திருப் புறம்பயம்
(திருப்புறம்பியம்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
மக்கள் வழக்கில் திருப்புறம்பியம் என்று அழைக்கின்றனர்.
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச்
செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து
பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்திலுள்ள
இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பயம்
உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புறம்பயம்
செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
இறைவர்
: சாட்சி நாதேசுவரர், புன்னைவன நாதர்
இறைவியார் : கரும்படுசொல்லம்மை, இட்சுவாணி
தல
மரம் : புன்னை
தீர்த்தம் : பிரம தீர்த்தம், சப்த சாகர தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - மறம்பய மலைந்தவர்.
2. அப்பர் - கொடிமாடநீடெருவு.
3. சுந்தரர் - அங்கம் ஓதியோர்
ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில்
பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்திற்கு புறம்பாய்
இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது. பிரளயம் ஏற்பட்ட
போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர்
செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
மதுரையில் வசிக்கும் வணிகன் ஒருவன்
உடல்நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பியம் வந்தான். மாமன்
இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடினான். அவளையும்
அழைத்துக் கொண்டு மதுரை செல்லுமுன் வணிகன் இத்தல ஆலயத்திற்கு வந்தான். இரவு
தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான். அப்பெண் சிவபெருமானிடம்
முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணை
கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விபரம் கூறி
வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது
பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும்
பழி கூறினாள். இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதரை சென்று திருமணம்
நடந்ததற்குச் சாட்சி பகன்றார். வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி
சாட்தி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாட்சி
சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. மதுரை
சுந்தரேசுவரர் ஆலயத்தின் ஈசானிய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக
இப்போதும் வன்னிமரமும், மடைப்பள்ளியும்
இருப்பதைக் காணலாம். செட்டிப்பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு
சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது. ஆனால்
இம்மரம் தலமரமன்று. தலமரம் புன்னைமரமே.
ஐந்து நிலை இராஜகோபுர வாயிலுக்கு வெளியே
வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடி கொண்டுள்ளார்.
தமிழகத்திலேயே தனிக்கோயிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம்
இது ஒன்று தான். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றவுடன் நாம் காண்பது விசாலமான
கிழக்கு வெளிப் பிரகாரம். நேரே பலிபீடம், நந்தி
மண்டபம், கொடிமரம் ஆகியவற்றைக்
காணலாம். நந்தி மண்டபத்தின் விமானத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுதை
சிற்பங்களைக் காணலாம். முதற்பிராகாரத்தில் நால்வர், அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட
லிங்கங்கள் முதலியவை உள்ளன. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சுவாமி கருவறை சுற்றுச் சுவர்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுடன் காடிய சிற்பங்களைக்
காணலாம்.
இரண்டாவது பிராகாரத்தில் அம்பாள் சந்நிதி
உள்ளது. குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. கோவிலுக்கு விறகு
கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தவர்
இவர்தான். இதற்கு மேலே சட்டைநாதர் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்திக்குரிய
முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால்
உருவாக்கப்பட்டவர். நத்தைகூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த
பொருட்களால் விநாயகர் திருமேனியை உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும்
விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம்
செய்யப்பெறும் தேன் யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். வேறு
நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "முன் அம்பு மாற்கும்
புறம்பு இயலா வாய்மை அருள் செய்ய உளம் ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே" என்று
போற்றி உள்ளார்.
காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 240
விசயமங்
கையினிடம் அகன்று, மெய்யர்தாள்
அசைவுஇல்
வாகாவினில் அணைந்து பாடிப்போந்து,
இசைவளர்
ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை
ஆடையர் திருப்பு றம்பயம்.
பொழிப்புரை : விசயமங்கை என்ற
பதியினின்றும் நீங்கிச் சென்று,
இறைவரின்
திருவடி என்றும் நிலைபெற்றிருக்கும் திருவைகாவூர் என்னும் திருப்பதியை அடைந்து
திருப்பதிகம் சாத்தியருளினார். பின் அப்பதியினின்றும் சென்று, நாளும் இன்னிசையால் தமிழ் வளர்க்கும்
திருஞானசம்பந்தர், எண் திசைகளையே ஆடையாகக்
கொண்ட இறைவரின் `திருப்புறம்பயம்' என்ற பதியை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 241
புறம்பயத்து
இறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி
நீர்மையில் பதிகச் செந்தமிழ்
நிறம்பயில்
இசையுடன் பாடி, நீடிய
அறம்தரு
கொள்கையார் அமர்ந்து மேவினார்.
பொழிப்புரை : திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்கிப் போற்றும் பண்ணியல் திறம் அமைந்த
செந்தமிழை, வண்ணம் மிகும்
இசையுடன் பாடி, நீடிய அறத்தை உதவும்
கொள்கையினரான பிள்ளையார், அங்கு விருப்புடன்
எழுந்தருளி இருந்தார்.
குறிப்புரை : இப்பதியில் பாடிய
பதிகம் `மறம்பய மலைந்தவர்' (தி.2 ப.30) எனும் தொடக்கம் உடைய இந்தளப்
பண்ணிலமைந்த பதிகமாகும். திறம்புரி நீர்மையில் - பண்ணியல் திறம் பொருந்திய
தன்மையில். பண், பண்ணியல், திறம், திறத்திறம் எனப் பண்வகை நான்கென்பர்.
இவற்றுள் திறம் பொருந்திய நீர்மையில் இப்பதிகத்தை அருளினர். நீடிய அறமாவது உயிர்
பெறுதற்குரிய நிலைத்த பயனாய வீட்டுலகைப் பெறும் அறமாம். இவ்வறத்தைக் கூற வந்தவரே
ஞானசம்பந்தர் ஆவர் `சிவம் பெருக்கும்
பிள்ளையார்' என்றதும்
இதுபற்றியேயாம்.
