053. சுற்றம் தழால் - 04. சுற்றத்தால் சுற்றப்பட

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "சுற்றத்தினரால் சூழப்படுவதாக நடந்து கொள்ளுதல் என்பது, ஒருவன் தான் பெற்ற செல்வத்தினால் பெறுகின்ற பயன் ஆகும்" என்கின்றார் நாயனார். பெற்றத்தால் என்பது,"பெற்ற அதனால்" என்று பொருள்படும்.


இதற்குத் திருக்குறள்....


சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் --- செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, 


சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் --- தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.

(பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப் பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப் பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால் செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பது கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“அத்தர் திருவருளால் அன்று படிக்காசு பெற்றார்

பத்தர்கணம் சூழப் பரிந்து இட்டார் ---  இத்தலத்துச்

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.


இதன் பொருள் ---


திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசு பெருமானும் திருவீழிமிழலையில் இருந்தபொழுது, பஞ்சகாலம் வர, இருபெருமக்களும் சிவபிரானிடம் பொற்காசு பெற்று அடியார்களை உண்பிக்கும் தொண்டினை மேற்கொண்டார்கள். அப்போது சிலநாள் திருஞானசம்பந்தப் பெருமானார் மாற்றுக் குறைந்த காசு பெற்று வந்தார். அதனால் அதனை மாற்றி உணவுப் பொருள்களை வாங்குவதில் நேரம் வீணாயிற்று.  அதற்குள் அடியவர்கள் அப்பர் பெருமானாரின் திருமடத்திலேயே உணவு அருந்திச் சென்றனர். "வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே" என்று இறைவரைத் திருப்பதிகம் பாடி, திருஞானசம்பந்தப் பெருமானார் வாசியில்லாக் காசு பெற்றார்.  இறையருளால் பெற்ற பொருளைக் கொண்டு அடியார்களின் பசியைத் தீர்த்தனர் இருபெருமக்களும்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...


“பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்குஇன்னா

மந்திரம் வாயா விடின்.” --- இன்னா நாற்பது.


இதன் பொருள் ---


பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா – சுற்றம் இல்லாத இல்வாழ்க்கையின் அழகானது துன்பத்தைத் தரும்; தந்தையில்லாத புதல்வன் அழகு இன்னா - தந்தை இல்லாத பிள்ளையினது அழகானது துன்பத் தரும்; அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா - துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பத்தைத் தரும்; ஆங்கு - அவ்வாறே, மந்திரம் வாயாவிடின் இன்னா - மறைமொழியாகிய மந்திரங்கள் பயனளிக்காவிடின் துன்பமாம்.

மனை - மனைவாழ்க்கை. அதன் வனப்பாவது செல்வம். "சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்" என்பதால், சுற்றமில்லாத மனையின் வனப்பு இன்னாதது ஆயிற்று. 

பந்தம் என்பதை அன்பு என்று கொண்டு, அன்பு இல்லாத மனைவியோடு கூடி வாழ்தல் துன்பத்தைத் தரும் என்றும் கொள்ளலாம்.

‘தந்தையொடு கல்வி போம்' என்பதால், தந்தை இல்லாததனால் கல்விப் பேற்றை இழந்த புதல்வனுக்குத் துன்பம்.



“கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங்கூழ்

விளைவின்கண் போற்றான் உழவும், --- இளையனாய்க்

கள்உண்டு வாழ்வான் குடிமையும், இம்மூன்றும்

உள்ளன போலக் கெடும்.” --- திரிகடுகம்.

இதன் பொருள் ---

கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் – சுற்றத்தார்க்கு உதவாதவனுடைய பொருளும்; பைங்கூழ் விளைவின்கண் போற்றான் உழவும் - பசிய பயிரானது தனக்குப் பயன் கொடுக்கும் காலத்து, அதனைக் காக்கும் இயல்பு இல்லாதவனுடைய உழவுத் தொழிலும்; இளையனாய் கள் உண்டு வாழ்வான் குடிமையும் - இளையனாய் இருந்து, கள்ளைக் குடித்து வாழ்கின்றவனுடைய குடிப்பிறப்பும்; இ மூன்றும் உள்ளன போலக் கெடும் - ஆகிய இம் மூன்றும் நிலை நிற்பனபோலத் தோன்றி அழியும்.

செழுங்கிளை தாங்காதான் செல்வமும், விளையுங் காலத்தில் காவாதான் பயிரும், இளமைதொட்டே கள்ளுண்கின்றவன் நற்குடி வாழ்க்கையும் கெட்டுப்போம் என்பது சொல்லப்பட்டது.



“சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.”    --- கொன்றை வேந்தன்.

இதன் பொருள் ---

சுற்றத்தார்க்கு அழகாவது நலம் தீங்குகளில் சூழ வந்து இருப்பதாகும்.


“செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.”    --- வெற்றி வேற்கை.

இதன் பொருள் ---

பொருளுடையவர்க்கு அழகாவது நல்ல சுற்றத்தைப் பாதுகாத்தல்.

கிளைபோன்று இருத்தலின் சுற்றம் கிளை எனப்படும். செழுங்கிளை என்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள்படும்.


“அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்

நிழல்மரம்போல் நேர்ஒப்பத் தாங்கிப் --- பழுமரம்போல்

பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன்.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கெல்லாம் நிழல்மரம் போல் - வெயிலின் வெப்பம் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் ஒப்ப உதவும் நிழல் மரத்தைப்போல, நேர் ஒப்பத் தாங்கி - வறுமையின் கொடுமை மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் சமம் பொருந்தக் காத்து, பழுமரம் போல் பல்லார் பயன் துயப்ப - பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள் உதவுதல்போல், பலரும் பயன் நுகரப் பொருள் உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக் கடன் - தான் மேன்மேலும் பொருளீட்டும் முயற்சியால் உழைப்பு உடையவனாய் வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.


No comments:

பாடல் 21

 “கரம்ஊன்றி, கண்இடுங்கி, கால்குலைய, மற்றுஓர் மரம்ஊன்றி, வாய்குதட்டா முன்னம், - புரம்மூன்றுந் தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய ஈச்...