பொது - 1072. துயரம் அறும்நின்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

துயரம் அறும்நின் (பொது)

முருகா! 

இரசவாதத்தால் அறிவு மயங்காமல் காத்து அருள்வாய்.


தனன தனன தனன தனன

     தனன தனன ...... தனதான


துயர மறுநின் வறுமை தொலையு

     மொழியு மமிர்த ...... சுரபானம்


சுரபி குளிகை யெளிது பெறுக

     துவளு மெமது ...... பசிதீரத்


தயிரு மமுது மமையு மிடுக

     சவடி கடக ...... நெளிகாறை


தருக தகடொ டுருக எனுமி

     விரகு தவிர்வ ...... தொருநாளே


உயரு நிகரில் சிகரி மிடறு

     முடலு மவுணர் ...... நெடுமார்பும்


உருவ மகர முகர திமிர

     வுததி யுதர ...... மதுபீற


அயரு மமரர் சரண நிகள

     முறிய எறியு ...... மயில்வீரா


அறிவு முரமு மறமு நிறமு

     மழகு முடைய ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


துயரம் அறும், நின் வறுமை தொலையும்,

     மொழியும் அமிர்த ...... சுரபானம்,


சுரபி குளிகை எளிது பெறுக,

     துவளும் எமது ...... பசிதீர,


தயிரும் அமுதும் அமையும் இடுக,

     சவடி கடகம் ...... நெளிகாறை


தருக தகடொடு உருக எனும், இவ்

     விரகு தவிர்வது ...... ஒருநாளே?


உயரும் நிகர்இல் சிகரி மிடறும்,

     உடலுமு, அவுணர் ...... நெடுமார்பும்


உருவ, மகர முகர திமிர

     உததி உதரம் ...... அதுபீற,


அயரும் அமரர் சரண நிகளம்

     முறிய எறியும் ...... மயில்வீரா!


அறிவும் உரமும் அறமும் நிறமும்

     அழகும் உடைய ...... பெருமாளே.

பதவுரை

உயரு(ம்) நிகர் இல் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும் உருவ --- உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரவுஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக,

மகர முகர திமிர உததி உதரம் அது பீற --- மகர மீன்களும் சங்குகளும் உலாவுன்றதும், பேரொலி செய்வதும், கரு நிறம் கொண்ட கடல் வயிறு கிழியவும்,

அயரும் அமரர் சரண நிகள(ம்) முறிய எறியும் அயில் வீரா --- சோர்வுற்று இருந்த தேவர்களின் காலில் பூட்டப்பட்ட விலங்கு முறியும்படியும் வேலை விடுத்து அருளிய வீரரே!

அறிவும் உரமும் அறமு(ம்) நிறமும் அழகும் உடைய பெருமாளே --- ஞானமும், வலிமையும், அறநெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமையில் மிக்கவரே!

துயரம் அறு(ம்) --- உனது துன்பம் ஒழியும், 

நின் வறுமை தொலையும் --- உனது வறுமை நீங்கும்.

மொழியும் அமிர்த சுரபானம் --- தேவர்கள் பருகுகின்ற புகழ் பெற்ற அமுதம்,

சுரபி --- காமதேனு, (ஆகியவற்றை நீ எளிதில் பெறலாம்)

குளிகை எளிது பெறுக --- மந்திர ஆற்றல் மிக்க மாத்திரை இதை நீ எளிதில் பெறுவாயாக.

துவளும் எமது பசி தீரத் தயிரும் அமுதும் அமையும் --- வாடுகின்ற எம்முடைய பசி தீரத் தயிரும் சோறும் இருந்தால் போதும்,  

இடுக --- அதை எமக்கு இடுக.

சவடி --- பொன்னால் ஆன சரடு,

நெளி --- விரலில் அணியும் வளைந்த மோதிரம்,

காறை --- கழுத்து அணிகலம், 

தருக தகடொடு உறுக --- ஆகியவற்றைத் தரவல்ல மந்திரத் தகட்டை நான் தரப் பெறுக.

எனும் --- என்று சொல்லுகின்ற, (இரசவாதிகளின்)

இவ்விரகு தவிர்வதும் ஒரு நாளே --- சூழ்ச்சியான மொழிகளிலிருந்து தப்புகின்ற ஒருநாள் அடியேனுக்கு உண்டாகுமோ?

                                                                  பொழிப்புரை

உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரவுஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக, மகர மீன்களும் சங்குகளும் உலாவுன்றதும், பேரொலி செய்வதும், கரு நிறம் கொண்ட கடல் வயிறு கிழியவும், சோர்வுற்று இருந்த தேவர்களின் காலில் பூட்டப்பட்ட விலங்கு முறியும்படியும் வேலை விடுத்து அருளிய வீரரே!