2.030 திருப்புறம்பயம் பண் -
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மறம்பயம்
மலைந்தவர் மதில்பரிசு அறுத்தனை,
நிறம்பசுமை
செம்மையொடு இசைந்துஉனது நீர்மை
திறம்பயன்
உறும்பொருள் தெரிந்துஉணரும் நால்வர்க்கு
அறம்பயன்
உரைத்தனை, புறம்பயம்
அமர்ந்தோய்.
பொழிப்புரை :புறம்பயம்
அமர்ந்தவனே! வீரமும் பயமும் கொண்டு தன்னோடு போர்மலைந்த அசுரர்களின் முப்புரங்களின்
வலிமையை அறுத்தாய். உனது தன்மை பசுமை நிறமும் செம்மையும் கலந்தது. ஆகமங்களின்
பயனாகச் சொல்லத்தக்க பொருளைத் தெரிந்துணர விரும்பிய முனிவர் நால்வர்க்கு அறமாகிய
பயனை உணர்த்தியருளினாய்.
பாடல்
எண் : 2
விரித்தனை
திருச்சடைஅரித்துஒழுகு வெள்ளம்
தரித்தனை, அதுஅன்றியு
மிகப்பெரிய காலன்
எருத்துஇற
உதைத்தனை, இலங்குஇழையொர் பாகம்
பொருத்துதல்
கருத்தினை, புறம்பயம்
அமர்ந்தோய்.
பொழிப்புரை :புறம்பயத்தில்
எழுந்தருளியவனே! சடையை விரித்து பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத் தாங்கினாய்:
அஃதன்றியும் மிகப்பெரிய காலனின் பிடரி வருந்துமாறு உதைத்தாய். விளங்கும் அணிகலன்
பூண்ட உமையம்மையை மேனியின் ஒரு பாகமாகப் பொருத்தியுள்ளாய்.
பாடல்
எண் : 3
விரிந்தனை, குவிந்தனை, விழுங்குஉயிர்
உமிழ்ந்தனை,
திரிந்தனை, குருந்துஒசி
பெருந்தகையு நீயும்
பிரிந்தனை, புணர்ந்தனை, பிணம்புகு மயானம்
புரிந்தனை, மகிழ்ந்தனை, புறம்பயம்
அமர்ந்தோய்.
பொழிப்புரை :புறம்பயம் அமர்ந்த
பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்:
ஊழிக்காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு
உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய்.
குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவரோடு கூடிப்பிரிந்தும் புணர்ந்தும்
விளையாடினாய்: பிணம்புகும் சுடுகாட்டை விரும்பி மகிழ்ந்தாய்.
பாடல்
எண் : 4
வளங்கெழு
கடும்புன லொடுஞ்சடை ஒடுங்கத்
துளங்குஅமர்
இளம்பிறை சுமந்தது விளங்க,
உளங்கொள
வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள
விளங்கினை, புறம்பயம்
அமர்ந்தோய்.
பொழிப்புரை :புறம்பயம் அமர்ந்த
பெருமானே! வளமை பொருந்தியதாய்க் கடுமையாகப் பெருகிவந்த கங்கையொடு கூடிய சடையசைய
விளங்கும் இளம்பிறையை கலங்கத்தாங்கி மனம் நெகிழ்ந்து வணங்கும் அடியவர்க்குச்
சுடுகாட்டில் விளைந்த நீற்றொடு தோன்றும் உன் கோலத்தை அறிவிற் காட்டி
விளங்குகின்றாய்.
பாடல்
எண் : 5
பெரும்பிணி
பிறப்பினொடு இறப்பிலை,ஒர் பாகம்
கரும்பொடு
படும்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்,
சுரும்புஉண
அரும்புஅவிழ் திருந்திஎழு கொன்றை
விரும்பினை, புறம்பயம் அமர்ந்தஇறை
யோனே.
பொழிப்புரை :புறம்பயம் அமர்ந்த
இறைவனே! நீ பெரிதாகப் பற்றிய நோய்,
பிறப்பு
இறப்பு, இல்லாதவன். கரும்படு
சொல்லி என்னும் பெயருடைய உமையம்மையுடன் மகிழ்ந்தவன். வண்டுகள் தேனுண்ண அதனால்
அழகுற அவிழும் கொன்றைமலர்களை விரும்பியவன்.
பாடல்
எண் : 6
அனல்படு
தடக்கையவர் எத்தொழில ரேனும்,
நினைப்புடை
மனத்தவர், வினைப் பகையும் நீயே,
தனல்படு
சுடர்ச்சடை தனிப்பிறையொடு ஒன்றப்
புனல்படு
கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்.
பொழிப்புரை :புறம்பயம் அமர்ந்த
பெருமானே! தீ வளர்க்கும் நீண்டகையை உடைய அந்தணர்கள் உன்னை நினையும் மனத்தவராயின்
அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம் தீவினைகட்குப் பகையாயிருந்து
தீர்ப்பவன் நீ. தீக்கொழுந்து போன்ற ஒளி பொருந்திய சடையில் தனித்த பிறையோடு
பொருந்தக் கங்கை கிடக்குமாறு செய்துள்ளவன், நீ.
பாடல்
எண் : 7
மறத்துறை
மறுத்தவர், தவத்துஅடியர் உள்ளம்,
அறத்துறை
ஒறுத்து, உனது அருட்கிழமை
பெற்றோர்,
திறத்துள
திறத்தினை மதித்துஅகல நின்றும்,
புறத்துள
திறத்தினை, புறம்பயம்
அமர்ந்தோய்.
