திருக்குறள்
பொருட்பால்
ஆ. அமைச்சியல்
அதிகாரம் 64 -- அமைச்சு
இந்த அதிகரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தொழிலில் அசைவு இல்லாமையும், குடிகளைக் காத்தலும், நீதிநூல்களைக் கற்று செய்வனவற்றையும், தவிர்வனவன்றறையும் அறிதலும், முயற்சியும் ஆகிய இந்த ஐந்து இயல்புகளும் ஒருங்கே அமையப் பெற்றவனே அமைச்சனாவான்" என்கின்றார் நாயனார்.
மேற்குறளில் குறித்த ஐந்து இலக்கணங்களுடன், இப்போது சொல்லும் நான்கு இலக்கணங்களும் பொருந்தியவனாக இருந்தால் அன்றி, ஒருவன் அமைச்சனாவதற்குத் தகுதி இல்லை.
இதற்குத் திருக்குறள்...
வன்கண், குடிகாத்தல், கற்று அறிதல், ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
வன்கண் --- வினை செய்தற்கண் அசைவின்மையும்;
குடிகாத்தல் --- குடிகளைக் காத்தலும்;
கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்;
ஆள்வினையொடு --- முயற்சியும்;
ஐந்துடன் மாண்டது அமைச்சு --- மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்.
(எண்ணொடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது,. அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும் 'கற்று அறிதல்' என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும் 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப.)
பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளது காண்க...
குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பும் ஆற்றல் உடைமை - முடியோம்பி
நாற்றஞ் சுவைகேள்வி நல்லா ரினஞ்சேர்தல்
தேற்றானேற் றேறு மமைச்சு. --- ஏலாதி.
இதன் பொருள் ---
குடி ஓம்பல் - குடிமக்களைப் பாதுகாத்தலும், வன்கண்மை - தொழின் முகத்தில் ஆளுகைத் தன்மையும், நூல் வன்மை - நூற்புலமையில் கலங்காத அறிவும், கூடம் மடி - கரவும் சோம்பலும், ஓம்பும் - தன்மாட்டு நிகழாதவாறு பாதுகாக்கும், ஆற்றல் உடைமை – ஆற்றலை உடைமையும் பொருந்தி, முடி ஓம்பி - அரசாட்சியைப் பாதுகாத்து, நாற்றம் - மணத்தையும், சுவை - சுவைக்கினிய உணவையும், கேள்வி - இசைக் கேள்வியையும், நல்லார் இனம் சேர்தல் - மாதர் கூட்டத்தைச் சேர்ந்து மெய்யுறுதலையும், தேற்றானேல் - நன்மை தருவனவென்று துணியானாயின், அமைச்சு - அவன் அமைச்சன் ஆதற்கு உரியான் என்று, தேறும் - தெளியப்படுவன்.
குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும்,
பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார் ;
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் ;
சலம் முதல் அறுத்து, அருந் தருமம் தாங்கினார். --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
குலம் முதல் தொன்மையும் - குடிப்பிறப்பினது முதன்மையான பழமையும்; கலையின் குப்பையும் – நூல் அறிவுகளின் தொகுதியையும்; பல முதல் கேள்வியும் - பல சிறந்த கேள்வி அறிவையும் ; பயனும் - அவற்றால் உளதாகும் பயனையும் ; எய்தினார் - பெற்றவர்கள்; நலம் முதல் நலியினும் - தமக்கு வரும் நலன்கள் வேரோடு கெடுவதாயினும்; நடுவு நோக்குவார் - நடுவு நிலைமையையே காப்பவர்கள்; சலம் முதல் அறுத்து - சினத்திற்கு மூலகாரணமான அகந்தையைக் கிழங்கோடு களைந்து;
அருந்தருமம் தாங்கினார் - அரிய அறங்களைப் போற்றுபவர்கள்.
அமைச்சர்கள் குடிப்பிறப்பு, கல்வி, கேள்விச் சிறப்பு, நடுவு நிலைமை, சினமின்மை ஆகிய பண்புகளோடு திகழ்ந்தனர் என்பது கூறப்பட்டது. குப்பை - தொகுதி, மிகுதி.தாங்குதல் - போற்றிக் காத்தல். சலம் - கோபம்; வஞ்சனையும் ஆம். முதல் - முதன்மை, சிறப்பு, வேர் என்னும் பல்வேறு பொருளில் வந்தது.
No comments:
Post a Comment