அறிவை அறிவதே பொருள்

 

அறிவை அறிவதே பொருள்

----

உயிர் அறிவுப் பொருள். ஒன்று ஒன்றாய் அறிதல், அவ்வாறு அறியும் போதும் தொடர்ச்சியாய் அறியாது விட்டுவிட்டு அறிதல், அறிந்ததனை, உடனே மறத்தல், காலப் போக்கில் மறத்தல், தானே அறியாது அறிவிக்க அறிதல் என்பன போன்ற குறைபாடுகள் எல்லாம் உயிரறிவிற்கு உண்டு. எனவே, உயிர் சிற்றறிவு உடையது என்றனர் மேலோர். அதன் அறிவை ஆணவமாகிய அகவிருள் மறைத்து நிற்கிறது. ஐம்பொறிகள் அம்மறைப்பை நீக்கி அதன் அறிவை விளங்கச் செய்கின்றன. அவ்வாறு விளங்குகிற உயிரறிவுக்கு உலகம் நுகர்ச்சிப் பொருளாகின்றது. உயிருக்கு அறிவு இல்லையானால், உயிர் சடம் என்றால், ஆணவமலத்தின் மறைப்பினால் அதற்கு ஆவது ஏதும் இல்லை. 

குறைபாடு என்பதே இல்லாத அறிவே சித்து எனப்படும். சித்து என்பது பேரறிவு, மெய்யறிவு, உண்மையறிவு எனப்படும். இறைவன் ஒருவனே குறைபாடு ஒன்றும் இல்லாத பேரறிவினை உடையவன். ஆதலால், அவனே சித்து எனப்படுகிறான். ஆனால், உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளோடு கூடி அறிவு விளக்கத்தைப் பெறுகிறது. 

ஒளி,  இருள் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன. அவை மாறுபட்ட பொருள்கள். ஒளி உள்ள இடத்தில் இருள் இருக்காது. இருள் உள்ள இடத்தில் ஒளி இல்லை. இவ்வாறு ஒன்றை ஒன்று சாராத இருளையும், ஒளியையும் பொருந்தி நிற்கின்ற ஒரு பொருள் உண்டு.  அதுவே கண். இந்தக் கண் போன்றது உயிர். உயிர் எதனை எதனைச் சார்கிறதோ, அதனதன் தன்மையைத் தன் தன்மையாகக் கொள்ளும். உயிர் சார்தற்குரிய பொருள்கள் இரண்டே. அவை நிலைத்த பொருள், நிலையற்ற பொருள்கள். நிலைத்த பொருள் இறைவன் ஒருவனே. நிலையற்ற பொருள்கள் பிற உயிர்களும், உலகத்துப் பொருள்களும். நிலைத்த பொருளான இறைவனைச் சார்ந்து இருக்கும்போது, இறைத் தன்மையைப் பெற்று நிற்கும். "நாம் ஒழிந்து சிவம் ஆனவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ" என்று மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசக அனுபவமொழி இதனை உணர்த்தும்.  நெருப்பைச் சார்ந்த இரும்பு, நெருப்புத் தன்மையை அடைவதைப் போலவும், காந்தத்தைச் சார்ந்த இரும்பு காந்தத் தன்மையை அடைவது போலவும், இறைவனைச் சார்கிறபோது இறைத் தன்மையைப் பெற்று இறைவனாகவே இருக்கும். அறிவுள்ளோரைச் சார்ந்து இருக்கும்போது, அறிவு விளக்கம் பெற்று இருக்கும். இது ஒளியைக் காணும் கண்ணைப் போன்றது. அறிவற்றவரைச் சார்ந்து இருக்கும்போது அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கும். இருளைச் சார்ந்து இருக்கும் கண்ணைப் போன்றது இது.