பொழிப்புரை :புறம்பயம்
அமர்ந்தோய்! பாவமான செயல்களை விரும்பாத தவத்தைப்புரியும் அடியவர் உள்ளங்களில்
அறநெறிப் பயனையும் அடைய விரும்பாதவாறு அதனைக்கடிந்து, உன் அருள் உரிமையைப் பெற்றோர்
திறத்தினுக்கு ஏற்ப அருள் வழங்கும் தன்மையனாய் வேறாய் நின்றும் அருள் புரிபவன் நீ.
பாடல்
எண் : 8
இலங்கையர்
இறைஞ்சுஇறை விலங்கலின் முழங்க
உலங்கெழு
தடக்கைகள் அடர்த்திடலும்,
அஞ்சி
வலங்கொள
எழுந்தவன், நலங்கவின அஞ்சு
புலங்களை
விலங்கினை, புறம்பயம்
அமர்ந்தோய்.
பொழிப்புரை :புறம்பயம்
அமர்ந்தவனே! இலங்கை மக்கள் வணங்கும் தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு
முழங்க அவன் வலிய தலைகளோடு கைகளை அடர்த்து அவன் அஞ்சிப் போற்ற வாளும், நாளும் அளித்து அவனுக்கு வெற்றி உண்டாக அருள்
புரிந்தவன் நீ. நன்மைகள் உண்டாக ஐந்து புலன்களை வென்றவன் நீ.
பாடல்
எண் : 9
வடங்கெட
நுடங்குஉள இடந்தஇடை அல்லிக்
கிடந்தவன், இருந்தவன் அளந்துஉணர
லாகார்,
தொடர்ந்தவர்
உடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடம்கருள்செய்து
ஒன்றினை, புறம்பயம்
அமர்ந்தோய்.
பொழிப்புரை :புறம்பயம்
அமர்ந்தவனே! ஆல் இலையில் துயின்ற திருமாலும் அவனது கொப்பூழாகிய தாமரையில் இருந்து தோன்றிய
பிரமனும் உன்னை அளந்தறிய இயலாதவரா(யி)னார். பின் அவர்கள் தொடர்ந்து பழைய உருவோடு வணங்க அவர்கட்கு
கருடப்புள், அன்னப்புள் ஆகியவற்றை
ஊர்தியாகக் கொண்டு படைத்தல், காத்தல் ஆகிய
தொழில்களைச் செய்யுமாறு அருள்புரிந்தாய்.
பாடல்
எண் : 10
விடக்குஒருவர்
நன்றுஎன, விடக்குஒருவர் தீதுஎன,
உடற்குஉடை
களைந்தவர், உடம்பினை மறைக்கும்
படக்கர்கள், பிடக்குரை படுத்து, உமை யொர்பாகம்
அடக்கினை, புறம்பயம் அமர்ந்தஉர
வோனே.
பொழிப்புரை :புறம்பயம் அமர்ந்த
வலியவனே! ஊன் உண்டல் நன்றென்று கூறும் தேரர்கள், தீதென்று கூறும் சமணர்கள், உடலில் உடையின்றித் திரியும்
திகம்பரர்கள் உடலைப் போர்த்தித் திரியும் புத்தர்கள் ஆகியோர் கூறும் பிடகநூல்
முதலியவற்றின் உரைகளைக் கொள்ளாது உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குகின்றாய்.
பாடல்
எண் : 11
கருங்கழி
பொருந்திரை கரைக்குலவு முத்தம்
தருங்கழு
மலத்துஇறை, தமிழ்க்கிழமை ஞானன்,
சுரும்புஅவிழ்
புறம்பயம் அமர்ந்ததமிழ் வல்லார்
பெரும்பிணி
மருங்குஅற ஒருங்குவர் பிறப்பே.
பொழிப்புரை :கரிய உப்பங்கழிகள், பெரிய அலைகளால், விளங்கும் முத்துக்களைத்தந்து உலவும்
கழுமலத்தார்க்குத் தலைவனும் தமிழுக்கு உரிமை பூண்டவனுமாகிய ஞானசம்பந்தன், வண்டுகள் ஒலி செய்யும் புறம்பயம்
அமர்ந்தபிரானை விரும்பிப் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்கள் காலங்காலமாக வரும்
பெரும் பிணியாகிய பிறப்பு நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 301
பொங்கு
புனல்ஆர் பொன்னியினில்
இரண்டு கரையும்
பொருவிடையார்
தங்கும்
இடங்கள் புக்குஇறைஞ்சி,
தமிழ்மா லைகளும்
சாத்திப்போய்,
எங்கும்
நிறைந்த புகழாளர்
ஈறுஇல் தொண்டர்
எதிர்கொள்ள,
செங்கண்
விடையார் திருஆனைக்
காவின் மருங்கு
சென்று அணைந்தார்.
பொழிப்புரை : திருப்பழையாற
வடதளியினின்றும் வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக்
கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும்
நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற
தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண்
விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.
குறிப்புரை : இத்திருப்பதியிலிருந்து
திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள
திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப்
பதிகளாவன:
1. திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.
2. திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.
3. திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.
4. திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.
5. திருப்பந்தணை
நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.
6. திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.
7. திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.
8. தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.
9. திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.
10.திருக்கருவிலிக்
கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.
11.திரு
அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.
14.திருஅன்பில்ஆலந்துறை:
`வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.
16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி:
`மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.
குறிப்பு:- இது பிச்சைக்கு வந்த
இறைவனது அருட்காட்சியாலும், திருப்பார்வையாலும், திருவாய்மொழிகளாலும்
தனது நிலையை இழந்த ஒரு பெண், நாள்தோறும் அவரது
வருகையை மகிழ்ந்து, பின்னர் ஒருநாள் அவர்
வராது ஒழிய, அதனைத் தாங்காதவளாய், அவர்பால் தூதுவிடக் கருதித் தன்
தோழிக்குக் கூறியதாக அமைந்துள்ளது.