ஞானமும், வலிமையும், அறநெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமையில் மிக்கவரே!

உனது துன்பம் ஒழியும். உனது வறுமை நீங்கும். தேவர்கள் பருகுகின்ற புகழ் பெற்ற அமுதம், காமதேனு, ஆகியவற்றை நீ எளிதில் பெரலாம். மந்திர ஆற்றல் மிக்க மாத்திரை இதை நீ எளிதில் பெறுவாயாக. வாடுகின்ற எம்முடைய பசி தீரத் தயிரும் சோறும் இருந்தால் போதும்,  அதை எமக்கு இடுவாயாக. பொன்னால் ஆன சரடு, விரலில் அணியும் வளைந்த மோதிரம், கழுத்து அணிகலம், ஆகியவற்றைத் தரவல்ல மந்திரத் தகட்டை நான் தரப் பெறுவாயாக என்று சொல்லுகின்ற இரசவாதிகளின் சூழ்ச்சியான மொழிகளிலிருந்து தப்புகின்ற ஒருநாள் அடியேனுக்கு உண்டாகுமோ?

விரிவுரை

துயரம் அறும், நின் வறுமை தொலையும்.....விரகு தவிர்வதும் ஒரு நாளே --- 

உலகத்தில் துன்பப்படுகின்ற மனிதர்கள் இல்லாமல் இல்லை. துன்பம் என்பது அவரவர் முன்செய்த வினையின்படிக்கு இறையருளால் வந்து சேர்வது. அப்படியே, வறுமை நிலையில் உள்ளவர்களும் இல்லாமல் இல்லை. அதுவும் அவரவர் முன்செய்த வினையின்படிக்கு வந்து சேர்வது. ஆசையே பிறவிக்கு வித்து. ஆசை இருக்கின்ற வரையில் வறுமையும் துன்பமும் இருக்கத்தான் செய்யும். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே, அல்கா நல்குரவு அவா எனப்படுமே" என்பது குமரகுருபர அடிகளார் அருள்வாக்கு. உள்ளது போதும் என்று மனநிறைவு கொள்ளாதவர்கள், மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்று அலைவார்கள். "வேண்டாமை அன்ன விழுச்செல்வம்" என்றார் திருவள்ளுவ நாயானார். "ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்றார் திருமூல நாயனார்.

"ஆசைக்கு ஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி

  ஆளினும், கடல்மீதிலே

ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக

        அம்பொன்மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;

        நெடுநாள் இருந்தபேரும்

நிலை ஆகவே இன்னுங் காயகற்பம் தேடி

        நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்

        உறங்குவதும் ஆகமுடியும்;

உள்ளதே போதும்; நான் நான்எனக் குளறியே

        ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்

பாசக் கடற்கு உ(ள்)ளே வீழாமல், மனது அற்ற

        பரிசுத்த நிலையை அருள்வாய்;

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகி்ன்ற

        பரிபூரண ஆனந்தமே."

என்கிறார் தாயுமான அடிகளார்.

ஆரா இயற்கை அவா என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. எப்போதும் நிறைவு பெறாதது ஆசையே. அதற்கு ஒரு வரம்பு இல்லை. "ஆசையை அளவு அறுத்தார் இங்கு ஆரே" என்பது ஒன்பதாம் திருமுறையில் வரும் அருள்வாக்கு. எனவே, ஆசைக்கு எங்கும் ஒரு வரம்பு என்பது இல்லை. இந்த நிலவுலகம் அனைத்தினையும் ஒரு குடைக்கீழ் ஆண்டாலும், ஆளுகின்ற வேந்தனின் எண்ணமானது, கடல் நடுவிலே காணப்படுகின்ற தீவுகள் அனைத்தையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதில் இருக்கும். கடலையும் தனது ஆணைக்கீழ் கொண்டு வந்து விட்டாலும், அளகேசன் என்னும் குபேரனுக்கு நிகராக பொன்னும் பொருளும் படைத்து இருந்தாலும், மேலும் மேலும் பொருளைக் குவிக்க எண்ணி, செம்பு முதலிய பொருள்களைப் பொன்னாக மாற்றும் இரசவாதத் தொழிலுக்குக் காடும் மலையும் நாடுமாய்த் திரிந்து அலைந்து வாடுவர். இவ்வுலகில் அளவிறந்த காலம் சிற்றின்ப நுகர்ச்சியை இடையறாது அனுபவித்து வாழ்ந்தவரும் கூட  மனநிறைவு எய்தாது இன்னும் என்றும் அழியாமல் உடம்போடு நெடுங்காலம் வாழவேண்டும் என்னும் ஆசையால் காயகற்பம் என்னும் மருந்தைத் தேடி அலைந்து, மனம் புண்ணாகி வருந்துவர். எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கும்போது, வயிற்றுப் பசி தீர உண்பதற்கும், காம இன்பத்தில் திளைத்து இருந்து, அதனால் உண்டான உடல் இளைப்புத் தீர அயர்ந்து உறங்குவதற்கும் ஆகவே முடியும். வினைக்கு ஈடாகவே எதுவும் கிடைக்கும் என்று எண்ணி, உள்ளதே போதும் என்று மனநிறைவு கொள்ளாமல், ஆணவ முனைப்பினால், ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி அலைகின்ற நிலையே எஞ்சி இருக்கும். ஆசைக் கடலில் விழுந்து அல்லல் படாமல், மனம் அடங்கி நின்றால் எல்லை இல்லாத இன்பம் வந்து சேரும். இறையருளால் மட்டுமே அப்படிப்பட்ட மனநிலை வாய்க்கும்.

"அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?

தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு

எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே."

என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.

இறையடியார்களைத் துன்பமோ வறுமையோ வறுத்தாது. அருள் உள்ளம் கொண்டோர்க்கு இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் ஒரு துன்பமும் உண்டாகாது என்பதைக் காட்ட, "அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை" என்றார் திருவள்ளுவ நாயனார்.

என்னதான் அறிவு நூல்களைப் படித்தாலும், கற்றவர்பால் கேட்டாலும், மனம் அடங்காதவர்கள் உள்ளது உலக இயல்பு. அப்படிப்பட்டவர்களின் அறிவை மயக்கி, தமது வறுமையைத் தீர்த்துக் கொள்ள எண்ணுகின்றவர்கள் இல்லாமல் இல்லை. 

தாயத்து முதலானவைகளைக் கொண்டு, இது இருந்தால் அள்ளபரிய செல்வம் சேரும், பொன்னும் பொருளும் குவிந்து கொண்டே இருக்கும் என்று சொல்லி, ஆசை வயபட்டவர்களின் அறிவை மயக்கி, வயிற்றுப் பிழைப்புக்காக அலைகின்றவர்கள் நிலையை இந்தப் பாடலில் அருணகிரிநாதர் விளக்கிக் காட்டி அருளுகின்றார்.

தேவாமிர்தம், காமதேனு, பொன் முதலியவை கிடைக்கு என்று சொல்லி குளிகையை விற்று வயிறு வளர்ப்பவர்கள், தாமே அந்தக் குளிகையை வைத்துக் கொண்டு ஏன் சுகமாக வாழமுடியாது? குளிகையை விற்றுத்தான் வயிற வளர்க்க வேண்டுமா?

        அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு என்னும் தொகுப்பில், "சித்து வகுப்பு" ஒன்று. அதில், எமக்குப் பச்சிலை முதலியவைகளைக் கொண்டு இரசவாதம் செய்யத் தெரியும். உன்னிடம் இருக்கும் பழைய நகை வகைகள், பித்தளை சாமான், பணம் முதலிய எல்லாவற்றையும்  கொண்டு  வந்து என்னிடம் தருக.  நான் என் இரசவாத சக்தியால் வெகுகோடி பொன் உண்டாக்கி உனக்குத் தருவேன்.  அது கொண்டு ஏழுநிலை மாடவீடு நீ கட்டிக் கொள்ளலாம். நான் பார்வதி கலியான தினத்தன்றுதான் உணவு கொண்டேன். இப்போது எனது பசி தீர அமுது படை. நல்ல கறிகாய், நிரம்ப நெய், பொரியல், பால், தேன், கறி வகை, பழ வகை, வெற்றிலை பாக்கு இவையெலாம் எமக்குக் கொடு. நீ சுகமாய் இரு" என இரசவாதி கூறுவதாக வருகின்றது.

        பிறிதொரு திருப்புகழ்ப் பாடலில், "வரதா! மணி நீ என ஓரில் வருகாது (எது). எதுதான் அதில் வாராது, இரத ஆதிகளால் நவலோகம் இடவே கரி ஆம். இதில் ஏது" என்று அடிகளார் பாடி உள்ளதை இங்கே கருத்தில் கொள்ளுதல் நலம். எல்லா வரங்களையும் எண்ணியவாறு வழங்குகின்ற வரதராக உள்ள முருகப் பெருமானே எண்ணியவற்றைத் தருகின்ற சிந்தாமணி போன்றவர் என்று ஆராய்ந்து, அரவது திருவடியில் அன்பு செய்தால் எப்பொருள்தான் கிடைக்காது? எல்லாம் கிடைக்கும். இதனை அறியாமல், நவலோகங்களையும் நெருப்பில் இட்டு ஊதி இரசவாதம் செய்து அலைவதனால் கரிதான் மிஞ்சுமே அல்லாது, அதனால் அடையும் பயன் வேறு ஒன்றுமில்லை என்பது இப்பாடலின் கருத்து.

