திருக் கயிலை - 0240. தேன்உந்து முக்கனிகள்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தேனுந்து முக்கனிகள் (கயிலைமலை)

திருக் கயிலை நாதா! 
பற்றுக்கள் யாவும் அற்று, சிவானந்தப் பேரின்பத்தில் திளைத்திருக்க அருள்.


தானந் தனத்ததன தானந் தனத்ததன
     தானந் தனத்ததன ...... தனதான

தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
     சீரும் பழித்தசிவ ...... மருளூறத்

தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
     சீவன் சிவச்சொருப ...... மெனதேறி

நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
     நாதம் பரப்பிரம ...... வொளிமீதே

ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
     நாளுங் களிக்கபத ...... மருள்வாயே

வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
     மாலும் பிழைக்கஅலை ...... விடமாள

வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
     மானின் கரத்தனருள் ...... முருகோனே

தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
     தானுண் கடப்பமல ...... ரணிமார்பா

தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
     சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தேன், உந்து முக்கனிகள், பால், செங் கருப்பு, இளநிர்,
     சீரும் பழித்தசி வம் ...... அருள் ஊற,

தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ,
     சீவன் சிவச் சொருபம் ...... என தேறி,

நான் என்பது அற்று, உயிரொடு ஊன்என்பது அற்று, வெளி
     நாதம் பரப்பிரம ...... ஒளிமீதே

ஞானம் சுரப்ப, மகிழ் ஆநந்த சித்தியொடெ
     நாளும் களிக்க, பதம் ...... அருள்வாயே.

வானம் தழைக்க, அடியேனும் செழிக்க, அயன்
     மாலும் பிழைக்க, அலை ...... விடம் மாள

வாரும் கரத்தன், எமை ஆளும் தகப்பன், மழு
     மானின் கரத்தன் அருள் ...... முருகோனே!

தானந் தனத்ததன னா வண்டு சுற்றி, மது
     தான் உண் கடப்ப மலர் ...... அணிமார்பா

தானம் குறித்து எமை ஆளும் திருக்கயிலை
     சாலும் குறத்திமகிழ் ...... பெருமாளே.


பதவுரை

       அலை விடம் மாள வாரும் கரத்தன் --- கடலில் தோன்றிய ஆலகால விடத்தின் வலிமை அழிய வாரி எடுத்த திருக்கரத்தை உடையவரும்,

     எமை ஆளும் தகப்பன் --- அடியேங்களாகிய எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும்,

     மழு மானின் கரத்தன் --- நெருப்பையும் மானையும் ஏந்திய திருக்கரத்தை உடையவரும் ஆகிய சிவபெருமான்,

     வானம் தழைக்க --- விண்ணுலகம் தழைத்து ஓங்கும் பொருட்டும்,

     அடியேனும் செழிக்க --- அடியேன் சிவநலம் பெற்று இன்புறுதற் பொருட்டும்,

     அயன் மாலும் பிழைக்க --- பிரமதேவரும் நாரயணமூர்த்தியும் சூரபன்மனால் அழியாது உய்யும் பொருட்டும்,

     அருள் --- பெற்று அருளிய,

     முருகோனே --- முருகக் கடவுளே!

      தானந் தனத்த தனனா --- தானந் தனத்த தனனா என்று ரீங்காரஞ் செய்து,

     வண்டு சுற்றி --- வண்டானது வட்டமிட்டு,

     மதுதான் உண் --- தேனைப் பருகின்ற,

     கடப்ப மலர் --- கடப்ப மலரை,

     அணி மார்பா --- தரித்துக்கொள்ளுகின்ற திருமார்பை உடையவரே!

      எமை ஆளும் --- அடியேங்களை ஆட்கொள்ளுகின்ற,

     தானம் குறித்து --- இடமாகக் குறித்து,

     திருக்கயிலை சாலும் --- தெய்விகமுள்ள கயிலை மலைமேல் எழுந்தருளியுள்ள,

     குறத்தி மகிழ் --- வள்ளி நாயகியார் உவக்கின்ற,

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      தேன் --- நல்ல தேன்,

     உந்து முக்கனிகள் --- உயர்ந்த மா பலா வாழை என்ற மூவகைப்பட்ட பழங்கள்,

     பால் --- ஆவின் பால்,

     செம் கருப்பு --- சிவந்த கரும்பு,

     இளநிர் --- இளநீர்,

     சீரும் --- இவைகளின் இனிமைகளின் சிறப்பையும்,

     பழித்த --- தனது ஒப்புயர்வற்ற தனிப்பெரும் இனிமையால் தாழ்மைப் படுத்துகின்ற,

     சிவம் அருள் ஊற --- மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப் பெருகவும்,