நாள்தோறும் அவரது உரையாடும் போது தனது ஊர் வேறு வேறாகக் கூற, அவர் சொல்வதை நம்பியிருந்த பெண்ணானவள், இறுதியில் அவர் திருப்புறம்பயத்தைத்
தனது ஊராகச் சொல்லிச் சென்றமையை இங்குக் கூறி அவனை அடைய விரும்புகின்ற நிலையைக்
குறித்ததாகும் இத்திருப்பதிகம்.
6. 013 திருப்புறம்பயம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கொடிமாட
நீள்தெருவு கூடல், கோட்டூர்,
கொடுங்கோளூர், தண்வளவி, கண்டியூரும்,
நடமாடு
நன்மருகல் வைகி, நாளும்
நலமாகும் ஒற்றியூர்
ஒற்றி ஆக,
படுமாலை
வண்டறையும் பழனம், பாசூர்,
பழையாறும், பாற்குளமும், கைவிட்டு இந்நாள்
பொடியேறு
மேனியராய்ப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :கொடிகள் கட்டப்பட்ட
மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை உடைய கூடல் , கோட்டூர் , கொடுங்கோளூர் , வளவி , கண்டியூர் , கூத்து நிகழ்த்தும் சிறந்த மருகல்
இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர் ஒற்றிவைக்கப்பட்டது என்னும் பொருளைத்
தருதலில் அதனை நீங்கிச் சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம் , பாசூர் , பழையாறு , பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று
திருநீறு அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர் புறம்பயம்
என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார் .
பாடல்
எண் : 2
முற்றுஒருவர்
போல முழுநீறு ஆடி,
முளைத்திங்கள் சூடி,முந் நூலும் பூண்டு,
ஒற்றுஒருவர்
போல உறங்கு வேன்கை
ஒளிவளையை ஒன்றுஒன்றா
எண்ணு கின்றார்,
மற்றொருவர்
இல்லைத் துணை எனக்கு,
மால்கொண்டால் போல
மயங்கு வேற்கு,
புற்றுஅரவக்
கச்சுஆர்த்து, பூதஞ் சூழப்
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :தவம் முற்றிய
ஒருவரைப்போல உடல் முழுதும் திருநீறு பூசி , பிறைசூடி , முந்நூல் அணிந்து ஒற்றுவதற்கு வந்த ஒருவர்
போலப் பொய் உறக்கம் கொண்ட என்கையிலிருக்கும் ஒளி பொருந்திய வளையல்களை ஒன்றொன்றாக
எண்ணுகின்றார் . எனக்கு இவரன்றித் துணைவர் வேறு யாரும் இல்லை . இவருடைய செயலைக்
கண்டு பித்துப்பிடித்தவரைப் போல மயங்குகின்ற என்னிடத்தில் ` எங்களுடைய ஊர் திருப்புறம்பயம் ` என்று கூறிப் பாம்பினைக் கச்சாக அணிந்த
எம்பெருமான் பூதங்கள் தம்மைச்சூழ என்னைவிடுத்துப் போய் விட்டார் .
பாடல்
எண் : 3
ஆகாத
நஞ்சுஉண்ட அந்தி வண்ணர்,
ஐந்தலைய
மாசுணங்கொண்டு, அம்பொன் தோள்மேல்
ஏகாச
மாவிட்டு, ஓடுஒன்று ஏந்திவந்து,
இடுதிருவே
பலிஎன்றார்க்கு இல்லே புக்கேன்,
பாகுஏதும்
கொள்ளார், பலியும் கொள்ளார்,
பாவியேன் கண்ணுள்ளே
பற்றி நோக்கிப்
போகாத
வேடத்தர், பூதஞ் சூழப்
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :தீங்கு தருகின்ற
விடத்தை நுகர்ந்த , மாலையின் செந்நிறத்தை
உடைய பெருமான் , ஐந்தலைப் பாம்பு
ஒன்றனை அழகிய தோளின் மீது மேலாடையாக அணிந்து , ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி , எம் இல்லத்து வந்து ` திருவே ! உணவு இடு ` என்று கூற , உணவு கொண்டுவர உள்ளே சென்றேன் .
உணவுகளோடு யான் மீண்டு வரக் குழம்போ சோறோ ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல்
என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து , பூதங்கள் சூழப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .
பாடல்
எண் : 4
பல்மலிந்த
வெண்தலை கையில் ஏந்தி,
பன்முகில்போல் மேனிப்
பவந்த நாதர்,
நெல்மலிந்த
நெய்த்தானம், சோற்றுத் துறை,
நியமம், துருத்தியும், நீடூர், பாச்சில்,
கல்மலிந்து
ஓங்கு கழுநீர்க் குன்றம்,
கடல்நாகைக் காரோணம்
கைவிட்டு, இந்நாள்
பொன்மலிந்த
கோதையரும் தாமும் எல்லாம்
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :பல்மிக்க வெள்ளிய
மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பனிபொழியும் மேகம் போன்று திருநீற்றால் வெள்ளிய
மேனியை உடைய வஞ்சகராகிய எம் தலைவர் , நெல்
மிக விளையும் நெய்த்தானம் , சோற்றுத்துறை , நியமம் , துருத்தி , நீடூர் , பாச்சிலாச் சிராமம் , கற்கள் மிக்க உயர்ந்த கழுக்குன்றம் , கடற்கரையிலமைந்த நாகைக்காரோணம் என்ற
தாம் உகந்தருளியிருந்த திருத்தலங்களை விடுத்து, இன்று பொலிவு மிக்க தம் தேவிமாரோடு
கூடியதாம் `புறம்பயம் நம் ஊர்` என்று போயினார் .
