பழமுதிர்சோலை - 0452. வாதினை அடர்ந்த




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வாதினை அடர்ந்த (பழமுதிர்சோலை)

சோலைமலை முருகா!
மாதர் மயல் அற்று,
உன்னைப் பணிந்து, திருவடி பெற அருள்.

தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான


வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
     மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
     மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
     ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
     தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
     நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
     நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
     சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள்
     மாயம் அது ஒழிந்து ...... தெளியேனே.

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து,
     மாபதம் அணிந்து ...... பணியேனே.

ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள்
     ஆறுமுகம் என்று ...... தெரியேனே.

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
     ஆடும் மயில் என்பது ...... அறியேனே.

நாதமொடு விந்து ஆன உடல் கொண்டு
     நானிலம் அலைந்து ...... திரிவேனே.

ந அகம் அணிகின்ற நாத! நிலை கண்டு
     நாடி அதில் நின்று ...... தொழுகேனே.

சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற
     ச அகம் அது தந்து ...... எனை ஆள்வாய்.

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.


பதவுரை

      சூரர் குலம் வென்று --- சூரபன்மனாதி அவுணர் குலத்தை அழித்து வெற்றி பெற்று,

     வாகையொடு சென்று --- வெற்றிமாலை சூடிச்சென்று,

     சோலை மலைநின்ற --- பழமுதிர்சோலை என்னும் திருமலை மீது எழுந்தருளி நின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      வாதினை அடர்ந்த --– வாது புரியும் தன்மையே நிறைந்த,

     வேல்விழியர் தங்கள் --- வேல் போன்ற கண்களுடைய பெண்களினால் வரும்,

     மாயம் அது ஒழிந்து --- மாயத்தை அறவே நீங்கி,

     தெளியேன் --- அடியேன் தெளிவடையவில்லை;

     மாமலர்கள் கொண்டு --- பெருமையுடைய மலர்களைக் கொண்டு,

     மாலைகள் புனைந்து --- திருமாமலைகள் தொடுத்து,

     மா பதம் அணிந்து --- தேவரீருடைய பெருமைமிக்க திருவடிகளிற் சூட்டி,

     பணியேன் --- அடியேன் ஒருபோதும் பணிந்திலேன்,

     ஆதியொடும் அந்தம் ஆகிய நலன்கள் --- முற்றறிவுடைமை முதலாக முடிவிலாற்றலுடையை ஈறாகவுள்ள ஆறு அருட்குணங்களே

     ஆறுமுகம் என்று --- தேவரீருக்கு ஆறுமுகங்களாக அமைந்திருக்கின்றன என்பதை,

     தெரியேன் --- அடியேன் இதுகாறும் தெரிந்து கொள்ளாதிருந்தேன்,

     ஆன தனி மந்தரரூப நிலை கொண்டு --- எல்லாக் கலைகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் பிறப்பிடமாக விளங்கும் ஒப்பற்ற ஒருமொழியாகிய ஓங்கார வடிவத்தைக் கொண்டு,

     அது ஆடும் மயில் என்பது அறிவேன் --- அந்த மயில் ஆடும் என்பதை அடியேன் அறிந்துகொண்டேனில்லை;

     நாதமொடு விந்து ஆன உடல் கொண்டு --- நாதவிந்துக்களான உடம்பை நிலையெனக் கொண்டு,

     நால் நிலம் அலைந்து --- நான்கு வகையான திணைகளுடன் கூடிய பூ மண்டலத்தில் வீணே அலைந்து,

     திரிவேன் --- அடியேன் திரிந்து கெடுகின்றேன்.

     ந அகம் அணிகின்ற நாத --- நான் அல்ல என்று அன்பர்கள் அர்ச்சிக்கும் சீவபோதமாகிய மலரை அணிகின்ற தலைவரே!