     தீது பிடித்த வினை ஏதும் --- நன்மையோடு தீமையும் கலந்த வினைகள் முழுவதும்,

     பொடித்து விழ --- தூள்பட்டு ஒழியவும்,

     சீவன் சிவசொருபம் என தேறி --- இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகின்றது என்பதைத் தெளிந்தும்,

     நான் என்பது அற்று --- நான் என்னும் அகங்காரத்தை ஒழித்தும்,

     உயிர் ஓடு ஊன் என்பது அற்று --- உயிர்ப்பற்று உடற்பற்று என்ற இரண்டையும் ஒழித்தும்,

     வெளி நாதம் பரப்பிரமம் ஒளிமீது --- பரவெளியிலுள்ள அருள் நாதத்தோடு கூடிய பரஞ்சோதியில்,

     ஞானம் சுரப்ப --- சிவஞானம் பெருகி வரவும்,

     மகிழ் ஆனந்த சித்தி ஓடு --- உள்ளத்திலும் உணர்விலும் தித்திக்கின்ற சிவானந்த மோட்சத்தில்,

     நாளும் களிக்க --- அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு,

     பதம் அருள்வாயே --- தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர்.


பொழிப்புரை

         கடலில் தோன்றிய ஆலாலவிடத்தின் கொடிய வலிமை கெட அதனை வாரி எடுத்த திருக்கரத்தை உடையவரும், அடியேங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும், மழுவையும் மானையும் ஏந்திய திருக்கரத்தினருமாகிய சிவபெருமான், பொன்னுலகம் செழிப்புற்று ஓங்குமாறும், அடியேன் உய்ந்து ஈடேறுமாறும், மாலயனாதி வானவர் மாயாமல் பிழைக்குமாறும் பெற்றருளிய முருகக் கடவுளே!

         தானந்த னத்த தனனா” என்று ஒலிசெய்து வண்டுகள் வட்டமிட்டுத் தேனைப் பருகுகின்ற கடப்ப மலர்மாலையைத் தரித்துக் கொண்டிருக்கின்ற அழகிய திருமார்பை உடையவரே!

         அடியேங்களை ஆட்கொள்வதற்கு தக்க இடமாகக் குறித்து திருக்கயிலாய மலையின் மீது எழுந்தருளியுள்ள வள்ளிநாயகியார் மகிழ்கின்ற பெருமிதமுடையவரே!

         சிறந்த தேன், உயர்ந்த மா, பலா, கதலி என்ற முக்கனிகள், பால், செங்கருப்பஞ்சாறு, இளநீர் முதலியவைகளின் இனிமையைத் தனது இணையற்ற உயிரினும் உணர்விலும் இனிக்கும் பெருஞ்சுவையால் பழிக்கும் சிவத்தின் திருவருட்பெருக்கு உண்டாகவும், நன்மையும் தீமையும் ஆகிய வினைகள் முழுவதும் துகள் பட்டொழியவும், சீவன் சிவ வடிவு என்பதைத் தெளிந்தும், அகங்காரத்தை ஒழித்து பரவெளியில் அருள்நாதத்தோடு கூடிய பரஞ்சோதியில் சிவஞானம் பெருகிவரவும் உவட்டாத இன்பத்துடன் கூடிய முத்தியில் என்றும் நிலைத்து மகிழவும் தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர்.


விரிவுரை

தேனுந்து முக்கனிகள்...........சீரும் பழித்த சிவம் ---

சிவத்தைச் சிந்தித்து திருவருள் மயமாகி நிற்கும்போது அளவிட்டுச் சொல்லவும் எழுதவும் இத்துணைத்தென்று நினைக்கவும் முடியாத ஓர் இன்ப உணர்ச்சி உண்டாகும். அவ்வநுபவ இன்பத்தைப் பிறரறியாக் கூறற்பாற்றோ?