பாடல்
எண் : 5
செத்தவர்தம்
தலைமாலை கையில் ஏந்தி,
சிரமாலை சூடி, சிவந்த மேனி
மத்தகத்த
யானை உரிவை மூடி,
மடவா ள்அவளோடு மான்
ஒன்று ஏந்தி,
அத்தவத்த
தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க்கு
ஆடல் காட்டி,
புத்தகங்
கைக்கொண்டு, புலித்தோல் வீக்கி,
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :இறந்தார் தலைமாலையைக்
கையிலெடுத்துத் தலையில் சூடிச் சிவந்த மேனியில் பெரிய தலையை உடைய யானைத் தோலைப்
போர்த்துப் பார்வதி பாகராய் , மானைக் கையில் ஏந்தி , ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம்
கூத்தினைக் காணுமாறு அருள் செய்து ,
புலித்தோலை
இடையில் கட்டிக் கையில் புத்தகம் ஒன்றனை ஏற்றுப் புறம்பயம் நம் ஊர் என்று
எம்பெருமான் போயினார் .
பாடல்
எண் : 6
நஞ்சுஅடைந்த
கண்டத்தர், வெண்ணீறு ஆடி,
நல்லபுலி அதள்மேல்
நாகங் கட்டி,
பஞ்சுஅடைந்த
மெல்விரலாள் பாக மாக,
பராய்த்துறையேன்
என்று,ஓர் பவள வண்ணர்
துஞ்சிடையே
வந்து துடியும் கொட்ட,
துண்ணென்று
எழுந்திருந்தேன், சொல்ல மாட்டேன்,
புன்சடையின்
மேல்ஓர் புனலும் சூடிப்
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :விடம் அடைந்த
கழுத்தினராய் , நீறு பூசி , பெரிய புலித்தோல் மேல் பாம்பினை இறுகத்
கட்டிக் கொண்டு , செம்பஞ்சு போன்ற
மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய்ப் பவளம் போன்ற சிவந்த மேனியை உடைய
எம்பெருமான் யான் உறங்கும் இடத்து வந்து துடியை ஒலித்து என்னை விழிக்கச் செய்து ` யான் பராய்த் துறை ஊரினேன் ` என்றார் `. யான் திடுக்கிட்டு எழுந்திருந்தேன் .
பின் அவர் என் குறிப்பறிந்து மெய் தீண்டிச் செய்தனவற்றைச் சொற்களால்
எடுத்துக்கூறும் ஆற்றல் இல்லேன் . தம் சிவந்த சடையில் கங்கையைச் சூடி அப்பெருமான் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .
பாடல்
எண் : 7
மறிஇலங்கு
கையர், மழுஒன்று ஏந்தி,
மறைக்காட்டேன்
என்றுஓர் மழலை பேசி,
செறிஇலங்கு
திண்தோள்மேல் நீறு கொண்டு,
திருமுண்ட மாஇட்ட
திலக நெற்றி,
நெறிஇலங்கு
கூந்தலார் பின்பின் சென்று,
நெடுங்கண் பனிசோர
நின்று நோக்கி,
பொறியிலங்கு
பாம்புஆர்த்து, பூதஞ் சூழப்
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :ஒருகையில் மான்
குட்டியை ஏந்தி , மற்றொரு கையில்
மழுப்படையை ஏந்தி , ` யான் மறைக்காட்டில்
உள்ளேன் ` என்று இனிய
சொற்களைப்பேசி , விளங்கிய திண்ணிய
தோள்கள் மீது திருநீற்றைப் பூசி ,
நெற்றியில்
திரிபுண்டரமாகத் திருநீறணிந்து ,
சுருண்ட
கூந்தலை உடைய மகளிர்பின் சென்று ,
தம்
கண்கள் கரிந்து நீர் சொரியுமாறு அவர்களை நெடுநேரம் அசையாமல் நோக்கி , புள்ளிகள் பொருந்திய பாம்புகளை இறுகக்
கட்டிக் கொண்டு பூதங்கள் சூழ எம்பெருமானார் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .
பாடல்
எண் : 8
நில்லாதே
பல்ஊரும் பலிகள் வேண்டி,
நிரைவளையார் பலிபெய்ய
நிறையும் கொண்டு,
கொல்ஏறும்
கொக்கரையும் கொடுகொட்டியும்
குடமூக்கில்
அங்குஒழிய, குளிர்தண் பொய்கை
நல்லாளை
நல்லூரே தவிரேன், என்று
நறையூரில் தாமும்
தவிர்வார் போல,
பொல்லாத
வேடத்தர் பூதஞ் சூழ,
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :ஓரிடத்தில் தங்காமல்
பல ஊர்களும் பிச்சை ஏற்றலைக் கருதிச் சென்று , வளையலை வரிசையாக அணிந்த மகளிர் பிச்சை
வழங்க , அதனோடு அவர்களுடைய
அடக்கம் என்ற பண்பினையும் கைக்கொண்டு , தம்
வாகனமாகக் கொலைத் தொழில் செய்யும் காளையையும் , வாச்சியங்களான கொக்கரையையும்
கொடுகொட்டியையும் குடமூக்கு என்னும் தலத்தில் விடுத்து , நல்லாளை , நல்லூர் , நறையூர் இவற்றில் தங்குபவரைப் போலக்
கூறிக் கொண்டு , மகளிரை நிறையழிக்கும்
கோலமுடைய நம் பெருமானார் பூதம் சூழப் ` புறம்பயம்
நம் ஊர் ` என்று போயினார் .