     நிலைகண்டு --- தேவரீருடைய நிலையைக் கண்டு,

     நாடி அதில் நின்று --- அந்நிலையை உற்றுப்பார்த்து அவ்வகப் பார்வையில் நிலைத்துச் சலனமற்று நின்று,

     தொழுகேன் --- ஒருபோதும் தொழுதேனில்லை;

     சோதி உணர்கின்ற வாழ்வு --- அருட்சோதியை உணர்கின்ற சுகவாழ்வே,

     சிவம் என்ற --- மங்கலம் என்று கூறுகின்ற,

     ச அகம் அது தந்து --- அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து,

     எனை ஆள்வாய் --- அடியேனை ஆட்கொண்டருள்வீர்.


பொழிப்புரை


         சூரபன்மனாதி அவுணர்களின் குலத்தை வேருடன் களைந்து வெற்றிமாலை சூடிக்கொண்டு வந்து பழமுதிர் சோலையென்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

         வாது செய்யுந் தன்மை நிறைந்த வேல் போன்ற கூரிய கண்களையுடைய பெண்களின் மாயையை அறவே ஒழித்து தெளிவு பெற்றேனில்லை;

     பெருமை தங்கிய நறுமலர்கள் எடுத்து திருமாலைகளாகத் தொடுத்து தேவரீருடைய பெருமைமிகுந்த திருவடிகளில் அணிந்து தொழுகின்றேனில்லை;

     முற்றறிவு முதலாக முடிவிலாற்றலுடைமை ஈறாகவுள்ள அருட்குணங்கள் ஆறுமே ஆறு திருமுகங்களாக அமைந்தன என்பதை அறிந்தேனில்லை;

     எல்லாக் கலைகட்கும் பிறப்பிடமான ஓகாதவடிவத்தைக் கொண்டு தேவரீருடைய ஊர்தியாகிய மயில் ஆடுகின்றது என்ற நுட்பத்தையும் அடியேன் உணர்கின்றேனில்லை;

     நாதவிந்துக்களான இவ்வுடம்பை விடாதுகொண்டு குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை யென்று நான்கு வகையாகப் பிரித்துள்ள உலகில் அவமே அலைந்து திரிகின்றேன்;

     நான் அல்ல என்று சீவபோதத்தை மலராக அன்பர்கள் அர்ச்சிக்க அம்மலரினையணிகின்ற தலைவரே!

     உமது திருவருள் நிலையை ஊன்றிப் பார்த்து அந்நிலையில் உறைத்து நின்று தொழுகின்றேனில்லை.

     அருட்சோதியை யுணர்கின்ற சுகவாழ்வே சிவானந்தப் பேறு என்று தெளிந்து அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து அடியேனை யாட்கொண்டருள்வீர்.


விரிவுரை


வாதினை அடர்ந்த வேல்விழியர் ---

என்று நீ அன்று நான்” என்றார் தாயுமானார்; அதனால் ஆன்மாக்கள் அநாதிநித்தியம் என்பது ஒருதலை; ஆனால் உயிர்கள் ஓவாது பிறப்பதும் இறப்பதுமாக யோனிவாய்தோறும் மாறிமாறி உழன்றுகொண்டே இருக்கின்றன். அப் பிறப்புக்கு வித்து அவா எனப்படும்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.                    --- திருக்குறள்

அவ்வவா மூவகைப்படும்; மண்ணவா, பெண்ணவா, பொன்னவா, என்பன; இவற்றுள் பொன்னவாவும் மண்ணவாவும் மனிதப் பிறப்புக்கே உரியன; ஏனைய பிறப்புகளுக்கு இல்லை; பெண்ணவா பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவது. எனவே. அதுவே கேடுகள் அனைத்தையும் தருவது.

வாமமேகலை மங்கைய ரால்வரும்
காமம்இல்லை எனில் கடும் கேடுஎனும்
நாமம் இல்லை நரகமும் இல்லையே”    --- இராமாயணம்

அவாவை விளைப்பது அவரது கண்களேயாதலின் “வாதினை அடர்ந்த வேல்விழி” என்றனர்; வேல் கூர்மையாக நின்று நெஞ்சைப் பிளக்கும்; அங்ஙனமே அவர்கள் விழியும் கூர்மையாக நின்று இளைஞர்களின் நெஞ்சைப் பிளக்கும்.

மாயம் அது ஒழிந்து தெளியேனே ---

மாயம்-நிலையற்றது; இல்லாதவற்றை உள்ளதுபோல் காட்டுவது எனினும் பொருந்தும். இன்பம் போல்காட்டி துன்பத்தையே விளைவிக்கும்; இச்சிறு இன்பமும் நிலையில்லாதது.