செல்வத்தைச் சிறுசெல்வம், பெருஞ் செல்வம் என்று வகைப்படுத்துதல் போல, அறிவையும் சிற்றறிவு, பேரறிவு என்று வகைப்படுத்தலாம். செல்வப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் ஒரே தன்மையானவை அல்ல. செல்வப் பெருக்கம் அளவைப் பொறுத்தது. குறைய வைத்திருந்தால் சிறுசெல்வம்.  நிறைய வைத்திருந்தால் பெருஞ்செல்வம். ஆனால், அறிவுப் பெருக்கத்தை அப்படிச் சொல்ல முடியாது. செய்திகளை அறிந்து வைத்து இருக்கிறவன்தான் அறிவாளி என்றால் விநாடிவினா நிகழ்ச்சிகளில் நிறைய விடை சொல்கிறவர்களைப் பேரறிவாளர்கள் என்று சொல்லிவிடலாம். அறிவு என்பது அளவைப் பொறுத்தது இல்லை.  தன்மையைப் பொறுத்தது. அறிந்து வைத்திருக்கும் செய்திகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல அறிவு. அறிந்து வைத்திருப்பது எதை என்பதுதான் அறிவுக்கு அளவுகோல்.

தன்னை ஒரு மாணவனாக அறிந்து வைத்து இருந்தால், அவன் அறிவைப் பெறுவதிலேயே குறியாக இருப்பான். அறிவுக்குப் புறம்பான செயல்களில் அவன் ஒருபோதும் ஈடுபடமாட்டான். பள்ளிக்கு ஏன் வந்தோம் என்று தன்னை உணர்ந்தவன்தான், தான் எதற்காக இருக்கிறோம் என்பதை உணர்ந்தவன்தான், அதற்கான முழுப் பயனை அடையமுடியும். தனக்கு அறிவுறுத்துபவர் ஆசிரியர் என்பதையும், அவர் காட்டியபடி நடத்தல் வேண்டும் என்பதையும் மாணவனால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு மருத்துவர் தன்னை மருத்துவராக உணர்ந்தால்தான் நோயாளியைக் குணப்படுத்த முடியும். அவர் தன்னை ஒரு மருத்துவ வியாபாரியாக எண்ணிக் கொண்டால், நோயாளியிடம் இருந்து பணத்தை மட்டுமே பறிக்க முடியும். மருத்துவர் என்ற போர்வையில் இருந்துகொண்டு, தனது கடமையை மறந்து பணத்தைப் பறிப்பவர் மருத்தவர் ஆகாமாட்டார். எனவே, தன்னை உணர்வது அவசியமாகின்றது. தன்னை உணர்வதே அறிவு ஆகின்றது. இது எல்லா நிலையினருக்கும் பொருந்தக் கூடியது. எனவேதான், நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்,

"தன்னை அறிவ(து) அறிவாம், அஃது அன்றிப்

பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே"

என்று அருளினார்.

பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளே ஆகும்.

தன்னையே தான் அறிந்து வைத்திருக்கிற அறிவுதான் அறிவு. தன்னை அறிகிற வேலையை விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் அறிகிற அறிவு பேய் அறிவு. பேயானது நிலைகொள்ளாமல் உழலும்; அலையும்; தவிக்கும். அதைப் போல, கண்டதையெல்லாம் அறிந்து, அறிந்ததை எல்லாம் தனக்கே உரித்தாக்கிக் கொள்ள நினைத்து, அத்தனைக்கும் ஆசைப்பட்டு, அவற்றை அடைய நினைத்துப் பின்னால் ஓடி அலைந்து, கிடைத்துவிட்டால் நுகர்ந்து சலித்து, கிடைக்காவிட்டால் வருந்தி இளைத்துத் தடுமாறி நிற்பது பேய் அறிவு.

"தம்மை உணர்ந்து, தம்மை உடைய தன் உணர்வார்" என்பது சிவஞானபோதம். முதலில் ஆன்மாவாகிய தமது இயல்பை உணர்ந்து பின், தம்மை அடிமையாக உடைய இறைவனது இயல்பை உள்ளவாறு உணர்ந்த சித்தாந்த சைவர்களாகிய பெருமக்கள் என்பது இதன் பொருள்.

"தன்னை அறியவேண்டும் - அகப்பேய்!

சாராமல் சாரவேண்டும், பின்னை

அறிவதெல்லாம் அகப்பேய்!

பேய் அறிவு ஆகும் அடி

ஒப்பனை அல்லவடி - அகப்பேய்!

உன் ஆணை சொன்னேனே!