பாடல்
எண் : 9
விரைஏறு
நீறுஅணிந்து, ஓர்ஆமை பூண்டு,
வெண்தோடு பெய்து,இடங்கை வீணை ஏந்தி,
திரையேறு
சென்னிமேல் திங்கள் தன்னைத்
திசைவிளங்க
வைத்துஉகந்த செந்தீ வண்ணர்,
அரைஏறு
மேகலையாள் பாகம் ஆக,
ஆரிடத்தில் ஆடல்
அமர்ந்த ஐயன்,
புரைஏறு
தாம்ஏறிப் பூதஞ் சூழ,
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :நறுமணம் கமழும்
திருநீற்றைப் பூசி ஓர் ஆமையோட்டினை அணிகலனாகப் பூண்டு , காதில் சங்கத் தோட்டினை அணிந்து , இடக்கையிலே வீணையை ஏந்திக் கங்கை
தங்கும்சடை மீது பிறையை நாற்றிசையும் அதன் ஒளிபரவுமாறு வைத்து , மகிழ்ந்த , செந்தீ நிறத்துப் பெருமானார் , மேகலையை இடையில் அணிந்த உமைபாகராய் , பிறர் அணுகுதற்கரிய சுடுகாட்டில்
கூத்தாடுதலை விரும்பிய தலைவராய்,
மேம்பட்ட
காளையை இவர்ந்து, பூதம் சூழப் ` புறம்பயம் நம் ஊர்` என்று போயினார் .
பாடல்
எண் : 10
கோவாய
இந்திரன் உள் ளிட்டா ராகக்
குமரனும், விக்கினவி நாயகன்னும்,
பூவாய
பீடத்து மேல் அயன்னும்,
பூமி அளந்தானும்
போற்றி சைப்ப,
பாவாய
இன்னிசைகள் பாடி யாடி,
பாரிடமுந் தாமும்
பரந்து பற்றி,
பூவார்ந்த
கொன்றை பொறிவண்டு ஆர்க்க,
புறம்பயம்நம்
ஊர்என்று போயி னாரே.
பொழிப்புரை :தேவர் தலைவனான
இந்திரன் உள்ளிட்டவரும் , முருகனும் , இடர்களையும் விநாயகனும் , தாமரையின் மேல் உள்ள பிரமனும் , உலகங்களை அளந்த திருமாலும் வணங்கி
வாழ்த்துச் சொல்லுமாறு இனிய பாடல்களைப் பாடி , அவற்றிற்கு ஏற்ப ஆடி , வண்டு ஒலிக்கும் கொன்றைப் பூவினை அணிந்த
தாமும் தம் பூதங்களுமாய்ப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று பெருமான் போயினார் .
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
வன்தொண்டர், திரு ஆறைமேற்றளி முதலான பல தலங்களை
வணங்கிக் கொண்டு திரு இன்னம்பர் சென்று வணங்கி அங்கு இருக்கும் நாளில்
திருப்புறம்பயத்திற்குச் செல்ல வேண்டும் என்னும் அன்பு உண்டாகப் பாடியருளியது
இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்.
புரா. 96)
பெரிய
புராணப் பாடல் எண் : 95
ஏரின்
மருவும் இன்னம்பர்
மகிழ்ந்த ஈசர்
கழல்வணங்கி,
ஆரும்
அன்பில் பணிந்துஏத்தி,
ஆரா அருளால்
அங்குஅமர்வார்,
போரின்
மலியும் கரிஉரித்தார்
மருவும் புறம்ப
யம்போற்ற,
சேரும்
உள்ளம் மிக்குஎழ,மெய்ப்
பதிகம் பாடிச்
செல்கின்றார்.
பொழிப்புரை : அழகு பொருந்திய
திருஇன்னம்பரில் மகிழ்ந்தருளி இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பணிந்து, உள்ளம் நிறையும் அன்பினால் போற்றி
செய்து, தெவிட்டாத அருளின்
பெருக்கால் இன்புற்று, அங்கு அமர்ந்தருளும்
நம்பிகள், போர்த்தொழிலில் மிகு
விருப்பங்கொண்டு திரியும் கயாசுரன் என்னும் யானையை உரித்த சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருப்புறம்பயம் என்னும் திருப் பதிக்கும் சென்று, போற்றுதற்குப் பொருந்திய உள்ளம் மிகவும்
வேட்கை எய்த, அங்குச் செல்பவர், செல்லும்போது திருப்பதிகம் பாடியவாறே
செல்வாராய்,
பெ.
பு. பாடல் எண் : 96
"அங்கம் ஓதிஓர் ஆறை
மேற்றளி"
என்று எடுத்து அமர்
காதலில்
பொங்கு
செந்தமி ழால்வி ரும்பு
"புறம்ப யந்தொழப்
போதும்"என்று
எங்கும்
மன்னிய இன்னி சைப்பதிகம்
புனைந்து உடன்
எய்தினார்
திங்கள்
சூடிய செல்வர் மேவு
திருப்பு றம்பயஞ்
சேரவே.
பொழிப்புரை : `அங்கம் ஓதி ஓர் ஆறை மேற்றளி\' எனத் தொடங்கிப் பெருமானிடம் பொருந்திய
காதலால் பொங்கி எழும் செந்தமிழால்,
தாம்
விரும்பிய `புறம்பயம்
தொழப்போதும்\' என்று, எங்கும் பரவிய இன்னிசையுடைய தேவாரப்
பதிகத்தைப் பாடிக் கொண்டு, திங்களைச் சூடிய
இறைவர் வீற்றிருந்தருளும் திருப்புறம்பயம் என்னும் பதிக்குச் சென்றார்.
குறிப்புரை : இத்தொடக்கமுடைய
பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.35). இப்பதிகத்தின் முதற் பாடலில் வரும் `அங்கம் ஓதி ஓர் ஆறை மேற்றளி நின்றும்
போந்து வந்து இன்னம்பர்த், தங்கினோமையும்
இன்னதென்றிலர் ஈசனார் எழுநெஞ்சம்'
எனவரும்
பகுதி, நம்பிகள் தொடர்ந்து
போந்தருளும் திருப்பதிச் (தல யாத்திரை) செலவினை அறியவும் வாயிலாயுள்ளது.
