திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 53 -- சுற்றம் தழால்
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகுதல் இல்லாதவனது வாழ்க்கையானது, குளத்தின் பரப்பானது கரை இல்லாமல், நீர் நிறைந்து இருப்பதைப் போன்றதாகும்" என்கின்றார் நாயனார்.
பேறு நலங்களை உள்ளம் கலந்து ஒருவருக்கு ஒருவர் விசாரித்துக் கொள்ளுதல், அளவளாவுதல் ஆகும். இது அன்பின் மிகுதியினால் உண்டாவது. அன்போடு விசாரித்து அறிவதால், குறை இருப்பின் நிறைவாகும் என்பது தெரியவரும். சுற்றத்தவரைத் தழுவுகின்ற ஒருவனுக்குக் கிடைத்த செல்வமானது நீங்காது நிற்பதுடன், கிளைக்கும் என்ற நாயனார், கரை இல்லாத குளத்தில் வந்து சேர்ந்த நீரானது, வெளியே போய்விடுவது போல, சுற்றத்தைத் தழுவுதல் இல்லாதவனது செல்வமானது, தாங்குவார் இல்லாமையால் கிளைக்காமல் நீங்கும் என்றார்.
"அன்பு மிகுதியின் அளவளாய் அவளை" என்று திருக்கோவையார் பாடல் கொளுவில் குறித்தது காண்க. குளவரை --- குளப்பரப்பு.
இதற்குத் திருக்குறள்...
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை, குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை --- அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை,
குளவளாக் கோடுஇன்றி நீர் நிறைந்தற்று --- குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்.
(சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர். 'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான் செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“ஆர்வீ டணனோடு அளவளாவாது அரக்கன்
சோர்வுஇலா வாழ்வுஇழந்தான், சோமேசா! --- நேரே
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந்து அற்று.”
இதன்பொருள்---
சோமேசா! நேரே - தகுதியாகவே, அளவளாவு இல்லாதன் வாழ்க்கை - சுற்றத்தாரோடு உள்ளம் கலத்தல் இல்லாதவன் வாழ்க்கையானது, குளவளாக் கோடு இன்றி - குளப்பரப்பானது கரையின்றி, நீர் நிறைந்தற்று - நீர் நிறைந்தாற் போலும்,
அரக்கன் - இலங்கைக்கு அசரனாகிய இராவணன், ஆர் வீடணனோடு - அன்பு நிறைந்த விபீடணனாகிய தம்பியுடன், அளவளாவாது - மனம் கலந்து பழகுதல் இன்றி, சோர்வு இலா வாழ்வு இழந்தான் - என்றும் கெடாத பெருஞ் செல்வத்தோடு வாழ்நாளையும் இழந்து விட்டான் ஆகலான்.
இராம பத்தினியாகிய சீதையை இராவணன் அசோக வனத்தில் சிறை வைத்தமை அறிந்த அவன் தம்பியாகிய விபீடணன், "இது அடாத காரியம். சீதையை இராமன்பால் விட்டுச் சரண் புகுவாய்" எனப் பலமுறை கூறியும் கேளானாய், அவனைச் சினந்து பேச, நன்மொழி கொள்ளாத தமையனை விட்டு நீங்கி, இராமனைச் சரணடைந்தான். அதனால், இராவணன் வாழ்வு இழந்தான்.
No comments:
Post a Comment