அப்புடன் உப்பு எனவே - அகப்பேய்!

ஆராய்ந்து இருப்பாயே!"

என்கிறார் அகப்பேய் சித்தர்.

"தன்னை அறிந்து இன்பம்உற, வெண்ணிலாவே! - ஒரு

தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே!"

என்கிறார் வள்ளல்பெருமான். தன்னை அறிந்தாலே ஒருவன் இன்பத்தை அடைய முடியும். தன்னை அறிந்தவனே தனது தலைவனை அறிவான். அப்படி அறிந்தால்தான், தானும் ஒரு தலைவனாக முடியும். எனவே, தான் யார் என்பதை ஒருவன் கண்டிப்பாக உணரவேண்டும்.

ஒருவர் தனக்கு வெளியில் உள்ள பொருட்களையெல்லாம் அறிவதைப் போலவே தன்னையும் அறிந்திருக்க வேண்டும். " நான் யார் தெரியுமா?" என்று கேட்கிறவர்கள், தன்னை இன்னான் என்று அறிந்தே சொல்லுகிறார்கள். அது நல்லதா, தீயதா என்பது வேறு. தன்னுடைய குறைநிறைகளே தனக்குத் தெரியாது என்றால் பிறரையும் அறிவதில் முழுமை இருக்காது. அறிவு என்பது முயற்சியால் விளைவது.  

தன்னை அறியும் அறிவு என்பதே ஒரு தவநிலை ஆகும். தவத்தால் எண்ணியது கைகூடும் என்பார்கள். திருமூல நாயனார் கூறுதல் காண்க.

"முன்னை அறிவினில் செய்த முதுதவம்

பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்

தன்னை அறிவது அறிவாம், அஃது அன்றிப்

பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே."

தன்னை அறியும் அறிவே அறிவு. ஏனைய அறிவெல்லாம் பேய் அறிவு. அது, ஆவதைவிட்டு ஆகாதவற்றை, உதவுவதை விடுத்து உதவாதவற்றை அறிய அலையும் அறிவு.

"ஒளிதிகழ்  அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே" என்றும், "அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை" என்றும், "அறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும் அடியார்" என்றும், "அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி" என்றும் அருணகிரிநாதர் கூறிய அருள்வாக்குகளைச் சிந்திக்க உண்மை விளங்கும். பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழியின்படி, இதன் அருமையை உணர்ந்த அநுபூதிமானாகிய தாயுமான அடிகளார்,

"அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று

உறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ?"

என்று அருணகிரிநாதர் அருள்வாக்கை அப்படியே மனதில் வாங்கி, பலகாலும் சிந்தித்து, அதன் அநுபவத்தை அவாவுகின்றனர். அழகிய கோபுரத்தில் தங்கக் கலசம் வைப்பது போல், "அறிவை அறிவது பொருள்" என்று அருணகிரிநாதரும், "அறிவை அறிவதுவே ஆகும் பொருள்" என்று தாயுமான அடிகளாரும் கூறியருளியதன் அருமை, மெய்யறிவு பெறுவதில் நாட்டம் உள்ளோர்க்குப் பெருவிருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

"அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்

பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?"

என்பது அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி வாக்கு.

இறைவன் எங்கும் நிறைந்து நின்றவன். அவன் இல்லாத இடமே இல்லை. எல்லாப் பண்டங்களிலும், எல்லா உயிர்களிலும் கலந்து இருப்பவன் அவன். ஆனால், அவனுடைய இருப்பு விளங்கித் தோன்றுவது இல்லை. பண்டங்களை விட, உயிர்களிலும், அவற்றின் அறிவிலும் விளங்கித் தோன்றுவான். விளக்கின் ஒளியானது, அதன் திரியின் நுனியில் தங்கி அறை முழுவதும் ஒளியைத் தருவதைப் போன்று இருப்பான். உயிர்களின் அறிவில் இருப்பான் என்றாலும், அறிவு மிக்கவரிடம் கொஞ்சம் கூடுதலாக விளங்குவான். மெய்யறிவு மிக்கவர்களிடம் முழுமையாக விளங்கித் தோன்றுவான். 

