“கரம்ஊன்றி, கண்இடுங்கி, கால்குலைய, மற்றுஓர்
மரம்ஊன்றி, வாய்குதட்டா முன்னம், - புரம்மூன்றுந்
தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.”
இதன் பொருள் ---
கரம் ஊன்றி -முதுமையில் எழும்பொழுது, எழுந்திருக்க இயலாமல், கைகளை நிலத்தில் ஊன்றி எழுதலும், கண் இடுங்கி – பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாமையால் கண்களைக் குழித்துப் பார்ப்பதும், கால் குலைய – நடக்க முடியாமல் கால்கள் தடுமாற்றம் அடைதலும், மற்று ஓர் மரம் ஊன்றி – தள்ளாட்டத்தைத் தவிர்த்தல் பொருட்டு, ஆதரவாக மற்றும் ஒரு ஊன்றுகோலினைப் பற்றிக் கொண்டு நடத்தலும், வாய் குதட்டா முன்னம் – பற்கள் இல்லாமையால் வாயைக் குதட்டுதலும், முன்னம் – ஆகிய இந்நிலை வந்து சேராத முன்னரே, புரம் மூன்றும் தீச்சரத்தால் செற்றான் – திரிபுரங்களையும் தீயினை முனையாக உடைய அம்பினால் எரித்து அழித்த இறைவரும், திருப்பனந்தாள் தாடமைய ஈச்சரத்தான் – திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில், “தாடகை ஈச்சரம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபெருமானின், பாதமே ஏத்து – திருப்பாதங்களைப் போற்றி வழிபடுவாயாக.
கரம் ஊன்றுதல் முதலாகச் சொல்லபட்ட ஐந்தும் முதுமையின் குறிகள். தீச்சரம் – தீயினைக் கூராக உடைய அம்பு.
திருப்பனந்தாள் சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் செல்லலாம். இறைவர் திருப்பெயர், செஞ்சடையப்பர், தாலவனேசுவரர். செஞ்சடை அப்பர் என்னும் திருநாமம் வடமொழியில் அருணஜடேசுவரர் என்று வழங்கப்படும். இறைவியார் திருப்பெயர், பெரிய நாயகி, தாலவனேசுவரி. பெரிய நாயகி என்னும் திருப்பெயர் வடமொழியில், பிருகன்நாயகி என்று வழங்கப்படும். தல மரம், பனை. திருஞானசம்பந்தப் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம்.
பனையின் தாளில் (அடியில்) இறைவன் எழுந்தருளி இருத்தலால், பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீசுசுவரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.
தாடகை என்னும் (இத் தாடகை என்னும் பெண் இராமாயாணத்தில் வருபவள் அல்லள்) பெண் ஒருத்தி புத்திரப்பேறு வேண்டி இத்திருத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அது முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது.
சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நேர்பட நிறுத்தி வணங்க அன்பு கொண்டான் அரசன். பூங்கச்சினை சுற்றி அதன் முனையில் வலிய கயிறு கட்டி இழுத்து நேர்படுத்த முயன்றான். திருமேனி நிமிரவில்லை. அன்பின் மிகுதியால் யானைகளைச் சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஒன்றும் முடிய வில்லை. மன்னன் மனம் வாடினான். இச்செய்தியை அறிந்த குங்குலியக் கலய நாயனார் திருப்பனந்தாளுக்கு புறப்பட்டார். திருப்பனந்தாள் கோயிலை அடைந்த கலயனார் ஆலயத்தை வலம் வந்து ஐந்தெழுத்தை நினைத்தபடியே குங்குலியப் புகையினால் சந்நிதியைத் தூபமிட்டார். கலயனார் பூங்கச்சுடன் கூடிய ஓர் கயிற்றை எடுத்து அப்பூங்கச்சோடு சேர்ந்த கயிற்றின் ஒரு பக்கத்தைச் சிவலிங்கத் திருமேனியில் பாசத்தோடு பிணைத்து, மறுபக்கத்தைத் தம் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார்.
அன்புக் கயிற்றுக்கு இறைவன் அசைந்து தானே ஆக வேண்டும். அக்கணமே சாய்வு நீங்கி நேரே நிமிர்ந்தார். கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு பூமாலையாக மாறியது. சிவலிங்கத் திருமேனியின் மீதும், கலயனாரால் கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப் பூமாலையாக காணப்பட்டது. குங்குலியக் கலய நாயனாரின் அன்பின் திறத்தினைக் கண்டு மன்னனும் மக்களும் களிப்பெய்தினர். சோழ மன்னன் கலய நாயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். கலயனார் அங்கு சில காலம் தங்கியிருந்து அரனாரை வணங்கி வழிபட்டு திருக்கடவூரை அடைந்தார். இத்தலத்தில்தான்
குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது. இக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தரும மனந்தான் மலரை மருவுவிப்போர் வாழும் பனந்தாளில் பால் உகந்த பாகே" என்று போற்றி உள்ளார்.
No comments:
Post a Comment