7. 035 திருப்புறம்பயம் பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
அங்கம்
ஓதி,ஓர் ஆறை மேற்றளி
நின்றும் போந்துவந்து, இன்னம்பர்த்
தங்கி
னோமையும் இன்னது என்றிலர்
ஈச னார், எழு நெஞ்சமே,
கங்குல்
ஏமங்கள் கொண்டு தேவர்கள்
ஏத்தி வானவர்
தாம்தொழும்
பொங்கு
மால்விடை ஏறி செல்வப்
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : மனமே , ஆறங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்களது
திருவாறைமேற்றளியினின்றும் புறப்பட்டு வந்து திருவின்னம்பரில் பலநாள் தங்கியும்
நம்மை இங்குள்ள இறைவர் இனி நாம்செய்யத்தக்கது இன்னது என்று தெளிவித்தாரில்லை ; ஆதலின் , வானவர்கள் தம் நிலையினும் மேன்மேல்
உயர்தற் பொருட்டு இரவெல்லாங் காத்து நின்று விடியலில் ஏத்தித் தொழுகின்ற , அழகு மிக்க பெரிய விடையை ஏறும்
பெருமானது , செல்வம் நிறைந்த
திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; புறப்படு
.
பாடல்
எண் : 2
பதியும், சுற்றமும், பெற்ற மக்களும்,
பண்டை யார்அலர், பெண்டிரும்
நிதியில்
இம்மனை வாழும் வாழ்க்கையும்,
நினைப்பு ஒழிமட
நெஞ்சமே,
மதியம்சேர்சடைக்
கங்கை யான்இடம்
மகிழும் மல்லிகை
செண்பகம்
புதிய
பூமலர்ந்து எல்லி நாறும்
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : அறியாமையுடைய மனமே , நாம் வாழ்கின்ற ஊரும் , மணந்த மனைவியரும் , பெற்ற மக்களும் , பிற சுற்றத்தாரும் , தேடிய பொருளும் , அப்பொருளால் மனையில் வாழும் இவ்
வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர் ; அதனால் , என்றும் உடன் தொடர்ந்தும் வாரார் .
ஆதலின் , அவர்களைப் பற்றிக்
கவலுதல் ஒழி ; இனி நாம் , சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை
அணிந்தவன் தன் இடமாக மகிழும் , மல்லிகைக் கொடியும்
சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை
வணங்கச் செல்வோம் ; புறப்படு .
பாடல்
எண் : 3
புறம்
திரைந்து, நரம்பு எழுந்து,
நரைத்து நீஉரை யால்
தளர்ந்து,
அறம்பு
ரிந்து நினைப்பது ஆண்மை
அரிது காண், இஃது அறிதியேல்,
திறம்பி
யாதுஎழு நெஞ்சமே, சிறு
காலை நாம்உறு வாணியம்,
புறம்
பயத்து உறை பூத நாதன்
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : மனமே , தோல் திரைந்து , நரம்புகள் வெளித் தோன்றி , வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச்
செய்ய நினைப்பது பயனில்லாததாம் ;
இதனை
நீ அறிவையாயின் , நாம் இளமையிலே செய்து
ஊதியம் பெறுதற்குரிய வாணிகம் இதுவேயாக , புறத்திலே
அச்சத்தொடு சூழும் பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச்
செல்வோம் ; என்னைப் பிறழ்வியாது , விரையப் புறப்படு .
பாடல்
எண் : 4
குற்று
ஒருவ்வரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவு
எலாம்,
செற்று
ஒருவ்வரைச் செய்த தீமைகள்
இம்மையே வரும்
திண்ணமே,
மற்று
ஒருவ்வரைப் பற்றி லேன்,மற
வாது எழுமட நெஞ்சமே,
புற்று
அரவ்வுடைப் பெற்றம் ஏறி
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : அறியாமையுடைய மனமே , பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய
ஒருவரைக் கருவியாற் குற்றி , அவர் உடையைப் பறித்து
, மேலும் கொலைச்
செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும் , முறையில் நிற்கும் ஒருவரை முறை யின்றிப்
பகைத்து , அப்பகை காரணமாக
அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமை வருங்காறும் நீட்டியாது இம்மையே வந்து
வருத்தும் ; இது திண்ணம் ; ஆதலின் , அவைபோல்வன நிகழாதிருத்தற்கு
உன்னையன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன் ; புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய
, இடப வாகனனது
திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; அவனை
நினைந்து புறப்படு .
பாடல்
எண் : 5
கள்ளி
நீசெய்த தீமை உள்ளன,
பாவ மும்பறை யும்படி
தெள்ளி
தாஎழு நெஞ்சமே, செங்கண்
சேவு டைச்சிவ
லோகன்ஊர்
துள்ளி
வெள்இள வாளை பாய்வயல்
தோன்று தாமரைப்
பூக்கள்மேல்
புள்ளி
நள்ளிகள் பள்ளி கொள்ளும்
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : மனமே , நீ வஞ்சித்துச் செய்த தீமையால் உள வாகிய
பாவமும் நீங்கும்படி , இடபத்தையுடைய
சிவலோகனது ஊராகிய , வெள்ளிய இளமையான வாளை
மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயல்களில் மலர்கின்ற தாமரைப் பூக்களின் மேல் , புள்ளிகளை யுடைய நண்டுகள் பள்ளி
கொள்கின்ற திருப்புறம்பயத்தை வணங்கத் தெளிவுடையையாய்ப் புறப்படு .