"அறிவும், அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து, உன் அருண சரணாரவிந்தம் என்று பணிவேனோ?" என்று ஒரு திருப்புகழ்ப் பாடலில் அருணகிரிநாதர் கூறுகின்றார். இறைவன் மெய்யறிவு வடிவானவன். வாலறிவன் என்றார் திருவள்ளுவ நாயனார். மெய்யறிவு என்றாலும், வாலறிவு என்றாலும் ஞானம் ஏன்றே பொருள். இறைவனுடைய திருமேனி நமது உடம்பு போன்றது என்று மயங்கித் திரிபவர் பலர். வாய்க்கு வந்தவாறு பிதற்றுவர் பலர். நமது உடம்பு எலும்பு நரம்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனது. இறைவனுடைய உருவம் இத்தன்மையது அல்ல. அது அறிவு மயமானது. அந்த அறிவும் நமக்கு உள்ள உலக அறிவு, கலையறிவு, மற்றுமுள்ள ஆராய்ச்சியறிவுகள் அல்ல.

"ஞானம்தான் உருஆகிய நாயகன் இயல்பை

யானும் நீயுமாய் இசைத்தும் என்றால், அஃது எளிதோ?

மோனம் தீர்கிலா முனிவரும் தேற்றிலர், முழுதும்

தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந்தலைமை."

என்று சிங்கமுகன் கூற்றாகக் "கந்தபுராணம்" கூறுகின்றது.

அறிவைத் திருமேனியாகக் கொண்ட பரம்பொருளை வழிபடுவதனால் அறிவு நலத்தை நாம் பெற்று உய்யலாம்.

"அறிவு உடையார் எல்லாம் உடையார், அறிவு இ(ல்)லார்

என் உடையரேனும் இலர்."

என்று திருவள்ளுவ நாயனார் கூறியபடி, அறிவு எல்லா நலன்களையும் எளிதில் தரும். அறிவு நிரம்பப் பெற்றவன் அஞ்சாமையையும் அமைதியையும் பெறுவான். பின்னே வருவதை முன்னே அறிவான். ஆகவே, அறிவுதான் நமக்கு இன்றியமையாத சிறந்த செல்வம்.

அறிவே திருமேனியாக உடைய இறைவன் திருவடி மலரைச் சிந்தித்து வாழ்த்தி வந்திப்போர்,  அறிவு நலத்தையும், அதனால் ஏனைய நலங்களையும் எளிதில் பெற்று இன்புறுவர் என்பது உறுதி.

எனவே, மெய்யறிவைப் பெறுவதற்கு அடிப்படையானது, தன்னை அறியும் அறிவே ஆகும். தன்னை அறிந்தால், தனது தலைவனை அறிய முடியும். தன்னை அறிந்து, தலைவனாகிய இறைவனை உள்ளபடி அறிந்தால், அப்படி அறிந்த ஆன்மாவைத் தனது அடியவனாக இறைவன் ஏற்றுக் கொள்வான். தன்னை அறியாமல் இருப்பதே உயிருக்குக் கேட்டினைத் தருவது என்கிறார் திருமூல நாயனார்.

"தன்னை அறியத் தனக்கு ஒரு கேடுஇல்லை,

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்,

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தான் இருந்தானே." --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது, தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன் பின்பு அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது. தானும் எந்தக் கேட்டினையும் அடையமாட்டான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு அலைகின்றான். அதனால், ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.

"தம்மை உணரார் உணரார்" என்பது மெய்கண்ட தேவ நாயனாரின் அருள்வாக்கு. தம்மை உணராதவன், மெய்ப்பொருளாகிய இறைவனை உணர்ந்து கொள்ள மாட்டான். தன்னை ஒருவன் உணர்வதற்கும் இறையருள் வேண்டும். "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்னும் மணிவாசகம் இதனைத் தெளிவு படுத்தும். தன்னை ஒரு அறிவுப் பொருளாக உணர்ந்தல் வேண்டும்.