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?    --- கந்தர்அநுபூதி

இன்ப நாயகனாம் இறைவனை மெல்ல மெல்ல நினைக்கத் தொடங்கும்போது, இணையற்ற ஒரு தனிப் பரமானந்தம் அரும்பும். அவ் இனிமையைச் சுவைத்து அறிந்தவர்க்குக் கரும்பு துவர்க்கும்; தேன் புளிக்கும்; பிற கசக்கும். தொடக்க இன்பமே இங்ஙனமாயின் அதன் முதிர்ச்சியில் உண்டாகும் இனிமையின் திறத்தை அளவிடற்பாலர் யாவர்? எழுதுவது எங்ஙனம்?

"கரும்பு" என்பது சந்தத்தை ஒட்டி வலித்தல் விகாரம் பெற்று "கருப்பு" என வந்தது.

இளநீரை உலையாக வைத்து, அதில் நல்ல ஆவின் பாலையும் முப்பழச் சாற்றையும் பிழிந்துவிட்டு, கருப்பஞ் சாற்றையுங்கூட்டி பதத்தில் இறக்கி, வடித்தெடுத்த கொம்புத் தேனையும் விட்டுக் குழைத்துச் செய்த ஒரு மதுவர்க்கம் மிகவும் இனிமையாக இருக்கும். ஆனால், நுனி நாவில் மட்டுந்தான் இனிக்கும். அதை எடுத்துக் கண்ணிலும் காதிலும் மூக்கிலும் விட்டால் இனிக்குமா? இன்பத்தை அளிக்குமா? துன்பத்தையே தரும். அந்த மதுவர்க்கத்தை முதுகில் மார்பில் வைத்தால் இனிக்குமா? இவ்வளவு பாடுபட்டு முயன்று செய்த அது நாவின் நுனியில் மட்டுமே இனிக்கும். இறைவன் தியானத்தினாலுண்டாகும் ஒப்பில்லாத சிவ அமுது நாவிற்கும், கண்ணிற்கும், காதுக்கும், பிற உறுப்புகட்கும் உள்ளத்திலும் உணர்விலும் உயிரிலும் கலந்து தெவிட்டாத இனிமையைத் தந்து பிறவி நோயையும் போக்கும்.

பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை, மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்புந் தனிப்பர மானந்தம் தித்தித்து அறித்த அன்றே,
கரும்பும் துவர்த்துச் செந் தேனும் புளித்து அறக் கைத்ததுவே.    -கந்தரலங்காரம்.


தீதும் பிடித்த வினை ---

தீதும் என்றதில் வந்த உம்மை எச்சவும்மை. அதனால் நன்மையும் என வருவித்துப் பொருள் கூறப்பட்டது. நல்வினை தீவினை இரண்டுங்கெட்டாலன்றி பிறவி அறாது. நல்வினை பொன்னாற் செய்த விலங்காகும். தீவினை இரும்பாற் செய்த விலங்கு போலும். விலங்கு என்னுந் தன்மையால் இரண்டும் ஒன்றுதானே? ஆதலால் இரு வினையும் அறவேண்டும்.

இருவினைமு மலமும் அற இறவியொடு பிறவி அற
   ஏகபோகமாய் நீயு நானுமாய்
   இறுகும்வகை பரம சுகம் அதனை அருள்”         --- (அறுகுநுனி) திருப்புகழ்.

சீவன் சிவச்சொரூபம் ---

சீவன் சிவன் எனத் தெளிதல் என்றதனால், சீவனே சிவன் என எண்ணி பாழும் கும்பியில் விழக்கூடாது. சீவன் சிற்றறிவும் சிறுதொழிலும் மலப்பிணிப்பும் உடையது. சிவம் பேரறிவும் பேராற்றலும் மலரகிதமும் உடையது. எனவே சீவனைச் சிவனாக எண்ணுவது பொருந்தாது. பின் அதன் கருத்து என்ன என்று ஆராயின், சிவோகம் பாவனையால் சிவமாந்தன்மையை அடைதலாம். சீவனைச் சிவமாகப் பாவித்தல் மலத்தினின்றும் விடுபடுதற் பொருட்டாம்.

நான் என்பது அற்று ---

நான் என்ற தற்போதம் அறவே அழிந்தாலன்றி மேற்கூறிய இன்பந் தோன்றாது. நான் செய்கின்றேன்; நான் அனுபவிக்கின்றேன் என்ற எண்ணங்கள் அணுத்துணையுமின்றி நீங்க வேண்டும்.

