் அமைவது. அவனுடைய அறிவெல்லாம் நம்மை அறியும் அறிவு. அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியன. இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை இரவு மறைவில் இருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாய்" என்று அருளிச் செய்தார் காளத்தி நாதர்.
"இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்" என்று திருமூல நாயனார் பாடியது இதைத் தான். நாயனார் மேலும் பின்வருமாறு பாடுவார்...
"ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களை,
தேசு உற்று அறிந்து,செயல் அற்று இருந்திட
ஈசன் வந்து எம்இடை ஈட்டி நின்றானே." --- திருமந்திரம்.
இதன் பொருள் ---
இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கு அறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசம் இழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அதைப் போலவே, வழிபாடு செய்து ஏமாற்றுவோர்களையும், பிறரைத் துன்புறுத்துவோர்களையும் ஈசன் அறிவான். அதற்கேற்ப பலனையும் தருவான்.
கடுமையான தவத்தை மேற்கொண்டு, சிவபெருமானிடம் வாளும் நாளும் பெற்ற இராவணன், இறைவனிடம் வரம் பெற்றுவிட்டோம். இனி, நம்மை யாராலும் ஏதும் செய்ய இயலாது என்று இறுமாந்து, எண்ணற்ற துன்பங்களை எல்லோருக்கும் செய்தான். சீதாதேவியைக் கவர்ந்தான். இறுதியில் அவனுடைய ஆட்டங்களின் விளைவு என்ன ஆயிற்று? சூரபதுமனும் அப்படித்தான். மிகக் கடுமையான தவத்தைப் புரிந்து வரங்களைப் பெற்றான். எல்லோரையும் ஆட்டிப் படைத்தான். இறுதியில் மாண்டு போனான். தாம் செய்வன அனைத்தும் தீயசெயல்கள். இவற்றை நமக்கு வரம் அருளிய இறைவன் அறிவான் என்கின்ற எண்ணம் சிறிதும் அவர்களுக்கு இல்லாமல் போனது.
ஆனால், திருஞானசம்பந்தருக்குப் பாலைக் கொடுத்தும், அப்பருக்குச் சூலையைக் கொடுத்தும், சுந்தரருக்குத் தூது நடந்தும்,மணிவாசகருக்காக மண் சுமந்து பிரம்படி பட்டும் அருள் புரிந்தான்.
No comments:
Post a Comment