பாடல்
எண் : 6
படைஎ
லாம்பகடு ஆரஆளிலும்,
பௌவம் சூழ்ந்து அரசு
ஆளிலும்,
கடைஎ
லாம்பிணைத் தேரை வால்,கவ
லாது எழுமட நெஞ்சமே,
மடைஎ
லாம் கழு நீர்ம லர்ந்து
மருங்கு எலாம்
கரும்பு ஆடத்தேன்
புடைஎ
லாமணம் நாறு சோலைப்
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : அறியாமை பொருந்திய
மனமே , யானைகள் நிரம்பியிருக்க, பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப்
பெறினும், அவ்வெற்றியாலே கடல்சூழ்ந்த
நிலம் முழுவதையும் ஆளினும், முடிவில் எல்லாம், தேரையோடு ஒட்டியுள்ள வால்போல ஆகிவிடும்; ஆதலால், நீர்மடைகளில் எல்லாம் கழுநீர்ப் பூக்கள்
மலர் தலாலும், பல இடங்களிலும் கரும்பை
ஆலையில் இட்டுப் பிழிதலாலும், எல்லாப்
பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலைகளையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச்
செல்வோம் ; அவை களைப் பற்றிக்
கவலை கொள்ளாது புறப்படு .
பாடல்
எண் : 7
முன்னைச்
செய்வினை இம்மை யில்வந்து
மூடும் ஆதலின், முன்னமே
என்னை
நீதியக் காது எழும்மட
நெஞ்ச மே,எந்தை தந்தையூர்
அன்னச்
சேவலோடு ஊடிப் பேடைகள்
கூடிச் சேரும்
அணிபொழில்
புன்னைக்
கன்னி களக்கரும்பு
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : அறியாமையையுடைய மனமே , ஒருவர் முற்பிறப்பிற் செய்த வினை , இப்பிறப்பில் வந்து அவரைச் சூழ்ந்து
கொள்ளும் என்பது உண்மையாதலின் ,
அங்ஙனம்
வந்து சூழ்வதற்கு முன்பே , எமக்கும் பிறர்க்கும்
தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய,
அன்னப்
பேடைகள் , அவற்றின் சேவல்களோடு
முன்னே ஊடல் கொண்டு , பின்பு கூடலைச்
செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று
மணம் வீசுகின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம் ; என்னை நீ கலங்கச் செய்யாது புறப்படு .
பாடல்
எண் : 8
மலம்
எலாம்அறும், இம்மையே மறு
மைக்கும் வல்வினை
சார்கிலா,
சலம்எ
லாம்ஒழி நெஞ்சமே, எங்கள்
சங்க ரன்வந்து
தங்கும்ஊர்,
கலம்
எலாம்கடல் மண்டு காவிரி
நங்கை ஆடிய கங்கைநீர்
புலம்
எலாம் மண்டிப் பொன்வி ளைக்கும்
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : மனமே , இப்பிறப்பிற்றானே மலங்கள் யாவும்
நீங்கும் ; மறு பிறப்பிற்கு
வாயிலாக வலிய வினைகள் வந்து அடைய மாட்டா ; ஆதலின் , நீ துன்பத்தை விட்டொழி ; எங்கள் சங்கரன் வந்து தங்கியிருக்கும்
ஊராகிய , காவிரிநதி என்கின்ற
நங்கை முழுக ஓடுகின்ற , கடலிற் காணப்படுவது
போல நாவாய்கள் மிகுந்து காணப்படுகின்ற கங்கைநதியின் நீர் போலும் நீர், வயல்களிலெல்லாம் மிகப் பாய்ந்து பொன்
போலும் செந்நெற்களை விளைவிக்கின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம் .
பாடல்
எண் : 9
பண்டு
அரீயன செய்த தீமையும்,
பாவ மும்பறை யும்படி,
கண்டு
அரீயன கேட்டி யேல்,கவ
லாது எழுமட நெஞ்சமே,
தொண்டு
அரீயன பாடித் துள்ளிநின்று,
ஆடி வானவர்
தாம்தொழும்,
புண்ட
ரீகம் மலரும் பொய்கைப்
புறம்ப யம்தொழப்
போதுமே.
பொழிப்புரை : அறியாமையையுடைய மனமே , முற்பிறப்பில் நீக்குதற்கு அரியனவாகச்
செய்த தீய செயல்களின் பழக்கமும் ,
அச்
செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட அரிய வழிகளை நீ கேட்டு
நடப்பதாயின், தேவர்கள் அரிய பல
தொண்டுகளைச் செய்து . பாடியும் ,
குதித்து
நின்று ஆடியும் தொழுகின்ற , தாமரை மலர்கள்
மலர்கின்ற பொய்கைகளை யுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; கவலையுறாமல் புறப்படு .
பாடல்
எண் : 10
துஞ்சியும், பிறந்தும், சிறந்தும்
துயக்கு அறாத
மயக்குஇவை
அஞ்சி, ஊரன் திருப்பு
றம்பயத்து
அப்ப னைத்தமிழ்ச்
சீரினால்,
நெஞ்சி
னாலே, புறம்ப யம்தொழுது
உய்தும் என்று
நினைத்தன,
வஞ்சி
யாதுஉரை செய்ய வல்லவர்
வல்ல வான் உலகு
ஆள்வரே.
பொழிப்புரை : இறந்தும் , பின்பு பிறந்தும் , அதன் பின் வளர்ந்தும் சுழலுதல் நீங்காத
மயக்கத் தொழிலாகிய இவைகளுக்கு அஞ்சி , நம்பியாரூரன்
, ` திருப்புறம்பயத்தை
வணங்கி உய்வோம் ` என்று நெஞ்சினாலே
நினைத்து , ஆங்கிருக்கின்ற தன்
தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாட வல்லவர்கள், அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை
ஆள்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
3 comments:
நன்று.
மிகச் சிறப்பான விளக்கங்கள்.நன்றி
மிகவும் அருமையான பதிவு.
மிக்க நன்றி. 🙏💐💐💐🌹🌹🌹
Post a Comment