யான் ஆகிய என்னை விழுங்கி வெறும்
  தானாய் நிலை நின்றது தற்பரமே”            --- கந்தர்அநுபூதி.


நான் ஆன தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
   தான் ஆன உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ”

நான் ஆன தன்மை என்று நாடாமல் நாடஇன்ப
   வானகி நின்றனை நீ வாழி பராபரமே”

நான் என்னும் ஓர்அகந்தை எவர்க்கும் வந்து
       நலிந்தவுடன் சகமாயை நானா ஆகித்
தான் வந்து தொடரும்; இத்தால் வளரும் துன்பச்
       சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார்.”

என்னுந் தாயுமான அடிகளாரது நல்வாக்குகளைச் சிந்தித்துச் சித்தந்தெளிக.

உயிர் ஊன் என்பது அற்று ---

உயிர்ப்பற்று, உடற்பற்று; இவற்றை அகப்பற்று புறப்பற்று என்பர். இப்பற்றுகளைப் பற்றறப் போக்கிப் பற்றற்ற அப்பரமபதியைப் பற்றி நின்றவர்க்கே ஆராவமுதின் பேரா இன்பங் கிடைக்கும்.

பார்ஆசை எல்லாம் பற்று அறநான் பற்றிநின்ற
   பூராயம் எல்லாம் புகன்று வா பைங்கிளியே”

பற்றுஅற்று இருக்குநெறி பற்றில் கடல் மலையும்
 சுற்ற நினைக்கு மனம் சொன்னேன் பராபரமே”

பற்றிய பற்றுஅற உள்ளே - தன்னைப்
     பற்றச் சொன்னான், பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன், - சற்றும்
     பேசாத காரியம் பேசினான் தோழி....

பற்று ஒழிந்து, சிந்தைப் பதைப்பு ஒழிந்து, தானேதான்
அற்று இருப்பது, என்றைக்கு அமைப்பாய் பராபரமே.        --- தாயுமானார்.

வெளிநாதம் பரம்பிரம ஒளிமீதே ---

சிதாகாசத்தில் அருள் நாமத்துடன் கூடிய சிவ ஒளியில் கலந்து அவ்வநுபவத்தில் தோன்றும் மெய்ஞ்ஞானத்தைக் குறிப்பிடுகின்றார்.

வானம் தழைக்க ---

இடவாகு பெயராகக் கொண்டு வானத்திலுள்ள தேவர்கள் தழைத்து ஓங்கவும் என்றும் பொருள் கொள்ளலாம்.

அடியேனும் செழிக்க ---

எந்தை கந்தவேளைச் சிவபெருமான் நெற்றிக்கண்ணினின்றுந் தோற்றுவித்ததற்குக் காரணம் மூன்று என்றனர். 1. தேவலோகம் தழைத்தல்; 2. அடியார்கள் உய்தல்; 3. மாலையன் மாயாது வாழ்தல்.

அலைவிடம் மாள ---

அலை-கடல்; அலையையுடைய கடலென ஆகுபெயராகக் கொளப்பட்டது. இனி தேவர்கட்கு அலைவைத் தந்த விடமெனக் கொள்ளினும் பொருந்தும். மாள- வலிகெட.

மழுமான் ---

தாருகவனத்து இருடிகள் சிவபெருமானைப் பகைத்து அவரைக் கொல்லும் பொருட்டு அபிசார வேள்வியைச் செய்து மழுவையும் மானையும் அனுப்ப, அவற்றைச் சிவ பெருமான் திருக்கரங்களில் தாங்கியருளினார்.

திருக்கயிலை ---

கயிலாய மலை என்றும் திருக்கயிலாய மலை என்றும் இரண்டு உண்டு. ஒன்று இமயமலையில் உள்ளது. மற்றொன்று மேலுலகத்தில் உள்ளது. இதன் விரிவை சிவரகஸ்யத்தில் காணலாம்.

கருத்துரை

சிவ புதல்வரே! கடம்பரே! கயிலைமலைக் கடவுளே! சிவ அமுது உண்டு, பற்றற்று சிவாநுபவத்தில் அழுந்தி, முத்தி இன்பத்தில் என்றும் இருக்க அருள் புரிவீர்.


No comments:

Post a Comment

11. ஏறும்பு எண்ணாயிரம்

  "குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொன்      னாலும்அதைக் குறிக்கொ ளாமல் வெறும்பெண்ணா சையிற்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்      பொருந்தியுனை வ...