மாமலர்கள் கொண்டு............பணியேனே ---

மேற்கூரிய மாதர்மய லறுப்பதற்கு வழி மகமாயை களைந்திட
வல்ல பிரானாகிய மயிலேறும் பெருமாளுடைய மலரடியில் மலர்மாலை சூட்டி வணஞ்குவதேயாம். வணக்கம் மலருடன் சேர்ந்து புரிய வேண்டும்.

கைகாள் கூப்பித் தொழீர்-கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.                          ---- அப்பர்

அன்பர்கள் அதிகாலை எழுந்து நீராடி, சிவபூசை செய்து, திருநந்தவனம் புகுந்து வாசமலர் வகைவகையாக எடுத்துத் தொடுத்துக் கூடையில் நிரப்பி இறைவன் திருக்கோயிலுக்குச் சுமந்தேகுவர்.

நீநாளு நன்னெஞ்சே நினைகண்டாய், யார்அறிவார்
சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே
பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளு நவின்றுஏத்தப் பெறலாமே நல்வினையே.            --- திருஞானசம்பந்தர்

ஆதியோடு மந்தமாகிய நலங்கள் ஆறுமுகம் ---

கந்தபெருமானுடைய கருணைகூர் முகங்கள் ஆறும் ஆறுகுணங்களே என்ப. அவ்வருட்குணங்கள் ஏனைய தேவர்களிடம் இல்லை.

ஏவர் தம் பாலும்இன்றி எல்லைதீர் அமலற்கு உள்ள
மூவிரு குணனும் சேய்க்கு முகங்களாய் வந்தது என்னப்
பூவில் சரவணத் தண் பொய்கையில் வைகும் ஐயன்
ஆவிகட்கு அருளும் ஆற்றால் அறுமுகம் கொண்டான் அன்றே.    --- கந்தபுராணம்.

அவ்வருட் குணங்களாவன:-

1.முற்றறிவு உடைமை

2.வரம்பில் இன்பம் உடைமை

3.இயல்பாகவவே பாசங்களில் நீங்குதல்,

4.தம்வயம் உடைமை

5.பேரருள் உடைமை

6.முடிவில் ஆற்றல் உடைமை

இதனை வடமொழியில் முறையே சருவஞ்ஞதை, திருப்தி, அநாதிபோதம், சுவதந்திரத்வம், அலுப்தசக்தி, அநந்தசக்தி என்பர். 

1.நிராமயாத்மா என்ற குணம் அநாதிபோதத்திலும் விசுத்த தேஹம் என்ற குணம் அலுப்தசக்தியிலும் அடங்கி எண்குணம் ஆறாகுமாறு காண்க.

2. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களே ஆண்டவனுக்கு ஆறுமுகங்கள் என்ப.

3. திக்தி, பராசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி, குடிலாசக்தி என்ற ஆறு சக்திகளே ஆறுமுகங்கள் என்ப.

4. அகர உகர மகர நாத விந்து கலை என்ற ஆறுமே ஆறுமுக மென்ப.

5. மந்திரம், பதம், வன்னம், புவனம், கலை, தத்துவம், என்ற அத்துவாக்கள் ஆறுமே ஆறுமுகங்கள் என்ப.

6. ஐஸ்வரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம், என்ற மற்றொருவகையான குணங்கள் ஆறுமே ஆறுமுக மென்ப.

7. சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம் என்ற ஆறு சமயங்கட்குந் தானே தலைவன் என்று இறைவன் ஆறுதலையோடு விளங்குகின்றவன்.

8. ஆறுமுகங்களி லிருந்து வெளிப்படும் பிரகாசங்களாவன; ஞானப்ரகாசம், ஞானானந்தப்ரகாசம், சர்வஞான வியாபகப்ரகாசம், சுத்தஞான சாட்சிப்ரகாசம், சர்வபரிசுத்த பிரம ஞானானந்த அருட்ப்ரகாசம், அநாதிநித்ய ப்ரமஞானானந்வ சிவப்ரகாசம்.

9. சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம், கல்பம் என்ற அங்கங்கள் ஆறுமே ஆறுமுக மென்ப.

10. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கீழ், மேல், என்ற ஆறு திசைகளுமே ஆறுமுகப் மென்ப.

இங்ஙனம் ஆறுமுகங்கட்கு எண்ணில்லாத விளக்கங்கள் உள. அவற்றையெல்லாங் அவன் அருளறிவுகொண்டு ஆய்ந்துணர்க.

ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்டது ஆடும் மயில் ---

தாமரைக்கணான் முதலிய பண்ணவர் தமக்கும்
   ஏமுறப்படு மறைக்கெலா மாதிபெற் றியலும் ஓம்”

என்னும் குடிலையில் சொரூபமாக மயில் ஆடுகின்றது. மயில் ஆடுகின்ற பொழுது உற்றுக்கவனியுங்கள்; அதன் முகத்திலிருந்து தொடர்ங்கி விரிந்துள்ள தோகைவழியே போய் காலில் வந்து முடிந்தால் ஓகாரமாகும். அவ்வோங்காரத்தின் நடுவே ஆண்டவன் அருட்ஜோதி மயமாக வீற்றிருக்கின்றனன். இந்த நுட்பத்தை அழகாகத் தெரிவிக்கின்றார்.

ஆனதனிமந்த்ர ரூபநிலைகொண்ட
   தாடுமயிலென்பது      அறியேனே”

ஓகார பரியின்மிசை வரவேணும்” என்றார் பிறிதோரிடத்தில்.

நாகமணிகின்ற நாதநிலைகண்டு ---

நாகம் அணிகின்ற நாத என்ற சொல்லுக்கு அடியில் வருமாறு பல பொருள்கள் கூறலாம்.

(1)நாகம்-பாம்பு; சர்ப்பாபரணத்தை யணிகின்ற நாதரே!

(2)சர்ப்பத்தை அணிதலின் பொருளாகிய நாதத்தின் இருப்பிடத்தைக் கண்டு; (சுத்தமாயையின் அந்தமாயுள்ள நாதத்ததுவத்தின் இருப்பிடங்கண்டு), நாகம் என்பது குண்டலினி-சுத்தமாயை.

அதாவது பிராணாயாமம் செய்வதனால் பாம்பு மண்டல மிட்டுப் படுத்திருப்பதுபோலுள்ள குண்டலி நடுவிலுள்ள தீ மண்டி எழுந்திருக்க, அதனால் எழும் பிரம்ம நாதத்தைக் கேட்டு சிவயோகிகள் இன்புறுவர்.

2.நாஹம் என்ற சொல் தமிழில் நாகம் என வந்தது. இதே பாடலில் 14 ஆவது வரியில் சோஹம் என்ற சொல் சோகமென வந்திருப்பதையுங்காண்க. ந-அஹம் என்பதும் நாஹம்; அஹம-நான்; ந-அல்ல; நாஹம்-நானல்ல; அடியார்கள் இறைவன் திருவடியில் நானல்ல என்ற சிவபோதத்தை ஒரு மலராக அர்ச்சிப்பர்.

பாதமலர் மீதிற் போதமலர்தூவிப்
   பாடுமலர்தோழத் தம்பிரானே”       --- (ஆலவிழி) திருப்புகழ்

என்று சுவாமிகளே பிறிதொரு திருப்புகழில் இங்ஙனம் கூறியருளுகின்றார்.

நாடியதில் நின்று தொழுகேனே ---

சீவபோ தமிழந்த நிலையில் காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்ற மூன்றுமற்ற நிலையில் நின்று தன்மயமாக விளங்கித் தொழுதல்.

சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் ---

மேற்கூறியவாறு சீவபோதம் இழந்தவுடன் ஆணவமல நீக்கத்தினால் அருட்சோதி தெரிசனம் உண்டாகும்.