"அறிவு வடிவு என்று அறியாத என்னை,

அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி;

அறிவு வடிவு என்று அருளால் அறிந்தேன்,

அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே."    --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

அறிவு மயக்கத்தால், `எனது வடிவம் அறிவு` என்னும் உண்மையை அறியாது. `உடம்பே` என்று மயங்கி இருந்த என்னை, நந்திபெருமான் (குருவாகத்) தோன்றி அம்மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பு அல்ல,  அறிவு` என அருளிச்செய்து உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுள்ளக் கருணையால் அடியேனுக்கு அறிவு உதயமாயிற்று. அதனால், `உடம்பு எனது வடிவம் அல்ல` என உணர்ந்து அதனின் நீங்கி இருக்கின்றேன்.

குருவருளால் ஒருவனுக்கு அறிவு உதயம் ஆகும். அப்படிப் பெற்ற அறிவுக்கு எக்காலத்தும் அழிவு இல்லை. அறிவைப் பெறுவதற்குத் துணையாக இருந்த உடம்புதான் அழியும்.

"அறிவுக்கு அழிவு இல்லை, ஆக்கமும் இல்லை;

அறிவுக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை;

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின்றன மறை ஈறுகள் தாமே. --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

பிறப்பும் இறப்பும் உடம்புக்கே. உயிரின் அறிவுக்கு அழிவு இல்லை. அதை உண்டாக்குவாரும் இல்லை. அதன் உதயம் ஆணவத்தால் மறைந்து கிடக்கின்றது. அறிவுப் பொருளாகிய உயிருக்கு, மெய்யறிவுப் பொருளாகிய இறைவனை பற்றுக் கோடாக உள்ளவன். அறிவுப் பொருள்தான் அறிவுப் பொருளை அறிந்துகொள்ள முடியும் என்று வேதங்களின் முடிவு (மறை ஈறு) என்று சொல்லபடும் உபநிடதங்கள் அனைத்தும் கூறுகின்றன.

அறிவுக்கு அழிவு இல்லை என்பதை, "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று நாயனார் அருளிய திருக்குறளால் தெளியலாம். அறிவுப் பொருளாகிய இறைவனை உணர்வது சடப் பொருளாகிய உடம்பு அல்ல. சடப் பொருளில் இறையருளால் தங்கி உள்ள, சிற்றறிவுப் பொருளாகிய உயிரே அறிகின்றது. அறிவுப் பொருள் அறிவுப் பொருளோடு சார்ந்து இருத்தலே முறை என்று அறிந்து, இறைவனைச் சார்ந்து இருப்பவரே உலகத்தில் பெரியவர்கள். பொருள் படைத்தோர் யாரும் பெரியவர் அல்ல. பெரிதிலும் பெரிதாக உள்ள இறைவன், தன்னை உணர்ந்த ஆன்மாக்களைப் பெரியவன் என்று ஏன்று கொள்ளும்.

"மன்னி நின்றார் இடை வந்து அருள் மாயத்து

முன்னி நின்றானை மொழிந்தேன், முதல்வனும்

பொன்னின் வந்தான் ஒர் புகழ் திருமேனியைப்

பின்னி நின்றேன் `நீ பெரியை` என்றானே."

இதன் பொருள் ---

உலகத்தில் பலராய்க் குழுமி வாழ்கின்ற அனைத்து மக்களிடையே தானும் ஒரு மகன்போல வந்து அருள்செய்ய வேண்டும்` என்கின்ற சூழ்ச்சியைத் திருவுள்ளத்து எண்ணி, அவ்வாறு வந்து என்முன் நின்ற இறைவனை நான் `சிவன்` என்று அறிந்துகொண்டு அவனைப் போற்றினேன். பின்னும் அங்ஙனம் அவன் வந்து நின்ற திருமேனியை விடாது பற்றிக்கொண்டு திரிந்தேன். அதைக் கண்டு அவனே வியந்து,  'அப்பா! நீ மிகப் பெரியவன்` என்று கூறினான்.

எனவே, சிற்றறிவுப் பொருளாகிய ஆன்மா, பேரறிவுப் பொருளாக உள்ள இறைவனை அறிந்து கொள்வதே முறை ஆகும். அதற்கு ஆன்மா தன்னை ஒரு அறிவுப் பொருள் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னை உணர்ந்தால் தலைவனை உணரலாம்.


No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...