பொன் பொருள் மீது ஆசை வைத்து இரசவாத வித்தைகளைச் செய்து மேலும் பொன்னுனையும் பொருளையும் குவிப்பதற்காக இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து, இரசவாதம் செய்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பொய்யர்களை, வேடதாரிகளை நாடி, உள்ள பொருளையும் அவர்களிடத்தில் தொலைத்து வருந்துவது கூடாது. இறைவனே பெரும் சித்தன். அவனது அருட்புகழைப் பாடி வழுத்துவதன் மூலம் எல்லா நலங்களையும் பெறலாம் என்கிறார் அருணகிரிநாதர், தாம் அருளிய சித்து வகுப்பில்.....


"மிடைதரும் ப்ரவாள சடை பெரும் ப்ரவாக

விமலர் கொன்றை மாலை தருண சந்த்ர ரேகை

விரவு மணநாறு பாதார விந்த

விதரண விநோத மாதாவின் மைந்தன்,

மீன கேதனன் உருவின் மிகுந்தருள்

தான வாரிதி சரவண சம்பவன்,  

விகிர்தி வேதனன், மவுன சுகாதனன்,

அகில காரணன், அகில கலாதரன்,

விகசித சுந்தர சந்தன பாளித

ம்ருகமத குங்கும கஞ்சப யோதரி 

வேழமும் உழைகளும் ஆரும் பைம்புனம்

மேவுறு குறமகள் மேவும் திண்புயன், 

விரிகடல் துகள்எழ வெகுளி விக்ரமன்.

அரிதிரு மருமகன், அறுமு கத்தவன்,

வெட்சி கொண்ட தோளன், வெற்புஊடுஉற

விட்ட வென்றி வேல் முழுச்சேவகன்,

வெருவு நக்கீரர் சரண்என வந்துஅருள்

முருகன், நிஷ்க்ரோத முநிகுண பஞ்சரன

மேதகு புராணவேத அங்குரன்,

ஓதரிய மோன ஞானஅங்குரன், 

மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட

அகத்திய முநிக்குஒரு தமிழ்த்ரயம் உரைத்தவன், 

வேத மூர்த்தி, திருத்தணி வெற்புஉறை

சோதி, கார்த்திகை பெற்ற விளக்குஒளி,   

வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற

விரவும் இந்த்ர லோக வழி திறந்த மீளி,

மிகவிருது கூறு மேவார்கள் கண்டன்,

விகட அசுரேசர் சாமோது சண்டன்,

மேக வாகன மிகுமத வெண்கய

பாக சாதனன் நகரி புரந்தவன்,  

விபுத தாரகன், விபுத திவாகரன்,

விபுத தேசிகன், விபுத சிகாமணி, 

விபரித கஞ்ச விரிஞ்ச பராமுகன்,

அபிநவ கந்தன், அடைந்தவர் தாபரன், 

மேருவை இடிபட மோதும் சங்க்ரம

தாரகன், மகுட விபாடன், புங்கவன், 

வெயில்உமிழ் கொடியொடு வினை முகத்தினில்

மயில்மிசை வரும்ஒரு வரதன், நிர்ப்பயன்,  

வித்தகன், சுவாமி, நிர்ப்பாவகன்,

சத்தியன், ப்ரதாப வித்யாதரன், 

விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன்,

நிருத நிட்டூரன், நிருதர் பயங்கரன், 

வீரமத லோக வேள் காங்கெயன்,

சூர ரண சூர சூராந்தகன், 

வினைப்பகை அறுப்பவன், நினைத்தது முடிப்பவன்,

மனத்துயர் கெடுத்துஎனை வளர்த்து அருள் க்ருபைக்கடல், 

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்

சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே. --- சித்துவகுப்பு.

எனவே, நம்முடைய ஆசைகளையே முதலாக வைத்து, அடியார்கள் போல் வேடம் புனைந்து கொண்டு, ஒரு துன்பமும் இல்லாமல், உழைக்காமல், எளிதாக வயிறு வளர்க்கின்றவர்களிடத்தில் ஏமாறாமல், இறைவன் அருட்புகழை ஓதியே எல்லா நலமும் பெறலாம் என்பது அடிகளார் கருத்து. சாமியார்கள் போல் வேடம் புனைந்து கொண்டு மக்களை வெருட்டிப் பணம் பறிக்கும் வேடதாரிகளிடம் மயங்காமல், அவர்களின் சூழ்ச்சி மொழிகளில் இருந்து தப்பிக்க இறைவன் திருவருளை வேண்டுகின்றார் அடிகளார்.

கருத்துரை

முருகா! இரசவாதத்தால் அறிவு மயங்காமல் காத்து அருள்வாய்.






No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...