உலகத்தில் காணப்படும் சோதி விறகு முதலிய ஒரு பொருளைப் பற்றி நிற்கும். அது சுத்த சுயஞ்சோதியாக விளங்குவது; உண்மை, வடிவாக நிற்பது; வேத முடிவில் விளங்குவது; பரிசுத்தமான சிவானந்த சொரூபமாகத் துலங்குவது; துரியாதீதத்தில் இணையற இலங்குவது; ஏகாந்தமாக இசைவது; ஆன்மாக்களின் உள்ளங்கள் தோறும் நிறைந்திருந்து பக்குவமில்லாத ஆன்மாக்களினால் காணமாட்டாமல் பேரொளிப் பிழம்பாக ஒளிசெய்வது. “காண்பரிய பேரொளி” என்றார் மணிவாசகரும். மரணமில்லாப் பொருவாழ்வு தருவது; சீவனைத் தன்மயமாக்கிக் கொள்ளும் தயவு நிறைந்து குளிர்ந்து விளங்குவது.

மெய்யேமெய் ஆகிய சோதி-சுத்த
     வேதாந்த விட்டில் விளங்கிய சோதி
துய்ய சிவானந்த சோதி-குரு
     துரியத் தலத்தே துலங்கிய சோதி

ஏகாந்தம் ஆகிய சோதி-என்னுள்
     என்றும் பிரியாது இருக்கின்ற சோதி
சாகா வரம் தந்த சோதி-என்னைத்
     தான் ஆக்கிக் கொண்டதோர் சத்திய சோதி.  --- திருவருட்பா

சோகமது தந்து என்னையாள்வாய் ---

சோஹம் என்ற வடசொல் சோகம் என வந்தது; ஸ அஹம் எனப் பிரியும். ஸ-அது, அஹம்-நான்; “அதுநான்” எனப் பொருள்படும். சீவன் அநாதியே ஆணவ மலத்தால் தொடக்குண்டது. சிவன் அநாதியே மலநீக்கமுடையவர். சீவன் சிவமாகத்தன்னை பாவனை புரிவதால் மலநீக்கமுறும். கருடோஹம்பாவனை புரிவதனால் விடநீக்க முறுவதுபோல் என்றறிக.

தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
      சீரும் பழித்த சிவம்         அருளுறத்
தீதும் பிடித்தவினை ஏதும் பொடித்துவிழ
      சீவன் சிவச்சொரூப         மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
      நாதம் பரப்பிரம             வொளிமீதே
ஞானஞ் சுரப்பமகி ழானந்த சித்தியொட
       நாளுங் களிக்கபதம்         அருள்வாயே”      --- திருப்புகழ்

சோலைமலை நின்ற பெருமாளே ---

இது பழமுதிர்சோலை; ஆறாவது படைவீடு; ஆஞ்சை என்னும் ஆறாவது ஆதாரம். புருவநடுவே நிலாப்பிறை போன்ற வடிவத்துடன் ‘ய‘ கரத்தை இடமாகக் கொண்டது பழமுதிர்சோலை. மதுரைக்கு வடகிழக்கே 12 மைல் தொலைவில் விளங்குவது; இப்போது அழகர்கோயில் என வழங்குகின்றது. முருகு என்றால் அழகு என்பதுதானே பொருள்; அழகர் எனினும் அழகர்கோயில் திருமால் கோயிலாக விளங்குகின்றது. பண்டைக் காலத்தில்பலபத்திரன் கோயிலும், திருமால் கோயிலும், முருகவேள் கோயிலும் இருந்தன; பிறகு காலவேற்றுமையால் மறைந்தும் மாறியும் போய்விட்டன.

பழமுதிர்சோலை மலைகிழவோனே”  -நக்கீரர்

ஆக்ஞாஸ்தானமாகிய ஆறாவது படைவீட்டில் “சோஹம் அது தந்து ஆள்வாய்” என்று முடிந்த முடிபாகிய வேண்டுகோளை சுவாமிகள் விண்ணப்பஞ்செய்வது ஊன்றிக் கவனிக்கத் தக்கது.

கருத்துரை

பழமுதிர்சோலையில் எழுந்தருளிய பரமனே! மாதர்மயலற மலரிட்டு வணங்கி, ஆறுமுகத்தின் பொருளையும் மயிலின் தன்மையையும் உணர்ந்து சீவபோதங் கழன்று ஐக்கிய முத்திபெற அருள்புரிவீர்.



No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...